பித்ருபூமியில் தங்கள் செயல்களை வழிநடத்துவதற்கான தர்மத்திற்கு ஒரு வரையறையைப் பயன்படுத்துகிற அதே நேரத்தில் தங்களுடைய மாத்ருபூமியில் முற்றிலும் மாறுபட்ட வரையறையை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

கேள்வி: முகமதியர்களை எவ்வாறு நடத்த திட்டமிட்டுள்ளீர்கள்?

சாவர்க்கர்: சிறுபான்மையினராக, உங்கள் நீக்ரோக்களின் நிலையில்

கேள்வி: முகமதியர்கள் பிரிந்து சென்று, தங்களுக்கான சொந்த நாட்டை அமைப்பதில் வெற்றி பெற்றால்?

சாவர்க்கர்: உங்கள் நாட்டைப் போலவே … உள்நாட்டுப் போர் இருக்கும்.

–  டாம் ட்ரேனர் 1944ஆம் ஆண்டு வி.டி.சாவர்க்கருடன் நடத்திய நேர்காணல்

ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலைக்கு எதிராக சமீப வாரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்காவை நெருக்கிய போது, ஒற்றுமைக்கான ’பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ என்ற வாசகத்துடன் செய்திகள் வெளியாகின. அவ்வாறு வெளியான ஒரு செய்தியாக இருந்த, இந்தியாவில் மத சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்து வருகிற ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் அமெரிக்கப் பிரிவான ஹிந்து சுயம்சேவக் சங்கம் (எச்எஸ்எஸ்) வெளியிட்ட இடுகை என்னுடைய கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

கறுப்பு அமெரிக்கர்களைச் சென்றடைவது குறித்து இந்திய அமெரிக்கர்களான நாங்கள் ஒட்டுமொத்தமாக இப்போது வரை அதிக கவனம் செலுத்தத் தவறிவிட்ட நிலையில், உண்மையிலேயே அது வேண்டுமென்று விரும்பிய எச்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆயினும் இந்தியாவில் கும்பல் படுகொலையை உள்ளடக்கி, முஸ்லீம்-விரோத மதவெறியை இயல்பாக்கி வைத்திருக்கின்ற அமைப்பிடமிருந்து, கறுப்பினத்தவர்களுக்கு எதிரான  இனவெறிக்கு எதிராக இவ்வாறான செய்தி வந்திருப்பது என்னைப் பொறுத்தவரை சற்றும் எதிர்பாராததாகவே இருந்தது.

C:\Users\Chandraguru\Pictures\HSS\US Hindu org.jpg

எச்.எஸ்.எஸ்., ஹிந்து அமெரிக்க அறக்கட்டளை, ஹிந்து மாணவர் பேரவை போன்ற ஹிந்து தேசியவாத அமைப்புகளின் அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்களுடைய சொந்த அமைப்புகளின் கருத்தியல் வேர்களைப் பற்றி எந்த அளவிற்கு அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பது என்னைப் பொறுத்தவரை ஆச்சரியமாகவே இருந்தது.

இவர்களுடைய அமைப்புகள் இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியின் மத வெறித்தனத்திற்கு தருகின்ற தீவிர ஆதரவிற்கும், பல இனங்களைக் கொண்ட ஜனநாயக நாட்டில் மத சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்ற தங்களுடைய வாழ்க்கைக்கும் இடையிலான  வேறுபாட்டை இவர்களால் காண முடிகிறதா?

முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் இரண்டாம் தர குடிமக்களாக இருக்கின்ற ஹிந்து பெரும்பான்மை அரசு என்ற சாவர்க்கரின் கனவைச் செயல்படுத்துவதற்கு பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் இப்போது உறுதியுடன் செயல்பட்டு வருவது இவர்களுக்குப் புரிந்திருக்கிறதா?

அரசியலமைப்பைக் கேலி செய்ததற்காக ட்ரம்பைத் தோற்கடிக்க வேண்டுமென்ற தங்களுடைய ஆர்வத்திற்கும், ஒருகாலத்தில் கொண்டாடப்பட்டு வந்த மதச்சார்பற்ற அரசியலமைப்பு சட்டத்தைத் தகர்த்தெறியத் துவங்கியிருக்கின்ற மோடி/ஷா ஆட்சிக்கான தடையற்ற ஆதரவிற்கும் இடையிலான தார்மீக இடைவெளியை அமெரிக்க காங்கிரசில் உள்ள ஹிந்து இளைஞர்களால் காண முடிகிறதா?

நீக்ரோக்கள் அமெரிக்காவில் நடத்தப்பட்டதைப் போலவே, ஹிந்து ராஷ்டிராவில் உள்ள முஸ்லீம்கள் நடத்தப்படுவார்கள் என்று 1944ஆம் ஆண்டு சாவர்க்கர் வெளியிட்ட கருத்து, உண்மையில் அந்த விஷயத்தில் அவர் மேற்கொண்ட முதல் முயற்சியாக இருக்கவில்லை. 1923ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஹிந்துத்துவா என்ற சொற்பொழிவுக் கட்டுரையில், ’அமெரிக்காவை எடுத்துக் கொள்ளுங்கள்: ஜெர்மன் போர் வெடித்தபோது, அமெரிக்க ஜெர்மன் குடிமக்கள் அமெரிக்காவை உதறி விட்டு ஜெர்மானிய ஆதரவு நிலை எடுத்த அபாயத்தை அந்த நாடு எதிர்கொள்ள நேர்ந்தது; அதே போன்று அமெரிக்காவிலிருந்த நீக்ரோ குடிமக்கள், அமெரிக்க வெள்ளையர்களைக் காட்டிலும் ஆப்பிரிக்காவில் உள்ள தங்கள் சகோதரர்களிடமே அதிக அனுதாபம் காட்டினார்கள். இறுதிவரை ஆங்கிலோ-சாக்சன் வழிவந்தவர்களாக நிற்க வேண்டும் அல்லது வீழ வேண்டும் என்பதே அமெரிக்க அரசைப் பொறுத்தவரை அதனுடைய கடைசி முயற்சியாக இருக்கும். அதைப் போன்றே ஹிந்துக்களும்…’  என்று ஹிந்து தேசியவாதத்தை வெள்ளை தேசியவாதத்துடன் எந்தவித தயக்கமுமின்றி அவர் சமன் செய்திருந்தார்.

வரலாறு குறித்த சாவர்க்கரின் தடுமாற்றமான புரிதலை ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தால், சிறுபான்மையினருக்கு எதிரான சித்தாந்தத்தின் அடிப்படையில் ஹிந்து ராஷ்டிராவைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற அவருடைய நோக்கமே, ஹிந்து மகாசபாவிற்கான பின்னணியாக மாறியது. ஹிந்துக்களின் எதிரியாக தான் கண்ட காந்தியை 1948ஆம் ஆண்டு படுகொலை செய்தவராக, அவரது அமைப்பில் உறுப்பினராக இருந்த நாதுராம் கோட்சே இருந்ததில் ஆச்சரியப்படுவதற்கென்று ஏதுமில்லை.

மோடி அரசாங்கத்தின் கீழ் இன்று ஊக்கம் பெற்றிருக்கும் ஹிந்து மகாசபா, தன்னுடைய ஹீரோவாக கோட்சேவைப் பகிரங்கமாக வணங்குகிறது. பாஜக பாராளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர் எந்தவித தண்டனையும் பெறாமல், முஸ்லீம் விரோத மதவெறியை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இந்தியாவில் உள்ள ஹிந்து தேசியவாதிகளால் பெரிதும் போற்றப்படுவராகவும் அவர் இருந்து வருகிறார்.

‘செயலற்ற’ ஹிந்துக்கள்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை 1925ஆம் ஆண்டு கே.பி.ஹெட்கேவார் நிறுவியபோது, ​​சாவர்க்கர் அவரது முன்மாதிரியாகவும், ஹிந்துத்துவா என்பது அவரது முக்கிய திட்டமாகவும் இருந்தது. ஆர்எஸ்எஸ்சின் முதல் சர்சங்சாலக் என்ற வகையில் ஹெட்கேவார், அனைத்து ஹிந்துக்களுக்கும் எதிரான இருத்தலியல் அச்சுறுத்தலாக முஸ்லீம்களைச் சித்தரித்த சாவர்க்கரின் அந்த திட்டத்தைத் தொடர்ந்து உருவாக்கினார். 1981ஆம் ஆண்டு வெளியான அவரது சுயசரிதையில் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ள முஸ்லீம்கள் குறித்த அவருடைய தனித்துவமான கருத்துக்களும், சதி கோட்பாடுகளும் இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் அதிகரித்து வருகின்ற ஆதரவைப் பெற்றுள்ளன. சாதி அமைப்பின் தீமைகளை ஹிந்துக்களை ஒன்றிணைக்கும் வழிமுறையாகப் பயன்படுத்துவது குறித்து ஹெட்கேவார் சற்றும் சிந்திக்கவில்லை. அதற்குப் பதிலாக, வேறுபட்ட மக்கள் மற்றும் மாறுபட்ட கருத்துக்களுக்கான சகிப்புத்தன்மையே ஹிந்து சமுதாயத்தின் இன்றைய பரிதாப நிலைக்கு காரணம் என்று அவர் தூண்டி விட்டார். ’உடல்ரீதியான வன்முறையை உள்ளடக்கியதாகத் தோன்றுகின்ற சில செயல்களை ஒருவர் வெளிப்படையாகச்  செய்யலாம். பற்றின்மை மனப்பான்மை கொண்டு, எந்தவொரு சுயநல நோக்கமும், வெறுப்பும் இல்லாமல் செய்யப்படுகின்ற அந்தச் செயலை ஒருபோதும் வன்முறை என்று கூற முடியாது’ என்று கூறி வன்முறை மூலம் தீர்வுகளைக் கொண்டு வருவதை அவர் நியாயப்படுத்தினார்.

’ஒருமுறை மேடையில் ஏறிச் சென்று, தனக்குப் பிடிக்காததைப் பேசிக் கொண்டிருந்த பேச்சாளரை அறைந்தார். அவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து மற்றொரு நேரத்தில், அப்பாவியாக நின்று கொண்டிருந்த ஒருவரை, அவரது சமூகத்திற்கான ’செய்தியை’ அனுப்புவதற்காக அடித்தார்கள். பெரும்பாலும் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலங்கள் மசூதிகளைக் கடந்து செல்லும் போதெல்லாம் சத்தமாக மேளம் இசைப்பதற்கு அவர் வழிவகுத்துக் கொடுத்தார்’ என்பது போன்று அவரது ஆரம்பகால வாழ்க்கையிலிருந்து பல நிகழ்வுகளை மேற்கோள் காட்டி ’செயலற்றுக் கிடந்த ஹிந்துக்களின் ஆண்மையைத்  தூண்டினார்’ என்று ஹெட்கேவாரிடமிருந்த வெறியார்வத்தை அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆர்.எஸ்.எஸ்சைச் சார்ந்த எச்.வி.சேஷாத்ரி புகழ்ந்துரைத்துள்ளார்.

Image

ஆர்எஸ்எஸ் நிறுவனரின் இவ்வாறான ’தேசபக்தி’ நிறைந்த செயல்களைப் பற்றி, இளம் பிரச்சாரகர்களுடன் மீண்டும் மீண்டும் பேசுவதை அதன் ஷாகாக்கள் முக்கியமாக பணியாகச் செய்து வருவதால், இன்றைய ஆர்எஸ்எஸ் படைவீரர்களிடம் அத்தகைய ஆத்திரமூட்டல்கள் மற்றும் தூண்டுதல்களின் எதிரொலிகளை நம்மால் காண முடிகிறது. ஹெட்கேவார் மட்டும் இன்று உயிருடன் இருப்பாரேயானால், ஹிந்து தேசியவாதிகளிடம் ’பற்றின்மை மனப்பான்மை கொண்ட வன்முறை’ என்ற தன்னுடைய கருத்து நன்றாக எதிரொலிப்பதைக் கண்டு பெருமிதம் கொள்வது நிச்சயம்.

ஹிந்து ராஷ்டிராவை எவ்வாறு அடைவது என்பது குறித்து சாவர்க்கர், ஹெட்கேவார் ஆகியோரிடம் தெளிவு இல்லை என்றாலும், ஆர்.எஸ்.எஸ்சின் இரண்டாவது சர்சங்சாலக்காக மிக நீண்ட காலம் பணியாற்றிய  எம்.எஸ்.கோல்வல்கர் அதுகுறித்த தெளிவான பார்வையைக் கொண்டிருந்தார். 1940 முதல் 1973 வரையிலான தனது நீண்ட பதவிக் காலத்தில், சிறுபான்மையினர் மீதான வெறுப்பை இடைவிடாமல் வலியுறுத்தி வந்த அவர், ஹிந்து ராஷ்ட்ராவில் இரண்டாம் தர குடியுரிமையை ஏற்றுக்கொள்வதைத் தவிர முஸ்லீம்களுக்கு வேறு வழியில்லை என்ற கருத்தை பின்வருமாறு முன்வைத்தார். ’…மீண்டெழுகின்ற வலுவான ஹிந்து ராஷ்டிரம் மட்டுமே… சிறுபான்மையினர் என்று அழைக்கப்படுகின்ற அனைவரின் சுதந்திரமான மற்றும் வளமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்க முடியும்…’(எம்.எஸ். கோல்வல்கர், சிந்தனைக் களஞ்சியம்).

’ஹிந்துஸ்தானில் நாங்கள் கற்றுக் கொள்வதற்கும், பயனடைவதற்குமான நல்ல படிப்பினை’ என்று ஜெர்மனியின் தேசியப் பெருமையையும், யூதர்களை ’தூய்மைப்படுத்துதல்’  போன்றவற்றையும் கோல்வல்கர் முன்னதாகப் பாராட்டியிருந்தார். சிறுபான்மை எதிர்ப்பு உணர்வுகளைத் தொடர்ந்து தூண்டிவிட்ட போதிலும், ’ஆர்.எஸ்.எஸ் ஒருபோதும் வெறுப்பை பிரசங்கிக்கவில்லை’ என்ற அவருடைய கூற்று, ஆர்.எஸ்.எஸ் / பாஜகவினரின் இரட்டைப் பேச்சின் முக்கிய அடையாளமாக இன்றுவரையிலும் இருந்து வருகிறது.

கோல்வால்கர் இன்று உயிருடன் இருந்திருந்தால், தன்னுடைய கனவுகளுக்கான ஆய்வகங்களாக மாற்றியதற்காக குஜராத் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களை அவர் நிச்சயமாகப் பாராட்டியிருப்பார். ஹிந்து ராஷ்டிரத்திற்கான காலக்கெடுவை துரிதப்படுத்துவதற்கான தருணத்தைக் கைப்பற்றிக் கொள்வதில் ஆர்வமாக உள்ள, ஆர்.எஸ்.எஸ்சின் முன்னாள் மாணவர்களில் மிக முக்கியமானவராக இருக்கின்ற பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி அவர் நிச்சயம் பெருமிதம் அடைந்திருப்பார்.

எனது பார்வையில், முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரான வன்முறையை இயல்பாக்குவதற்கான அடித்தளத்தை அமைத்து வருகின்ற ஆயிரக்கணக்கான ஷாகாக்களில், ஆர்.எஸ்.எஸ்சின் ஒற்றை எண்ணம் ஹிந்துக்களின் ’வீரம்’ மற்றும் ’மீறுதல்’ பற்றிய கதைகளைச் சொல்வதிலேயே கவனமாக இருந்து வருகிறது. அந்த தன்மையை உருவாக்குகின்ற அதே சித்தாந்தம்தான், அமெரிக்க ஹிந்து தேசியவாத அமைப்புகளான ஹிந்து சுயம்சேவக் சங்கம், ஹிந்து அமெரிக்க அறக்கட்டளை மற்றும் ஹிந்து மாணவர் பேரவை போன்ற அமைப்புகளை இப்போது கறுப்பு அமெரிக்காவின் நண்பர்கள் என்ற கவசத்தை அணிந்து கொள்ளச் சொல்கிறது.

ஆப்பிரிக்க-அமெரிக்கர்களுடனான ஒற்றுமைக்காக இந்த அமைப்புகள் வெளியிட்டிருக்கும் சமீபத்திய செய்தி அறிக்கைகள் மூலமாக, நாட்டில் இனவெறியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், காவல்துறை மற்றும் நீதித்துறை அமைப்புகளை சீர்திருத்துவதற்குமான அனைத்து சரியான அழைப்புகளை விடுத்திருக்கின்றன. ஆனால் உலகம் ஒரு குடும்பம் என்ற வசுதைவ குடும்பகத்தைத் தேடுவதில் இவர்களைக் கூட்டாளிகளாக எடுத்துக் கொள்வதற்கு முன்பாக நாம் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். இந்தியாவில் இருக்கின்ற பாஜக / ஆர்எஸ்எஸ் / விஸ்வ ஹிந்து பரிசத்  கூட்டாளிகளால் தூண்டப்பட்டு வருகின்ற முஸ்லீம்-விரோத வன்முறை குறித்து தாங்கள் காத்து வருகின்ற முழுமையான மௌனத்திற்கு இவர்கள் பதிலளிக்க வேண்டிய கேள்விகள் ஏராளமாக இருக்கின்றன.

இவர்கள் அமெரிக்க காவல்துறையின் அத்துமீறிய நடவடிக்கைகளை கண்டிப்பதோடு,  காவல்துறை சீர்திருத்தத்திற்கான அவசரத் தேவை குறித்தும் பேசுகிறார்கள்.

டெல்லி, உத்தரபிரதேசம் போன்ற இடங்களில் கபில் மிஸ்ரா, ஆதித்யநாத் போன்ற பாஜக அரசியல்வாதிகளின் தாக்குதலுக்குள்ளான அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிரான காவல்துறையின் மிருகத்தனத்தைக் கண்டித்து அவர்கள் எங்களுடன் சேருவார்களா? பல்கலைக்கழகங்கள் மற்றும் வீடுகளுக்குள் காவல்துறையினர் அதிரடியாக நுழைவதை ஊக்குவித்த மோடி / ஆதித்யநாத் அரசாங்கங்கள் மீது அவர்கள் குற்றம் சுமத்துவார்களா?

இவர்கள் போராட்டங்களின் போது ஊடகவியலாளர்களைக் குறிவைப்பதையும், கைது செய்வதையும் நிறுத்துமாறு அமெரிக்க அதிகாரிகளை வலியுறுத்துகின்றனர்.

இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் ஆபத்தான சரிவில் இருப்பது, குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற அநியாய சட்டங்கள் குறித்து செய்தியளித்தல் மற்றும் / அல்லது எதிர்ப்பது மட்டுமே குற்றம் என்று கருதி ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களைத் தாக்கியது பற்றி இவர்கள் அறிந்திருக்கிறார்களா? தனது விமர்சகர்கள் அனைவர் மீதும் மோடி / ஷா அரசாங்கம் பயங்கரவாதிகள் என்ற முத்திரையைக் குத்தி, எந்தவொரு உரிய நடவடிக்கையும் இல்லாமல் அவர்களைச் சிறையிலடைக்க அனுமதிக்கின்ற பழமையான காலனித்துவ தேசத்துரோக சட்டங்கள் மற்றும் மிகக்கடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் ஆகியவற்றை இவர்கள் முடிவிற்கு கொண்டுவருவார்களா?

C:\Users\Chandraguru\Pictures\HSS\discover.jpg

அமெரிக்காவில் குறிப்பாகத் தேர்ந்தெடுத்து சட்டம் அமல்படுத்தப்படுவதை மறுத்து, இன அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று இவர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.

குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்ற போது, வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்கின்ற இந்திய காவல்துறையின் தந்திரத்தை எதிர்க்க இவர்கள் தயாராக இருக்கிறார்களா? நீதிக்குப் புறம்பாக நடத்தப்படுகின்ற கொலைகள் என்றழைக்கப்படுவதைத் தவிர வேறு எவ்வாறும் அழைக்க முடியாத, காவல்துறையினரால் நடத்தப்படுகின்ற என்கவுன்டர் கொலைகளை நிறுத்துமாறு இவர்கள் கோருவார்களா? இன்னமும் இந்தியாவின் பல பகுதிகளிலும், அன்றாடம் ஜிம் க்ரோ கால நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகின்ற தலித்துகள் மீதான பல நூற்றாண்டு கால சாதி அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இவர்கள் எங்களுடனும், தலித் உரிமைக் குழுக்களுடனும் இணைந்து செயல்படுவார்களா?

’தர்மத்தைப் பாதுகாத்தல்… அதாவது அனைத்து மக்களின் திறனுக்காகவும், அவர்களுடைய இனம், பாலினம் அல்லது பாலியல் நோக்குநிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் போராடுவது – உடல்ரீதியான தீங்குகளுக்கு அஞ்சாமல், நமக்கு உள்ளதைப் போன்ற அதே சுதந்திரங்களை அவர்களும் அனுபவிப்பது … அனைத்து உயிர்களும் சமம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்’ என்று ஹிந்து மாணவர் பேரவை இவ்வாறான உன்னதமான சிந்தனையுடன் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களுக்கான தங்களுடைய ஆதரவு குறித்த செய்தியை முடித்திருக்கிறது.

கோவிட்-19 பொதுமுடக்க காலத்திலும்கூட மோடி அரசாங்கத்தால் தாக்குதலுக்குள்ளாகி இருக்கின்ற மத சிறுபான்மையினரின் நிலைமை குறித்தும் இதேபோன்ற தார்மீக அளவுகோலைப் பயன்படுத்த ஹிந்து மாணவர் பேரவை மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பிற ஹிந்து தேசியவாத குழுக்கள் முன்வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

C:\Users\Chandraguru\Pictures\HSS\CAA.jpg

தங்கள் செயல்களை வழிநடத்துவதற்கு, தங்களுடைய பித்ருபூமியில் தர்மத்தின் வரையறையைப் பயன்படுத்துகின்ற இந்த நிறுவனங்கள், அதே நேரத்தில் தங்களுடைய மாத்ருபூமியில் உள்ள மோசமான சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு தர்மத்திற்கு முற்றிலும் அப்பாற்பட்ட வரையறையைப் பயன்படுத்துவது நிச்சயம் அதர்மத்தின் உச்சமாகவே இருக்கும்.

https://scroll.in/article/967964/hindutva-groups-in-the-us-are-calling-out-anti-black-racism-but-their-support-rings-hollow

ராஜு ராஜகோபால், மனித உரிமைகளுக்கான ஹிந்துக்கள் என்ற அமைப்பின் இணை நிறுவனர் 

நன்றி: தி ஸ்க்ரோல் இணைய இதழ், 2020 ஜுலை 21 

தமிழில்: தா.சந்திரகுரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *