அம்பேத்கர் நகர் ….!!!!! கவிதை – கவிஞர் ச.சக்தி
அதுதான்
என் சேரிக்குள்‌ நீங்கள்
நுழைவதற்கான முதல் தெரு
ஆமாம் நீங்கள் உங்கள் பாதங்களிலிருக்கும்
செருப்புகளை கழட்டாமல்
நடந்து செல்வதற்கான
முதல் தெரு அது தான்
ஓங்கி வளர்ந்த ஓர் அரசமரம்
அந்த அரசமரத்தடியில்
வீற்றிருக்கிறான்
எங்கள் அரசனாகிய புத்தன்
புத்தரின் மெளனத்தோடு
விளையாடிக் கொண்டிருக்கும்
சேரி குழந்தைகளாகிய
பல சித்தார்த்தன்கள்
இரண்டாவது தெருவில் ‌
பழைய நூலகம்
நூலகத்தின் நுழைவு வாயிலில்
பல நூல்களைக் கற்று
கற்பி யென்று முழங்கிய‌
தத்துவஞானியான
அம்பேத்கரின் சிலை
கூண்டுகளற்ற நீல வானத்தின்
கீழ் சிலை மினு மினுக்கும்
சிலையை சுற்றி
பல இளைஞர்கள் ‌
ஒவ்வொருவரின் ‌ கைகளிலும்
ஒவ்வொரு புத்தகம்
அது தான்
எங்கள் பெரிய காலனி
சேரி மக்களுக்கான மிகப்பெரிய அடையாளம்
இரவு விடியும் வரை
விழித்திருக்கும்
பல ஜனங்களின் கூடாரம்
கபடி விளையாட்டு
வாலிபால் விளையாட்டு
கிரிக்கெட் விளையாட்டு
இப்படிப் பல விளையாட்டுகளால்

ஜொலிக்கும் கடைசி
தெருவிலிருக்கும் நந்தனார் ‌மைதானம்
இப்படியே தான் விடிகிறது
ஒவ்வொரு நாளுக்கான
எம்சேரி மக்களுக்கான இரவும் பகலும் ,

கவிஞர் ச.சக்தி
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.