தொலைத்தல்.
******************
கோவில் திருவிழாவில்
குழந்தையாய் இருந்தபோது
கொலுசை தொலைத்து விட்டதாய்ச் சொல்லி
ஆயா சிரிப்பதுண்டு
பள்ளிக்கூடத்தில்
அவ்வப்போது
பென்சிலை தொலைத்து விட்டதாய்
அக்கா பரிகசிப்பதுண்டு
கடற்கரை மணலில் ஒரு முறை
அம்மாவை தொலைத்து விட்டதாய்ச் சொல்லி
அப்பா சிரிப்பதுண்டு
என் நினைவிலிருப்பதோ
குடும்பம் நொடித்து போய்
குழந்தைத் தொழிலாளியாகி
விளையாடும் வயதை
விட்டுத் தொலைத்தது தான்.
2
தவறுதல்.
*************
கைத்தவறி நழுவிய
கண்ணாடிக் குப்பி போல
கணப்பொழுதில்
தவறவிட்டேன்
கைபேசியில் அழைப்பொன்றை.
உடைந்து நொறுங்கிய
எண்கள் மட்டும் கொண்ட
அந்தக் கண்ணாடிக் குப்பிக்குள்
என்ன இருந்திருக்கும்?
புதிய நண்பனின் தேநீரா..
அறிமுகமற்ற தோழியின் பழ ரசமா..
பதறும் விபத்தின் பச்சை ரத்தமா..
துக்க செய்தியின் துளி விஷமா..
அவசரமாய் அழைத்துப் பார்த்தேன்
மன்னிப்பு பதில் வந்தது
தவறுதலாய் எண் மாறியதாக
என்ன செய்வது இப்போது
ஏந்தியுள்ள இந்த எச்சில் குப்பியை?..
3
சொல்லுங்க எஜமான்
**************************
நீங்கள் முறைக்கும் பொழுது
திருப்பி முறைக்க முடியாது என்றால்
தேவையற்றது தானே …
நீங்கள் சிரிக்கும் போது
பதிலுக்குச் சிரிப்பது.
– அமீபா.

