லாரா ஷெப்பர்ட் சர்ச்லி (Laura Shepard Churchley) என்பவர் ஒரு அமெரிக்க விண்வெளி வீரர் ஆவார். இவர் புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி வீரர் உதவித்தொகை அறக்கட்டளை அறங்காவலர் குழுவின் தலைவராக உள்ளார். இந்த அறக்கட்டளை கல்லூரி மாணவர்களுக்கு நிதி திரட்டுகிறது. மேலும் அறிவியல் துறைகளில் தொழில் மற்றும் ஆராய்ச்சியைத் தொடரும் அறிஞர்களுக்கு வழிகாட்டுதலை வழங்குகிறது.
ஆரம்ப வாழ்க்கை

இவர் அமெரிக்காவில் வில்மிங்டன் DE இல் 1947 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை ஆலன் ஷெப்பர்ட் (Alan Shepard) ஆவார். இவரின் மூத்த மகள்தான் லாரா. விண்வெளிக்குச் சென்ற உலகின் இரண்டாவது மனிதர் ஆலன் ஷெப்பர்ட் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விண்வெளிக்குச் சென்ற முதல் அமெரிக்க வீரர் என்ற பெருமைக்கு உரியவர்.
சந்திரனில் நடந்த ஐந்தாவது வீரராகவும் ஆலன் ஷெப்பர்ட் அறியப்படுகிறார். சந்திரனின் மேற்பரப்பில் கோல்ஃப் பந்தை முதன்முதலில் அடித்தவரும் இவர் தான். தனது தந்தை தொடங்கிய விண்வெளிப் பயணத்தை ஊக்குவிக்க விண்வெளி மற்றும் விண்வெளி வீரர் சமூகத்திற்கு தீவிரமாக உழைக்க தனது வாழ்க்கையை லாரா ஷெப்பர்ட் அர்ப்பணித்துள்ளார்.
இவர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தொடர்ந்து விண்வெளி விளக்கக் காட்சிகளை வழங்குகிறார். தனது தந்தையின் விமான உடையை அணிந்து கொண்டு, சந்திரனுக்கு எடுத்துச் சென்ற கலைப் பொருட்களையும் காட்டுகிறார். மனிதனின் எல்லைகளை விரிவுபடுத்துவதற்கும், புதுமைகளை ஊக்குவிப்பதற்கும் விண்வெளிப் பயணம் அவசியம் என்று அவர் மாணவர்களிடம் போதிக்கிறார்.
பதவி

இவர் ஒரு சில்லறை வணிக உரிமையாளராக இருக்கிறார். எவர்கிரீன் சேம்பர் ஆப் காமர்ஸ், எவர்கிரீன் ஆர்ட்ஸ் பவுண்டேஷன், ஹிவான் வீட்டு உரிமையாளர் சங்கம் மற்றும் மாண்டிசோரி ஸ்கூல் ஆஃப் எவர்கிரீன் இயக்குநர்கள் குழுவின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். ஹிவான் மகளிர் கோல்ஃப் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் உள்ளார்.
இவர் கிறிஸ்டா மெக்காலிஃப் கோளரங்கத்தின் கௌரவ ஆலோசகராக உள்ளார். விண்வெளி மைய அறக்கட்டளையின் வாரிய உறுப்பினராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். மேலும் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி வீரர் நினைவு அறக்கட்டளை வாரியத்திலும் பணியாற்றினார்.
விண்வெளிப் பயணம்

ஆலன் ஷெப்பர்ட் என்பவரை கௌரவிக்கும் வகையில் ப்ளூ ஆரிஜின் ராக்கெட்டிற்கு நியூ ஷெப்பர்ட் (NS) எனப் பெயர் சூட்டியிருந்தனர். ப்ளூ ஆரிஜின் NS-19 இன் பயணம் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று நடைபெற்றது. இது ப்ளூ ஆரிஜினின் 3 ஆவது மனிதப் பயணமாகும். இதில் லாரா மற்றும் குட் மார்னிங் அமெரிக்காவின் இணை தொகுப்பாளர் மைக்கேல் ஸ்ட்ராஹான் ஆகிய இருவரும் பணம் செலுத்தாத கௌரவ விருந்தினர்கள் ஆவர். லாரா தனது 74 வது வயதில் விண்வெளிக்குச் சென்றார்.
விண்வெளியில் நுழைந்தவுடன் எடையின்மையை உணர முடிந்தது. கைகள் மேலே உயர்ந்தது. இருக்கையின் பெல்ட்டை கழட்டியவுடன் மிதக்கத் தொடங்கினேன். தலையை இருக்கையின் மீது வைத்த போது என் கால்கள் காற்றில் எப்படி உயர்ந்தன என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவை எழுந்தன.
ஜன்னல் வழியாக பார்க்கும்போது அனைத்தும் கருப்பாக இருந்தது. பூமியைப் பார்க்கும் போது வளிமண்டலம் என்று அழைக்கப்படும் சிறிய நீலக்கோட்டை பார்க்க முடிந்தது. அது அழகாக இருந்தது. நான் நினைத்ததை விட அது சற்று பெரியதாகத் தெரிந்தது என அவர் குறிப்பிட்டார்.
எழுதியவர் :

✍️ – ஏற்காடு இளங்கோ
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளதிற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
