கிழக்கு ஜாவா மண்ணின் புதல்வியான லக்ஷ்மி பமன்ஜக் எழுதிய முதல் நாவல் அம்பா. இந்நாவல் பாஷா இந்தோனேசியா, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார் பொன்னுராஜ். இந்நாவலாசிரியர் தற்போது இந்தோனேசியாவில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளராக உள்ளார். இந்நாவலுக்குப் பிறகு புனைவு, புனைவிலி இலக்கியத்தில் பல்வேறு படைப்புகளைக் கொடுத்துள்ளார். அம்பா சிவப்பின் கேள்வி என்ற இந்நாவல் ஆறு பகுதிகளாக கொடுக்கப்பட்டுள்ளது. 20 ஆம் நூற்றாண்டில் மிகப்பெரும் படுகொலைகளில் ஒன்றான இந்தோனேசியப் படுகொலையைப் பற்றிய செய்தி இந்நாவலில் இடம்பெற்றுள்ளது. நடப்பையும் இதிகாசத்தையும் சேர்த்து இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. இந்தோனேசியா வரலாறு, அதிபரின் செயல்பாடுகள், வஞ்சகம், கம்யூனிஸ்ட் மீது தொடுக்கப்பட்ட வன்முறைகள் ஆகியவற்றை இந்நாவல் புதிய முகாந்திரத்தில் விவரிக்கிறது. இந்தோனேசிய மொழியில் எழுதப்பட்ட இந்நாவல் தமிழுக்கு முதல் வரவு. இதனைப் பாரதி புத்தகாலயம் வெளியிட்டு உரிய இடத்தை பெறுகிறது.
நாவலின் துவக்கத்தில் இந்தோனேஷிய தீவுகளில் ஒன்றான புரு தீவு குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளது. இப்பகுதி எண்ணெய் வித்துக்கள் செழித்த பகுதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் அதிபர் சுகார்த்தோ ஆட்சிக் காலத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் அனுதாபிகளை இப்புருதீவில்தான் சிறை வைத்தார். நம் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அந்தமான் சிறைச்சாலை எவ்வாறு விளங்கியதோ அதைப்போலவே புருதீவு இருந்துள்ளது. இந்நாவல் மகாபாரதத்தில் வரும் துணைக் கதையான அம்பா என்ற பெண்கதாப்பாத்திரத்தை வைத்தே எழுதப்பட்டுள்ளது. இந்தோனேசிய மகாபாரதம் கூறும் நடைமுறையை இந்நாவல் காட்டுகிறது. இதிகாசத்தில் இரண்டுபேரால் மறுக்கப்பட்ட பெண்ணான அம்பா இந்நாவலிலும் அவ்வாறே படைக்கப்பட்டுள்ளார். இருப்பினும் இக்கதாப்பாத்திரம் குறித்த மறுவாசிப்பினை வாசகருக்கு ஏற்படுத்துகிறது.
நாவலானது ஒரே சீராக நேர்கோட்டுப் பாதையில் செல்லாமல் பின்னோக்கு உத்திக்குத் தள்ளப்பட்டு மீண்டும் முற்பகுதிக்கு வருவதாக அமைந்துள்ளது. மார்ச் 2006 அன்று புருதீவில் சாமுவேல், அம்பா, முகாபரங், நர்ஸ் போன்றோரின் உரையாடல் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. முகாபரங் அம்பாவைத் தாக்கிவிடுகிறாள். அதனால் அம்பா மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அம்பா பலவாறு குழப்பிக் கொண்டிருக்கிறார். அவருக்கு உதவி செய்வதற்காக சாமுவேல் வருகிறார். இவர் அம்பாவின் நண்பர். தன் காதலன் பீஷ்மா இறந்தான் என்ற செய்தியறிந்து கல்லறையைத் தோண்டுகிறாள் அம்பா. அதைப் பார்த்த முகாபரங் (பீஷ்மாவின் மனைவி) அவளைத் தாக்குகிறாள்.
இச்சமத்தில் சாமுவேல் அம்பாவிற்கு உதவியாகவும் தன்னம்பிக்கை தருபவனாகவும் இருக்கிறான். அம்பாவிற்கு நர்ஸ் செய்யும் பணிவிடைகளையும் இப்பகுதியில் காணமுடிகின்றது. சாமுவேல் தனது சிறுவயது வாழ்கையை அம்பாவிடம் கூறுகிறான். முகாபரங்கால் தாக்கப்பட்ட அம்பாவின் உடல்நிலை மோசமடைகிறது. சாமுவேல் அம்பாவைக் காப்பாற்ற முயல்கிறான். மருத்துவரிடம் அம்பான் என்னும் நகரத்திற்குச் அழைத்துச் சென்று சிறந்த மருத்துவமனையில் சிகிச்சை செய்யலாமா? எனக் கேட்கிறான். காவலர்கள் முகாபரங்கை கைது செய்கின்றனர். மக்கள் முகாபரங் மீது கோபமும் அம்பா மீது பரிதாபமும் அடைகின்றனர். வேய்ப்போ என்ற ஊரிலிருந்து வந்த அறிவாளியான பீஷ்மா எப்படி இறந்துபோனான் என்று வருந்துகின்றாள் அம்பா. நீதிமன்றத்தில் முகாபரங் தண்டனை பெறக்கூடாது என்று அம்பா வேண்டுகிறார். ஆனால் நீதிபதியும் காவல்துறையும் அம்பா, சாமுவேல் என இருவரிடத்தும் பல கேள்விகளைக் கேட்கின்றனர். இப்பகுதி நாவலில் சிறப்பாக வர்ணிக்கப்பட்டுள்ளது. உவமை, படிமம் என்று காட்சிகள் நம் கண்முன் விரிகின்றன.
பகுதி 2. 1956- 1965. இப்பகுதியில் அம்பா, பீஷ்மா சால்வா, இவர்களுக்கு இடையேயான வாழ்க்கை விவரிக்கப்படுகிறது. கடிப்புராவில் அம்பா வாழ்ந்த இளமைக்காலத்தை அழகாக எழுதியுள்ளார் நாவலாசிரியர். அவரது தங்கைகளான அம்பிகா, அம்பாலிகா மீது பொறாமை கொள்கிறாள். ஏனெனில் அம்பாவைவிட அவர்கள் அழகாக இருந்தார்கள். அவர்களைக் காட்டிலும் அம்பா படிப்பில் கெட்டிக்காரராக இருந்தார். மகாபாரதக் கதைகளை இப்பகுதி விவரிக்கிறது. 1962 ஆம் ஆண்டு சுடர்மிண்டோ கல்வி ஆய்வாளராக பதவிஉயர்வு பெறுகிறார். மனைவியை அலுவல் நிமித்தமாக பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார். இங்கு இருவரின் புரிதல்கள் காட்டப்பட்டுள்ளன. சால்வா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணி புரிகிறார். அம்பாவோ படிக்க விரும்புவதாக கூறுகிறார். இடையில் அம்பாவின் பெற்றோரின் காதல் வாழ்க்கை சொல்லப்படுகின்றது. நாவலாசிரியர் சில இடங்களில் வினா கேட்டு விடை அளிப்பவராக தன் எழுத்துமுறையை அமைத்துள்ளார்.
பீஷ்மா ரஷத்தின் வருகைக்காக அம்பா காத்துக் கொண்டிருந்தாள். அவனோ காயம்பட்ட கம்யூனிஸ்டுகளுக்கு மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்தான். அதனால் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. தான் மொழிபெயர்த்துக் கொடுத்த பக்கங்களை பீஷ்மா பார்த்தான். மருத்துவ ஆய்வுக் கருத்துகளை அம்பா மொழிபெயர்த்துக் கொண்டிருந்தாள். சால்வாவிற்கு அவள் கடிதம் எழுதாதபோதும் அவன் தொடர்ந்து அம்பாவிற்குக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தான். அக்கடிதங்களில் தனது உணர்வினை வெளிப்படுத்தினான்.
பீஷ்மா அம்பாவைச் சந்தித்தான். இருவருக்குமான உரையாடல் நீண்டநேரம் தொடர்ந்தது. பீஷ்மா தன்னுடைய சிறுவயது வாழ்க்கையினை விளக்கினான். தன்னுடைய தாய் மரியம் என்றும் அவருக்கு நான்கு குழந்தைகள். மூன்று பெண்கள் நான் மட்டுமே ஆண் என்றும் கூறினான். தன்னுடைய பிறப்பு, வளர்ப்பு, படிப்பு பற்றி விரிவாகக் கூறினான். பீஷ்மா தான் படித்த இடங்களான லெய்ப்ஜிக், ஜகார்த்தா, லெய்டன் போன்ற நகரங்களைப் பற்றிக் கூறினான். சால்வாவைப் பற்றி பீஷ்மாவிடம் சொல்லவேண்டுமா வேண்டாமா? என்று அம்பா குழம்பினாள். கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையிலான வன்முறைகள் நாவலில் சொல்லப்பட்டுள்ளன. டாக்டர் சுகாதி அம்பாவை இங்கே பாதுகாப்பில்லாத காரணத்தால் ஊருக்குச் செல்லும்படி கூறினார். அம்பாவும் பீஷ்மாவும் இணைந்திருக்கும்போது தன்னுடைய முதல் சந்திப்பைப் பற்றி நினைவு கூர்ந்தனர். உலக வரலாறு, குடும்பம், நாட்டு வரலாறு, கல்வி எனப் பலவற்றைக் குறித்து உரையாடினர். யூதப் பெண்மணி ரோசா லக்சம்பர்க் குறித்த வாழ்க்கை வரலாற்றைப் படித்ததாகவும் கூறினான். பீஷ்மா அம்பா இருவரும் மீண்டும் கலவியில் ஈடுபட்டனர். சுகாதியின் அன்பு, பீஷ்மாவுடனான உறவு போன்றவற்றைப் பெற்ற அம்பா பிரியும்போது வருந்தினாள். பாப்லோ நெருடாவின் கவிதைகளை அம்பாவிடம் கூறிக் காதல் உணர்வைத் தூண்டினான்.(பக்-235)
பகுதி-3. அம்பாவும் அதல்ஹார்டும். யோக்யாகரட்டா- 1965. பீஷ்மாவை அம்பா பிரிந்து சென்றபின்பு மூன்றாவது நபராக அதல்ஹார்டை அம்பா சந்தித்தாள். கம்யூனிஸ்டுகளை விரட்டியதற்காக நகரம் எங்கும் மகிழ்ச்சி கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அம்பா தன்னுடைய உடலில் ஒரு புது மாற்றத்தைக் கண்டாள். பீஷ்மாவின் உயிர்விதை அவளுக்குள் வளரத் துவங்கியது. அதை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டாள் அம்பா. பல்கலைக்கழகத்தில் அதல்ஹார்டு பயிற்சி வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். இப்படியாகத்தான் அம்பா அவனைச் சந்தித்தாள். இவர்களுக்கிடையே கவிதை, உரையாடல், புத்தகப்படிப்பு என உறவு நீண்டன. இவன் ஒரு பொருளாதார அறிஞன். அம்பா இவனிடத்தில் இருமுறை மறுக்கப்பட்ட பெண் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். அதல்ஹார்டுக்கு அம்பாவுடன் பல்கலைக்கழகப் பணி, ஆய்வு, அவனுடைய சிறுவயது வாழ்க்கை என உரையாடல் நீண்டது. இவர்கள் தினமும் சந்தித்துக் கொண்டனர். அம்பாவிற்கு ஒரு பாதுகாப்பு தேவைப்பட்டது.
பகுதி -4. சாமுவேல், அம்பா, பிப்ரவரி, மார்ச் 2006. புருதீவிற்கு பிப்ரவரி மாத இறுதியில் சாமுவேல் அம்பா சென்றனர். சாமுவேல் அழகாய் இருந்த அம்பாவை ஜாவானிப்பெண் என்று உறுதியாக நம்பினான். அவள் ஜகார்த்தாவில் இருந்து வந்ததைத் தெரிந்துக் கொண்டான். இவர்கள் நமீலாவில் தங்குகின்றனர். தன்னுடைய பணி, எழுத்தாளர் பணி என ஒவ்வொன்றையும் சாமுவேலிடம் கூறுகிறாள் அம்பா. சாமுவேல் குறித்து அம்பா கேட்டறிகிறாள். சாமுவேல் தன் வாழ்க்கையைச் சுருக்கமாக சொல்கிறான்.(பக்-299) சாமுவேலின் காவல்துறை நண்பனான ஹசல் இவர்களுக்கு உதவி செய்தான். வேனில் மூவரும் பயணித்தனர். ஜீல்பிகார் பீஷ்மா இறந்துவிட்டான் என்று கூறினான். அதற்கு அம்பா, பீஷ்மா இறக்கவில்லை என்று கூறினாள். புருதீவில் சாமுவேலும் அம்பாளும் தேடல் பயணத்தை மேற்கொண்டனர். சாமுவேல் நண்பன் சபாருதீன் இவர்களுடன் சேர்ந்து கொண்டான்.
பகுதி- 5. பீஷ்மா 1965- 2006 விடுபட்ட வருடங்கள். பீஷ்மாவின் சகோதரி பரமிட்டா ரவுத், பீஷ்மா குறித்த தகவல்களைச் சேகரித்து வைத்திருந்தாள். பீஷ்மாவின் அம்மா பிரியம்ரவுத், அப்பா அஷ்ரூல் பீஷ்மா. இவர்களின் வாழ்க்கையும் சொல்லப்பட்டுள்ளது. அம்பா பீஷ்மா எழுதிய கடிதத்தை ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பித்தாள். கைதியின் வாழ்க்கை, தண்டனை, துரோகம் போன்றவற்றைக் குறித்தும் எழுதியிருந்தான். மொத்தம் 10 கடிதத்தை அம்பா படித்தாள். மார்க்சியம் குறித்த புரிதல்கள் தனக்கு இல்லை என்றும் கடிதத்தில் எழுதியிருந்தான். சிறைக்கைதிகளின் இறப்பு குறித்தும் இக்கடிதம் பேசியது. அங்கு யாசித், ருலி என்பவர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு இருந்தனர் என்ற செய்தியும் அதனால் அவர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறித்தும் அக்கடிதம் பேசியது. 1965 அக்டோபர் 10 அன்று அம்பாவைப் பிரிந்ததை நினைத்து வருந்தினான்.
பகுதி- 6. ஸ்ரீகண்டி, சாமுவேல், ஜகார்த்தா 2011. ஜகார்த்தாவில் அம்பாவைச் சாமுவேல் பார்த்து, இருவரும் கடைக்குச் சென்று தேநீர் அருந்தினர். முகாபரங் குறித்து அம்பா தெளிவாக அறிந்திருந்தாள். தன்னைக் காதலிக்காத பீஷ்மாவை அவள் வெறுக்கவில்லை. அம்பாவும் சாமுவேலும் முகாபரங் குறித்து பேசிக்கொண்டிருந்தனர். பீஷ்மா இறந்த செய்தியை எழுதியது யார் தெரியுமா? என்று கேட்டுவிட்டு சால்வாதான் எனக்கு எழுதினான் என்று கூறினாள். சால்வா மிகவும் நல்லவன். பீஷ்மா இறந்து ஆறுவருடம் கழித்தே இதனைச் சொல்லியிருக்கிறான். ஏனென்றால் அதல் உயிரோடு இருக்கும்போது பீஷ்மா குறித்துக் கூறுவது சரியாக இருக்காது என்று சால்வா எண்ணினான்.
அம்பா தனது தங்கையான அம்பிகா குறித்தும் சாமுவேலிடம் கூறுகிறாள். ஸ்ரீகண்டியின் ஓவியக் கண்காட்சியில் ஸ்ரீகண்டியும் சாமுவேலும் பேசிக் கொள்கின்றனர். அவள் பின்வருமாறு கூறினாள். நான் சிவப்பு வண்ணத்தோடு வளர்ந்தவள். என் வாழ்வின் வண்ணம் சிவப்பு. ஆப்பிள், தக்காளி, இரத்தம், மாதவிடாய்க் குருதி என அனைத்துமே சிவப்பு. அவள் சாமுவேலிடம் நான் உன்னைப் போல் ஒருவனைக் கனவில் பார்த்திருக்கிறேன். வயிறுவலி காரணமாக அம்பா இக்கண்காட்சிக்கு வர இயலாமல் போய்விடுகிறது. தான் கண்ட கனவு குறித்து சாமுவேலிடம் ஸ்ரீகண்டி கூறினாள். உன் சாயலில் இருந்த ஒருவன் மரத்தின் அடியில் ரத்த வெள்ளத்தில் தலைகவிழ்ந்து வீழ்ந்து கிடந்தான். அவனைப் புரட்டிப்பார்த்தபோது அவன் முகம் என் முகம் போல் இருந்தது. அதனால் நான் அலறிவிட்டேன் என்றாள். ஸ்ரீகண்டியின் அழகில் சாமுவேல் மயங்கினான்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு ஸ்ரீகண்டியும் சாமுவேலும் மதுபானவிடுதியில் சந்தித்தனர். சாமுவேலிடம் அவனைப் பற்றி அவள் கேட்கவில்லை. ஒரே சமயத்தில் இரண்டு ஆண்களை ஒரு பெண் காதலித்தால் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொண்ட சாமுவேல் ஒரே சமயத்தில் ஒரு ஆண் இரு பெண்களைக் காதலிக்க முடியும் என்பதை இப்போது புரிந்துகொள்கிறான் என்பதாக நாவல் முடிவடைகிறது. நாவலின் இறுதியில் நாவல் எழுதப்பட்டதற்கு உதவியாக இருந்த நூல்களைப் பற்றி நாவலாசிரியர் பட்டியலிட்டுள்ளார். இந்நாவலின் மூலமாக இந்தோனிசியாவில் நடைபெற்ற கம்யூனிஸ்டு எதிர்ப்பு அரசியலை அறிந்துகொள்ள முடிகிறது. அதிபரின் கருணையற்ற செயலையும் தெரிந்துகொள்ள முடிகிறது.
இந்தோனேசிய மண்ணின் மாண்பினையும் பண்பினையும் உணரமுடிகின்றது. நாட்டில் உள்ள பல்வேறு தீவு, அப்பகுதியின் சிறப்பு, உணவுப்பொருட்கள், மக்களின் பண்பாடு, அரசியலறிவு, போன்றவற்றைத் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்தோனேசிய வரலாற்றை அறிந்து கொள்ள இந்நாவல் உதவுகிறது. இந்நாவலாசிரியர் மிகச்சிறப்பான எழுத்துநடையைக் கைவரப்பெற்றவராக உள்ளார். பல்வேறு உத்திகளை இந்நூலில் அவர் புகுத்தியுள்ளார். பொன்னுராஜ் இந்நாவலைச் சிறப்பான முறையில் பெயர்த்ததோடு, படிக்கும் ஆர்வத்தையும் வாசகருக்கு ஏற்படுத்தித் தந்துள்ளார். நல்ல முறையில் பாரதி புத்தகாலயம் இந்நாவலை அச்சிட்டுள்ளது. லக்ஷ்மி பமன்ஜக், பொன்னுராஜ், பதிப்பகத்தார் அனைவருக்கும் வாழ்த்துகள்.