ameepa poetries அமீபா கவிதைகள்
ameepa poetries அமீபா கவிதைகள்

அமீபா கவிதைகள்

தன்மை
**********
ஒரு முட்டாள் தனத்தை
சிறு குழந்தையை போல்
மடியில் கிடத்தி கொஞ்சி
தோளில் தூக்கிக்கொண்டு நடக்கிறீர்கள்.
மேலெல்லாம் கக்கி வைப்பதை புன்னகைத்தபடி
பெரிய மனிதத்தனத்தோடு
துடைத்துக் கொள்கிறீர்கள்
அது அவரவர் விருப்பம் தான்.
ஆனால், அதற்கு
மாற்றானத்தனத்தைக் காட்டி
“பூச்சாண்டி” எனச் சொல்லி மட்டும்
வளர்த்து விடாதீர்கள்.
வேட்டை.
***********
ஒரு பூனை  எலியை கவ்வுவதைப்போல நான் அந்த தவறைக் கவ்வியிருந்தேன்
அது ஆகாதென அறிந்தவுடன்
தலையை உதறிக் கொண்டேன்
அதற்குள் அடிப் பட்டிருந்தது அந்த தவறுக்கு
மன வருத்தத்தில் மொத்த விரதம் கொண்டதென் மனப் பூனை
காயம் ஆறிய எலி
கடிக்க துவங்கியிருந்தது
மெலிந்திருந்த பூனையை.
மனக்காடு.
*************
இறந்து போன அப்பாவை
இடுகாட்டின் ஒரு ஓரத்தில்
புதைத்து விட்டு வந்த மறுதினம்
பாலூற்றி பிடித்ததை படையலிட்டு
 வந்த போதே கொஞ்சம்
மாறிப் போயிருந்தது இடுகாடு
ஒரு வருடம் கழித்து
மீண்டும் பார்த்த போது
வேறு யார்யாரோ வந்திருந்து
புதைத்த இடம் அடையாளமற்று போயிருந்தது
இந்த வாழ்க்கையில்
இப்படித்தான் இருக்கிறது
இடுகாடாய் மனமும்.
                                                – அமீபா.
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *