Subscribe

Thamizhbooks ad

தன்னடையாளங்களை எழுதி பார்க்கும் பின்காலனிய அரசியல் (நைசிரிய நாவலான அமினாவை முன்வைத்து) – மு. ரமேசுநூல்: அமினா
ஆசிரியர்: முகமது உமர் / தமிழில் பேராசிரியர் தரமி
வெளியீடு: கிழக்கு பதிப்பகம் 

முன்னுரை

எந்திரமயமாக்களின் இணைவிளைவாக தொழில் புரட்சியும் நடைபெற்றது. இதன் காரணமாக அரசியல், பண்பாடு, பொருளியல் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் அதிவேகமான மாற்றங்கள் நுண்மையாகவும், பருண்மையாகவும் உலகம் முழுவதும் நிகழத் தொடங்கியது. காலனியம் நவீனத்துவக் கருத்தியலாக வடிவமைக்கப்படுகிறது. உலக அரங்கில் முதலாளித்துவம் தலைமைப் பாத்திரத்தை ஏற்று இயங்குகிறது. இதுவரை நேரடியான உடல் உழைப்பு சார்ந்த உற்பத்தியில் ஈடுபடாத நம்பிக்கையின்வழி அதிகாரம் செலுத்திவந்த மேட்டிமை உளவியலில் அச்சமும், பதட்டமும், நிச்சையமின்மையும், அவநம்பிக்கையும் ஏற்படுகிறது. இவற்றின் புனைவுகளாக நவீனத்துவ இலக்கியங்கள் தோன்றுகின்றன. இவர்களை பாரம்பரிய உரிமையாளர்கள் என்றும் பெயரிட்டு அழைக்கலாம். இதன்காரணமாக இவர்கள், காலணிய முதலாளிகளால் உள்ளூர் முதலாளிகளாக அங்கிகாரம் பெறுகின்றனர்.

மக்கள், ஊர்வன, பறப்பன, நடப்பன, மிதப்பன பண்பாடு, கலாசாரம், நம்பிக்கை, கடவுள், அறம் இவை போன்றவற்றோடு பூமிக்கு அடியிலும் – வளிமண்டலத்திற்கு மேலும் உள்ள அனைத்து இயற்கை-செயற்கை பொருள்கள் எல்லாம் தொகுத்து விற்பனைக்காக மதிப்பறியப்படுகிறது. பன்னாட்டு முதலாளிக்கும் உள்ளூர் முதலாளிக்கும் இத்தகைய வணிகம் சார்ந்த உறவைத் தவிர அற அடிப்படையிலான உறவு இருப்பதற்கான முகாந்திரம் இருக்கவில்லை. இரு முதலாளிகளுக்குமிடையில் வணிகரீதியான முரண்பாடுகள் தோன்றுகிறபோது உள்ளூர் முதலாளிகளுக்கு தேசியத் தலைவராக உருமாறும் நிலை ஏற்படுகிறது. முதலாளிக்கு தொழிலாளராகவும் பாரம்பரிய உரிமைப்படி அடிமைகளாகவும் வாய்த்துவிட்ட பெரும்பாலானமக்கள், நமது நம்பிக்கை, நமது கடவுள், நமதுநிலம், நமதுநாடு, நமக்கான உரிமை, நமது விடுதலை இத்தகைய முழக்கங்களை முன்வைத்து தேசிய இயக்கங்கள் உருவாக்கப்படுகிறது இதன் விளைவாக தேசிய இலக்கியங்கள் புனையப்படுகின்றன. தேசிய வீரர்களாக களம்கண்ட மக்களுக்கு தங்களுடைய தேசவிடுதலைக்குப் பிந்திய காலம் மிகவும் கடினமாகிறது. காரணம் முன்பைவிட முதலாளிகள் பெருகிவிட்டனர்.

ஓரிடத்தில் வேளைபார்த்த மக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வேளை பார்த்தால்தான் முன்புபோல் வாழ்க்கையை எதிர்கொள்ள முடியும் என்கிற நிலையில் பொதுமக்கள் பந்தயக் குதிரைகளாக்கப்பட்டனர். இப்போது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருப்பின் சாரம்தான் என்ன என்கிற கேள்வி எழத்தொடங்கியது. இது இருத்தலிய இலக்கியமாக வடிவமைக்கப்பட்டது. தனி மனிதனுக்கும் சமூகத்திற்கும் இடையில் உள்ள உறவுகுறித்த உரையாடலை தொடங்கப்பட்டநிலையில் தன்னிலை கலை பற்றிய கருத்தாக்க உருவாக்கப்பட்டது. மேற்கத்திய நாடுகளின் அறிவுமரபும் அணுகுமுறையும் சாதி, மொழி, மத, வண்ண, வருண, பாலின சமத்துவமின்மைக்கொண்ட கிழக்கத்திய நாடுகளின் இடைவெளியுடன்கூடிய பண்பாட்டு அமைப்புகளை சிக்கலானதாகக்கண்டு தங்களுடைய வணிக நலன்களுக்காக வேண்டி ஒருங்கிணைத்தது. இந்த செயல்முறையில் உள்ள சுரண்டல் என்பதை மறந்துவிட்டால் இதனை காலனியத்தின் கொடையாகக் கருதமுடியும். கிழக்கத்திய சமூகங்கள் தனிவுடைமையின் மீது மிகுந்த வேட்கை கொண்டவைத்தான், ஆனால் இதன் காரணமாகவே வரலாற்றுணர்வு, நாகரிகம் அற்றவை எனப் பொதுமைப்படுத்தமுடியாது. இத்தகைய நிலைப்பாட்டில் கிழக்கத்திய சிந்தனையாளர்கள் ஏற்கனவே பரிசோதிக்கப்பட்ட இருத்தலியம், மார்க்கிசியம், அமைப்பியல், மானிடவியல், இனவரைவியல் போன்ற இலக்கியக் கோட்பாடுகளின் துணைகொண்டு தன்னடையாளங்களை எழுதி பார்ப்பதற்கான மாற்றுச்சொல்லாடல்களையும் மாற்றுவெளிகளையும் உருவாக்கினர். இந்தச் சிந்தனையாக்கம் காலனியத்தை மறுதலிக்கும் பின்காலனிய அரசியலாக முன்வைக்கப்பட்டது. பாலினம், மொழி, மதம், சாதி,வண்ணம் போன்றவற்றால் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, தீண்டாமைக்குட்படுத்தப்பட்ட சமூகங்களின் தன்னடையாளங்கள் இலக்கியமாக்கப்பட்டு வருகிறது. மூன்றாம் உலக அரசியலுக்குரிய இலக்கிய காலமாக தற்போது இலக்கியக் களம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சற்று விளக்கம் வேண்டப்படுவதால் புரிதலுக்காக சிறு குறிப்பையாவது தருவது பயன்தரும்.‘மூன்றாம் உலக’ நோக்கம் கொண்ட தனிப்பிரிவாகவும் கண்டன. இந்நிகழ்வு மகத்தான முக்கியத்துவம் கொண்டதாகும். வெள்ளை, மேலை ஆதிக்க நாடுகளின் தளைகளை உதர முற்படும் பல்வேறு நிறங்கள் கொண்ட மக்களின் ஒட்டு மொத்த முயற்சியைக் குறிப்பதாக இந்நிகழ்வு அமைந்தது. அரசியல் ரீதியாக, மேலை உலகமும், சோவியத் உலகமும் இல்லாத மூன்றாவது வழி தேவைப்பட்டது. ஆனால், அதனை வரையறை செய்வதும், வளர்ப்பதும் மெதுவாகவே நடந்தது. காலப்போக்கில், ‘மூன்றாம் உலகம்’ என்ற தொடர் இந்நாடுகளில் எதிர்கொண்ட அரசியல், பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் அதைத் தொடர்ந்த வறுமை, வறட்சி, கலவரம் போன்றவற்றோடு தொடர்புபடுத்தப்படலாயிற்று. இந்த இடைவெளி விரிந்த பொருளைப் பெறலாயிற்று.” என எழுதும் சக்கரவர்த்தி மேலும் கூறுவதாவது, “பல வகைகளில், பான்டுங் மாநாடு சுய ஓர்மைமிக்க பின் காலனியத்துவம் என்ற அரசியல் தத்துவத்தின் தொடக்கத்தைக் குறிப்பதாக அமைந்தது. மூன்றாம் உலக அரசியலின் தீவிரமான வடிவம், மேலை உலக ஏகாதிபத்தியத்தின் தொடர்ச்சியை எதிர்க்கும் உலகக் கூட்டமைப்பு, பதினோரு ஆண்டுகளுக்குப் பின், 1966இல் ஹவானாவில் நடந்த முக்கண்ட மாநாட்டில் (டிரைகான்டினென்டல் கான்ஃபரென்ஸ்) உருவானது. முதன்முறையாக இலத்தீன் அமெரிக்கா (கரீபியத்தீவுகள் உட்பட) ஆப்பிரிக்கா, ஆசியாவோடு இணைந்தது. தென் பகுதியின் மூன்று கண்டங்கள் ஒன்றிணைந்தன. எனவே முக்கண்ட மாநாடு எனப்பட்டது. பலவகைகளில் ‘முக்கண்டம்’ என்ற சொல்’ பின்காலனியத்துவம் என்பதை விடப் பொருத்தமானது. இம்மாநாடு ஒரு புதிய இதழை நிறுவியது. அதன் பெயர் டிரைகான்டினென்டல் என்பதாகும். முதன் முதல், ‘பின் காலனியத்துவக் கொள்கையாளர் மற்றும் தொண்டர்களின் எழுத்துக்களை (அமில்கர் காப்ரல், ஃப்ரான்ஸ் ஃபனான், சேகுவேரா, ஹோசிமின், சார்த்தர்) இவ்விதழ் ஒன்றிணைத்தது. இவை பின் காலனியத்துவம் ஒரு முகப்பட்ட தனி அரசியல், தத்துவ நிலைப்பாடு அல்ல என்பதை விளக்கின. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தளைநீக்கம் (லிபர்டி) என்ற பொது நோக்கோடு ஒன்றிணையும் புள்ளி என்பதைக் காட்டியது.” இந்தப் பின்னனியில்
மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் சுரண்டலுக்கு காரணமான அதிகார அமைப்புகளையும் கேள்விகேட்கும் பணியை இவ்வகை இலக்கியம் செய்கிறது. இத்தகைய இலக்கியங்களுள் ஒன்று அமினா.

அறிமுகம்

ஒரு பெண் போராளியின் வாழ்க்கையை விவரிக்கும் இந்நாவல் மூன்றாம் உலக நாடுகளுள் ஒன்றான நைச்சிரியாவை களமாக உடையது. 29 அத்தியாயங்களைக் கொண்ட இந்நாவலை எழுதியவர் முகமது உமர். நைச்சிரிய எழுத்தாளராக அறியப்படும் இவர் இலண்டனை வசிப்பிடமாக கொண்டுள்ளார். இதழியல்-பொருளாதார அரசியலில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். தனது தாய் நாட்டின் மீது அளவில்லா பற்றுக்கொண்ட இவர் நைச்சிரியா சமகால நிகழ்வுகளை பன்னாட்டு கவனத்திற்கு கொண்டு வருகிறார். இதன் தொடர் வினைகளுள் ஒன்று இந்நாவலுமாகும். ஆங்கிலத்தில் 243 பக்கங்களை கொண்ட இப்பனுவலை இல்லச்ட்டரேட் [illustrated] நிறுவனத்தின் வழியாக ஆப்பிரிக்கன் வாலட் பிரச் [Africa World Press, 2005]பதிப்பாக வெளியிட்டுள்ளது. இது முகமது உமருவின் முதல் நாவலாகும்.

அமெரிக்கன் கல்லூரியின் மேனாள் பேராசிரியர் தரமி அவர்களால் தமிழாக்கப்பட்டு 2009-இல் கிழக்கு பதிப்பகத்தால் முதல் பதிப்பாகவும், 2017-ல் இரண்டாம் பதிப்பாகவும் வந்துள்ளது. அரசியல்-பொருளியல் துறைகளில் பெண்கள் பங்கேற்புக்கான தேவை இருந்த போதிலும் விதிக்கப்பட்டுள்ள தடைகள், கடக்கப்படவேண்டிய வழிமுறைகள் ஆகியவற்றை கவனப்படுத்துகிறது.

இரட்டைப் பனுவலை எழுதும் கலை

‘அரசியல் தடையென்பது கைகளுக்கு போடப்பட்ட விலங்கு, பொருளாதார தடையென்பது கால்களுக்கிடப்பட்ட விலங்கு, பண்பாட்டு தடையென்பது மூலைக்குள் போடப்பட்ட விலங்கு’ [தந்தை பெரியார்] அரசியல்-பொருளியல் ஆகிய மாபெரும் அதிகார நிறுவனங்கள் புறவயமானவை. இவை ஆண்-பெண் அனைவருக்கும் பொதுவானவையாக இருந்தாலும் பெண்ணுக்கான இடம் தடைசெயப்பட்டுள்ளது. பண்பாடு அகவயமானது கண்ணுக்கு தெரியாது, பெண்ணை கீழ்மையாக கற்பித்தது பண்பாடுதான். இத்தகைய பண்பாட்டை வடிவமைத்து பாதுகாப்பது மதம். மதம் பண்பாட்டை வடிவமைத்து கொள்கையாக வகுத்து தருகிறது அதனை அரசியல் என்னும் அதிகார நிறுவனம் சட்டமாக்கி நடைமுறைப்படுத்துகிறது. வரலாறு நெடுக மதமும் அரசியலும் ஒன்றாக இருப்பதை நாம் காணலாம்.
மக்கள் அவை உறுப்பினர் அருனாப்பின் நான்காவது மனைவியான அமினா படித்தப் பெண்களின் துணையோடு ஏழை எளிய பெண்களை ஒருங்கினைத்து பக்காரோ நகரில் மகளிர் கூட்டுறவு சங்கத்தை அமைத்து பொருளாதாரம், சுகாதாரம், கல்வி ஆகியவை குறித்த செயல்களில் ஈடுபடுவதை விரும்பாத அரசியல் வாதிகள் பெண்களுக்கான மதக் கொள்கைகளை காரணம்காட்டி மக்களவையில் சட்டம் ஏற்றி அந்த அமைப்பை தடைசெய்கின்றனர். பெண்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்படும் தற்சார்பு உற்பத்தியும் விற்பனையும் அயல் நாட்டு நிறுவனங்களின் விற்பனையை தடுக்கிறது. இதனால் அரசியல் வாதிகளுக்கு வந்து சேரவேண்டிய கையூட்டு பணமும் ஆடம்பரமான சொகுசு பொருள்களும் தடைபடுகிறது. இதன் காரணமாக பெண்கள் மீதான அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் கட்டவிழ்த்துவிடப்படுகிறது என்பதை இக்கதை பல இடங்களில் எடுத்துரைக்கிறது.

பெண்களுக்கான அதிகாரமறுப்பு என்னும் அரசியல்பனுவலை எழுதுவதன்மூலம் கலை, கலாசாரம், உணவு உடை, இருப்பிடம் மதம் இவை சார்ந்த பண்பாட்டுப் பனுவலை தனக்குத்தானே கட்டிக்கொள்ளுகிறது.

 

Source: MVSLIM.COM – Amina the Warrior Queen of Zaria 

பெயரும் ஓரடையாளம்

பழைய வழிபாட்டுமுறைகளை, நம்பிக்கைகளை, கலை-கலாசாரக் கூறுகளை,, தொன்மங்களை, உணவு-உடை உள்ளிட்டப் பழக்கவழக்கங்களை கூட்டு உளவியலின் கற்பனை படிமங்களை, மதப்பண்பாட்டு கற்பிதங்களை எழுதிப்பார்த்தல் என்பது அடையாள அரசியலின் செயல்முறையாகும். பின்காலனித்துவ அரசியலின் நிகழ்வும் இதுதான். இக்கதைக்குள் வரும் தலைமை மாந்தருக்கு அமினா எனப் பெயரிடப்படுவதுமட்டுமில்லை இதுவே இந்நாவலுக்கும் பெயராக்கப்பட்டுள்ளது. அமினா என்பது ஒருவரலாற்றுப் பாத்திரம்.

கி.பி.16.ஆம் நூற்றாண்டில் நைச்சிரிய நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள சாசா நாட்டை ஆண்ட அரசி, வீரமும் அறிவாற்றலும் அழகும் நிறைந்தவர். அடையாள அரசியலுக்குரிய இவ்வரலாற்று பாத்திரம் குறித்து விளக்குவது பயன்தரும். நைச்சிரியாவின் அரசன் நிக்கிதனுக்கும் அரசி துருக்பத்மினிக்கும் 1533- ஆம் ஆண்டு பிறந்த அமினா சிறு வயது முதலே கல்வி, குதிரையேற்றம் போர்பயிற்சி போன்றவற்றை கற்றுத்தேறினார். அவருடைய தாத்தாவோடு நீதிமன்றத்திற்குச் சென்று நீதிமுறைகள் சட்டநுணுக்கங்கள் போன்றவற்றை நன்கு அறிந்துகொண்டார். குதிரைப் படைக்கு தலைமை ஏற்ற இவர் எதிரிப்படைகளை துணிச்சலாக வெற்றிகொண்டார். தனது தந்தைக்குப்பின் மூத்த அண்ணன் 1566 இல் ஆட்சிக்கு வருவதற்கு இவர் பெரிதும் உதவினார். கி.பி.1576 – கி.பி.1610. வரை சாசா நாட்டு அரசியாக இவர் இருந்தார். இவருடைய ஆட்சி காலத்தில் அண்டைநாடுகள் பலவற்றை கைப் பற்றி தனது நாட்டை விரிவுப்படுத்தினார். தற்போது நைச்சிரியாவில் சிறந்த உணவுகளுள் ஒன்றாக இருக்கும் கோலாநட் அரசி அமினாவால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அமினா குறித்த நாட்டுப்புற கதைகளும் வாய்மொழிப் பாடல்களும் நைச்சிரியாவை உள்ளடக்கிய வட ஆப்பிரிக்காவில் வழங்குவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வரசியின் நினைவாக நைச்சிரியாவில் உள்ள ஒரு தீவு அமினாட் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய தொன்மையான வரலாற்று மரபின் அடையாளத்தை வெளிக்காட்டுவதற்கும் அதன்வழி நம்பிக்கையை ஊட்டுவதற்கும் இக்கதையின் தலைமை மாந்தருக்கும் கதைக்கும் அமினா எனப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பின்காலனிய நோக்கும்-கதையாக்கமும்

பின்காலனியம் என்பது ஒரு தத்துவத்தை முன்வைப்பதல்ல மாண்டேச் என சொல்லப்படுகிற ஒட்டுநிலை கொள்கையைக் கொண்டது. சோசலீசப் புரட்சியில் பெரிதும் நம்பிக்கை உடைய பல்கலைக்கழக மாணவர் தலைவியான பாத்திமா, கணவரின் இலஞ்சலாவண்ணியப் பணத்தில் பன்னாட்டு முகவர்களின் துணையோடு தொழிலை விரிவாக்கியபடி ஆடம்பரமாக வாழும் குலு ஆகிய இருவரும் அமினாவின் நெருங்கிய தோழிகள். மக்களவை உறுப்பினர் அர்னாப்பின் நான்காவது மணைவியான அமினா குலு போல தொழிலதிபராகி ஆடம்பரமாக வாழவேண்டும் என்றுதான் திருமணம் முடிந்த நாளன்று நினைக்கிறாள். பல்கலைக் கழகத்தில் படித்தகாலத்தில் அறை தோழியான பாத்திமா அமினாவிற்கு மிகவும் நெருக்கமானவர். பாத்திமாவின் பிரதிபலன் பாராத செயல்கள் அமினாவிற்கு அவருடனான நெருக்கதை அதிகரிக்க காரணமாக இருந்தது. குலு அதிகாரத்தின் தூய்ப்பையும், திளைப்பையும் எடுத்துச் சொல்லக்கூடியவராகவும், பாத்திமா ஒடுக்குமுறை சீரழிவு எனத் தொடரும் பண்பாட்டு அரசியலையும் எடுத்துச் சொல்லக்கூடியவராகவும் அமினாவுடனான உறவில் தொடருகின்றனர். பண்பாடு என்பது அகவயமானது கண்ணுக்குப் புலப்படாதது. ஆனால் புறவயமான அனைத்து அதிகார நிறுவன அதிகார அலகுகளுடனும் உள்ளார்ந்த பிணைப்புக் கொண்டது. அமினாவிற்கு பாத்திமா சடை போட்டுக்கொண்டு இருந்தபோது உரையாடலில் தான் நடுநிலையானவர் என்று அமினா தன்னை வெளிப்படுத்தியபோது அவளுடைய கொத்தான முடியைப் பிடித்து இழுத்துவிட்டு இப்போ உனக்கு வலிக்கிதா என்று பாத்திமா கேட்டுவிட்டு சொல்லுகிறாள் நடுவுநிலைமை என்ற ஒன்று இருக்கமுடியாது ஒன்னு அந்தப்பக்கம் இல்லையென்றால் இந்தப்பக்கம் இப்படித்தான் இருக்கமுடியும் இல்லையென்றால் நீ செய்யவேண்டியதை உன்னிடத்தைப் பிடித்து யாராவது செய்துவிட்டுப் போய்விடுவாரகள், என்கிறாள். இந்த உரையாடலுக்குப் பிந்திய நாட்களில் குடும்பத்தில் கணவனால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் அமினாவின் பார்வையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. தனது இருப்புசார்ந்த கேள்வியை தனக்குள் கேட்டுக்கொள்ளுகிறாள். அமினாவின் தன்னிலை சார்ந்தக் கேள்வியின் வழியாகத்தான் அடையாளங்களைத் தேடும் கதையாக நாவலின் வெளி உருமாறுகிறது.கண்ணுக்குத் தெரியாத அதிகாரம்

இன்றும் பலநாடுகளில் மக்களாட்சி மலர்ந்தும் பொதுமக்களின் அடிப்படை வசதிகள்கூட போதுமான அளவில் உறுதி செய்யப்படவில்லை. ஆதிக்க நாடுகளிடமிருந்து புறவயமாக அதிகாரம் கைமாறியதே தவிர முன்பை காட்டிலும் பொதுமக்கள் இந்நாடுகளில் நெருக்கடிகளை சந்திக்கின்றனர். அந்நிய செலாவணி, அந்நிய பங்கு, அந்நிய முதலீடு அந்நியவர்த்தகம் என்கிற பெயரில் நடக்கும் மறைமுக ஒப்பந்த நடைமுறைகள்தான். இத்திட்டத்தின்கீழ் உள்ளூர்முதலாளிகளும் வெளிநாட்டுமுதலாளிகளும் கூட்டுச் சேர்ந்து கொண்டு பொதுமக்களை சுரண்டுவதும் அரசியல்வாதிகளை ஆடம்பரத்தில் திளைக்கச் செய்வதுவுமாக மறைமுகமாக அரசாங்கத்தை இயக்குகின்றனர். இப்படியான ஒரு முகவராக பாட்டூர் இக்கதையில் வருகிறார். இவரை தன்னிச்சையான ஆதிக்கவாதி எனக் குறிப்பிடும் பாத்திமா அமினாவிற்கு இவரைப்பற்றி கூறுவது வருமாறு-

‘… எங்க இருந்து ஆரம்பிக்கறது? ம்ம்..ம் .. பாட்டூர் மொதல்ல நைஜீரியாவுக்கு உள்நாட்டுக்கலவரம் நடந்தப்போ ஒரு கூலிப்படையாளாகத்தான் வந்தார். பணத்துக்காகத்தான் அப்போ இருந்த பிரிவினைக்காரங்களை எதுத்து போராடினதாக் கேள்வி, அதுக்கப்புறம் அவருக்கும் அவர் போராடின குழுவோட தலைவர்களுக்குமே மன வேற்றுமை ஏற்பட்டதால் காமரூன் வழியாதப் பிச்சி போய்ட்டார். ஆனா கொஞ்ச மாசங்களுக்கு பின்னால மறுபடி நைஜீரியா வந்திருக்கார். வந்தவர் அப்போ இருந்த அரசுக்கு ராணுவ ஆலோசகராக இருந்தார். அந்த சமயத்துல அவர் போர்ல நேரடியா கலந்துக்கிட்டதில்ல. அந்த சமயத்துல அரசுக்கு எதிரா போராடித் தோத்துப்போயிருந்த புரட்சிக்காரங்க, அவர் அவங்களுக்கு உதவி செஞ்சா, அதுக்கு பதிலா அவங்க கையில ஆட்சி வந்ததும் நம் நாட்டு எண்ணெய் வளத்தை நிர்வகிக்கிற பொறுப்பை ஒப்படைக்கறதா சொல்லியிருக்காங்க. உடனே இவரும் ஆட்சியாளர்கள் பக்கத்துலருந்து புரட்சிக்காரங்க பக்கத்துக் குத்தாவிட்டாரு. அதோட அவங்களுக்குத் தேவையான ராணுவத் தளவாடங்கள், தொலைதொடர்புச் சாதனங்கள் எல்லாத்தையும் வாங்கிக் குடுத்து உதவியிருக்கார். உமுஹியாவில் நடந்த போர்ல அவர் காயம்பட்டிருக்கார். உடனே அவரை ஐவரி கோஸ்ட்டுக்கு விமானத்துல எடுத்துட்டுப் போயி, அப்புறம் அங்கருந்து ஏதோ ஒரு ஐரோப்பிய நாட்டுத் தலைநகருக்குக் கொண்டு போயிருக்காங்க.

நம்ம நாட்டு யுத்தம் முடியற வரைக்கும் அவருக்கு வைத்தியம் தொடர்ந்திருக்கு. அதுக்கப்புறம், முழு சாகுணமானதும் நைஜீரியாவுக்குத் திரும்பி வந்திருக்கார், வந்தவர் ‘பார்ட்யூன இன்டர்நேஷனல் லிமிடெட்’ அப்பிடின்னு ஒரு கம்பெனியை ஆரம்பிச்சார். அதன் மூலமா பல கட்டுமான வேலைகளை எடுத்து நடத்துறார். அதோட அரசுக்கும் கட்டட, புனரமைப்பு ஆலோசகராக இருக்கார். மனுஷன் நல்ல புத்திசாலி, கிடைச்சசாக்குல நம்ம நாட்டு எண்ணெய் வளத்தால் அரசுத்துறைகள்ல இருக்கற உயர்ந்த அரசியல்வாதிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் எல்லா விதமான சேவைகளையும் செஞ்சு குடுத்து எக்கச்சக்கப் பலனை பாத்துட்டார். எண்பதுகள்ல நம்ம நாட்டு அரசியல்வாதிகள் மட்டுமில்லாம, மொபுட்டுசேசேசெக்கோ, ஜோனாஸ் சவிம்பி மாதிரியான மத்த சில ஆப்பிரிக்க சர்வாதிகாரிகள் கிட்டயும் தொடர்பு வச்சிருந்தார். அங்கோலா நாட்டோட உள்நாட்டுப் போர்ல புரட்சிக்காரங்களுக்கு ஆலோசகரா செயல்பட்டார். அந்த நாட்டுல ஒரு தடவை கியூபா நாட்டு வீரர்களால் இவரும் இவரோட உதவியாளர்களும் தாக்கப்பட்டு இவரோட அனேக உதவியாளர்கள் கொலை செய்யப்பட்டாங்க. இவர் காயங்களோட கைது செய்யப்பட்டார். அங்கேலுவாண்டா மருத்துவமனையில தான் அவருக்கு சிகிச்சை குடுத்தாங்க. அப்புறம் அந்த மருத்துவமனையிலருந்து கமாண்டோக்களால் கடத்தப்பட்டு தென்னாப்பிரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டார். இப்போ தெரியுதா’ இந்த விளக்கத்தைக் கேட்ட உடன் அமினாவிற்கு பாத்திமாவின் மீது அன்பு கூடியிருந்தது. உள்நாடு மற்றும் அயல்நாடு எனப் பல அடுக்குகளைக் கொண்ட அதிகர அமைப்புகளால் மக்கள் சுரண்டப்படுவதை புரிந்துக்கொள்ள இப்பகுதி உதவுகிறது.

Mohammed Umar: Cricklewood author of Amina and The Illegal Immigrant  celebrates milestone of 50 translations | Kilburn Times
Mohammed Umar Image Source : https://www.langaa-rpcig.net

பெண்களின் கூட்டுறவு சங்கமும் அதன் செயல்பாடுகளும்

அமினாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் அருனாப் காட்டுமிராண்டித் தனமாக அடித்து உதைக்கிறார், இந்த சமயத்தில் அவருடைய ஆறு மாத குழந்தை இறந்தும் விடுகிறது. இந்த வேதனையும் தனிமையும் வெறுமையும் வாட்டிய காலத்தில் பாத்திமாவும் அவருடைய ஆலோசனையும் நினைவிற்கு வருகிறது. பெண்களை ஒன்று திரட்டவேண்டும், கல்வி தரவேண்டும் முதலில் மூத்தப் பெண்களுக்கு எழுத படிக்க சொல்லித் தர வேண்டும், சுகாதரத்தையும் அரசியலையும் கற்றுத் தர வேண்டும், பெண்களிடம் உள்ள தனித்தன்மைகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும், பெண்கள் தயாரிக்கும் பொருள்களை சேகரித்து சந்தைப்படுத்தி பொருளாதார தற்சார்புடையவர்களாக மாற்ற வேண்டும் இதற்காகப் பெண்கள் கூட்டுறவு சங்கம் ஒன்றை தொடங்க வேண்டும் இச்சங்கத்திற்கு நீயே தலைவியாக இரு. என்பதான பாத்திமாவின் சொற்கள் நினைவிற்கு வந்தது. ஒவ்வொரு பெண்ணின் நிலைமை இதுதானா என எண்ணிப்பார்த்து நொந்துகொண்ட அமினாவிற்கு குரான் மற்றும் கனிததையும் ஏழை எளியோருக்கு கற்பிக்கும் ஆசிரியரின் மனைவியான மயூரா சொன்ன ஒரு விசயம் நினைவிற்கு வரவே காலை விடிந்த உடன் அங்கு செல்லவேண்டும் என நினைத்துக்கொண்டு அயற்சியில் தூங்கிவிட்டார்.

பிறகு விடிந்த உடன் உணவை முடித்துக்கொண்டு அமினா ஹௌவாவைத் துணைக்கழைத்துக் கொண்டு மைரோவுடன் லாராய் வீட்டிற்குப் புறப்பட்டாள். பேசிக்கொண்டே மூவரும் மெல்ல நடந்து சென்றார்கள். அப்போது கண்ணில் பட்டவை எல்லாமே இப்போது தான் அதன் முழுப்பரிமாணத்துடன் அமினாவுக்குத் தெரிந்தது. அவர்கள் சென்ற நகரின், அந்தப்பக்கத்தில் இருந்த தெருக்கள்தான் எவ்வளவு மோசமாக இருந்தன. ஆங்காங்கே அழுக்கு நீர் ஓடையாகி ஓடிக்கொண்டும் தேங்கி நாற்றமெடுத்துக் கொண்டும் இருந்தன. வீடுகள் எல்லாமே களி மண்ணால் கட்டப்பட்டுக் கூரை வேயப்பட்டிருந்தன. சுவர்கள் எல்லாமே எப்போது விழுவோம் என்பது போல் நின்றன. ஜன்னல்கள் என்பது அந்த மண்சுவரில் இருந்த சின்னச்சின்ன ஓட்டைகள். அவ்வளவு தான். லாராயின் குடிசைக்கு வந்து சேர்ந்தார்கள். அந்தக் குடிசை மற்ற குடிசைகளை விடக் கேவலமாயிருந்தது. கதவென்று எதுவும் கிடையாது. ஒரு அழுக்கடைந்த துணிவாசலில் தொங்கிக்கொண்டிருந்தது. அது தான் அந்த மாளிகையின் கதவு போலும். குடிசைக்குள் முதலில் மைரோ செல்ல, அடுத்து அமினா அந்த அழுக்குத்துணியை விலக்கிக்கொண்டு உள்ளே சென்றாள். வெறுந்தரையில் லாராய் படுத்திருந்தாள். குடிசை இருட்டாகவும், முடை நாற்றம் வீசிக்கொண்டுமிருந்தது. படுத்திருந்த லாராய் வேதனையில் முனங்கிக் கொண்டிருந்தாள். குழி விழுந்த கண்களால் வந்தவர்களை உற்றுப் பார்த்து எழுந்திருக்க முயற்சித்தாள். பக்கத்தில் தன் சின்னக்குழந்தையைப் படுக்கப் போட்டிருந்தாள். தலை வீங்கியும், துருத்திக் கொண்டிருந்த கண்களோடும், பரட்டைத் தலையுடனும் இருந்தது அந்த சின்னக் குழந்தை. தாயும் சேயும் பரிதாபக் கோலத்தில் இருந்தார்கள். லாராய் எழுந்ததும் குழந்தை அழுதது. அதைத் தூக்கிப்பால் கொடுக்க ஆரம்பித்தாள். வற்றிய முலைகளைச் சூப்பி விட்டு ஏமாற்றத்துடன் மிகப் பலவீனமாகக் குழந்தை அழுதது . அதன் கண்கள் விழிப்பதும் மூடுவதுமாக இருந்தன .

லாராயிடம் அமினா கேட்டதைத் தொடர்ந்து அவள் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள், அறுவைப் பிரசவத்தில் தன் மூத்திரப்பை பழுது பட்டதால் அடி வயிற்றில் தொடர்ந்து வலி இருப்பதாகச் சொன்னாள். அமினா, ” உனக்கு இப்போ என்ன வயசு? ” என்று கேட்டாள். ‘தெரியாதுங்க. அனேகமாக பதினஞ்சு இருக்கும்.

‘அறுவைச்சிகிச்சைக்குப்பின்னாடிஎன்னஆச்சு? ‘ஆஸ்பத்திரியிலேயேகொஞ்சநாள்வச்சிருந்தாங்க. என்னை மாதிரியே சிறுநீர்ப்பை பழுதுபட்ட பொண்ணுகளோடதான் இருந்தேன். ‘ உன்னோட கணவர் எங்கே? ”

‘என்னை ஆஸ்பத்திரியில சேத்ததுமே அவன் வேற ஒரு பொண்ணைக் கட்டிக்கிட்டான்’ லாராய் குரல் உடைந்து அழுதாள். ‘ ஆஸ்பத்திரியில அதுக்கப்புறம் என்னாச்சு? “ கொஞ்ச நாளைக்கப்புறம் அங்கருந்து போகச் சொல்லிட்டாங்க. அங்க பக்கத்துல புதுசாகட்ட ஆரம்பிச்சிருந்த ஒரு கட்டடத்துல தங்கியிருந்தேன். மழைபெய்ய ஆரம்பிச்சதும், அங்க இருக்க முடியாததால இங்க என் குடிசைக்கு வந்து கிடக்குறேன். ‘ அங்க அந்தக் கட்டடத்துல இருக்குறப் போசாப் பாட்டுக்கெல்லாம் என்ன பண்ணினே? ‘ வர்றவங்க போறவங்க போட்டபிச்சைதான். ‘உன் புருஷன் உன்னைக் கவனிச்சுக்கிறானா? எப்பவாவது சாப்பாடு குடுப்பாரு. ஆனாலும் அதெல்லாம் அவருக்கா தோணுறப்போ தான் . நான் நாத்தம் புடிச்சவளாம். புதுப்பொண்டாட்டி கூட தான் இப்போ இருக்காரு. ‘கடவுளே’ என்றுசொல்லி, அமினாதலையைஉலுப்பிக்கொண்டாள், லாராய்விம்மிவிம்மிஅரற்றஆரம்பித்தாள். கடவுளே! என்உயிரைஎடுத்துக்கோ. ஏன் எனக்கு இந்த சோதனையும், வேதனையும்? நான் இப்படியெல்லாம் வதைபடுறதுக்கு என்ன பாவம் பண்ணித் தொலைச்சேனோ தெரியலையே. இப்படிக் கஷ்டப்படுறதை விடவும் என் உயிரை எடுத்திடேன். அவளுக்கு ஆறுதலாக ஏதாவது சொல்ல வேண்டுமென அமினாவுக்குத் தோன்றியது. அவளுடையகைகளை ஆதரவாகப் பற்றிக்கொண்டு “அழாதே! அப்படியெல்லாம் பேசக்கூடாது. நீ என்ன தப்பு செஞ்ச? இதெல்லாம் உன் கையிலயா இருக்கு. நீ விருப்பப்பட்டா இப்படி எல்லாம் உனக்கு நடக்குது? அமினாவுக்கு வாழ்க்கையின் சோகங்கள் புதிதல்ல என்றாலும் இப்படி ஒரு சோகத்தை இவ்வளவு அருகில் பார்ப்பதும் புரிந்து கொள்வதும் இதுவே முதல் முறை. சோகத்தில் விக்கித்துப் போனாள். லாராய் வாழ்க்கையின் அவலங்களை நினைத்துப் பார்த்தாள். அறியாமை. நீண்ட கருவுற்ற மாதங்கள். அறுவைச் சிகிச்சை. குழந்தை பிறப்பு, வலி, வேதனை, தனிமை, கைவிடப்பட்ட நிலை எல்லாமுமாகச் சேர்ந்து அவளை, அவள் உடலை, ஏன், அவள் ஆன்மாவையே அழித்து விட்டதாகத் தோன்றியது. ஆனாலும் எல்லாமே முடிந்துவிடவில்லை. எப்படியோ இதையெல்லாம் தாண்டி உயிரோடு இருக்கிறாள்.இன்னும் கொஞ்சம் நம்பிக்கையிருக்கிறது என்று அமினா நினைத்தாள். லாராயின் கைகளைப் பற்றிக் கொண்டிருந்த அமினாவின் கைகள் நடுங்கின. ஒரு மனித ஜென்மம் எப்படி இன்னொரு மனுஷ ஜென்மத்துடன் இந்த அளவுக்குக் கருணை கொஞ்சம் கூட இல்லாமல், மிருகத்தனமாக நடந்து கொள்ள முடிகிறது என்ற வியப்புதான் மிஞ்சியது. ‘ கவலைப்படாதே . கடவுள் கைவிட மாட்டார் . நிச்சயமாக அவர் உதவுவார். நீ கடவுளைக் கும்பிடுவாயா? இல்லை. நான் குரான் பள்ளிக்கே ப்போனதில்லை. ஆனா என் உயிரை எடுத்துக்கச் சொல்லிக் கடவுள் கிட்ட கேட்டேன். இல்லை அது தப்பு. அப்படியெல்லாம் கடவுள்கிட்ட கேக்கக்கூடாது. ‘ நீங்களே சொல்லுங்க கஷ்டத்தைத் தவிர நான் வேற என்னத்தை பாத்திருக்கேன். ‘அங்கிருந்து புறப்பட்டுச் செல்வதற்கு முன்னால் லாராய்க்குக் கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு, “மேலும் ஏதாவது செய்ய முடியுமான்னு பாக்கறேன் என்றாள் அமினா.’

பிறகு லாராயை அமினா தனது வீட்டிற்கு அழைத்து தங்கவைத்து அவரையும் அவருடைய குழந்தையையும் நன்கு பார்த்துக்கொண்டதோடு உயர்தரமான மருத்துவமனையில் லாராயை சேர்த்துவிட்டு குணப்படுத்தினார். இக்கதையில் காட்டப்படும் லாராயின் பிரச்சினை தனியொரு பெண்ணின் பிரச்சினை மட்டுமல்ல ஆப்பிரிக்கா, ஆசியா நாடுகளில் உள்ள பெண்களின் பிரச்சினையாகும். நைச்சிரியாபோலவே இந்தியத் துணைக்கண்டத்தில் வடப்பகுதியில் வாழும் இளம்பெண்களின் பிரச்சினையாகவும் இருக்கிறது. சரியான சாலைவசதியின்மை பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறார்களுக்கு கல்வியின்மை இதனால் தொடரும் குற்றச்செயல்கள் போன்றவை மூன்றாம் உலகநாடுகள் எதிர்கொள்ளும் சிக்கல்களாகும். இவைகுறித்தும் இந்நாவலில் நைச்சிரியாவின் பின்புலத்தில் வைத்து விவரிக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் கவனித்து வந்த பெண்கள் ஒன்றினைந்து கூட்டுறவு சங்கத்தை தொடங்கினர்.

முதலில் இச்சங்கன் பக்காரோ நகரத்து பெண்களுக்கு கல்வி கற்பிக்க தொடங்கியது. பெண்கள் கூட்டுறவு சங்கமானது பல துணை அமைப்புகளிலிருந்து தன்னார்வப் பணியாளர்களை அழைத்துவந்து கல்வி சுகாதாரம் உள்ளிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அந்தவகையில் பல்கலைக் கழக மாணவர் அமைப்பிலிருந்து மாணவர் ஒருவர் முதல்நாள் வகுப்பை தொடங்குவது குறித்து காணலாம்.

நல்ல உயரமாக, அரை கைச்சட்டை, ஜுன்ஸ் என்று நாகரீகமான உடையில் இருந்த பையன்ஒருவன், வகுப்பின் முன்வந்து நின்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தான். “நான் முவாஸு தன்லாமி, அரசியல் விஞ்ஞானம் பயிலுகிறேன். உங்களுக்கென்று ஆசிரியர்களை வேலைக்குச் சேர்ப்பது வரையிலும் நாங்கள் உங்களுக்கு வகுப்பெடுக்க முடிவு செய்துள்ளோம். இந்த நமது முயற்சி வெற்றி கண்டால், மற்ற நகரங்களுக்கும் மாகாணங்களுக்கும் எங்கள் உதவிக் குழு சென்று இதை போன்ற திட்டத்தைச் செயல்படுத்த நினைத்திருக்கிறோம். இதனால் பெண் கல்வித் திட்டம் நன்கு விரிவடையும். ‘ ஹசான் முதியோர் கல்வித்திட்டத்தைச்’ செயல்படுத்த நினைத்திருக்கிறோம். இந்தத் திட்டத்தின் படி கல்வியறிவு இல்லாதவர்களை ஆறே மாதத்தில் கல்வியறிவு பெறச் செய்ய முடியும். கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் எல்லோரும் உணர்ந்திருப்பீர்கள். நம் நபி அவர்கள் (சமாதானம் அவர் மீது இருப்பதாக) சொன்னது உங்களுக்குத் தெரியுமென நினைக்கிறேன். அவர், அறிவைத் தேடிப்பெறுவதே ஒவ்வொரு இஸ்லாமியனின் புனிதக் கடமை’ என்றார். நம்மோடு இங்கு வந்து கல்வி பயில முடியாத பெண்கள் இருந்தால் அவர்களது வீடுகளுக்கே சென்று நம் குழுப்பெண்கள் கல்வி கற்றுத் தரத் தயாராக இருக்கிறார்கள்.என எடுத்து சொல்லும் மாணவன் மேலும், முவாஸு சிறிது இடைவெளிவிட்டு, பிறகு தன் அருகில் வழு வழு முகத்தோடும், நீண்ட  வெள்ளை ஆடையோடும், வெள்ளைத் தலைப்பாகையோடும் இருந்தவனைக் காட்டி, “இவர் மூசா – அல் அஹமது.

இவரும் இன்னும் இருவரும் ‘இஸ்லாமிய மாணவர் அமைப்பிலிருந்து வந்திருக்கிறார்கள். இவர்கள் உங்களுக்கு அரபி மொழியையும், நம் இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றியும் சொல்லித் தருவார்கள். ‘அதன் பின் முவாஸு மற்றவர்களைப் பற்றியும் தொடர்ந்து சொன்னான். ‘உங்களுக்குரிய கல்வித்திட்டத்தில் முக்கியமானது நம் எல்லோருடைய சுகாதாரம் பற்றியது. ‘பக்காரோசு காதாரத்திட்டத்தின் தலைவியான ரெபேக்கா உங்களுக்கு அதைக் கற்றுத் தருவார் . அவரோடு இன்னும் செவிலியர்கள், இருதாதியர்கள், இரு சுகாதார மேற்பார்வையாளர்கள் எப்படி உங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வது, நம் சுற்றுச்சூழலைப் பேணுவது எப்படி, அதன் அவசியம் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் கற்பிப்பார்கள். அதுவும் கர்ப்பிணி பெண்களுக்கும், தாய்மார்களுக்கும் அவர்கள் சிறப்புப் பாடம் கற்பிப்பார்கள். ரெபேக்கா முவாஸுன் காதில் ஏதோ சொல்ல, சிரித்துக்கொண்டே, நான் உங்களுக்கு என்ன பாடம் எடுக்கப் போகிறேன் என்பதைச் சொல்ல மறந்துவிட்டேன். நான் பொது அறிவு பற்றிய பாடத்தைச் சொல்லித் தர இருக்கிறேன். அதில் மற்ற இனக்குழுக்களின் வாழ்வியல், அவர்களது நம்பிக்கைகள், அவர்களது நாட்டு அரசியல் முறை இவைகளைப் பற்றியும், நம் நாடு, கண்டம், கடைசியில் மொத்த உலகம் இன்றும் நாளையும் எதிர்கொள்ள இருக்கும் பிரச்னைகள் பற்றியும் சொல்லித்தருவேன்’ என்றான் தான் சுருட்டி வைத்திருந்த உலக வரைபடத்தைச் சுவரில் மாட்டினான். ரெபேக்காவும் மற்றவர்களும் வகுப்பின் பின்னால் சென்று நின்று கொண்டார்கள்.’என்று இக்கதையில் கல்வி பணித் தொடர்பான விவரிப்புகள் மேலும் விரிவாக வருகிறது.அடக்குமுறையை கட்டவிழ்க்கும் அரச பயங்கரவாதம்

இது போன்ற பல பணிகளால் பெண்கள் கூட்டுறவு சங்கம் ஓராண்டுக்குள் பல தரப்பினருடைய ஆதரவோடு நல்லப் பெயரையும் புகழையும் பெற்று விளங்கியது. சங்கத்தின் முதலாம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்து அனைவருமே அவரவர் தயாரித்தப் பொருட்களை காட்சிப்படுத்தி விற்றுக் கொண்டும், இடையிடையே கலை நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டும் திட்டத்தின் படி ஒவ்வோரணியினரும் சமைத்துக் கொண்டும் சுத்தம் செய்து கொண்டும் உடல் நலமில்லாதவருக்கு மருத்துவ உதவிகள் செய்து கொண்டும் இருக்க இதனூடாக தலைவி என்கிற முறையில் அமினாவும் அனைவரிடமும் கலந்து பேசிக்கொண்டும் கருத்துரை ஆற்றிக் கொண்டும் இருந்தார். பயங்கர ஆயிதங்களோடு வண்டி வண்டியாக காவல் துறையினரும் இராணுவமும் வந்திரங்கி பெண்களின் கூட்டத்தைநோக்கி கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசி சுட தொடங்கினர். அமினாவின் நேசத்திற்குரியவளாகவும் தீவிரக் கள செயல்பாட்டாளராகவும் விளங்கிய லாராயின் கால்களில் குண்டுபட்டு இறந்து போனார். பிறகு அனைவரையும் அடித்து இழுத்து கைது செய்து வண்டியில் ஏற்றிச் சிறையில் அடைத்தனர். பொய்யான குற்றச்சாட்டின் கீழ் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதை பெண் வழக்குரைஞர் ஒருவர் நிருபித்து விடிவித்தார். என்பதை இந்நாவல் சுட்டுகிறது.

போராடுவதன் மூலமே பெண்களுக்கான விடுதலை கிட்டும் என்பதில் உறுதியாக இருந்த அமினா கடைசிவரை தான் போராளியாக இருப்பதையே விரும்பினார் என்பதையும் இந்நாவல் எடுத்துரைக்கிறது.

மு. ரமேசு
உதவிப் பேரா. தமிழ்
அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி {தன்னாட்சி}
நந்தனம், சென்னை-35.
பேச, 9176949452.
மின்னஞ்சல், [email protected]Latest

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்

      24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும்...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்

        ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது...

கவிதை: புரட்சித் தலைவன் – பிச்சுமணி

      பிடல் - நீங்கள் பிறந்து ஆண்டுகள் பல ஆயின ஆனாலும் நீங்கள் இன்றைக்கும் இடதுசாரி இளைஞன் நீங்கள். காலம் யாருக்காவும் காத்திருக்காது...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்

      24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும் தொலைக்காட்சி யுகத்தில்,திரைக்கு வரும் படங்கள் அதே வேகத்தில் கையடக்க கருவியில் கிடைக்கும் காலத்தில் நாடகங்களை பார்க்க எத்தனை பேர் வருவார்கள்?...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் கூறுவதைப் போல நமது மனதின் பாரங்களை ....நெஞ்சை அழுத்தும்உணர்வுகளை... வாழ்வின் எதிர்பாரத நிகழ்வுகளை எழுதியே தீர்க்கணும் என்று வருகிற...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்

        ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது நாட்டின் பெரும்பான்மை மக்களிடம் ஏதோ ஒருவகையில் செல்வாக்கு செலுத்துகிறது. மட்டுமில்லாமல் அது இப்போது அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு அச்சுறுத்தவும் செய்கிறது. என்பதால்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here