சாரா லெவின் “கூப்பர்” கில்லிஸ் (Sarah Levine “Cooper” Gillis) என்பவர் ஒரு அமெரிக்கப் பொறியாளர் மற்றும் விண்வெளி வீரர் ஆவார். இவர் ஒரு தனியார் மனித விண்வெளிப் பயணத்தின் மூலம் விண்வெளிக்குச் சென்றார். பூமியிலிருந்து அதிக தூரம் பயணித்தப் பெண் என்ற ஒரு புதிய சாதனையைப் படைத்தார். விண்வெளி நடைப் பயணத்தில் பங்கேற்றதன் மூலம் இளைய நபர் என்ற தகுதியைப் பெற்றார். மேலும் விண்வெளியில் வயலின் இசை நிகழ்ச்சி நடத்திய முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
கல்வி
இவர் 1994 ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று கலிபோர்னியாவில் உள்ள பாலோ ஆல்டோவில் பிறந்தார். இவர் 2012 ஆம் ஆண்டு பள்ளியில் பட்டம் பெற்றார். இவரது தாயார் சூ லெவின் ஒரு வயலின் கலைஞர் மற்றும் இசை ஆசிரியராக இருந்தார். ஆகவே இவர் இளம் வயதிலேயே வயலின் வாசிப்பதைக் கற்றுக் கொண்டார்.
இவர் பள்ளியில் படிக்கும் போது நாசா விண்வெளி வீரர் ஜோசப் டேனர் என்பவரைச் சந்தித்தார். அவர் விண்வெளிப் பொறியியல் படிக்குமாறு ஆலோசனை வழங்கினார். அதன்படி இவர் 2017 ஆம் ஆண்டு கொலராடோ பல்கலைக்கழகத்தில் விண்வெளிப் பொறியியலில் பட்டம் பெற்றார். இவர் மலையேற்றத்தில் தீவிரமாக ஈடுபட்டதன் மூலம் ஒரு மலையேற்ற வீரர் என அழைக்கப்பட்டார்.

தொழில்
இவர் பல்கலைக்கழகத்தில் இருந்த போது ஸ்பேஸ்எக்ஸில் இன்டர்ன்ஷிப்பைத் தொடங்கினார். டிராகன் விண்கலத்தின் மனித சுழற்சி சோதனையில் பணியாற்றினார். பின்னர் முழு நேரமாக விண்வெளி வீரர் பயிற்சித் திட்டத்திற்குச் சென்றார். அவர் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) என்ற ஒரு விண்வெளிப் போக்குவரத்து வணிக நிறுவனத்தில் முன்னணி விண்வெளி செயல்பாட்டு பொறியாளராக உள்ளார். இந்த நிறுவனத்தின் விண்வெளி வீரர் பயிற்சித் திட்டத்தின் பொறுப்பாளராக இருக்கிறார்.
இதில் டிராகன் விண்கலத்தில் பறக்கும் நாசா மற்றும் வணிக விண்வெளி வீரர்களுக்கான பணி சார்ந்த பாடத்திட்டத்தை உருவாக்குதல் மற்றும் பயிற்சி செயல்படுத்துதல் ஆகியவை அடங்கும். அவர் முதல் டெமோ-2 மற்றும் க்ரூ-1 பயணங்களுக்கு நாசா விண்வெளி வீரர்களைத் தயார்படுத்தினார். மேலும் இன்ஸ்பிரேஷன்-4 விண்வெளி வீரர்களுக்கு நேரடியாகப் பயிற்சி அளித்தார். அவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மற்றும் அங்கிருந்து வரும் டிராகன் சரக்கு மறுவிநியோகப் பணிகளுக்கான நிகழ்நேர செயல்பாடுகளைக் கண்காணிக்கும் அதிகாரியாகவும் உள்ளார்.
பயணம்
இவர் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 அன்று போலாரிஸ் டான் (Polaris Dawn) என்ற விண்கலத்தில் பறந்தார். இது ஜாரெட் ஜாக்மேன் என்பவர் தலைமையிலான ஒரு தனியார் விண்வெளிப் பயணமாகும். இது ஸ்பேஸ்எக்ஸால் இயக்கப்பட்டது ஆகும். இதில் 4 பேர் பயணம் செய்தனர். இந்தப் பயணம் பூமியிலிருந்து 1400 கிலோமீட்டர் உயரத்தை அடைந்தது. இது பூமியின் மிகத் தொலைதூர சுற்றுப்பாதையை அடைந்து, ஒரு சாதனையைப் படைத்தது.

இவர் வரலாற்றுச் சிறப்புமிக்க விண்வெளி நடைப் பயணத்தில் ஈடுபட்டார். இவர் செப்டம்பர் 12 அன்று 7 நிமிடங்கள், 15 வினாடிகள் நேரம் விண்வெளியில் நடந்தார். இவர் விண்வெளியில் நடந்த 22 ஆவது பெண் வீரர் ஆவார். இவர் தனது 30 ஆவது வயதில் விண்வெளியில் நடந்ததன் மூலம் விண்வெளி நடைப் பயணத்தில் பங்கேற்ற இளைய நபர் என்ற பெருமையைப் பெற்றார். இந்தப் பயணத்தில் ஈடுபட்ட வீரர்கள் ஸ்பேஸ்எக்ஸால் வடிவமைத்த புதிய விண்வெளி உடைகளைப் பரிசோதனைச் செய்தனர்.
இசை நிகழ்ச்சி
இவர் விண்வெளியில் 4 நாட்கள் 22 மணி நேரம் 11 நிமிடங்கள் இருந்தார். இவர் செப்டம்பர் 14 அன்று விண்வெளியின் சுற்றுப்பாதையில் இருக்கும் போது வாயிலின் வாசித்தார். 2015 ஆம் ஆண்டு வெளியான ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ் திரைப்படத்தில் ஜான் வில்லியம்ஸின் “ரேஸ் தீம்” (Rey’s Theme) இன் தனி வயலின் பகுதியை இவர் வாசித்தார்.
அப்போது பூமியில் உள்ள இசைக் கலைஞர்கள் இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் வீடியோ ஸ்டார்லிங்க் அதிவேக இணையம் வழியாக விண்வெளியில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது. இந்த இசை நிகழ்ச்சி ஜெயிண்ட் ஜூட் குழந்தைகள் ஆராய்ச்சி மருத்துவமனை மற்றும் எல் சிஸ்டெமாவிற்கு பணம் திரட்டுவதற்காக நடத்தப்பட்டது.
எழுதியவர் :

✍️ – ஏற்காடு இளங்கோ
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளதிற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
