”எங்கோ ஒரு இடத்தில் அநீதி இழைக்கப்பட்டாலும்
அது எல்லா இடங்களிலும் நீதியை அச்சுறுத்துகிறது” என்கிற மார்ட்டின் லூதர் கிங்கின் வாசகத்தை மேற்கோள்காட்டி திரு இரவிக்குமார் எழுதிய பதிப்புரையோடு துவங்குகிறது நீதியரசர் சந்துரு எழுதியுள்ள ’அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்’ நூல்.
அமெரிக்க கறுப்பின மக்கள் அனுபவித்து வரும் நிறவெறிக்கும் இந்திய தலித்துகள் எதிர் கொண்டிருக்கும் சாதிவெறிக்கும் நிறைய தொடர்புகள் இருக்கிறது என்பதை அமெரிக்காவின் ப்ளாய்ட் மரணத்திலும், இந்தியாவில் உடுமலை சங்கர் மரணத்திலும் பார்க்க முடிகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் நீதித்துறை மீது அளப்பரிய நம்பிக்கை கொண்டிருந்தார். அவரது பங்களிப்பால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தை நீதித்துறை பாதுகாக்கும் என நம்பினார். அந்த நம்பிக்கைகள் உடுமலை சங்கர் கொலையில் கௌசல்யாவின் தந்தையை விடுதலை செய்ததன் மூலம் கேள்விகளுக்கு ஆளாகி உள்ளன. கொலை செய்தவனை விட கொலை செய்யத் தூண்டுபவன் தப்பி விடக் கூடாது. ஆனால் உடுமலை சங்கர் கொலையில் கூலிக் கொலைகாரர்கள் மீதான குற்றத்தை உறுதி செய்துவிட்டு கௌசல்யாவின் தந்தை மீதான குற்றச்சாட்டிற்கு போதுமான ஆதாரம் இல்லை என்கிற தீர்ப்பு வெளி வந்துள்ளது. மேல் முறையீட்டில் நியாயம் கிட்டுமென்று நம்புவோம்.
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் நீதித்துறை மீது கொண்டிருந்த நம்பிக்கையை நீதியரசர் சந்துரு சமூக நீதியை உள்ளடக்கிய நீதியை நிலைநாட்டுகிற பணியை தன்னுடைய ஒவ்வொரு தீர்ப்பிலும் வெளிப்படுத்துகிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் மனவோட்டங்களை உளவியல் ரீதியாக தன்னுடைய தீர்ப்புகளில் வெளிப்படுத்துவதை பார்க்க முடிகிறது.
பௌத்தம் ஏன், மதமாற்றம், பஞ்சமி நிலம், கல்லறையில் சமத்துவம், இட ஒதுக்கீடு, உணவு உண்ணும் உரிமை, கோவில்களில் வழிபாட்டு உரிமை, தலித்துகளின் வாழ்வுரிமை உள்ளிட்ட 15 தலைப்புகளில் இந்த நூலை வாசிக்க வாசிக்க நமக்கு புதிய பார்வையும், புதிய வெளிச்சமும் தெரிகிறது. சட்டத்தின் துணை கொண்டு மட்டும் தீர்ப்புகளை எழுதாமல், கலீல் ஜிப்ரான் துவங்கி திரை இசைப்பாடல்கள் வரை மேற்கோள் காட்டுவது வித்தியாசமான அணுகுமுறை. நமது வாசிப்பிற்கான ஆர்வத்தை அதிகரிக்கிறது.
கொண்டு வந்த மதமாற்றத் தடைச்சட்டத்தை எதிர்த்து கத்தோலிக்க குருமார்கள், அவ்ர்கள் நடத்தி வந்த கல்வி நிலையங்களை மூட முடிவெடுக்கின்றனர். அதற்கு எதிராக பாஜக தொடுத்த வழக்கில் பெரும்பான்மை மதத்திலிருந்து சிறுபான்மை மதத்திற்கு நடைபெற்ற மதமாற்றம் குறித்தே நாம் கேள்விப்படுகிறோம். நெல்லை மாவட்டம் இடிந்த கரை கிருத்துவ மீனவர்கள் ’துவி’ என்கிற மீனைப் பிடித்தால் அதை முழுவதுமாகவும் செவ்வாய் கிழமைகளில் பிடிக்கப்படும் மீனில் சரிபாதியையும் சர்ச்சுக்கு கொடுக்க வேண்டும் என்கிற நிபந்தனையை எதிர்த்து இந்து மதத்தை தழுவினர்.
“கத்தோலிக்க சமூகத்தில் கலாச்சார, பண்பாட்டு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக மதமாற்றம் நடப்பது போலவே, பொருளாதார ஒடுக்குமுறைக்கு எதிராகவும் மதமாற்றம் நிகழ்ந்துள்ளது”
தோழர் S.A. பெருமாளின் எழுத்துகளை தனது தீர்ப்பில் மேற்கோள் காட்டுகிறார்.
மதமாற்றம் குறித்து காந்தியடிகளுக்கும், அம்பேத்கருக்குமான விவாதங்களை அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். அந்த தீர்ப்பிற்கான அடிப்படை அம்பேத்கரிடமிருந்து வந்ததை புரிந்து கொள்ள முடிகிறது.
*மதுரை தத்தநேரியில் உள்ள சுடுகாட்டில் சாதி, சமய அடிப்படையில் தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆரிய வைசிய சமூகத்தினரும் இடம் கோரி தொடர்ந்த வழக்கில் மாநகராட்சி சட்டத்தில் சாதிக்கொரு இடம் சுடுகாட்டில் ஒதுக்க வழியேதுமில்லை எனக் குறிப்பிட்டு அப்படி ஒரு விதியிருந்தால் அது அரசியல் அமைப்பு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற அடிப்படை பிரிவுக்கும் தீண்டாமையை ரத்து செய்த பிரிவுக்கும் முரணானது* எனக் குறிப்பிடுகிறார். அந்த தீர்ப்பில் ‘ *சமரசம் உலாவும் இடமே…நம் வாழ்வில் காணா’* என்கிற திரைப்படப் பாடலையும் குறிப்பிடுகிறார். கல்லறையில் சமத்துவம் என்பதை வலியுறுத்தி முதலில் வருபவருக்கே முதல் உரிமை என தீர்ப்பளிக்கிறார்.
தீர்ப்புகள் வெறும் சட்ட விதிகளை மட்டுமே குறிப்பிட்டு என்றில்லாமல் அதை சுவாரசியமாக எளிய மனிதர்களும் புரிந்து கொள்ளும் வகையில் அமைத்திடுவதை இயல்பாகக் கொண்டிருக்கிறார்.
பட்டியலின மக்கள் ஊருக்குள் உள்ள நூலகத்தைப் பயன்படுத்திடக் கூடாது என்கிற நோக்கில் நூலகத்தை ஊருக்குள் கட்டக்கூடாது என்கிற வழக்கு. பட்டியலின மக்கள் ஊருக்குள் வருவதைத் தடுக்கும் தீண்டாமையின் வடிவம் ஒரு புறம் என்றால் மறுபுறத்தில் அவர்கள் படிப்பறிவு பெற்றுவிடக்கூடாது என்கிற உள்நோக்கத்தோடு தொடுக்கப்பட்ட வழக்கு. பட்டியலின மக்கள் வாசிப்பின் மூலம் அறிவுவளர்ச்சி பெறுவார்கள் என்கிற அச்சமே எதிர்ப்புக்கு முக்கிய காரணம் எனக் கூறி நூலகம் ஊருக்குள் அமைய வேண்டும் என ஆட்சியருக்கு உத்தரவிடுகிறார்.
பேருந்துகளில் தலித்துகள் முதலில் ஏறக்கூடாது என்பதை மனதிற் கொண்டு நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டியில் பேருந்து புறப்படும் இடத்தையே மாவட்ட அதிகாரிகளின் துணையோடு மாற்றியதை எதிர்த்த வழக்கில் மீண்டும் அதே இடத்திற்கு பொது இடத்தில் பாரபட்சமாய் இருக்கக் கூடாது என மாற்றி தீர்ப்பு வழங்கினார். அந்த வழக்கில் நவீன தீண்டாமையின் வடிவங்கள்தான் எத்தனை எத்தனை.
ஒரு பட்டியலினப் பெண்ணை தனியார் பள்ளிக்கு சமையலராக பணி நியமனம் செய்கிறார்கள். அந்த உதவி பெறும் பள்ளியின் தாளாளர் அவரை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். அவருக்கு பதிலாக மற்றொருவரை நியமனம் செய்கிறார்கள். அதை எதிர்த்த வழக்கில் அந்த பட்டியலினப் பெண்ணை வேலைக்கு சேர்த்துக் கொள்ளவில்லை எனில் பள்ளியை அரசே ஏற்று நடத்த உத்தரவிட்டார். மேலும் இதில் இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும், அதில் தலித்துகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என உத்தரவிடுகிறார். ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் இருக்கும் பெண்ணுக்குத்தான் வேலை கொடுக்க வேண்டும் என்கிற அரசின் விதியால் ஊருக்கு வெளியே ஒரு கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து காலனியில் இருக்கும் பட்டியலினப் பெண்களுக்கு வேலை கிடைக்காது. எனவே அந்த முரண்பாட்டைக் களைந்து தகுதித்தேர்வில் இருவர் சமமாக மதிப்பெண் பெற்றால் அருகில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கலாம் என தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை அடிப்படையாக வைத்து அன்றைய முதல்வர் கலைஞர் வெளியிட்ட அரசாணையால் 25,000 பட்டியலினத்தவருக்கு வேலை வாய்ப்பு கிட்டியது.
தீர்ப்பு அரசாங்கப் பணிகளில் வேலை வாய்ப்பை உருவாக்கவும் செய்கிறது; அரசின் பார்வையை விசாலமானதாகவும் மாற்ற முடிகிறது. சமூக ஜனநாயகம் என்கிற அஸ்திவாரத்தில்தான் அரசியல் ஜனநாயகத்தை எழுப்ப முடியும் என்கிற அம்பேத்கரின் கருத்தை உள்வாங்கிக் கொடுத்தத் தீர்ப்பு அது. தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள வாட்டாத்திக் கோட்டை அருகில் உள்ள தோப்புநாயகம் கிராமத்தில் ஆதிக்க சாதியினருக்கும், பட்டியலினத்தவருக்கும் இடையில் கோயில் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி திருவிழாவே நிறுத்தப்பட்டது. அதற்கு எதிராக நடைபெற்ற வழக்கில் தீர்ப்பளிக்கும் போது மீனாட்சியம்மன் கோவில் ஆலய நுழைவுப் போராட்டம், கண்டதேவி கோயில் தேரோட்டம் ஆகியவற்றின் வரலாறை மேற்கோள்காட்டி, காந்தியாருக்கும், அம்பேத்கருக்குமான உரையாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை சுட்டிக்காட்டி திருவிழா நடைபெற வேண்டும் எனத் தீர்ப்பளிக்கிறார். தீர்ப்பின் முடிவில்
”21 ஆம் நூற்றாண்டு விடிந்த பின்னரும் இங்குள்ள சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதை இந்நீதிமன்றம் வருத்தத்துடன் பதிவு செய்கிறது. இறைவனை வழிபடும் நேரத்திலும் சாதியடிப்படையில் குழுக்களாக பிரிந்திருக்கின்றனர். கிராமத்திலுள்ள ஆதிக்க சமூகத்தினர் அதே கிராமத்தைச் சார்ந்த தலித் சகோதரர்களை இறைவனின் சந்நிதானத்தின் முன்பு கூட இணைத்துக் கொள்ள விரும்பவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
‘சாதி மறுப்புத் திருமணங்கள்தான் உண்மையான தீர்வு என்று நான் நம்புகிறேன். இரத்த கலப்பினால் மட்டுமே உறவினர்கள் என்ற எண்ணம் ஏற்படும்” என்கிற அம்பேத்கரின் வரிகளில் உள்ள நியாயத்தை சாதிமறுப்பு திருமணத்திற்கு உதவப் போனவர் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டு காவல்துறையில் அவருக்கு பணி மறுக்கப்படுகிற வழக்கில் பேசுகிறார். கப் பஞ்சாயத்து குறித்தும், கலப்பு மணத் தேவை குறித்தும் தீர்ப்புகளில் பேசுகிற போது அம்பேத்கரின் உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டு அளித்த தீர்ப்பாக பார்க்க முடிகிறது.
மதுரைப் பொதும்பு வழக்கில் கொடுமைகள் செய்த தலைமையாசிரியருக்கு தண்டனை வழங்கியதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் வழங்கிய செய்திகள் அறிந்ததே. அதேபோல *உத்தபுரம் சுவர் இடிப்பில்* அவருடைய பங்களிப்பு அறிந்ததே. டாக்டர் அம்பேத்கரின் எழுத்துகள் மீது அவருக்கு இருந்த ஈர்ப்பையும் அவரது சிந்தனைகளை முழுமையாக உள்வாங்கிக் கொண்டதையும் நீதியரசர் சந்துருவின் தீர்ப்புகளில் பார்க்க முடிகிறது. *எளிய மனிதனின் நிலையிலிருந்து நீதி வழங்கிய அவரது செயல்பாடுகள் நமக்கு நீதித்துறையின் மீதான நம்பிக்கையை கொடுக்கிறது*.
சமூகத்தைப் பற்றிய சிந்தனை உள்ளவர்களால், உழைக்கும் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டவர்களால் மட்டுமே இப்படியான தீர்ப்புகளை வழங்க முடியும். எந்த வழக்கின் தீர்ப்பிலும் சட்டத்தை வளைக்கக் கூட இல்லை. அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் (இந்த 3 வார்த்தைகளையும் பிரெஞ்சு புரட்சியின் விளைவான தத்துவங்கள் மூலம் அம்பேத்கர் பெறவில்லை என்பதையும், அது அவருடைய குருவான புத்தரிடமிருந்து பெற்றார் என்கிற தகவலையும் அந்நூலில் காணமுடிகிறது) என்கிற அடிப்படையிலிருந்தே தனி மனித உரிமைகளை தீர்ப்பின் மூலம் நிலை நாட்டுகிறார்.
சந்துரு போன்றவர்கள் நீதியரசர்களாக வருவதன் மூலம் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியும் என்கிற நம்பிக்கை இந்த நூலை வாசித்தவுடன் பிறக்கிறது. அம்பேத்கரின் கருத்துகள், சிந்தனைகள் அனைத்தும் இன்றைய காலகட்டத்திற்கும் பொருத்தமாக இருக்கிறது, நடைமுறைக்கு சாத்தியமாக இருக்கிறது என்பதை இந்நூலின் மூலம் அறிய முடிகிறது.
208 பக்கங்களைக் கொண்ட இந்த நூல் மணற்கேணி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
நூல்: அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்
ஆசிரியர்: நீதியரசர் சந்துரு
வெளியீடு: மணற்கேணி பதிப்பகம்
விலை: ரூ.93
பக்கம்: 208