முந்தாநாள் (08. 09. 2019) மாலை தஞ்சையில் தோழர் வீரமணி Sanmuga Veeramani அவர்களை ஓர் உதவி கேட்கச் சந்தித்தேன்.
அவர், ‘அமீர் ஹைதர்கான்: காவியம் படைத்த கம்யூனிஸ்ட் ‘ என்கிற நூலைக் கட்டாயம் படியுங்கள் என அதனை அறிமுகப்படுத்தியதோடு ஒரு படியையும் தந்தார் (நூல் விவரப் பக்கத்தின் நகலை இணைத்துள்ளேன்)அது , டாக்டர் அயூப் மிர்சா உருது மொழியில் எழுதிய வாழ் புனைகதை ( Bio fiction) யின் சுருக்கப் பட்ட ஆங்கிலப் பெயர்ப்பின் தமிழாக்கம். தமிழாக்கியவர் திரு. கி.ரமேஷ்.
தமிழிலேயே எழுதப்பட்டது போல் உணர வைக்கும் தமிழாக்கம்.
அமீர் ஹைதர்கான் (1900 – 1989) ராவல் பிண்டி மாவட்டத்திலுள்ள , ஜீலம் ஆற்றங்கரையிலமைந்த பின் தங்கிய கஹா லியான் சஹாலியான் என்னும் தொலைதூரச் சிற்றூர் ஒன்றில் பிறந்தவர்; நான்கு வயதாகும் போது தந்தையை இழந்தவர்; மாற்றாந் தந்தையின் கொடுமைக்கு ஆளானவர்.
சிறுவனாயிருக்கும் போதே பல முறை தப்பிச் செல்ல முயன்றார்; மீண்டும் மீண்டும் தண்டிக்கப்பட்டார். போதிய உணவே இல்லாத நிலையில் சுவைக்கு வழியேது.மறுபுறம் கல்வித் தாகம். பள்ளிக் கூடமும் ஒடுக்குமுறைக்களமாகவே இருந்தது. பொறுத்துக் கொண்டார்.
ஒரு முறை அவரைத் தாயாரே அடித்து விட்டார். சினம் மீதூரப் பயணச்சீட்டுக் கூட இல்லாமல் தொடர்வண்டியேறி வெகு தொலைவிலுள்ள பெஷாவர் நகருக்குச் சென்றார். அங்குப் பணியாற்றிய அவருடைய அண்ணன் சமாதானப்படுத்தித் திருப்பியனுப்பினார்.
மௌலவியின் வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டுமசூதியில் மார்க்கம் சார்ந்த கல்வி பயின்றார். மெளலவியின் மகன் புதிதாகக் கட்டப்பட்ட மசூதியின் இமாம் ஆனார். அவருடன் அமீர் பணியாளனாகச் செல்ல நேர்ந்தது. அங்கிருந்தும் தப்பியோடி , சில மைல் தொலைவிலுள்ள மசூதியில் தஞ்சமடைந்தார். அங்கும் அடி உதை, அடிமைப்பணிகளுடன்தான் கல்வி . மேலும், சுழற்சி முறையில் மாணவர்கள் வீடு வீடாகச் சென்று பிச்சை பெற்றுப் பகிர்ந்துண்பதும் அங்கே வழக்கம்.
அங்கிருந்தும் மஞ்சுதா என்னும் சிற்றூரிலுள்ள இன்னொரு மசூதிக்கு ஓடினார். அந்த மெளலவியுடன் வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றார். அப்புறமும் அதிருப்தி. ஓடினார்.
பேவல் என்னும் வணிகத்தை மையமாகக் கொண்ட ஊரை அடைந்தார். அங்கு ஒரு பாழடைந்த மசூதியில் தங்கிக் கொண்டார்.
நல்வாய்ப்பாக அங்கு பள்ளித் தலைமையாசிரியராயிருந்த முன்ஷி தேவிதத் என்னும் பிராமணர் இவரது கல்வியார்வம் உணர்ந்து, கட்டணமின்றிப் பள்ளியில் சேர்த்துக் கொண்டார். அவரது குதிரையைப் பராமரித்துக் கொண்டு குற்றேவல் செய்து வந்தார் அமீர். அவரது இல்லத் தாழ்வாரத்தில் தங்க இசைவு தந்தராயினும் எக்காரணம் கொண்டும் இல்லத்திற்குள் நுழையவே கூடாது என்பது கடும் நிபந்தனை.
நாட்கள் மகிழ்ச்சியாகத்தான் ஓடின. ஒரு முறை ஆசிரியர் கடும் நோய்வாய்ப் பட்டுத் தண்ணீர் தண்ணீர் என்று தவித்தார். அக்கம் பக்கம் யாருமேயில்லை. வேறு வழியின்றி அமீர் ஒரு குவளையில் தண்ணீரை எடுத்து அவர் வாயருகில் கொண்டு சென்றார். அவ்வளவுதான், .
“ஹரி ஓம் ஹரி ஓம் ” என்று அலறியவாறு அமீரை வசைபாடி அடித்துத் துரத்தி விட்டார் .
தம் அண்ணனைத் தேடி ஒருவாறு கல்கத்தா சென்றார்; கண்டார்; மகிழ்ந்தார். ஆனால் போகப் போகத் தம் அண்ணன் மேட்டுக்குடியை அண்டி, போதை பாலுறவு எனப் படாடோபமாதத் திளைத்து, போதைப்பொருள் கடத்தலிலும் பங்காற்றுவதையும் அவர்கள் சட்டத்திற்குப் புறம்பாகக் காவல், நிருவாக, நீதித்துறைகளோடு உறவும் முரணுமாய் ஆபத்தான விளையாட்டையே தொழிலாகக் கொண்டிருப்பதையும் கண்டு நொந்து வெளியேறினார்.
பின்னர், கப்பலில் வேலை, உலகின் சாளரம் திறத்தல், லண்டன், நியூயார்க் என்று உலகின் பல பகுதிகளுக்குச் செல்லல், அமெரிக்கக் குடியுரிமை பெறல், தொழிற்சங்கங்கள், தொழிலாளர் போராட்டங்களில் ஈடுபடல், உலகளாவிய பல தேச விடுதலை இயக்கத்தாரோடு தொடர்பு கொள்ளல், இந்திய விடுதலைப் போராளியாதல், விமானம் இயக்கக் கற்றல், பழைய விமானம் வாங்குதல், சோஷலிச அறிமுகத்திற்குப் பின் சோவியத் நாட்டில் பயிற்சி பெறல் என்று முற்றிலும் மேம்பட்ட பரந்த உலகானுபவங்களோடு இந்தியா மீளல் , சென்னையில் பொதுவுடைமை அமைப்பைக் கட்டப் பணிக்கப்படல் , செயல்களில் அமைதி குன்றாமல் ஈடுபடுதல், காவல் துறை வேட்டை, தலைமறைவு, தளைப் படல், சிறை புகல் , விடுபடல் மீண்டும் அரசியல் என்று எதிர்பாராத்திருப்பங்களுடன் கூடிய அரசியல் சாகசமாக வாழ்க்கை தொடர்கிறது .
ஆங்கிலேயர் வெளியேற்றத்திற்குப் பிந்தைய பிரிவினை, இரத்தக் களரி இவற்றினிடையில் அமீர் பாக்கிஸ்தான் நாட்டவரானார். அங்கும் போராட்டம், சிறை, அரசியல் என்று தான் வாழ்க்கை நகர்ந்தது .
ஒரு நாவலாகக் கற்பனையில் கூட காண அரிதான நிகழ்ச்சித் தொடர்கள் அமீரின் வாழ்வில் சுழன்றேறின.
இந்த மாபெரும் சாகசக்காரரான அமீர் , விமான ஓட்டி அமீர் ஓடும் பேருந்தில் ஏற முயன்று விழுந்து காயமுற்று இறந்தது முரண் நிலை அவலம்.
இத்தனை நாளாகப் பார்வையில் பதியவில்லையே என்ற கழிவிரக்கத்தைத் தூண்டிய நூல்; இப்போதாவது படித்தோமே என்கிற நிறைவைத் தந்த நூல்.
கம்யூனிஸ்டுகள் மட்டுமன்றி அரசியலில், அரசியல் சமூக வரலாற்றில் புனைகதைகளில் ஈடுபாடுள்ள யாவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.