ஆகாயத்தில் விமானம் பறக்கும்போதெல்லாம் நின்று ஒருகணம் பார்க்க தவறுவதில்லை யாரும். நேரமில்லை என்று பறந்து திரிந்தாலும் மனதின் ஒரத்தில் ஹே ஹே ஏரோப்பிளேன் என்ற சத்தமாய் கூச்சலிடும் பால்யம் நமக்குண்டு.
அப்படி பறந்து செல்லும் விமானத்தில் மூட்டை மூட்டையாய் கனவுகளோடு சென்று கொத்தடிமைகளாய், எலும்புக்கூடாய், திக்கற்ற மனமாய், இருளை மட்டுமே பார்த்தறிந்திருந்த கண்களாய், விற்பனை செய்ய ஏதுமற்ற நிலையில் தன்னையே என ஒரோயொரு வரிசையல்ல தங்களது வாழ்நாளாகவே நீண்டுக்கொண்டேயிருக்கிறார்கள் உழைக்கும் மக்கள்.
மீண்டு வந்தவர்களும், பத்திரமில்லாது அங்கே தங்கிகிடப்பவர்களும், வாராது எங்கோ பாலைமணலடியில் ஒரு பெரும் வற்றாசுனையாய் மாறி போனவர்களையும் ஞாபகமாய் எழுத்தில் கொண்டுவந்து இதுதான் பாலையின் பெரும்வாழ்வென புரட்டி போடுகிறது பாலைச்சுனை.
அமானுல்லா என்றால் பொருள் மீட்பவராம் ஆனால் மீட்பவரின் கதையல்ல. மீட்கசென்ற இடமெல்லாம் எப்படியிருந்தது என விவரிக்கும் கதை.
மகளோ மகனோ அரேபியாவில் இருந்து தங்கம் தங்கமாய் தூக்கி வருவார்கள் என காத்திருக்கும் குடும்பத்தினர்களுக்கும், அவங்களுக்கென்னப்பா துபாயில் இருந்து பணம் வருதென ஏக்கமாய் எகத்தாளம் பேசும் ஒவ்வொருவருக்கும், பாலை நாட்டில் மணல்போல் பணத்தை குவித்து வைத்திருப்பார்கள் போய் அள்ளிவந்தால் போதுமென நினைத்தால் அதுதான் இல்லை.
திரும்பியாவது போய்விடமாட்டோமா என்று பரிதவிக்கும் பதுங்கிகிடக்கும் மக்கள் அல்லாடிகொண்டிருக்கும் நிலை பெருந்துயரானது. பாலையில் மணலைவிட இவ்வாறு திக்கற்ற நிலையில் துடிக்கும் மனிதர்கள் தான் அதிகம்.
அவர்களெல்லாம் எங்கிருக்கிறார்கள் ஒவ்வொரு கட்டிடத்தின் அடிப்பக்கதின் சிறுதுளையில் மண்டிகிடக்கிறார்கள் அதனால் தான் மணல்வெளி தெரிகிறது வளர்ந்து பெருகுகிறது.
அவ்விடத்தை அடைந்து மீட்க தன் கரம் நீட்டிய அமானுல்லாவுக்கும் அவரை தேடியழைத்து உதவசெய்த நல்லுள்ளங்களுக்கும் பேரன்புகள். இன்னும் அங்கேயே மீட்காது விடுத்தவர்களை பற்றி அமானுல்லாவின் மனதில் நீங்காத துயரிருக்கும் தான்.
பொருளீட்ட இப்படியெல்லாமா மக்கள் துணிகிறார்கள்? துணிந்திருக்கிறார்கள். புலம்பெயர்ந்த மக்களுக்கு இவ்வுலகில் சுருண்டுகிடவாவது ஒரிடமிருந்தால் போதுமென்றோ ஒரு வாய் உணவோ ஒரு கோப்பை தேநீரோ போதுமானதா?. என்றால் ஆமாம் என்ற பதில்தான் இருக்கிறது.
உயிரைப் பிடித்துக்கொண்டு கடல்கடந்து சென்று பாலையை வளர்த்தப்பின்னும் கொத்தடிமைகளாகவே வைத்திருக்கும் இவ்வுலகின் முதலாளித்துவம் எத்தனை கயமைதனம்மிகுந்ததாய் இருக்கிறது.
எவ்வளவுதான் சுட்டாலும் உயிரச்சமிருந்தாலும் படிப்பிற்கெனவோ வாழ்வாதாரம் மேம்படுத்தவோ குடும்பசூலென எதற்காகவோ கொத்தடிமைகளாய் இன்னும் விமானங்களில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்.
பயணத்தில் மட்டுமாவதிருக்கட்டுமென ஒர் அழகியலை வியப்பினை பரிமாறி குதுகலாமாய் அழைத்துப்போகிறது உயரத்தில் பறக்கும் அவ்விமானங்கள்.
இனி அரேபியா என்றால் பாலைச்சுனை தான் நினைவுக்கு வரும்.. சிறந்த மொழிபெயர்ப்பு. பாலைச்சுனை என்ற தலைப்பு வறள்நிலத்தில் வற்றாத கண்ணீரை தொடரும் கையறுநிலையை சுருங்க சொல்வதுபோலமைத்தது அதிசிறப்பு.
நூலின் தகவல்கள்
நூல் : அமானுல்லாவின் ஞாபகங்கள் பாலைச் சுனை
நூலாசிரியர் : தீபேஷ் கரிகம்புங்கரை | தமிழாக்கம் சுனில் லால் மஞ்சாலும்மூடு
விலை : ரூ. 200/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
நூலினைப் பெற
தொடர்பு கொள்ளுங்கள்: 44 2433 2924 , 9444960935
எழுதியவர்
கவிஞர். கலைவாணி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.