மொழிபெயர்ப்புக் கவிதை: இளம் கருப்பின கவிஞர் அமெந்தா கார்மெனின் கவிதை “The Hill We climb” – தமிழில் இரா.இரமணன்

Amanda Gorman recites her inaugural poem, "The Hill We Climb," during the 59th Presidential Inauguration ceremony in Washington, Jan. 20, 2021. President Joe Biden and Vice President Kamala Harris took the oath of office on the West Front of the U.S. Capitol. (DOD Photo by Navy Petty Officer 1st Class Carlos M. Vazquez II) Creator: Carlos M. Vazquez II, MC1, Carlos M. Vazquez II, MC1 | Credit: Carlos M. Vazquez II; OCJCSகடந்த 21ஆம் தேதி நடைபெற்ற  அமெரிக்க அதிபர் பதவியேற்பில் சிறப்பம்சமே இளம் கருப்பின கவிஞர் அமெந்தா கார்மெனின் கவிதை “The Hill We climb”தான். 

அது தற்போது பிளவுபட்டுள்ள அமெரிக்கா குறித்து நம்பிக்கையோடு எழுதப்பட்ட கவிதை என்றாலும் அது பொதுவாக நம்பிக்கையை விதைக்கக் கூடிய கவிதை

கவிதை நெடுகிலும் தெறிப்பாக வசனங்கள். 

ஒரு பிளவுபட்ட நாட்டின் கவிதை ஒரு பிளவுபடுத்தப்படும் நாட்டிற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது.

நண்பர் ஒருவரின் இந்தப் பதிவைப் படித்தவுடன் அந்தக் கவிதையைப் படித்தேன். அதிலிருந்து சில பகுதிகளை மொழி பெயர்த்துள்ளேன்.

 

*தருணம்* 

அந்த தருணம் வரும்போது 

முடிவில்லா இருளில் 

ஒளி எங்கே காண்போம்

என்றொரு கேள்வி எழும் 

நமக்குள்ளே.

இழப்பின் சுமைகள் தாங்கி 

நீள் கடல் நீந்தித் 

தீர வேண்டும். 

 

அரக்கனின் அடி வயிற்றிலிருந்து 

மீண்டுவிட்டோம்.

அரவமின்றி இருப்பதெல்லாம்

அமைதியில்லை;

நீதியின் வரையறைகளெல்லாம்

அனுமானங்களெல்லாம் 

நியாயமாகிவிடாது 

என்று கண்டோம். 

 

என்றாலும் 

உணர்வதற்கு முன்னே 

விடியல் நமதாகிவிட்டது.

எப்படியோ சாதித்து விட்டோம்.

எப்படியோ புயலை 

புறந்தள்ளிவிட்டோம். 

 

கண்முன்னே கிடப்பது 

சிதறிப்போன தேசமல்ல

கட்டி முடிக்கப்படாத ஒன்றே.

 

அடிமை இனத்திலிருந்து 

ஆர்த்தெழுந்த, 

ஒற்றைத் தாயின் வளர்ப்பான  

மெலிந்த கருப்பு இனப்பெண் 

குடியரசுத் தலைவராகும் 

கனவு காணும் 

காலத்தின் வாரிசுகள் நாம்.

நாட்டின் நாயகர்கள் நாம்.

இப்பொழுது 

பதவியேற்பில்

அவள்  பாட மட்டுமே

பார்க்கிறோம். 

 

நளினத்திற்கும்

தொன்னலத்திற்கும்

நமக்கும் 

வெகுதூரம் என்பது மெய்யே.

அதனாலே செம்மை சமூகம் 

சமைத்திட முயல்வோம் 

என்பதுமில்லை. 

 

குறிக்கோள் கொண்ட ஒன்றியம் 

கூடிட முயல்கிறோம். 

பன்மைக் கலாச்சாரம்

பல நிறங்கள் 

ஆளுமைகள்,வாழ்நிலைகள் 

இடைப்படும் மனிதனுக்கு 

கடப்பாடு கொண்ட நாடு ஒன்று 

அமைத்திட  முயல்கிறோம்.

 

ஒருவரோடுருவர் கை குலுக்க

கையெடுத்த ஆயுதம் களைவோம்.

ஒருவருக்கும் தீங்கின்றி 

அனைவருக்கும் இணக்கம் 

தேடுவோம்.

 

துயுருறும்போதும் வளர்ந்தோம்;

காயப்படுத்தும்போதும் நம்பிக்கை கொண்டோம்;

தளர்ச்சியிலும் முயற்சித்தோம்;

என்றென்றும் ஒன்றுபட்டு 

வெற்றிக்கொடி பற்றுவோம்.

இதையாவது மெய்யென்று

உலகு உரைக்கட்டும். 

 

தோல்வி இனியென்றும் 

தொடராது என்பதல்ல

பிரிவினை இனியென்றும்

பிறவாது என்பதே.

அச்சுறுத்துவோர் யாருமின்றி  

அவரவர் பூமியில் 

அவரவர் வேளாண்மை செய்க

என்றே வேதம் ஓதும்.  

 

பொன்னிற மேலைக் குன்றுகளிலிருந்தும் 

புழுதிப் புயல் சுழன்றடிக்கும் 

புரட்சி உதயமான வடகிழக்கிலிருந்தும்

ஏரி சூழ் நடுவண் மாநிலங்களிலும் 

சூரியன் சுட்டெரிக்கும் தென் திசையிலிருந்தும் 

நாம் எழுவோம். 

 

பகல் வரும்வேளை 

அச்சம் அகன்று 

தீயின் நிழலிலிருந்து

வெளிவருவோம்.

நாம் விடிவித்த

புதிய விடியல்

மேலெழும்பும்.

ஒளி காண உறுதி இருந்தால்

ஒளியாகவே நாம் இருந்தால் 

வெளிச்சம் நிரந்தரமே.