துகள் இயற்பியல் உலகில் மிகவும் குறிப்பிடத் தகுந்த ஆய்வாளரும் அந்தத் துறையின் போக்கை நிர்ணயித்தவர்களில் ஒருவருமான பேராசிரியர். ஸ்டீவன் வெய்ன்பர்க் (வயது 88) அவர்கள் 23 ஜூலை 2021 அன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஆஸ்டின் நகரில் காலமானார்.
ஸ்டீவன் வெய்ன்பர்க் 1979 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசை அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தைச் சார்ந்த ஷெல்டன் கிளாஸ்ஸோ, பிரிட்டனின் லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சார்ந்த அப்துஸ் சலாம் ஆகியோரோடு இணைந்து பெற்றார். மென்விசை மற்றும் மின்காந்தவிசை ஊடாடல் குறித்த ஒருங்கிணைந்த கோட்பாட்டை (Unified Theory of Weak and Electromagnetic Interactions) உருவாக்கியதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அவர் ஆஸ்டின் நகரின் டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் ஜாக் எஸ். ஜோசி வெல்ச் அறக்கட்டளை இருக்கை – தலைமைப் பேராசிரியர் மற்றும் கோட்பாட்டு ஆய்வுக் குழுவின் இயக்குநர். அவர் 1982 ஆம் ஆண்டு அதுவரை பணியாற்றிய ஹார்வர்டிலிருந்து ஆஸ்டினுக்கு மாறினார். அங்கு மிகு ஆற்றல் இயற்பியல் துறையை நிறுவி வளர்க்கக் காரணமாக இருந்தார்.
அடிப்படைத் துகள் இயற்பியல் மற்றும் அண்டக் கட்டமைப்பியல் துறைகளில் அவரது ஆய்வுகளுக்காக அவர் இயற்பியலுக்கான நோபல் பரிசு, அறிவியலுக்கான தேசியப் பதக்கம், அமெரிக்க தத்துவார்த்தக் கழகம் வழங்கும் பெஞ்சமின் ஃபிராங்ளின் பதக்கம், ஜே. ஓப்பன்ஹீமர் பரிசு உள்ளிட்ட பல பரிசுகளையும் பெற்றார். அவர் அமெரிக்காவின் தேசிய அறிவியல் கழகம், பிரிட்டனின் ராயல் கழகம் உள்ளிட்ட பல கல்விக் கழகங்கங்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற பதினாறு பல்கலைக்கழகங்கள் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளன. அவர் பெற்ற பரிசுகளும் மேன்மைகளும், கல்விக் கழக உறுப்பினர் கவுரவங்களையும் முழுமையாகப் பட்டியலிட்டால் பல பக்கம் போகும்.
அவர் 350க்கும் மேலான போற்றப்படும் ஆய்வுக் கட்டுரைகளையும் 15 நூல்களையும் எழுதியுள்ளார். அவர் குவாண்டம் இயங்கியல் குறித்து எழுதியுள்ள 3 தொகுதிகள், ஈர்ப்புவிசையும் அண்டக்கட்டமைப்பும் – கொள்கைகளும் பொதுச் சார்பியல் கோட்பாட்டின் பயண்பாடும் (‘Gravitation and Cosmology – Principles and Application of the General Theory of Relativity’) ஆகியவை மிகு ஆற்றல் இயற்பியல், ஈர்ப்புவிசை மற்றும் வின்னியற்பியல் ஆகிவற்றில் உயர் கல்வி கற்கும் மாணவர்களுக்குப் புனித நூல் போன்றவை ஆகும்.
மிகவும் சிக்கலான விசயங்கள் குறித்து விளக்கமளிப்பதில் அவருக்கு இருக்கும் தனிச் சிறப்பான ஆற்றல் அவரைப் பல புத்தகங்கள் எழுதவைத்துள்ளது. அவரது ’முதல் மூன்று நிமிடங்கள் – பேரண்டத்தின் தோற்றம் குறித்த ஒரு நவீன நோக்கு ’ (The First Three Minutes – A Modern View of the Origin of the Universe) நூல் தமிழ் (பாரதி புத்தகாலயம் வெளியீடு) உட்பட 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ’இறுதிக் கோட்பாடு குறித்த கனவுகள்’ (Dreams about the Final Theory) 16 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டு வந்த அவரது கடைசி நூல், ‘இந்த உலகை விளக்க’ (To Explain the World), இயற்கையையும் அதன் விதிகளையும் புரிந்துகொள்ள அவருக்கிருக்கும் தனியாத தாகத்தைக் காட்டக்கூடியதாகும்.
அவர் ஒரு பகுத்தறிவாளர்; கண்மூடித்தனமான அறிவியலுக்கு மாறான எல்லாவிதமான கருத்துகளையும் எதிர்த்துக் குரல் கொடுக்க ஒருபோதும் தயங்கியதில்லை. இந்த பண்பு, ‘அறிவியல் மற்றும் அதன் கலாச்சாரத்தின் எதிரிகளுக்கு முகங்கொடுத்தல்’ (Facing Up – Science and its Cultural Adversaries) என்ற நூலை எழுத வைத்தது.
“மதம் இருந்தாலும் இல்லையென்றாலும் நல்ல மனிதர்கள் நல்ல விதமானதாகவும் மோசமான மனிதர்கள் கொடுமையானதாகவும் நடத்தை கொண்டவர்களாக இருப்பர்; ஆனால் நல்ல மனிதர்கள் கொடுமையான நடத்தை கொள்ள அவர்களுக்கு மதம் தேவைப்படுகின்றது. மதங்கள் மனிதனின் கன்னியத்திற்கு இழுக்கானவை. அவை இல்லாது நல்ல மனிதர்கள் நல்ல விதமாகவும் மோசமான மனிதர்கள் கொடுமையாகவும் செயல்பாடு கொண்டவர்களாக இருப்பர்.” என்பது அவரது பல புகழ்பெற்ற கூற்றுகளில் ஒன்று.
அவரது ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள், பேருரைகள் ஒரு தலைமுறையின் பல அறிவியலாளர்களை, தத்துவகர்த்தாக்களை, இளம் மாணவர்களைக் கவர்ந்து உந்தித் தள்ளுபவையாக இருந்தன. அவரது பிரிவு அறிவியலுக்கும் சமூகத்திற்கும் பேரிழப்பாகும்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.