வெண் புறாவின் சிறகடிப்பு
வீதிகளில் தோன்றட்டும்
புண் பட்ட மன மெல்லாம்
புத்துணர்ச்சிப் பெறும் மெல்ல
கண் கலங்கும் வேளை இனி
காற்றாகப் பறக்கட்டும்
பண் பட்ட மனிதர் கூட்டம்
பாரினிலே பெருகட்டும்
அடக்குமுறை ஆட்டம் இனி
ஆட்டம் காணச் செய்யட்டும்
சொடக்கு போடும் அதிகாரம்
சொரணையற்றுப் போகட்டும்
எடக்குப் பேச்சை எல்லாம்
ஏனிங்கு நாம் கேட்போம்?
மடக்கி வைத்திடுவோம்
மண்ணை நாம் காத்திடுவோம்
ஆயுத சாலை வந்தால்
அழிந்திடுமே ஊர் உலகம்
தாயவள் எண்ணம் கொண்டால்
தரணியில் தங்கும் இன்பம்
தூய நல் கொள்கை கொண்டு
துவங்கினால் அமைதி கொள்கை
பாய்ந்திடும் உலகமெல்லாம்
பரவசம் பொங்கி வரும்
– ச.லிங்கராசு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.