அம்பேத்கரின் இராணுவம் - நூல் அறிமுகம் | Ambedkarin Raanuvam - Ambedkar's Army க்ருஷாங்கினி - BookReview Krushangini - https://bookday.in/

அம்பேத்கரின் இராணுவம் – நூல் அறிமுகம்

அம்பேத்கரின் இராணுவம் – நூல் அறிமுகம்

நூலின் தகவல்கள் :

நூல் : அம்பேத்கரின் இராணுவம்
தமிழில்  : க்ருஷாங்கினி
பதிப்பகம் : மணற்கேணி பதிப்பகம்
விலை : ரூ . 66

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் தன் வாழ்நாளில் என்றாவது ஒரு நாளாவது சுயநலத்துடன் வாழ்ந்தாரா என்று தேடிப்பார்த்தார் பெயரளவுக்கு கூட காண முடியவில்லை. அந்த அளவிற்கு பொதுநலவாதியாக இருந்துள்ளார். அவர் பேசியது, எழுதியது, சட்டமாக்கியது எல்லாம் இங்குள்ள மக்கள் அனைவரும் சமமாகவும், சமத்துவத்துடனும் வாழ விரும்பியதுதான் காரணம். அவருடைய கொள்கையைப் புரிந்து கொள்வதற்கு அவரைப் போன்றதொரு பொது நலனில் அக்கறைக் கொண்டுவரால்தான் முடியும். போகிற போக்கில் டாக்டர் அம்பேத்கர் மீது குற்றம் சமத்துபவர்கள் கூட மனசாட்சியுடன் நடந்து கொண்டால் அவர் எண்ணங்கள் அல்லது அவருடைய கொள்கைகள் அனைத்தும் மக்கள் நலன் சார்ந்து இயங்கியதை மறுக்க முடியாது. புரட்சியாளர் அம்பேத்கர் ஏன்? எதற்கு? ஒரு போராட்டக்காரராக மாறினார்?. அவர் எப்பொழுதும் மக்கள் நலனில் அக்கறை கொண்டவராக இருந்தார்? என்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. இன்று அனைவரும் ஏதோ ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டும்தான் குழந்தைகளாகப் பிறந்திருக்க முடியும். அப்படி பிறக்கும் குழந்தைக்கு என்ன தெரியும்?. தான் ஒரு தீண்டப்படாத குடும்பத்தில் வந்து பிறந்துள்ளோம் என்று, அந்த குழந்தைக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அல்லது அந்த குழந்தைக்குக் கூட நான் ஒரு தீண்ட தகாதவனாக பிறக்க வேண்டும் என்று கடவுளிடம் வரம் வாங்கிக் கொண்டு வந்து பிறந்ததா? அல்லது அந்தக் குழந்தையைப் பெற்ற, பெற்றோர்களோ? அவர்களுடைய பெற்றோர்களோ அல்லது அவர்களுடைய முன்னோர்களோ எதன் அடிப்படையில் தீண்டத்தகாத மக்களாக ஆக்கப்பட்டார். இவை எல்லாவற்றை கற்பிப்பது இந்து மதமும் அதன் ஆணி வேரான மனுதர்மமும் தான். அதனால் தான் அவர் உலகம் போற்றும் மாமேதையாக கொண்டாடப்படும் வேளையில், இந்திய சாதிய சமூகத்தில் ஒரு தீண்டப்படாத மனிதராகவே அறியப்பட்டார். தான் கற்ற கல்வியால் உலகமே தன்னைக் கொண்டாட வேண்டியவனை சாதியால் கீழானவன் என்று முத்திரைக் குத்தி புறம் தள்ளியபோது தனக்கு நேர்ந்த இந்தக் கொடுமை தன் மக்களுக்கும் நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக தன் மக்களைச் சாதி தீண்டாமையிலிருந்தும் அதன் கொடுமையில் இருந்தும் மீட்டெடுத்து அவர்களை ஆள்போராக மாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் அவருக்குள் கணன்றுக் கொண்டிருந்தது. அந்த விடுதலை நெருப்பக பெரும் வெறுப்பாக மாறியதற்கு இதுதான் ஒரு முக்கியக் காரணம்.

சமகாலத்தில் ஒன்றும் அறியாத பாமரராக இருக்கும் மக்களும் கூட தாங்கள் ஆண்ட பரம்பரை / ஆண்டச் சாதி என்று பெருமை அவர்களுக்குள் குடி கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. இவை எல்லாவற்றுக்கும் போதுமான கல்வி அறிவு இல்லை என்பதுதான் மிகமுக்கியமானக் காரணம். வெறும் ஏட்டுக்கல்வியை மட்டும் வைத்துக் கொண்டு அளவிடு வருவது தவறு. அவர்களுக்கு சமூக கல்வியின் முக்கியத்துவம் தெரியவில்லை. இல்லை என்றால் மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வைக் கற்பித்து ஒருவரை விட ஒருவர் உயர்வானவர் என்ற எண்ணம் அவர்களுக்கு எப்படி தோன்றியிருக்க முடியும்?.

கல்வி அறிவு என்பது அறியாமை என்னும் இருளை அகற்றி, அறிய வேண்டியதை அறிந்து கொள்வதற்கு துணை புரிவதுதான் உண்மை கல்வி. அந்த வகையில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் உண்மையான கல்வி அறிவு பெற்றவராகவும், கல்வியாளராகவும் கொண்டாடப்படுவதற்கு இதுவே முக்கிய காரணம்.

டாக்டர் அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுவதும் இந்த தேச நலனின் அக்கறை கொண்டிருந்தார். அதனால் தான் இந்த தேசத்தை சாதிகளற்ற சமூகமாக மாற்ற வேண்டும் என்று பாடுபட்டார். அப்படி இருந்தால் தான் நம் இந்திய தேசமும் உலக அரங்கில் வளர்ந்த நாடாகவும், வல்லரசு தேசமாகவும், அறிவியல் வளர்ச்சியும், மானுட முன்னேற்றத்திலும் முழுமை பெற்ற நாடாக பரிமளிக்கும் என்ற எண்ணம் அவருக்கும் இருந்தது. ஆனால் இந்தப் பாழாய் போன சாதித் தீண்டாமை அவருடைய அறிவைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. அன்றைக்கு மட்டும் இல்லை இன்றைக்கும் சாதிக் கொடுமை தன்னுடைய கோரப் பசிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆதிக்க சாதியினர் இன்றும் சாதி என்னும் தீமூட்டி அதில் குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றனர். எதிர்காலத்தில் இது போன்ற நிலைமைக்குதான் இந்த ஆட்சியாளர்கள் மக்களைக் கொண்டு சென்று விடுவார்கள் என்று டாக்டர் அம்பேத்கர் அச்சமடைந்தார். அவர் அச்சப்பட்டதைப் போன்று இன்னும் மூர்க்கமாக அவர்கள் செயல்படுகின்றனர்.

ஒடுக்கப்பட்ட மக்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறுவதைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத பொது சமூகம் அல்லது ஆட்சியாளர்கள் அவருடைய கல்விக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கும் கல்வியின் வாய்ப்புகளைப் பறிக்கும் முயற்சியில்இறங்கிவிட்டனர். ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை, ஊக்கத்தொகை மேற்படிப்புக்காக வெளிநாட்டுக்குச் சென்று படிப்பதற்காக உதவித்தொகை எல்லாவற்றையும் தடுக்கும் முயற்சியில் இறங்கிவிட்டனர். மேலும், ஆதிதிராவிடர் மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியும் முழுமையாக பயன்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் நீண்ட நெடுங்காலமாக இருந்து வருவதும் கவனிக்கத்தக்கது.

இப்படிப்பட்ட சூழலில் தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்கும் புரட்சியாளர் அம்பேத்கர் வேண்டப்படுகிறார். அவர் வாதாடிப் பெற்ற உரிமை வெறும் ஒடுக்க பட்ட மக்களுக்கு மட்டுமல்ல பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும், என்று அனைத்து மக்களுக்குமாக அவர் கல்விக்கான உத்திரவாதத்தை உறுதி செய்திருந்தார். மட்டுமல்ல அவர் எல்லா வகையிலும் இந்நாட்டின் நலனில் அக்கறைக் கொண்டவர் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் தன் மக்களின் விடுதலைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் படை ஒன்று தேவை என்பதை உணர்ந்து இராணுவத்தை உருவாக்கினார். அந்த இராணுவத்திற்கு சமதா சைனிக் தள் என்று பெயரிட்டார்.

இந்தப் படையை உருவாக்கியதில் புரட்சியாளர் அம்பேத்கருக்கு ஒரு மனநிறைவைத் தந்தது. குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடும் போது, ஆதிக்க சாதிகள் அவர்களை வழிமறிப்பதும், எதிர்ப்பதும், அடிப்பதும், துன்புறுத்துவதுமாக, கொலை வெறித் தாக்குதலுடன் செயல்பட்டனர். தன்னை நம்பி களம் காணும் மக்களைப் பாதுகாப்பதற்காகவும், அவர்களின் உடல் நலனில் அக்கறை கொள்வதைப் போன்று உடைமைகளிலும் பாதுகாப்புத் தேவை என்பதை உறுதிப்படுத்துவதற்காகவும், பாதுகாப்புப் படை தேவைப்பட்டது. அதன் அடிப்படையில் தான் ”மஹத் போராட்டத்திற்கு ஐந்து நாட்கள் முன்னதாகத்தான், 1927, மார்ச் 13ஆம்தேதி ஞாயிற்றுக்கிழமையன்று சுபெதார் சவாத்கரின் உதவியோடு ‘சமத்துவ இராணுவ அணி’யை நிறுவி இருந்தனர். தொடக்கக் காலத்தில் இதில் இராணுவத்திலிருந்து பணி ஓய்வுபெற்றவர்களே அதிகம் இருந்தனர். இதில் சிரஞ்சீவி ஷங்கர் வடவல்கர், தாகாவங்கர், ஹவால்தார் அர்ஜுன் ஜோத்கர், லோடேகர், சிதாராம் ஹாடே வீர்கர், கோபால் ஆசலோல், க்ருஷ்ண தாம்பே மற்றும் சுபேதார் சவாத்கர் போன்றவர்கள் இருந்தனர். இதில் சுபேதார் சவாத்கர் பெரும் போராட்ட குணம் கொண்டவராகவும் போரிடுபவராகவும் இருந்தார். அவர் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருந்தார்”(ப.11) இவ்வாறு தான் வீர தீரமிக்க இளைஞர்களைப் படையில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.

இராணுவத்திற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் போன்றே டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய படைக்கும் கொடுக்கப்பட்டது. முதலில் அவர்களுக்கு நேர்த்தியான சீருடையை வடிவமைத்தனர் அதில் காக்கி நிற கால் சட்டை, சிவப்பு நிற மேல் சட்டை, காக்கித் தொப்பி, இடுப்பில் பெல்ட் இந்த உடுப்பால் மிடுக்காக காணப்பட்டனர். வெறும் ஆள்பளத்தாலும் ஆடை மிடுங்காலம் மட்டும் அவர்களை அடையாளப்படுத்திவிட முடியாது. அவர்களை ஆளக்கூடியவர்களாக உருவாக்க வேண்டும் என்றால் கருத்தியல் தெளிவு முக்கியம் என்பதையும் உணர்ந்து, அவர்கள் அறிவு தெளிவடைவதற்கு அடிப்படையான சில நூல்களை வாசிக்கவும் கற்றுத் தரப்பட்டது. மட்டுமல்ல நூல் வாசிப்பதைப் போன்றே அவர்கள் பொதுவெளியில் நடந்து கொள்ள வேண்டியதையும் புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கித் தந்தார். ”1942 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் நாள் நாக்பூரின் சோஹன் நகரில் ஒருங்கிணைக்கப்பட்ட சமத்துவ இராணுவ அணியின் கூட்டத்தில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் கூறினார், நாம் நமது அரசியலை சட்டதிட்ட ஒழுங்குகள் இல்லாமல் ஏதாவது மறியலையோ அல்லது போராட்டத்தையோ செய்தோமானால் அந்தப் பழி நமது தன்னார்வலர்களின் அமைப்பான சமத்துவ இராணுவ அணியின்மேல் விழும். அதன் வலிமையின் காரணமாகத்தான் நமது நடவடிக்கைகளில் எவரும் தடை ஏற்படுத்த முடியாத நிலை உள்ளது. நாம் அதற்கு நன்றியுடையவர்களாக இருப்போம்” (ப. 5) என்று தெளிந்த சிந்தனை கொண்டவராகவும் அதே சிந்தனையும் தன் தொண்டர்களிடமும் இருக்க வேண்டும் என்று கொள்கையை அவர் பேசியதில் இருந்து உணர முடிகிறது.

இப்படி டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய சமத்துவ இராணுவ அணியின் தோற்றம், அதன் சுருக்கமான வரலாறு, இராணுவ அணியின் பிரதிநிதிகளின் கடமை, 1937 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலும் சமத்துவ இராணுவ அணியும், சமத்துவ இராணுவ அணியினருக்கு அறிவுரை, அணியை பற்றிய மற்றவர்களின், சமத்துவ ராணுவ அணியின் மாநாடு போன்ற உட் தலைப்புகளாக பிரிக்கப்பட்டு மிக அற்புதமான ஒரு நூலாக வெளிவந்துள்ளது. மேலும் இராணுவ அணியை பற்றி முழு வரலாற்றையும் இந்நூல் விரிவாக எடுத்து இயம்புகிறது.

இந்நூலில் மொத்தம் மூன்று கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் முதல் இரண்டு கட்டுரைகளுக்குத் தலைப்பிடப்படவில்லை. மூன்றாவது கட்டுரைக்கு தலைமை கல்வி மையங்களில் நடைபெறும் செயல்திட்டங்கள் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த மூன்று கட்டுரைகளும் முக்கியமானது. அனைவரும் படித்து அறிந்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் எந்த அளவிற்கு ஒரு தேசத்தை கட்டமைக்க விரும்பினார் என்பதற்கு இந்த இராணுவம் ஒரு சாட்சியாக திகழும். மூன்றாவது கட்டுரையைப் படித்து முடிக்கும் பொழுது ஒரு தெளிவும் ஏற்படும். இராணுவ கட்டுப்பாடு என்றால் என்ன என்பதற்கு இந்த கட்டுரைச் சான்று பகர்கிறது.

இந்நூல் ஒரே மூச்சில் வாசித்து விட முடியும். ஆனால் படித்து முடித்த பின் மனம் அமைதி கொள்ள மறுக்கும். காரணத்தை வாசகர்களிடமே விட்டுவிடுவதுதான் நல்லது கூட.

இந்த அற்புதமான நூலை டாக்டர் சஞ்ஜய் கஜ்பியே இந்தியில் எழுதியுள்ளார். அதை கவிஞர் க்ருஷாங்கினி அச்சு பிரசங்காமல் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். இதை மணற்கேணி பதிப்பகம் மிகச்சிறந்த வெளியீடாக கொண்டு வந்துள்ளது. அந்த நூலில் எழுத்தாளர் ரவிக்குமார் அவர்கள் எழுதிய பதிப்புரையும் பாராட்டத் தந்தது.

நூல் அறிமுகம் எழுதியவர் : 

பேரா. எ. பாவலன்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *