நூல்: அமெரிக்கா (கருப்பின மக்களின் வரலாறு)
ஆசிரியர்: ஆர்.பெரியசாமி
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ₹90.00
புத்தகம் வாங்க: thamizhbooks.com
இன்று காலைச் செய்தி: “ஜார்ஜ் ஃப்ளாய்டை இரக்கமின்றித் தன் மூட்டால் அழுத்திக் கொன்ற வெள்ளைப் போலீஸ்காரனுக்கு 22 ½ ஆண்டுகள் சிறைத்தண்டனை”(26.06.2021). இந்த செய்தி நமக்குக் கூறும் விஷயம் என்ன? இன்றும் அமெரிக்காவில் கருப்பின மக்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது. அதையும் மக்களைக் காக்க வேண்டிய காவலர்களே செய்கிறார்கள் என்பதுதான். இந்தப் படுகொலை சம்பவத்திற்குப் பிறகும் இதே போன்ற செயல்கள் அமெரிக்காவில் அரங்கேறி விட்டன.
அமெரிக்காவின் அடிமை மக்கள் வரலாறு மிகவும் நீண்டது. அமெரிக்கா உருவாகி, அங்கு தெற்குப் பகுதியில் குடியேறிய ஆங்கிலேயர்கள் தோட்டத் தொழிலில் இறங்கினர். அதற்கு ஏராளமான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். ஆங்கிலேயர்களால் அமெரிக்காவின் உண்மையான பழங்குடி மக்களை அந்த வேலையில் இறக்க முடியாத நிலையில், பிரிட்டிஷ் இந்தக் கேவலமான வேலையைத் தொடங்கியது. லட்சக்கணக்கில் ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து ஆடு, மாடுகளைப் போல் பிடித்து, கப்பல்களில் அடைத்துக் கொண்டு வரப்பட்ட கருப்பின மக்கள் அங்கு அடிமைகளாகக் கேவலமாக வேலை வாங்கப்பட்டனர். சவுக்கடி, சங்கிலிகளால் கட்டி வைத்தல், இன்னும் என்னென்ன கொடூரங்கள் உண்டோ இவையனைத்தும் அங்கு அரங்கேறின. அவற்றையெல்லாம் படிக்கும் போதே நமக்கு ரத்தம் கொதிக்கும். அவ்வளவு கொடூரம். அதை விடக் கொடூரம் அவையெல்லாம் ‘சட்டபூர்வமாக்கப்பட்டன’ என்பதாகும். இவற்றைத் தெரிந்து கொள்வதற்கு நாம் ஃப்ரட்ரிக் டக்ளஸ் எழுதிய வரலாறு, டாம் மாமாவின் குடிசை போன்றவற்றைப் படிக்கலாம். இன்னும் ஏராளமாக எழுதப்பட்டுள்ளன.
பிறகு அங்கு பிரிட்டிஷ் வழக்கப்படி அதில் ஆட்சி செலுத்த முயல, அங்கு குடியேறியவர்களோ ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் அதை எதிர்த்துப் போராடத் தொடங்கினர். தொடங்கியது அமெரிக்காவின் சுதந்திரப் போர். தோட்ட முதலாளிகள் அடிமைகளை அதில் ஈடுபடுத்த விரும்பா விட்டாலும், சூழ்நிலையால் ஒப்புக் கொள்ள நேரிட்டது. முதல் முறையாக அதில் ஈடுபட்ட ஏராளமான கருப்பர்கள் சுதந்திரம் பெற்றனர். ஆனால் போர் முடிந்ததும், அமெரிக்கா சுதந்திரம் பெற்றதும், வீரமாகப் போராடி அமெரிக்காவுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த கருப்பர்களை மீண்டும் முதுகில் குத்தியது அமெரிக்கா. அது மட்டுமல்ல, இன்று அமெரிக்கா இத்தனை அளவுக்குப் பொருளாதாரத்தில் முன்னேறியிருக்கிறது என்றால் அதில் கருப்பர்கள் பங்கு அளவிட முடியாதது.
அதன் பின்னால் வடபகுதியில் முன்னேறிய முதலாளித்துவத்துக்கும், தென்பகுதி தோட்ட முதலாளிகளுக்கும் போராட்டம். வடபகுதி கருப்பர்களுக்கு ஆதரவாகச் செயல்பட, தென்பகுதி விடுதலை பெற முயல, அதிலும் கருப்பர்களின் போராட்டம். இரண்டு போர்களிலும் கருப்பர்களின் வீரமும், தீரமும் சொல்லி மாளாது. அதை வரலாறு பதிவு செய்கிறது.
கடைசியில், நெருக்கடி காரணமாக, ஆபிரகாம் லிங்கன் கருப்பர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்துப் பிரகடனம் வெளியிட்டார். அதைத் தொடர்ந்த உள்நாட்டு யுத்தத்திலும் வடபகுதி வென்றதால் இது நிரந்தரமானது, சட்டப்படி. எனினும் இன்னமும் உண்மையான விடுதலை கருப்பர்களுக்குக் கிடைக்கவில்லை.
கடந்த நூற்றாண்டில் நாம் ஃப்ரட்ரிக் டக்ளசைத் தொடர்ந்து மால்கம் எக்ஸ், மார்ட்டின் லூதர் கிங் ஆகியோரின் பெயர்களையும், அவர்கள் நடத்திய போராட்டங்களையும் கேள்விப் பட்டிருப்போம். “எனக்கு ஒரு கனவு இருக்கிறது” என்ற கிங்கின் வீர உரை, தோழர் காஸ்ட்ரோவின் “வரலாறு என்னை விடுதலை செய்யும்” என்ற உரைக்கு இணையானது என்றே சொல்லலாம்.
எனினும் முதல் பத்தியில் நான் சுட்டிக் காட்டியபடி, நிறவெறி இன்னமும் அமெரிக்காவில் தொடர்கிறது. 300 வருடப் போராட்டங்களுக்குப் பிறகு ஓரளவு கருப்பர்கள் முன்னேறியுள்ளனர் என்றாலும், சிறிது இடைவெளி கிடைத்தாலும், கு க்ளக்ஸ் க்ளான் போன்ற வன்முறைக் குழுக்கள் அவர்களைத் தாக்கி அழிக்கத் தொடங்கி விடுகின்றனர். அமெரிக்காவின் அதிபராகவே ஒரு கருப்பரான பாரக் ஒபாமா வந்தாலும், அவரும் பெருமுதலாளிகளின் விருப்பப்படிதான் செயல்பட்டார். பெரிதாக ஒன்றும் செய்து விடவில்லை.
இப்படிப்பட்ட துன்பமும், துயரமும், வீரமும், தீரமும், தியாகமும் நிறைந்த அமெரிக்க கருப்பின மக்களின் வரலாற்றை தோழர் ஆர்.பெரியசாமியின் எழுத்தில் படிக்கும்போதே மனது விம்முகிறது. கண்கள் நிறைகின்றன. முடிந்தால் நாமும் போய் அவர்களுடன் போராட்டத்தில் நின்று விட மாட்டோமா என்ற ஏக்கத்தைத் தூண்டி விடுகின்றது. நான் போன கரோனா ஊரடங்கில் மால்கம் எக்ஸ் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் போதும், தற்போது மார்ட்டின் லூதர் கிங்கின் சுயவரலாற்றைப் படிக்கும் போதும் இப்படித்தான் தோன்றியது. எப்போதும் நான் அவர்களுடனேயே என்னை அறியாமல் அடையாளப்படுத்திக் கொண்டு விடுகிறேன். ஹாலிவுட் படங்களைப் பார்க்கும் போது கூட கருப்பின மக்கள் நடிக்கும் படம் என்றால் அதில் ஒன்றி விடுகிறேன். மீண்டும் அத்தகைய உணர்வைத் தூண்டி விட்டது தோழர் பெரியசாமியின் எழுத்து.
இப்பொழுதும் நான் மொழிபெயர்த்துக் கொண்டிருப்பது ‘சோல்டாட் சகோதரர்’ என்ற கருப்பினப் போராளியின் கடிதத் தொகுப்புதான்.
தோழர் பெரியசாமியின் புத்தகம் ஏராளமான விவரங்களைத் திரட்டி, தொகுத்து எழுதப்பட்டுள்ளது. ஏராளமான செய்திகள், விவரங்கள், அவற்றை எப்படி அணுக வேண்டும், இன்று அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது உட்பட தோழர் பெரியசாமி மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார். ஒரு மனிதரை அவரது தோற்றம் கண்டு எடை போட்டு விடக் கூடாது என்பதற்குச் சிறந்த உதாரணம் தோழர் பெரியசாமி. அவருடன் பேசி இருக்கிறேன், பழகி இருக்கிறேன். தினமும் மாலையில் பாரதி புத்தகாலயத்தில் நான் வருவதற்காகக் காத்துக் கொண்டிருப்பார். வெளியே சென்று தேநீர் அருந்துவோம் அல்லது அவர் கையாலேயே தேநீர் கிடைக்கும். அவருக்குள் இருந்த ஆற்றல் முழுதும் வெளிப்பட்டுள்ள புத்தகமாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது. அந்த எளிய மனிதருக்குள் இத்தனை ஆற்றலா! இதை அவர் இருக்கும் போதே படித்து அவரிடம் என் வாழ்த்தைக் கூறியிருக்க வேண்டும் என்ற குற்ற உணர்வை என்னால் தவிர்க்க முடியவில்லை. இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு இனி அமெரிக்க மக்கள் வரலாறு (சிந்தன் புக்ஸ்) புத்தகத்தைப் படிப்பதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டு விட்டது. அதெல்லாம் படிப்பது எளிதாகி விடும்.
இந்தப் புத்தகத்தில் ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் எடுத்துக் கூறுகிறார் பெரியசாமி:
”அடிமைகளாகக் கூனிக்குறுகிக் கிடந்த ஆப்ரிக்க கருப்பர்கள் இன்று ஆப்ப்ரிக்க அமெரிக்கர்களாக நிமிர்ந்து நிற்பதற்கு அவர்களுடன் இணைந்து வெள்ளை இன மக்கள் குறிப்பாக வெள்ளைத் தொழிலாளி வர்க்கமும், மாணவர்களும், விவசாயிகளும், கருப்பர்களுடன் இணைந்து நடத்திய கூட்டுப் போராட்டங்கள் அடிப்படையானதாகும். இதை ஒதுக்கி விட்டுப் பார்த்தால் ஆப்ப்ரிக்கக் கருப்பர்களின் வரலாறைத் தவறாகப் பார்ப்பதாகி விடும். இன்னும் சொல்வதானால், வெள்ளையர்களின் ஆதரவும், வலுவான துணையும் இல்லையென்றால் அந்த வரலாறு வேறு எதிர்மறையான திசையில் சென்றிருக்கும். எனினும் உழைக்கும் மக்கள் என்ற வகையில் அவர்களது ஆதரவும், துணையும் வரலாற்று ரீதியாக இயல்பானது என்பதால் இந்த ஒற்றுமைக்காக ஐக்கிய அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி, அடக்கு முறைகளையும் அவதூறுகளையும் எதிர்கொண்டு அயராது பாடுபட்டது.”
இந்த உண்மையை உலக வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது. எல்லா இடங்களிலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தில் ஒடுக்கும் இனத்தைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் இணைந்தே நின்றிருக்கிறார்கள். கருப்பர் இனப் போராட்டத்தில் வெள்ளை இன மக்களைச் சேர்க்க மறுத்த மால்கம் எக்ஸ் கடைசியில் ஒரு இடத்தில் குறிப்பிட்டார், “இதை நான் முன்பே உணர்ந்திருந்தால், அவர்களைச் சேர்த்துக் கொண்டிருப்பேன்”. மார்ட்டின் லூதர் கிங்கின் தலைமையில் ஆயிரக்கணக்கில் வாஷிங்டனை நோக்கி பேரணியாகக் கருப்பர்கள் சென்ற போது பல்லாயிரக்கணக்கான வெள்ளையர்களும் சேர்ந்தே சென்றனர். 1983இல் கு க்ளக்ஸ் க்ளான் இதே போன்ற பேரணி நடத்த முயன்ற போது அந்த நகரத்தைச் சேர்ந்த ‘அனைத்து’ மக்களும் சேர்ந்து எதிர்த்தனர். வன்முறைக் குழுவான கு க்ளக்ஸ் க்ளான் வெறியர்களை போலீஸ் காப்பாற்றி அனுப்ப வேண்டி வந்தது.
இந்தச் செய்தியை அண்ணல் அம்பேத்கார் இப்படிக் குறிப்பிடுகிறார்:
”தேசிய ஒற்றுமை, (சோகங்களினால் துயரப்படும் சக மனிதர்கள் மீதான ஆழ்ந்த) மானுடப் பரிவு, நீதி, சீர்திருத்தங்களின் பார்வைக் கோணத்திலிருந்து தீண்டாமையை ஒழிப்பது மிகமிகத் தீவீரமான தேவை என்பதனை நியாயமாக நம்பக்கூடிய அனைத்து மக்களும் தீண்டப்படாதோருடன் சேர்ந்து பங்கு பெறுவதற்கு எவ்விதமான ஆட்சேபணையும் அங்கு இருக்கக் கூடாது.”
”வெவ்வேறுபட்ட கருத்துக்களுடனும், அணுகுமுறைகளுடனும் இருக்கிற மக்களுடன் கொள்கைகளில், சமரசம் எதுவும் செய்து கொள்ளாமல் ஒத்துழைப்புத் தந்து செயலாற்றுவது எல்லோருக்குமே ஆதாயம் தருவதாகவே இருக்கும்.”
(மஹத்: முதல் தலித் புரட்சியின் உருவாக்கம். பக்கம் 279, 280, ஆனந்த் டெல்டும்டே)
இதனை ஏன் நான் இங்கு தனியாகக் குறிப்பிடுகிறேன் என்றால், ஒரு குறிப்பிட்ட இனத்தில், குலத்தில், மதத்தில் பிறநது விட்டாலே அவர் அப்படித்தான் இருப்பார் என்ற முடிவுக்கு வந்து விட முடியாது என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன். இப்போது இந்த உணர்வு மிக அதிகமாகப் பலரிடம் இருப்பதைக் காண்கிறேன். அப்படி முத்திரை குத்தி ஒதுக்கி விடுவது முற்போக்கான, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை பலவீனமடையச் செய்து விடும் என்று நான் உறுதியாகக் கருதுகிறேன். அதைத்தான் வரலாறும் சுட்டிக் காட்டுவதாக நம்புகிறேன்.
ஒட்டுமொத்தத்தில், இந்தப் புத்தகம் ஒடுக்கப்பட்டோருக்கும், மக்களுக்குமான போராட்டத்தில் களத்தில் நிற்கும் அனைவருக்கும் ஒரு ஒளிவிளக்காகத் திகழ்கிறது, உத்வேகம் ஊட்டுகிறது என்பதைக் குறிப்பிட்டு முடிக்கிறேன். உங்களின் கைகளில் தவழ வேண்டிய ஆற்றல் மிக்க புத்தகம் இது.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.