அமரன் (Amaran) திரைப்படம் – மிலிட்ரி மீது ஏன் கல்லெறிந்தார்கள்
அமரன் (Amaran) திரைப்படம் பார்த்துவிட்டு தியேட்டரிலேயே அப்படி அழுதேன் இப்படி அழுதேன் என்று பலர் சொல்கிறார்கள். அது சரிதான். அழ வைப்பதற்கென்றே தயாரித்த படமாக இருக்கிறது. மேஜர் முகுந்த் வரதராஜனின் மரணம் துயரமானது. அவரது தியாகம் போற்றுதலுக்குரியது. அவரது மரணம் மட்டுமல்ல ஒவ்வொரு ராணுவ வீரரின் தியாகமும் போற்றுதலுக்குரியது.
ஆனால் ஒரு ராணுவ வீரனின் மரணத்தை வைத்து தேச வெறியைக் கிளப்பி எப்படி பா.ஜ.க. இழிவான அரசியல் செய்கிறதோ அதைத்தான் அமரன் (Amaran) செய்துள்ளது. பார்வையாளர்களின் உணர்வுகளை உச்சத்திற்கு கொண்டு செல்வது போலவும் அழச்செய்வது போலவும் முகுந்தின் மரணத்திற்கு பிறகான காட்சிகளை திட்டமிட்டு அமைத்துள்ளார்கள். அந்த மரணத்தை வைத்து சினிமாவை மார்க்கெட்டிங் செய்வதுதான் நோக்கமாக இருக்கிறது.
படத்தைப் பார்த்ததிலிருந்து என் மனது சமனடைய மறுக்கிறது. மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் படம் என்பதால் கஷ்மீரில் அல்டாப்வானி என்ற குற்றவாளியை பிடிக்க நடத்திய மிலிட்ரி ஆப்ரேசனையும் அதில் அல்டாப்வாணியை அவர் சுட்டுக் கொன்றதையும் எதிர் தாக்குதலில் முகுந்தும் குண்டடிபட்டு மரணமடைந்ததையும் காட்டாமல் இருக்க முடியாது. அதே சமயம் இப்படியான உண்மைச் சம்பவங்களை படமாக்கும் போது உண்மையான களத்தையும் இரு தரப்பு நியாயங்களையும் பேச வேண்டும். ஆனால் அமரன் (Amaran) இராணுவத்தின் அரசு தரப்பின் நியாயத்தை மட்டுமே பேசுகிறது. அதற்கும் மேலே கஷ்மீரின் பொது மக்களை தவறாகச் சித்தரித்துள்ளது.
குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக கஷ்மீர் பொது மக்கள் அதாவது இஸ்லாமிய மக்கள் மிலிட்ரி மீது கற்களை வீசுவதாகக் காட்டுகிறது. ஆம் கஷ்மீர் பொது மக்கள் ராணுவ வீரர்கள் மீது கற்களை வீசினார்கள். பள்ளிக்கூடம் போகும் சிறு வயது மாணவிகளும் ராணுவத்தின் மீது கற்களை வீசினார்கள். ஏன் அவர்கள் கற்களை வீசினார்கள். அதற்குப் பின்னால் உள்ள பயங்கரமான உண்மையை இந்தப் படம் சொல்லவில்லை. மாறாக உண்மையைத் திரித்துவிட்டது.
2008 கோடையிலிருந்துதான் பொதுமக்கள் மிலிட்ரி மீது கல்வீசுவது ஒரு போராட்ட வடிவமாக கஷ்மீர் பள்ளத்தாக்கில் உருவெடுத்தது. ஸ்ரீநகர் அருகிலுள்ள மச்சில் என்ற இடத்தில் மிலிட்ரி அரங்கேற்றிய போலி என்கவுண்டரில் 3 அப்பாவி இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 2008 ஜூன் 11 அன்று டுஃபல் மாட்டூ என்ற பள்ளி மாணவன் ராணுவத்தின் கண்மூடித்தனமான கண்ணீர் புகை குண்டான் கொல்லப்பட்டான். இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ராணுவத்தின் மீது கற்களை வீசினார்கள். பிறகு அதுவே போராட்ட வடிவமாக மாறியது.
கஷ்மீர் பள்ளத்தாக்கில் விசாரணை என்ற பெயரில் இந்திய ராணுவம் எத்தனை இஸ்லாமிய இளைஞர்களை, சிறுவர்களை தூக்கிச் சென்று சித்தரவதை செய்துள்ளது. கொன்றுள்ளது. எத்தனை இஸ்லாமிய இளம் பெண்களை, பள்ளிக்கூடம், கல்லூரி சென்று கொண்டிருந்த மாணவிகளை இந்திய ராணுவம் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. கொன்று பிணத்தை தூக்கி வீசியுள்ளது. எத்தனை முறை தடை செய்யப்பட்ட பெல்லட் குண்டுகளை பொதுமக்கள் மீது பயன்படுத்தியுள்ளது. பல பத்தாண்டுகளாக இதையெல்லாம் சகித்துக் கொண்டிருந்த மக்கள் வேறு வழியில்லாமல் மிலிட்ரி மீது கற்களை வீச போராடத் தொடங்கினார்கள். அதன் அடுத்த கட்டமாக தங்கள் உடலைக் காப்பாற்றிக் கொள்ள பெண்களே அதுவும் மாணவிகளே ரோட்டில் இறங்கி மிலிட்ரி மீது கற்களை வீசினார்கள். ஆனால் இந்த உண்மையைத் திரித்து குற்றவாளிகளை காப்பாற்றத்தான் மக்கள் கற்களை வீசுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் குற்றாவாளிகளை காப்பாற்ற ஒரு சிலர் கற்களை வீசியிருக்கலாம். அது பொதுமக்கள் அல்ல. ஆனால் இந்திய ராணுவத்தின் சித்ரவதை, மனித உரிமை மீறல்கள், கொலை, பாலியல் வன்கொடுமைக்கு எதிராகத்தான் பெரும்பான்மையான கல் வீச்சுகள் நடந்துள்ளது. தங்களின் அரசியல் உரிமைக்காக அரசுக்கு எதிரான போராட்டமாகத்தான் கஷ்மீர் மக்களின் கல்வீச்சு நடந்துள்ளது. குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக அல்ல.
நடுங்கும் இரவில் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணை சில ராணுவ வீரர்கள் முழங்கால் புதையும் பணி படர்ந்த பாதையில் சுமந்து சென்து மருத்துவமனையில் சேர்த்த நிகழ்வுகள்தான் ஊடகங்களில் பெரிதாக வெளிவரும். ராணுவத்தின் கொடுரமான மறுபக்கம் வெளியவே வராது. அமரன் (Amaran) படத்திலும் அதுதான். ஏதோ சிவகார்த்திகேயன் அதாவது மேஜர் முகுந்த் வரதராஜன் மக்களுக்கு உதவி செய்வது போல் பல காட்சிகளை அமைத்த இயக்குனர், அவர் நல்லவராக இருந்திருக்கலாம். ஆனால் எல்லோரும் அவரைப்போல் இருந்திருக்க முடியாது. ராணுவத்தின் மனித உரிமை மீறல்களை ஏன் காட்டவில்லை. காட்சிகளால் இல்லையென்றாலும் குறைந்தபட்சம் பாதிக்கப்பட்ட ஒரு வெகு சனத்தின் எதிர் கேள்வி அல்லது ஆதங்கம் அல்லது வசனத்தின் ஊடாகக்கூட பதிவு செய்யவில்லை. இது முழுக்க முழுக்க ராணுவத்தின் பார்வையில் அரசின் பார்வையில் எடுக்கப்பட்ட படம். எப்படிப்பட்ட ஒரு தலைப்பட்சம். வரலாற்றுத் திரிபு. இந்தப் புள்ளியிலேயே படம் தன் அறத்தை இழந்துவிட்டது.
திரைக்கதையை ஒன்றிய பாதுகாப்புத்துறை, முகுந்தின் குடும்பம், முகுந்தின் மிலிட்ரி நண்பர்கள் ஆகிய மூன்று தரப்பினரிடமும் காட்டி ஒப்புதல் பெற்றுதான் படத்தை தயாரித்தோம் என விளக்கம் சொல்லும் தயாரிப்பாளர் கமல்ஹாசன் அவர்கள் ஏன் கஷ்மீர் மக்கள் எவரிடமும் கருத்துக் கேட்கவில்லை. எப்படி ஒரு ஒட்டுமொத்த சமூகத்தையே தீவரவாதிகளாகவும் தீவரவாதிகளுக்கு உதவி செய்பவர்களாகவும் சித்தரிப்பீர்கள். இதுதான் உங்கள் நீதியா? இதுதான் உங்கள் மய்யமா?
மேஜர் முகுந்த் வரதராஜன் கஷ்மீரில் பணியில் சேர்ந்த போது அவருடைய மேலதிகாரி கஷ்மீரின் அரசியல் வரலாற்றை ஒரு டாக்குமெண்ட்ரியாக முகுந்திற்கு போட்டுக் காட்டுவார். அதிலும் உண்மையும் கஷ்மீரில் நடக்கும் வன்முறைகளுக்கான பின்னனி வரலாறும் மறைக்கப்பட்டுள்ளது. கஷ்மீர் மன்னர் கஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் கையெழுத்திட்ட போது ஒப்புக்கொள்ளப்பட்ட கஷ்மீர் முதலமைச்சர் கஷ்மீர் பிரதமர் என அங்கீகரிக்கப்படுவார் என்ற வாக்குறுதி, இந்தியாவுடன் இணையலாமா வேண்டாமா என மக்களின் கருத்தை அறிய 5 ஆண்டுகளுக்குள் ஐ.நா. சபை மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்ற நிபந்தனைகளை இந்திய அரசு இதுவரை நயவஞ்சகமாக செயல்படுத்தவில்லை என்ற உண்மையை திட்டமிட்டு மறைத்துவிட்டார்கள்.
படத்தில் பல காட்சிகளில் இராணுவ வீரர்கள் “ஜெய் பஜ்ரங் பலி” என கோஷமிடுகிறார்கள். இயக்குனர் ராஜ்குமார் அவர்களே இது என்ன தேசபக்தி கோஷமா, நாட்டுப்பண்ணா, இல்லை தேசிய கீதமா? RSS, VHP, பஜ்ரங்தள், சங்பரிவார் கூட்டங்கள் கூச்சலிடும் மதவெறி கோஷங்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா. இதை எப்படி ராணுவ வீரர்களை முழங்க வைத்தீர்கள். இந்தப் பித்தலாட்டத்தை மறைத்து தமிழ் ரசிகர்களை புல்லரிக்க வைக்க வேறு உக்தி. அதுதான் அச்சமில்லை… அச்சமில்லை… பாடல். அதுவும் தமிழ் தெரியாத பல மாநில ராணுவ வீரர்களும் அச்சமில்லை… அச்சமில்லைன்னு பாடும் போது அப்பாப்பா எனக்கே உடம்பெல்லாம் புல்லரிச்சரிச்சிடுச்சு. பா.ஜ.க. வை திருப்திப்படுத்த ஜெய். பஜ்ரங் பலி… தமிழர்களை முட்டாள்களாக்க அச்சமில்லை… அச்சமில்லை.. உலக நாயகரே சூப்பரப்பு.
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இராணுவம் தொடர்பான சினிமாக்களுக்கு சென்சார் போர்ட் மட்டும் அனுமதி வழங்கினால் போதாது என்றும் ஒன்றிய பாதுகாப்புத்துறையின் அனுமதியும் வாங்க வேண்டும் என்ற கருத்துரிமைக்கு எதிரான உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது திரைக்கதையை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் அளித்து அவர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே படம் எடுக்க முடியும். அவர்கள் ஒப்புதலுக்காகவே உண்மை வரலாற்றை திரித்தீர்களா அல்லது அவர்கள் எழுதிக்கொடுத்ததை படமாக எடுத்தீர்களா? சொல்லுங்க உலக நாயகரே?
படத்தில் பாராட்ட எதுவும் இல்லையா எனக் கேட்காதீங்க. சாய்பல்லவியை பாராட்டமல் இருக்க முடியாது. தமிழும் மலையாளமும் கலந்த அந்த உச்சரிப்பு கேட்கவே எவ்வளவு இனிமையாக இருக்குது. ஒவ்வொரு உச்சரிப்பிலும் எவ்வளவு காதல், எவ்வளவு அன்பு, எவ்வளவு வெகுளித்தனம். எவ்வளவு இனிமை. திரும்பத் திரும்ப கேட்கலாம் போலிருக்கிறது. தமிழும் மலையாளமும் கலந்த உச்சரிப்புகளை எத்தனையோ தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் கேட்டுள்ளோம். அதெல்லாம் சாதாரணமாகவே நான் உணர்ந்தேன். ஆனால் இந்தப் படத்தில் சாய்பல்லவியின் பேச்சு அவ்வளவு அழகாய் உள்ளது. பேச்சு மட்டுமல்ல. ஒவ்வொரு காட்சியிலும் அவரது கண்கள், முகபாவனை, உடல்மொழி பார்த்துப் பார்த்து ரசிக்கலாம். ஒவ்வொரு பிரேமையும் ரீவைண்ட் செய்து பார்க்க வேண்டும் போல் உள்ளது. எல்லோரும் மேஜர் முகுந்த் வரதராஜன் இறந்த பிறகான சாய்பல்லவியின் நடிப்பைத்தான் பாராட்டுகிறார்கள். அதைவிட கல்லூரி மற்றும் காதல் காட்சிகள், முகுந்த் வீட்டுக் காட்சிகள், வழியனுப்பும் காட்சிகள் எல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது. முகுந்தின் அம்மாவின் நடிப்பும் அருமை. ஒவ்வொரு ராணுவ வீரனுக்கும் குடும்பம் இருக்கிறது. அந்தக் குடும்பம் எந்தளவு ஏக்கத்தில் காலத்தைக் கழிக்கிறது என்பதை அழுத்தமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சொல்லியுள்ளார்கள். என்ன இருந்தாலும் சாய்பல்லவியின் அந்த அற்புதமான நடிப்பும் பேச்சும் படத்தின் தவறுகளையெல்லாம் மறைக்கவே பயன்படுகிறது
சாய்பல்லவியும் மேஜர் முகுந்தின் உண்மைக் கதை என்ற முத்திரையும் இல்லாமல் இருந்திருந்தால் ஏற்கனவே வந்த விஜயகாந்த், சரத்குமார், அர்ஜூன், சுரேஷ்கோபி, மோகன்லால்களின் வழக்கமான மிலிட்ரி படமாகத்தான் இருந்திருக்கும். அந்த இரண்டும்தான் படத்திற்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது. உண்மைக்கதை என்ற முத்திரை இருப்பதால்தான் உண்மைக்கதையை ஏன் உண்மையாகச் சொல்லவில்லை என்ற விமர்சனம் எழுகிறது.
தயாரிப்பாளர் கமல்ஹாசன் அவர்களே. இயக்குனர் ராஜ்குமார் அவர்களே. ஒரு மாநில மக்கள் மீது, ஒரு சமூகத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்திவிட்டீர்கள். வெறும் வாயை மெல்லும் பாசிசத்திற்கு அவல் அள்ளிப் போட்டுள்ளீர்கள். படம் அளித்த வெற்றி மிதப்பில் அது உங்களுக்கு புரிய வாய்ப்பில்லை.
எழுதியவர்:
மு.ஆனந்தன்
[email protected]
9443049987
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
தோழரின் பார்வையில் சாட்டை அடியுடன் கூடிய உண்மையை வெளிக்காட்டும் நேர்மையான விமர்சனம், காஷ்மீர் சம்பவங்களை மீண்டும் கண்முன் காட்டியுள்ளீர்கள், வாழ்த்துகள் தோழர்.
தோழர் ஆனந்தன் அவர்களுடைய திரை விமர்சனம் படத்தின் உண்மை நிலையை தோலுரித்துக் காட்டியுள்ளது. ஒரு படைப்பாளன் எந்தவித சமரசத்திற்கும் ஆளாக கூடாது. இரு தரப்பு நியாயங்களையும் உள்வாங்கிக் கொண்டு நியாயம் எந்த பக்கம் இருக்கிறதோ அந்த பக்கம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வரலாற்று நிகழ்வுகளை பணத்திற்காகவும் புகழுக்காகவும் திரித்து வெளியிடக்கூடாது. இதுதான் வரலாறு என்று நம்பி வளரும் தலைமுறை பொய்யான வரலாற்றை தெரிந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது. இந்தப் படம் வருமான ரீதியாக வெற்றி பெற்றாலும் அறம் என்று பார்க்கின்ற பொழுது மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. பாசிச சக்திகளுக்கு இடம் கொடுத்து விட்டது. இது மாபெரும் வரலாற்று பிழை என்பதை தயாரிப்பாளரும் இயக்குனரும் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும்.
கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சியும் ப்ரியங்களும்
அண்ணா வணக்கம் ,
நான் நோயல்.
எனக்கு உங்க அளவுக்கு அறிவு இல்லை .
எனது கருத்து
சாய் பல்லவி நடிப்பு 👌
காஷ்மீர் பாக்க கிடைத்தது 👌
காஷ்மீர் ஏன்பா எப்பவும் இப்படியே இருக்குனு முகுந்தோட அப்பா கேட்கவும் “ அதெல்லாம் பேச வேண்டியவங்க பேசினால் தான் சரியாகும்னு சொன்ன ஒரு வரில நிங்க சொன்ன எல்லாத்தையும் என்னால் உணர முடிந்தது .
எனக்கு தப்பா தெரிந்தது
இராணுவமும் துப்பாகிய மேல்நோக்கி சுடுவது தப்பு
2 1/2 மணி நேரத்துல எத்தனையத் தான் சொல்ல முடியும்
பாவம் நா அந்த எடிட்டர்
மன்னிச்சுரலாம் சாய் பல்லவி நடிப்புக்காக
மிக்ச்சிறப்பு..ஒரு நீதிபதியைப்போல் இரு தரப்பு நியாயங்களையும் முன் வைத்து என் போன்ற அறிவிலிகளுக்கு வரலாற்றை நினைவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி…காரணமும் நீங்களே சொல்லிவிட்டீர்களே! பிறகென்ன? தீர்ப்பும் வழங்கி விட்டதால் எதிர் தரப்பு ஏதும் பேச இயலாது…👍💐👌