எட் ராம்பெல், ஆலிவர் ஸ்டோனை ‘லாஸ் ஏஞ்சல்ஸ் புரொகிரஸிவ்’ (LA – Progressive) இதழுக்காக, நேர்காணல் செய்து அது செப்டம்பர் 2009- இதழில் வெளியிடப்பட்டது. ஸ்டோனின் புதிய ஆவணப்படம் ‘தெற்கு எல்லைக்கு வெளியே (South of the Border) அக்டோபர் 26- 2009 அன்று ‘சிணிமா லிப்ரே ஸ்டுடியோ’ (Cinema Libre Studio) வால் வெளியிடப்படுவதை ஒட்டி ‘லாஸ் ஏஞ்சல்ஸ் புரொகிரஸிவ்’, ஹாலிவுட் புரொகிரஸிவ்’ ஆகியவை அந்த நேர்காணலை முழுமையாக வெளியிட்டன.

‘மோட்டார் சைக்கிள் நாட்குறிப்புகள்’  (The Motorcycle Diaries) இளம் எர்னஸ்டோ குவேராவின் (சே) 1950 களின் லத்தீன் அமெரிக்கா சாலைப் பயணத்தைப் பற்றியது, இது இறுதியில் அவரை குவாத்தமாலாவுக்கு அழைத்துச் சென்றது, அப்போது அங்கே சீர்திருத்தவாதத் தலைவர் ஜேக்கபோ அர்பென்ஸ் ஜனாதிபதியாக இருந்தார். (முன்னால் ராணூவ வீரர். ஜனநாயக முறையில் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். நாட்டின் நலனை முன்னிறுத்தி பல நடவடிக்கைகள் எடுத்தவர். ஆனால் அவை அமெரிக்க பெரு முதலாளித்துவ நலன்களை பாதித்தன. அத்தோடு அவரது அமைச்சரவையிலேயே கம்யூனிஸ்ட்டுகளையும் இணைத்திருந்தார். சிஐஏ சதிசெய்து அரன்மனைப் புரட்சியில் (Coup) அவரைப் பதவியிறக்கி, அகதியாய் நாடுகடத்தி ஒரு பொம்மை அரசை நிறுவியது.)

Image result for oliver stone

மூன்று முறை ஆஸ்கார் விருது வென்ற ஆலிவர் ஸ்டோன் ஒரு குறிப்பிடத்தக்க வித்தியாசத்துடன் தெற்கு எல்லைகளில் இதேபோன்ற ஒரு பயணம் மேற்கொண்டார். இன்று, ஒரு வேறுபாடு உள்ளது. சேகுவேராவின் பயணத்தின் போது ஒரு ’அர்பென்ஸ்’ இருந்தார். இன்று சே குவேரா ஒரு முறை கூறியது போல “ஒன்று, இரண்டு, மூன்று… பல ஆர்பென்கள்” தென் அமெரிக்காவில் உருவாகியுள்ளனர். இந்த சிந்தனையைத்தூண்டும் ஆவணப்படத்தில் ஸ்டோன் இந்தப் பகுதியிலுள்ள இடதுசாரி சார்புள்ள தலைவர்களை நேர்காணல் செய்கிறார்: வெனிசுலாவின் ஹியூகோ சாவேஸ், பொலிவியாவின் ஈவோ மோரல்ஸ், பிரேசிலின் லுல்லா டா சில்வா, அர்ஜென்டினாவின் கிறிஸ்டினா அர்நெஸ்டர் கிர்ச்னர், பராகுவேவின் பெர்னாண்டோ லுகோ, ஈக்வடாரின் ரஃபேல் கொரியா மற்றும் கியூபாவின் ரவுல் காஸ்ட்ரோ அனைவரும் இதில் அடங்குவர்.

வாரன் கமிஷனின் ’’துப்பாக்கி ஏந்திய தனித்த மனிதன்’’ விவரணைக்கு (அமெரிக்க அதிபர் ஜான்.எஃப்.கென்னடி ஒரு தனி மனிதனால் கொல்லப்பட்டார் என்று கூறி அந்தப் படுகொலையின் பின்னால் இருந்த சதிகள் சந்தேகங்களை மூடி மறைத்த வரலாறு) சவால்விட்ட 1991 இன் புகழ்பெற்ற திரைப்படமான ‘ஜே.எஃப்.கே’ (JFK) இன் இயக்குநர் ஆலிவர் ஸ்டோன். அந்தப் படத்தின் மூலம் செய்தது போலவே, இந்த லத்தீன் அமெரிக்கத் தலைவர்களைப் பற்றிய அமெரிக்க நிர்வாகத்தின் கதைகளுக்கு மாறான “எதிர்-கதையாடலை” செய்யத் துணிந்து, தென் அமெரிக்காவின் மக்கள் வரலாறை தனது ஆவணப் படத்தின் மூலம் புரிய வைக்கின்றார். தேசிய நலன்களுக்காக உழைக்கும் அதிபர்கள் மற்றும் அவர்களின் பொலிவாரிய இயக்கங்களின் ’வறுமை ஒழிப்பு’ மற்றும் உக்கிரமாக எழுந்து வரும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான (ஆண்டி யாங்கி!) சவால்கள் பற்றி தவறான தகவல்களை பரப்பியதற்காக ஸ்டோனின் மிகப்பெரிய எதிராளிகளான கார்பரேட் உடமையான செய்தி ஊடகங்கள் தோலுரித்துக் காட்டப்படுகின்றன.

”…வட அமெரிக்க ஊடகங்களைப்பற்றி நான் நன்கு அறிந்திருக்கிறபடியால், அவை என்னைப்பற்றி, நன்றாகப் பேசியிருந்தால், நான் மிகவும் கவலை அடைந்திருப்பேன்” என்று ஈக்வடாரின் கொரியா வலியுறுத்திச் சொல்கிறார். பொலிவியாவின் பழங்குடியை சேர்ந்த முதல் ஜனாதிபதியான மொரேல்ஸ் இவ்வாறு அறிவிக்கிறார்: ”நவ தாராளவாதம், காலனியம், ஏகாதிபத்தியம் இவைகளுக்கு எதிராகப் போராடுபவர்களை எப்போதுமே இந்த ஊடகங்கள் குற்றவாளிகளாகக் காட்டுகிறது. இது எப்போதும் சாதாரணமாக நடைபெறுகிறது. எனது மோசமான முதல் எதிரி ஊடகங்கள்தான்.”

Image result for oliver stone

எதிர்பார்த்தபடி, மைய நீரோட்ட ஊடகங்கள் இவர்கள் எல்லோர் மீதும் கல்லெறிந்து, அவதூறு பரப்பி வந்தன. 1978-இல், திரைக்கதை சொல்லியான ஸ்டோன், அவரது ‘நள்ளிரவு விரைவு வண்டி’’திரைக்கதைக்கான ஆஸ்கார் விருது பெற்றார். முதலாளித்துவ பத்திரிகைகளும் இதேபோல் தங்கள் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் யு.எஸ். வெளியுறவுக் கொள்கையின் நலன்களை வெளிப்படுத்தும் கண்ணோட்டங்களுடன் உள்ளடக்கத்தை நாடகமாக்கி கதைகளை வடிவமைக்கின்றன என்று ஸ்டோன் தெளிவாக உணர்ந்திருந்தார். இந்த பிரச்சார செயல்முறை ட்ரூமன் கபோட் “அ-புனைகதை நாவல்” என்று அழைத்ததன்
(உண்மை வரலாற்றை புனைவு போல உருவாக்குவது) ஒரு வகையான தலைகீழ் வகைபாடு ஆகும். இது செய்தி ஊடகங்கள் உண்மையைத் தங்கள் நலனுக்கேற்ப கற்பனையோடு வளைத்துத் திரித்து, தம் நோக்கு நிலைக்கு சம்மதத்தை கட்டியமைத்து, கருத்து வேறுபாடுகளை மழுங்கடிக்கும் (manufacturing Consent and muffling of dissent) முறை ஆகும்.

மிகவும் பிரபலமான வியட்நாம் போர் திரைப்படங்களான ‘பிளாட்டூன்’’ மற்றும் ‘ஜூலை நான்காம் தேதி பிறந்தவன்’ இவைகளுக்காக வியட்நாமிற்கு சென்ற முன்னால் படைவீரரான ஆலிவர் ஸ்டோன், இரண்டு சிறந்த இயக்குனர் அகாடமி விருதுகளை 1986 மற்றும் 1989 -இல் வென்றிருந்தாலும், ‘’தெற்கு எல்லைக்கு வெளியே’ (South of the Border) லத்தீன் அமெரிக்கா குறித்து ஸ்டோன் எடுத்த முதல் திரைப்படமல்ல. 1986 ஆம் ஆண்டில் அவரது இயக்கத்தில் ’மத்திய அமெரிக்க மரணக் குழு’ பற்றிய திரைப்படமான ‘சால்வடார்’ வெளிவந்தது. இது ரீகனின் கொள்கைகளை அம்பலப்படுத்தியது. இந்த திரைப்படத்திற்காக ஜாம் உட்ஸ் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். அத்தோடு, ஸ்டோன் ஒரு சிறந்த திரைக்கதையாசிரியர் விரிதிற்குப் பரிந்துரைக்கப் பட்டார். ஸ்டோன் 1996 ஆம் ஆண்டில் ’’இவிட்டா’’ (Evita) எனும் இசைப் படத்திற்கான திரைக்கதை ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். இந்தப் படத்தில் மடோனா, அர்ஜென்டினாவின் ஈவா பெரோனாகவும், அன்டோனியோ பண்டேராஸ் சே வாகவும் நடித்தனர். ஸ்டோன், 2000 ஆம் ஆண்டில் திரைப்படங்களிலிருந்து ஆவணப்படத்திற்கு திரும்பினார், ஃபிடல் காஸ்ட்ரோ வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘காமாண்டெண்ட்’’ ஐ இயக்கினார். இப்படத்தை HBO ஒருபோதும் ஒளிபரப்பவில்லை என்று ஸ்டோன் குற்றஞ் சாட்டுகின்றார். ஆனால் அதைத் தொடர்ந்து 2004 இல் அவர் இயக்கியதும் காஸ்ட்ரோ குறித்து புகழாததுமான ‘’லுக்கிங் ஃபார் பிடல்’’ படம் மட்டும் ஒளிபரப்பப்பட்டது.

Image result for oliver stone

செப்டம்பர் 24, 2010 அன்று ‘வால் ஸ்ட்ரீட்: பணம் ஒருபோதும் தூங்குவதில்லை’’திரைப்படம் வெளிவந்தது. இது 1987 இல் வந்த அவரது படமான ’’வால் ஸ்ட்ரீட்’’- டின் தொடர்ச்சியாக வெளியானது – மைக்கேல் டக்ளஸ், ‘பேராசை நல்லது’ என்று சொல்லும் கோர்டன் ஜீக்கோவாக திரும்புவதிலிருந்து படம் ஆரம்பமாகிறது. இது டக்ளஸை சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் மற்றும் கோல்டன் குளோப் விருதுகளைப் பெற்றுத் தந்தது. சமீபத்திய நிதிநெருக்கடியில் ஸ்டோனின் விமர்சன ரீதியான மறுபயன்பாட்டில், மோசமான உள் வர்த்தகர் “எல்லோரும் ஒரே கூல்-எய்ட் குடிப்பதால் இப்போது [பேராசை] சட்டப்பூர்வமானது என்று தோன்றுகிறது” என்று கண்டுபிடிக்கிறார். ஜூன் 25 அன்று, எல்.ஏ.வின் சினிமா லிப்ரே ஸ்டுடியோ மன்ஹாட்டனில் உள்ள வால் ஸ்ட்ரீட்டிற்கு அருகே ‘தெற்கு எல்லைக்கு வெளியே’’(South of the Border) வெளியீட்டைத் தொடங்கியது, அங்கு வார இறுதியில் ஒரு திரையிடலுக்கு சராசரியாக, 21,000 டாலர்களைச் சம்பாதித்தது; இது அப்போதைய மிக அதிக பட்ச வசூலாகும்.

தெற்கின் ஒளிப்பதிவாளர் சினிமா வெரைட் முன்னோடி ஆல்பர்ட் மேசில்ஸ் (1970 இன் கிம்ம் ஷெல்டரின் இணை இயக்குனர்); இது மார்க் வெயிஸ்பிரோட் மற்றும் தாரிக் அலி ஆகியோரால் இணைந்து எழுதப்பட்டது, அவர் மிக் ஜாகரை, ‘ஸ்ட்ரீட் ஃபைட்டிங் மேன்’ எழுத ஊக்கப்படுத்தினார். இப்போது ரோலிங் ஸ்டோனிடமிருந்து ஆலிவர் ஸ்டோனிடம் சென்றுள்ளார். ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் ஸ்டோன் முன்பு ‘சினிமா வரலாற்றாசிரியர்’ என்ற தலைப்பைத் தவிர்த்துவிட்டார், அதற்கு பதிலாக ‘நாடக ஆசிரியர்’ என்று அழைக்கப்படுவதை விரும்பினார். ஆனால் இப்போது அவர் புனைகதை அல்லாத திரைப்படத் தயாரிப்பில் இறங்கியுள்ளதால், ஸ்டோனை ஒரு சினிமா வரலாற்றாசிரியர் என்று நியாயமாக அழைக்க முடியும்.

‘தெற்கு எல்லைக்கு வெளியே’ திரைப் படத்தை ஏன் உருவாக்கினீர்கள்?

ஆலிவர் ஸ்டோன் : ஏனென்றால் அவர்கள் ஒரு பெருங் கூட்டத்தால் அரக்கர்கள் என சித்தரிக்கப்ப்ட்டனர். பெரும் ஏக போக முதலாளித்துவக் கும்பலுக்குச் சொந்தமான அவர்களது நாட்டைச் சேர்ந்த ஊடகங்களாலேயே இது செய்யப்பட்டது. ஏனென்றால் இந்த சக்திகள் தங்கள் நாடுகள் இந்தத் தலைவர்கள் விரும்பும் திசையில் மாற்றம் அடைவதை விரும்பவில்லை. அத்தோடு அமெரிக்க (யு.எஸ்) ஊடகங்களும் தொலைவில் இருந்தும் கூட அவர்களை அரக்கர்கள் என்று கூறி அச்சுறுத்தமுயன்றனர். இது வியப்பூட்டுவது. ஏன் அவர்கள் இதனைச் செய்கின்றனர்? அமெரிக்காவில் மரபார்ந்த இடது வலது, முற்போக்கு, தாராளவாதிகள் என்ற பேதா பேதமில்லாது இதனைச் செய்கின்றனர். அவர்களில் பலர் அங்கு என்ன நடக்கின்றது என்பதை புரிந்துகொள்ளாமல் இதனைச் செய்கின்றனர். எனவே அவர்கள் சாவேஸ் குறித்து பூதாகரமாக்கி எழுதுகின்றனர்.
நியூயார்க் டைம்ஸ் இதழ், உங்கள் ஆவணப்படம் குறித்து லேரி ரோத்தர் எழுதிய மிகவும் எதிர்மறையான விமர்சனத்தைப் பதிப்பித்திருந்தது. டைம் இதழின் திரைப்பட விமர்சகர், மனோலா டேவிஸ் அவர்களும்கூட உங்கள் ‘வால் ஸ்ட்ரீட் : பணம் ஒரு போதும் உறங்குவதில்லை குறித்து வெறுப்புடன் எழுதியிருந்தார்.

Image result for oliver stone

இரண்டும் இரு வேறு பிரச்சனைகள். அவருக்கு (லேரி) தன் கருத்தைக் கூற உரிமையுள்ளது. ஆனால் அவர் நியூயார்க் டைம்ஸ் இதழின் பிரெஸில் மையத் தலைவராகப் பணிபுரிந்துள்ளார். அவர் சாவேஸ் குறித்து மிகவும் எதிர் மறையாக எழுதியுள்ளார். அவர் நிகராகுவாவில் எதிர்ப்புரட்சி சக்திகள் நடத்திய கலகம் குறித்தும் அங்கிருந்து செய்தி சேகரித்து எழுதினார். அவர் சண்டினிஸ்டாவிற்கு எதிராக எழுதினார். மொத்தத்தில் அவர் வழக்கமான எல்லா நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையாளர்கள் போன்றவரே. அமெரிக்கா மத்திய, தென் அமெரிக்க நாடுகளில் சுமார் 50 முறை தலையிட்டு மூக்கை நுழைத்துள்ளது. இவை எல்லாம் நியூயார்க் டைம்ஸ் ஆதரவோடுதான் நடந்தது. அது ஒருபோதும் முற்போக்கு பத்திரிகையாக இருந்ததில்லை. எப்போதும் அவர்கள் அங்கிருந்த மக்கள் விரோதத் தலைவர்களை ஆதரித்து அவர்களது அத்துமீறல்களை மூடி மறைத்தே வந்துள்ளனர். பிறகு காலம் கடந்து அவர்களில் சிலரை விமர்சித்துள்ளனர். ஆனால் அத்துமீறல் நடந்துகொண்டிருக்கும்போது ஒரு முறையும் அது குறித்து எழுதியதில்லை.

இந்த ஆவணப்படத்தின் மூலம் பார்வையாளர்கள் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

இது அங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது? அதன் வரலாற்று முக்கியத்துவம் என்ன என்பது குறித்து சில எளிய அரிச்சுவடி விசயங்களைப் பேசுகின்றது. ஏனென்றால் அந்தக் கண்டத்தின் வரலாற்றில் ஆறு நாடுகள் ஒரே சமயத்தில் ஜனநாயக எண்ணம் கொண்ட இடதுசாரி அதிபர்களைத் தேர்தலில் தேர்ந்தெடுத்தது நடந்ததில்லை.
இந்தத் தலைவர்கள், மாற்றத்தைக் கொண்டுவர பாடுபடுபவர்கள், தங்கள் நாடுகளின் செல்வ வளங்கள் தங்கள் நாட்டு மக்களுக்கு பயன்தர வேண்டும் என எண்ணுபவர்கள். வரலாற்றைப் பார்த்தால் இவர்கள் ஒவ்வொருவரையும் புறந்தள்ள அமெரிக்க நிர்வாகம் முயன்றுள்ளது. இப்போது அது எளிதல்ல எனும் நிலை உருவாகியுள்ளது. ஆனாலும் அமெரிக்க நிர்வாகம் அவர்களை புறந்தள்ள முயற்சி செய்துகொண்டுதான் இருக்கின்றது. அவர்கள் மத்தியில் உள்ள ஒற்றுமையை சீர்குலைக்க முயன்று வருகின்றது. ஆனால் அவர்கள் அதற்கு பலியாகவில்லை. ஒற்றுமையாக நிற்கின்றனர். இது ஒரு முக்கியமான தருணம். அவர்கள் நீடித்து பணியாற்றுவார்கள் என நான் நம்புகின்றேன். ஏனெனில் அவர்கள் தத்தமது நாட்டிற்கு நல்ல பனியாற்றியுள்ளனர். அவர்களது நாட்டின் பொருளாதரம், நாட்டு மக்களுக்குப் பயன் தரும் வகையில் முன்னேறியுள்ளது.

Image result for oliver stone

‘ஒரு பொருளாதாரத்தை புத்தாக்கம் பெறச் செய்வதற்கு நல்ல வழி போர்தான்; போர்கள் மூலம்தான் யு.எஸ் பலம் பெற்றது’ என ஜார்ஜ் புஷ் தன்னிடம் கூறினார் என அர்ஜெண்டினாவின் அதிபர் நெஸ்டர் கிர்ச்னர் உங்களிடம் கூறியபோது நீங்கள் வியப்படையவில்லையா?

இது புஷ் போன்ற ஒருவர் சாதாரணமாகப் பேசக்கூடிய பேச்சுதான். எனவே அவர் கூறினார் என்பதை நான் நம்புகின்றேன். புஷ், இராக் போரின்போது இதனை நம்பினார் என்றே நான் கருதுகின்றேன். புஷ் வரலாற்றைப் படித்தவரில்லை என்பதை நாம் அறிவோம். போர் பொருளாதாரத்திற்கு நல்லது என்ற நம்பிக்கை வலதுசாரி குடியரசுக் கட்சி வட்டாரங்களில் பெரும்பான்மையோரிடம் இருக்கக் கூடியதே. இரண்டாம் உலகப் போருக்குப் பின் அரசு அதன் யுத்தகாலத்தில் போலச் செலவு செய்யவில்லை என்றால் நாம் பொருளாதார மந்தத்தைச் சந்திக்க வேண்டும் என தொழிலதிபர்கள் கருதினர். நான் அதனைச் சரியென நம்பவில்லை. பல பொருளாதார வல்லுனர்கள் 100% வேலை வாய்ப்போடு கூடியப் பொருளாதாரம் சாத்தியம் என்றே கூறுகின்றனர். போர் மோசமான அழிவையே பெரும்பான்மையோருக்கு கொண்டுவரும் மிகச் சிறுபான்மையொரே போரால் பயன்பெறுவார்கள்.

ஜார்ஜ் புஷ் புரிந்துகொள்ளவில்லை என்பதை நீங்கள் மீண்டும் ஒருமுறை அடுத்துக் காட்டியுள்ளீர்கள்.’ உங்கள் ஆவணப் படத்தைப் பார்ப்பவர்கள், போலிவியா போன்ற நாட்டில் கடைசியாக மக்களின் அபிலாசைகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு அதிபர் வந்துள்ளார். அவர் மிகவும் எளிய நிலையில் இருந்து வந்தவர் அல்லது பழங்குடி இனத்தவர் என்பதைப் புரிந்துகொள்கின்றனர். இது எந்த அளவு முக்கியம் என நினைக்கின்றீர்கள்?

அமெரிக்காவில் என்ன நடக்கின்றது என்பதைப் பார்த்தால் நல்லது என நான் நினைக்கின்றேன். இங்கு உயர் கல்வி பெற்ற மேட்டுக் குடிகள்தான் நாட்டை நிர்வகிக்கின்றனர். இந்த நாட்டில் எதனையாவது நீங்கள் நிர்வகிக்க வேண்டும் என்றால் நீங்கள் ஏல் அல்லது ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றிருக்க வேண்டும். அப்போதுதான் வாஷிங்டனில் இருக்கும் அரசியல் உயர் மட்டம் உங்களை அங்கீகரிக்கும். ஆனால் தென்னமெரிக்காவில் இன்று இது போன்ற நிலமை இல்லை. பணக்காரக் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள்தாம் அனைத்தையும் நிர்வகிக்கும் நிலை இல்லை.

Image result for oliver stone

நீங்கள் லத்தின் அமெரிக்காவில் ஐ.எம்.எஃப் பின் பாத்திரம் குறித்து பேசிகின்றீர்கள்? அது இன்று எப்படி உள்ளது?

நீங்கள் குறிப்பிடும் நாடுகள் அதன் ஆதிக்கத்திலிருந்து எவ்வாறு விடுபட்டனர்?
ஐ.எம்.எஃப் பலகாலமாக லத்தின் அமெரிக்க நாடுகளுக்கு கடன் அளித்து வருகின்றது. ஐ.எம்.எஃப் நிர்வாகம் அமெரிக்க நிதித்துறையுடன் மிக நெருக்கமான உறவு கொண்டது என்பது வெளிப்படை. கடன் கொடுப்பதற்கு ஐ.எம்.எஃப் போடும் நிபந்தனைகள் எல்லாம் வாஷிங்டனின் புதிய தாராளவாத கூட்டணி கூறும் நிபந்தனைகள்தான். அவை லத்தின் அமெரிக்க நாடுகள் கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதோடு சேர்த்து அவர்கள் நாட்டின் வளங்களைத் தனியார் மயமாக்க வேண்டும் என்பதும் நிபந்தனையாக உள்ளது. எல்லாவற்றையும் தனியார் மயமாக்குவது அங்கு ரசியாவில் போல மோசமான விளைவிகளை ஏற்பத்தியுள்ளது. எனவேதான் அவர்கள் ஐ.எம்.எஃப்பின் ஆதிக்கத்தைத் தூக்கி எறிந்துள்ளனர்.

‘தெற்கு எல்லைக்கு வெளியே’ படத்திற்கும் லத்தின் அமெரிக்கா பற்றிய உங்கள் ஏனையப் படங்களான சல்வடார், ஈவிட்டா, காம்ண்டெண்ட், ஃபிடலைத் தேடி (Looking for Fidel) ஆகியவற்றுக்கும் என்ன உறவு?

இந்தப் படம் அவற்றிலிருந்து பரிணாம வளர்ச்சியில் வந்ததுதான். சால்வடார் மத்திய அமெரிக்கா பற்றிய படம்தான். ஆனால் அதுவும் யுஎஸ் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தே பேசுகின்றது. யு.எஸ் நிர்வாகம் எப்போதும் ஏழை மக்களுக்கு எதிராகத்தான் நின்றுள்ளது. முன்னர் அது நடத்திய வியட்நாம் போர், ஏழை வியட்நாம் மக்களுக்கு எதிரானது. அது மட்டுமல்ல அது நம் நாட்டின் சாதாரண மக்களுக்கும் எதிரானதுதான்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் இருந்து யு.எஸ், கார்ப்பரேட் கம்பெனிகளால் கட்டுப்படுத்தப்படும் நாடாகவே இருக்கின்றது. அமெரிக்க நிர்வாகம் அவர்களது நலனுக்காக் இயங்குவதாகவே இருக்கின்றது. வங்கிகள், எண்ணெய் நிறுவனங்கள், மருந்துக் கம்பெனிகள்… அவர்களது நலனுக்காகப் பணியாற்றும் இடைதரகர்கள், முகவர்கள் ஆகியோரால் நடத்தப்படுவதாகவே நாடு உள்ளது.

Image result for oliver stone

’21 ஆம் நூற்றாண்டு சோசலிசம் என்பது என்ன? அது குறித்து நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?

சோசலிஸம் குறித்த பேச்சுகள் ஐரோப்பாவில் 19 ஆம் நூற்றாண்டிலிருந்தே இருந்து வந்துள்ளது. அது இரண்டாம் உலகப் போருக்கும் பின் யு.எஸ். ‘கம்யூனிட் அபாயம்’ குறித்து அதிகம் பேசத் தொடங்கிய பின்பே அதிகம் கவனிக்கப் பட்டது. இரண்டாம் உலகப் போரால் மிகவும் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய மக்கள் சோசலிசம் என்பதை ஒரு நிதானமான, மக்கள் தேவையை கணக்கில் கொள்ளும் பாதையாகவே பார்த்தனர். ஆனால் ரீகன் ஆட்சிக்கு வந்தது இதனையெல்லாம் மாற்றிவிட்டது. சுதந்திர சந்தை என்று அதனை வாரி அனைத்துக் கொண்டோம். ஆனால் அது உண்மையில் சுதந்திரம் ஏதுமில்லாது கட்டுப்படுத்தப்பட்ட சந்தைதான். சிலருக்கு ஆதரவாக விதிகள் அனைத்தும் வகுக்கப்பட்ட அல்லது விதிகள் வளைக்கப்படும் ஒரு அமைப்புதான் என்பதை 2008 ஆம் ஆண்டு நெருக்கடியின் போது கண்டோம். வால் ஸ்ட்ரீட்டும், வங்கிகளும் தங்கள் நலனுக்கு நடத்தும் சுதந்திரமற்ற சந்தைதான் என்பதைக் கண்டோம். வங்கிகள் மேலும் மேலும் பெரிதானதையும் அவை சூதாட்ட கிளப்புகள் போல பொருளாதரத்தில் இயங்குவதையும் நாம் கண்டோம். அவை அவ்வாறு இயங்கி திவால் ஆகும் நிலைக்கு வரும்போது பொது மக்களின் பணத்தில் அவர்களுக்கு மான்யங்கள் வழங்கி காப்பற்றப் படுவதையும் கண்டோம். இன்று லத்தின் அமெரிக்காவில் இது போல நடக்கவில்லை என்பதையும் பார்க்கின்றோம். இந்தத் தலைவர்கள் ஆட்சிக்கு வந்தபின் அங்கு தனிநபர் சராசரி வருவாய் முன்னெப்போது இல்லாதவகையில் முன்னேறியுள்ளது என்பதைக் காண்கிறோம். அவர்கள் முழுமையாக இல்லையென்றாலும் ஒருவிதமான சோசலிச சார்பான கொள்கைகளைப் பின்பற்றுவதாலும் தேசிய வளங்களை நாட்டுடமையாக்கியதாலுமே இது சாத்தியமாகியுள்ளது. நாட்டுடமை என்பது உடமையாளர்களை வெறுங்கையோடு விரட்டவில்லை. அவர்கள் இழப்பீடு கொடுத்துதான் வெளியேற்றப்பட்டுள்ளனர். சாவேஸ் மிகவும் தெளிவாக உள்ளார். அவர் உரிய இழப்பீடு அளித்துதான் நாட்டுடமை ஆக்கியுள்ளார். ஆனால் அமெரிக்க ஊடகங்கள் இதனைக் கூறுவதில்லை.

சாவேஸும் ஏனைய சில தலைவர்களும் மேட்டுக் குடிகளை விட்டுவிட்டு ஏழைகளை பிணை எடுத்துள்ளனர் எனக் கூறுகின்றீர்களா?

ஸ்டோன்: ஆம். உலக வங்கியின் புள்ளி விவரங்களே வெனிசூலா, அர்ஜெண்டினா, பொலிவியா, ஈக்வெடார் ஆகிய நாடுகளின் சாதாரண மக்கள் பலன் பெற்றுள்ளனர் என்பதைக் கூறுகின்றது. வெனிசூலாவின் ஜிடிபி 2003- 2008 ஆண்டுகளுக்கிடையில் சுமார் 90% வளர்ச்சி பெற்றுள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை 50% குறைந்துள்ளது. மிகவும் அடுமட்ட வறுமை 70% குறைந்துள்ளது. இவை உலக வங்கி கூறும் புள்ளிவிவரங்கள்தாம் சாவேஸ் கூறுவதல்ல. அவர் ஏழையாய்ப் பிறந்து ஏழையாய் வளர்ந்தவர். அவர் அவர்களது தவைகளைப் புரிந்துகொள்கின்றார். அவர்களுக்காகப் பணிபுரிகின்றார். அவர்கள் அவருக்கு ஆதரவு அளித்து தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் யு.எஸ் ஊடகங்கள் இதனைப் புரிந்து கொள்வதாகத் தெரியவில்லை.

உங்கள் படங்களான, ‘வால் ஸ்ட்ரீட்’ மற்றும் அதன் தொடர்ச்சியான ‘ பணம் தூங்குவதில்லை’ குறித்துக் கேட்க வேண்டும். நீங்கள் படத்தில் பேசிய “ பேராசை நல்லது” (“greed is good”) என்ற மனப் போக்கு வங்கிகளின் நெருக்கடியை, திவால்நிலையைக் கொண்டு வந்ததை அறியும்போது வியப்பாக இல்லை.

Image result for oliver stone

நான் வியப்படைந்தேன். இது பலகாலமாக இப்படி நடந்துள்ளது என்பது மேலும் வியப்பாக உள்ளது. நான் 1987 ஆம் ஆண்டு அந்தப் படத்தை எடுத்தேன். நான் அதில் கூறிய மிகவும் அதிகப்படியான பேராசையுடன் கூடிய நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துகொண்டிருக்கின்றன என நினைத்தேன். ஆனால் அது ஏதும் நிற்கவில்லை. 80-களில் மில்லியன் டாலர்’ என்ற பேச்சு இப்போது பில்லியன் டாலர்’ என ஆனதுதான் மாற்றம். வங்கிகள் என்பது நான் சிறுவனாக அறிய வந்த வங்கிகள் அல்ல. அவை மக்களிடம் வட்டிக்கு இருப்புத் தொகை (Deposit) பெற்று அதனைப் பிறருக்கு சற்றே அதிக வட்டிக்கு கடன் அளிக்கும் நிறுவனங்கள் என்பது மாறி சூதாட்டக் கிளப்புகளாக, அதுவும் அடுத்தவர் பணத்தில் சூதாடும் கிளப்புகளாக மாறியுள்ளன. அவை தமது வாடிக்கையாளர் குறித்து எந்தக் கவலையும் இல்லாது தம்மைத் தாமே விற்றுக்கொள்கின்றன; ஒன்றையொன்று வாங்குகின்றன. 2008 ஆம் ஆண்டு முதலாளித்துவம் ஒரு பெரும் மாரடைப்பிற்கு உள்ளானது என்று சொன்னால் மிகையில்லை. அது ஒரு மிகப்பெறும் எச்சரிக்கை. எல்லாம் முழுகிப்போகும் அபாயம் குறித்த எச்சரிக்கை. நாம் அதன் விளிம்பில்தான் உள்ளோம். அது குறித்த ஊடகங்களின் செய்திகளைப் பாருங்கள். அமெரிக்க முதலாளித்துவத்திற்கு மிகவும் ஆதரவான பத்திரிகைகள் என்ன சொல்கின்றன என்றே பார்ப்போம். வால் ஸ்ட்ரீட் ஜர்னல் போன்ற பத்திரிகைகளே என்ன நடக்கின்றது எனத் தெரியவில்லை! அடுத்து என்ன நடக்கும் எனத் தெரியவில்லை என்று எழுதுகின்றன. இன்று இருக்கும் நிச்சயமற்ற நிலையை நான் என் வாழ் நாளில் பார்த்ததில்லை. எனது தந்தை ஒரு பங்குச் சந்தை புரோக்கர்தான். நான் இந்த உலகில் வளர்ந்தவன். பேசுவதை தெரிந்துதான் பேசுகின்றேன்.

கடைசியாக ஏதோ ஒரு வகையில் அமெரிக்காவும் “21 ஆம் நூற்றாண்டு சோசலிசம்” என்பதற்குள் வந்துவிடுமோ?

ஸ்டோன்: நாம் அங்குதான் வந்திருக்கின்றோம். அமெரிக்க அரசு பொருளாதரத்தில் செயல்படும் மிகப்பெரும் நிறுவனம் என்றே ஆகியுள்ளது. அது இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக தனக்கு வேண்டிய நிறுவணங்களை திவால் நிலையில் இருந்து பணம் அளித்து காப்பாற்றுகின்ரது.
அது ‘ஃபானி மே’ மற்றும் ‘ஃப்ரெடி மேக்’ நிதி நிறுவனங்களுக்கு பெரும் பணத்தை மான்யமாக அளித்து அவை திவாலாகமல் காப்பாற்றியது. அது பொருளாதரத்தையே மோசமாக பாதித்தது. அதைப் போலவே இந்தக் காலகட்டத்துப் போர்களும். இதெல்லாம் ஒரு வகையில் ’சோசலிசம்’ என்ற குற்றச்சாட்டிற்கு உள்ளான நடவடிக்கைகள் தானே? அரசு எல்லோருக்கும் அதுவும் குறிப்பாக பணக்காரர்களுக்கு மேலும் பணமளித்து அவர்களைக் காக்கின்றது. சரி… இதிலிருந்து நாடு எப்படி வெளியேறுவது? இது மிகவும் கடினமான கேள்வி. நான் சொல்வது நாம் இப்போது மோசமான ஊழலும் ஓரவஞ்சனையுமான சோசலிசத்தில் இருக்கின்றோம். இதிலிருந்து நல்ல சோசலிசத்திற்கு செல்ல வேண்டும். நான் ஒரு பங்குச் சந்தை தரகரின் மகனாக சந்தை என்பதும் சந்தையின் ஆற்றல் என்பதும் நாட்டின் செல்வ வளங்களை ஒரு சமத்துவமான முறையில் பகிர்ந்துகொள்ள உதவும் என்றே நம்புகின்றேன். ஆனால் அது நல்ல முறையில் கட்டுப்படுத்தப்படும் முதலாளித்துவமாகவாவது இருக்கலாம். ஆனால் இப்போது இருப்பது போன்றதல்ல.

நேர்காணல்: ஆலிவர் ஸ்டோன்

தமிழில்: ப.கு.ராஜன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *