கன்னட எழுத்தாளர் வசுதேந்த்ரா எழுதி தமிழில் நல்லதம்பியின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த "அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்" (Ammaavai Enakku Migavum Pidikkum) - பாவண்ணன் - https://bookday.in/

அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும் – நூல் அறிமுகம்

அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும் – நூல் அறிமுகம்

மானுட வாழ்க்கையின் தடங்கள்

– பாவண்ணன்

உலகமெங்கும் புனைவுகளுக்கு இணையாக எழுத்தாளர்கள் தம் அனுபவத்துளிகள் அடங்கிய கதைக்கட்டுரைகளை எழுதும் போக்கு சமீப காலத்தில் பெருகிவருகிறது. கிட்டத்தட்ட அது ஒரு தன்வரலாறுதான். ஆனால் காலவரிசைப்படி எழுதப்பட்ட அனுபவங்களின் தொகுப்பாக அது அமைவதில்லை. ஞாபகத்துக்கு வந்த வரிசையில் அந்த அனுபவக் கட்டுரைகளை எழுதிச் செல்கிறார்கள். கலைத்துப்போட்ட சீட்டுக்கட்டு போல அவை அமைந்துவிடுகின்றன. படித்துப் பட்டம் பெற்று வேலைக்குச் சேர்ந்த காலத்து அனுபவங்கள் முதலில் இடம்பெறுகின்றன. அதற்கு அடுத்த அத்தியாயத்திலேயே தொடக்கப்பள்ளி அனுபவம் இடம்பெறுகிறது. படைப்பூக்கம் கொண்ட மனநிலை வாழ்வின் எந்தத் தருணத்தை முதலில் கண்டெடுக்கிறதோ, அந்தத் தருணம் படைப்பாக அமைகிறது.

சமீப காலத்தில் கன்னட மொழியிலும் பல எழுத்தாளர்கள் கதைக்கட்டுரைகளை எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். அத்தகு படைப்புகளுக்கு வாசகர்களும் பெருகியிருக்கிறார்கள். ஏற்கனவே தம் சிறுகதைகள் வழியாக கன்னட இலக்கியப்பரப்பில் தமக்கென சிறப்பான ஓர் இடத்தை அடைந்த வசுதேந்த்ரா 2006இல் ‘அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்னும் தொகுதியை வெளியிட்டார். வாசகர்களிடையில் அது நல்ல கவனத்தைப் பெற்றது. பல இலக்கிய அமைப்புகளின் விருதுகளையும் பெற்றது. பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அத்தொகுதியில் உள்ள கட்டுரைகளோடு மேலும் சில புதிய கட்டுரைகளையும் இணைத்து, இப்போது தமிழில் கே.நல்லதம்பி அவர்கள் (’யாத்வஷேம்’ மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அகாதமியின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதைப் பெற்றவர் ) மொழிபெயர்த்திருக்கிறார். மொழிபெயர்ப்புப் படைப்புகளை வெளியிடுவதையே தம் செயல்திட்டமாகக் கொண்ட ’டு ஷோர்ஸ் பிரஸ்’ என்னும் பதிப்பகம் அந்நூலை வெளியிட்டிருக்கிறது.

தொகுதியில் முதலாவதாக இடம்பெற்றிருக்கும் ‘அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்’ கட்டுரையில் அம்மாவைப் பற்றிய சித்திரம் மிகச்சிறப்பாக பதிவாகியுள்ளது. தொடக்கப்பள்ளியில் சேர்ந்து ஆசிரியர் சொல்லித் தரும் பாட்டை ராகத்தோடு எல்லாப் பிள்ளைகளோடும் இணைந்து பாடிப் பழகிய பால்யகாலத்து நினைவோடு அக்கட்டுரை தொடங்குகிறது. படித்து பட்டம் பெற்று பெங்களூருக்கு வேலைக்காக இடம் பெயர்ந்து, பிறகு வெளிநாட்டுக்குச் சென்று, அம்மா மரணமடையும் தருணம் வரைக்குமாக அந்த நினைவு தாவித்தாவிச் செல்கிறது. தொடக்கப்பகுதியிலும் இறுதிப்பகுதியிலும் இருக்கிற ஓர் ஒற்றுமை இக்கட்டுரையை இலக்கியத்தன்மை கொண்டதாக மாற்றுகிறது.

சிறுவனுக்கு காலையில் எழுந்ததும் காலைக்கடன் கழிக்கும் பழக்கமில்லை. அதனால் வேளைகெட்ட வேளையில் பள்ளிக்கூடத்தில் பாடம் நடந்துகொண்டிருக்கும் சமயத்தில் அந்த நெருக்கடி உருவாகி அவனைத் தவிக்கவைக்கிறது. அவனால் அந்தத் தவிப்போடு நீண்ட நேரம் தன் இடத்தில் அமர்ந்திருக்கமுடியவில்லை. அவனுடைய சுயகட்டுப்பாட்டை மீறி சட்டையிலேயே மலம் கழித்துவிடுகிறான். அதைக் கண்டு முகம் சுளிக்கும் அந்த வகுப்பாசிரியர் வகுப்பறையைச் சுத்தம் செய்ய அதே பள்ளியில் படிக்கும் சிறுவனுடைய சகோதரியை வரவழைக்கிறார். அவள் வீட்டுக்கு ஓடிச் சென்று தன் அம்மாவை அழைத்து வருகிறாள். அம்மா முகம் சுளிக்காமல் வகுப்பறையைக் கழுவிச் சுத்தம் செய்துவிட்டுப் போகிறாள். மகனின் மலம் அந்த அம்மாவுக்குப் பிரச்சினையாகவே தெரியவில்லை. இது ஒரு கட்டம்.

சிறுவன் வளர்ந்து பெரியவனாகி, படித்து முடித்து, வேலை கிடைத்து பெங்களூரில் அடுக்ககத்தில் தங்கியிருக்கிறான். அம்மாவையும் அப்பாவையும் கிராமத்து வீட்டிலிருந்து அழைத்துவந்து தன்னோடு வைத்திருக்கிறான். அம்மா நீரிழிவு நோயால் அவஸ்தைப்படுகிறாள். சிறுநீர் கழிப்பதும் மலம் கழிப்பதும் அவள் கட்டுப்பாட்டை மீறிய செயலாகிவிடுகிறது. பல நேரங்களில் அது அவளை அறியாமலேயே நிகழ்ந்துவிடுகிறது. ஒருநாள் துணி துவைக்கும் எந்திரத்தில் எல்லோருடைய அழுக்குத் துணிகளோடு சேர்த்து அம்மாவுடைய புடவையையும் துவைப்பதற்காகப் போடுகிறாள் அவன் சகோதரி. எந்திரத்திலிருந்து எழுந்த துர்நாற்றம் எல்லாவற்றையும் அம்பலமாக்கிவிடுகிறது. பிள்ளைகள் நடுவில் பதில் சொல்லமுடியாமல் கூசி நிற்கிறாள் அம்மா. அதைக் கண்டு மகன் பதற்றமடைகிறான். எரிந்து விழுகிறான்.

தொடக்கத்தில் அவள் கட்டுப்பாட்டை மீறி நிகழும் அப்பிரச்சினையின் வேரை அவன் புரிந்துகொண்டு அமைதியாகவே இருக்கிறான். ஆயினும், ஏதோ ஒரு தருணத்தில் அவன் பொறுமை எல்லை மீறும்போது தன் அலுவலகத்தில் ஒரு வெளிநாட்டு ப்ராஜெக்டைக் கேட்டு வாங்கிக்கொண்டு வெளிநாட்டுக்குச் சென்றுவிடுகிறான். அம்மா பழையபடி ஊருக்குச் சென்றுவிடுகிறாள். அதற்குப் பின் அவன் தன் அம்மாவைச் சந்திக்கவில்லை. அவன் வெளிநாட்டில் இருக்கும்போது அவள் சகோதரியின் வீட்டில் இறந்துவிடுகிறாள் அம்மா.

மகனின் மலம் கழிக்கும் பிரச்சினை, ஒரு பிரச்சினையாகவே அம்மாவுக்குத் தெரியவில்லை. ஆனால் அம்மாவின் மலம் கழிக்கும் பிரச்சினை குடும்பத்தில் பெரிய பிரச்சினையாகிவிடுகிறது. அம்மாவை எல்லோருக்கும் பிடிக்கும் என்பது உண்மைதான். ஆனால் அம்மாவின் பிரச்சினையைச் சமாளிக்கவும் சகித்துக்கொள்ளவும் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்லமுடியுமா, தெரியவில்லை. முகத்தில் அறைகிற மாதிரியான ஓர் அனுபவச் சித்தரிப்பின் வழியாக வசுதேந்த்ரா இந்தக் கேள்வியை நம் முன் நிறுத்தியிருக்கிறார்.

எவர்சில்வர் பாத்திரங்களை ஆசையோடு தேடித்தேடி வாங்கி சேகரிக்கும் அம்மா, “யாருக்கும் எவர்சில்வர் க்ளாஸ்ல தண்ணி கொடுக்காதம்மா, கண்ணாடித்தம்ளர்ல கொடும்மா” என்று சொல்லும் மகளைத் திகைத்த மனத்துடன் பார்க்கும் அம்மா, கோவிலில் ஆராதனைக்கு முன்பேயே வெளியேற முயற்சி செய்து, வளாகத்தைவிட்டு வெளியேறும் முன்பேயே மலத்துளிகள் ஆங்காங்கே சிதறிவிட அவமானத்தால் குறுகி நிற்கும் அம்மா, எங்கோ இருட்டில் ஒதுங்கிவிட்டு திரும்பி வர வழி தெரியாமல் தவித்து தாமதமாக வாசலுக்கு வந்து சேரும் அம்மா, உருப்படியா ஒரு வத்தல் போட்டு காயவைக்கிறதுக்குக் கூட வெயில் இல்லாத இந்த பெங்களூருல எப்படி இருக்கறது என்று சலித்துக்கொண்டு பெல்லாரி வெயிலைப் பாராட்டும் அம்மா, மகன் கடன் வாங்கி வீட்டுமனை வாங்க இருக்கிறான் என்னும் செய்தியை அறிந்து “என் மகன் கடனாளியவதற்கு நான் உயிரோடு இருக்கறவரைக்கும் சம்மதிக்கமாட்டேன்” என ஆவேசமுடன் கூறி கடன் வாங்குவதைத் தடுக்கும் அம்மா, “வாஸ்து கீஸ்துன்னு எதுவும் கிடையாது. அதெல்லாம் பணம் வச்சிக்கிறவங்களுடைய பகட்டு” என்று புதுமையாகச் சிந்தித்துச் சொல்லும் அம்மா, கன்னட நடிகர் ராஜ்குமார் நடித்த திரைப்படத்தை ரசித்துப் பார்க்கும் அம்மா, படப்பிடிப்பில் கலந்துகொள்ள வந்த ராஜ்குமாரைப் பார்க்க ஊரே திரண்டு சென்றபோது அவர்களோடு சேர்ந்து சென்று தான் பார்க்காவிட்டாலும் பிள்ளை பார்த்தால் போதும் என தோள்மீது பிள்ளையை அமரவைத்துக்கொண்டு பார்க்க உதவி செய்யும் அம்மா, திரும்பி வரும் வழியில் ஆளில்லாத கோவிலுக்குச் சென்று ஆண்டவன் சந்நிதியில் மனமுருகப் பாடிக்கொண்டிருந்த தருணத்தில் தற்செயலாக அதே சந்நிதியில் கடவுளை வணங்க நடிகர் ராஜ்குமார் வந்து நின்று அம்மாவின் பாட்டை ரசித்துக் கேட்டு வணங்கி வாழ்த்தியதை பூரிப்போடு ஏற்றுக்கொள்ளும் அம்மா என ஏராளமான கோணங்களில் ஒவ்வொரு கட்டுரையிலும் அம்மாவின் சித்திரம் இடம்பெற்றிருக்கிறது.

எண்ணற்ற கட்டுரைக்கதைகளில் அம்மா பற்றிய சித்திரங்களே கூடுதலாக இருந்தபோதும், அவற்றுக்கு இணையாக அவருடைய அப்பா, அக்கா ஆகியோரைப்பற்றிய சித்திரங்களும் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமன்றி, அந்தக் குடும்பத்தோடு தொடர்புடைய பிற குடும்பங்களைச் சேர்ந்த எண்ணற்ற மனிதர்களின் சித்திரங்களும் இடம்பெற்றிருக்கின்றன. கட்டுரைகளின் போக்கில் அவர்கள் மீது வெளிச்சம் குறைவாக விழுந்திருப்பதுபோல ஒரு தோற்றமிருந்தாலும், முழுப்புத்தகத்தையும் வாசித்து முடித்து அசைபோடும் தருணத்தில் அவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக நம் நெஞ்சில் மேலெழுந்து வருகிறார்கள். தம் அம்மாவுக்கு இணையாக, அந்த அற்புதமான மனிதர்களுக்கும் வசுதேந்த்ரா இலக்கிய வாசகர்களின் நெஞ்சில் நிலையான ஓர் இடத்தை உருவாக்கியளித்திருக்கிறார். இலக்கியம் உள்ளவரைக்கும் அவர்களும் நினைவுச்சின்னங்களாக நீடித்திருப்பார்கள்.

எடுத்துக்காட்டாக, ஒருசிலரைப் பற்றியாவது குறிப்பிடவேண்டும். கமலக்கா ஒரு கைம்பெண். கிட்டண்ணா அவருடைய மகன். அவன் தன் மனைவியை இழந்தவன். தாயும் மகனும் ஒரே வீட்டில் ஒருவருக்கொருவர் துணையாக வசித்துவருகிறார்கள். அம்மா திரைப்படப்பித்து கொண்டவள். மகன் பக்திப்பழம். ஒருநாள் ஊருக்குள் இருக்கும் திரையரங்கத்தில் ஒரு புதிய திரைப்படம் வெளியாகிறது. ஆசை காரணமாக முதல்நாள் இரவே திரையரங்கத்துக்குச் சென்று படம் பார்த்துவிட்டுத் திரும்புகிறாள் கமலக்கா.

திரைப்படத்தில் கேட்ட ஒரு பாடல் அதன் பொருளினாலோ அல்லது இசைக்கட்டினாலோ அவளுக்கு மிகவும் பிடித்துவிடுகிறது. மறுநாள் விடியலில் எழுந்ததுமுதல் அந்தப் பாடல் வரிகளை அவள் பாடத் தொடங்கிவிடுகிறாள். காலையில் குளித்துமுடித்து பூசை செய்ய உட்கார்ந்த மகனுக்கு அம்மாவின் குரல் இடையூறாக இருக்கிறது. சொல்லப்பட வேண்டிய மந்திரங்களின் வரிகள் தடுமாறுகின்றன. தன் ஓங்கிய குரல் அவன் பூசைக்கு ஓர் இடையூறு என்று உணராத அளவுக்கு கமலக்கா பாடும் சுவாரசியத்தில் திளைத்திருக்கிறாள்.

பாடலை நிறுத்தும்படி மகன் சொல்வதை அவள் பொருட்படுத்தவே இல்லை. உச்சகட்ட எரிச்சலிலும் ஆத்திரத்திலும் கையில் பிடித்திருக்கும் மணியை அம்மாவை நோக்கி வீசிவிடுகிறான் கிட்டண்ணா. எதிர்பாராத விதமாக மணியின் விசையால் அம்மாவின் வலதுகை எலும்பு முறிந்துவிடுகிறது. மாவுக்கட்டோடு மூன்று மாத காலம் நடமாடிய பிறகே அவள் குணமடைகிறாள். அந்த இடைப்பட்ட காலத்தில் சமையல் வேலையை மட்டுமன்றி, அம்மாவுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் அவனே செய்கிறான். அம்மாவின் கட்டற்ற உற்சாகமா, பாட்டின் வரிகளா, பாட்டுக்குரிய இசையா, எது அவனுடைய சீற்றத்துக்குக் காரணமானது என வசுதேந்த்ரா குறிப்பிடவில்லை. ஏதோ ஒன்றின் காரணமாக, அவனுக்குள் இருந்த மிருகம் வெளிப்பட்டுவிடுகிறது. சீற்றம் கொண்ட அவனேதான் அவள் குணமாகும் காலம் வரைக்கும் ஒரு குழந்தையைப்போல கவனித்துக்கொள்கிறான். மனிதர்களின் ஆழ்மனத்தில் புரிந்துகொள்ள முடியாதபடி புதைந்திருக்கும் இத்தகு புதிரே அவர்களைப்பற்றிய சித்தரிப்பை ரசிக்கவைக்கிறது.

நினைவில் இடம் பிடிக்கும் மற்றொரு பாத்திரம் திப்பேஷி என்னும் சிறுவனின் பாத்திரம். அவனுக்குத் தாய் இல்லை. மாற்றாந்தாயின் பராமரிப்பில் வளர்பவன். அவனுக்கு படிப்பில் அவ்வளவாக ஆர்வம் பிறக்கவில்லை. துரதிருஷ்டவசமாக, அதையே காரணமாகக் காட்டி அவனைப் பள்ளியிலிருந்து நிறுத்திவிடுகிறாள்

அவனுடைய மாற்றாந்தாய். சரியான சாப்பாடு இல்லை. உடைகளும் இல்லை. ஆயினும் அவற்றைப்பற்றி பெரிதாக வருத்தப்படாமல் அவன் நடமாடி வருகிறான். அவன் மாற்றாந்தாய் சொல்லும் எல்லா வேலகளையும் முகம்சுளிக்காமல் செய்கிறான். அவனுடைய சகிப்புத்தன்மையும் பொறுமையும் அந்த மாற்றாந்தாயைச் சீண்டிக்கொண்டே இருக்கிறது. அவன் பொறுக்கப்பொறுக்க அவனுக்குத் துன்பம் கொடுத்துக்கொண்டே இருக்கிறாள் அவள்.

கமலக்கா போலவே அவனும் திரைப்படப்பாடல்களின் ஆராதகன். அவற்றைப் பாடிப் பாடி தன்னை ஆற்றிக்கொள்பவன் அவன். அவன் பாடுவதைக் கேட்டு மகிழ்ச்சியடைபவர்கள் கொடுக்கும் சில்லறைகளைக் கொண்டு பசியையும் தணித்துக்கொள்பவன். அதை அந்தச் சிற்றன்னையால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ஒருநாள் அவனை ஆத்திரத்தில் அவனுடைய தாங்குதிறனுக்கும் மேலாக அடித்து கீழே தள்ளிவிடுகிறாள். எதிர்பாராதவிதமாக தரையில் விழுந்த திப்பேஷி மீண்டும் எழாமலேயே இந்த உலகத்தைவிட்டுச் சென்றுவிடுகிறான்.

அவர்களைப்போலவே, ராயர் மடத்துப் புரோகிதர் குண்டண்ணாச்சாரியும் அவர் மனைவி ராகம்மாவும் மறக்கமுடியாத பாத்திரங்கள். தரையில் உட்கார்ந்தால் நான்கு கடப்பா கற்கள் அடைத்துக்கொள்ளும் அளவுக்கு குண்டண்னா குண்டானவர் என வசுதேந்த்ரா கொடுக்கும் குறிப்பைப் படிக்கும்போது புன்னகைக்கத் தோன்ற்கிறது. உடல்வாகுக்கு ஏற்ற பொருத்தமான பெயரைக் கொண்டவராக அவர் உள்ளார்.

அவர்களுக்கு ஒன்பது பிள்ளைகள். பூஜை, தீபாராதனைகளில் கிடைக்கும் தட்சிணையில்தான் அவர்கள் வாழ்க்கைவண்டி ஓடுகிறது. திடீரென குண்டண்ணா நீரிழிவு நோயால் அவதிப்படத் தொடங்கிறார். ஆனால் நாக்கையும் வயிற்றையும் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. ராகம்மா தங்கமான பெண்மணி. தன் வீட்டைச் சுற்றியிருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளைக்கூட பெயர் சொல்லி அழைக்காமல் தெய்வமே என்று பாசத்தோடு உருகி உருகி அழைத்துக் கொஞ்சுபவள்.

வசுதேந்த்ரா கிராமத்துப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து நகரத்தில் பொறியியல் படிப்பையும் முடித்து பெங்களூரில் வேலை செய்யத் தொடங்கிவிடுகிறார். ஏதோ ஒரு தருணத்தில் ஊருக்குச் சென்றிருந்தபோது குண்டண்ணா மரணமடைந்த செய்தி கிடைக்கிறது. அதை அறிந்ததும் ராகம்மாவுக்கு ஆறுதல் சொல்வதற்காக அவர் வீட்டுக்குச் செல்கிறார். அங்கே ராகம்மா தலையை மழித்துக்கொண்டு விதவைக் கோலத்தில் அமர்ந்திருக்கிறார்.

அந்தக் காட்சியைக் கண்டு திகைத்து “இது என்ன கோலம் ராகம்மா?” என்று கேட்கிறார். “என் தந்தை மறைந்த பிறகும் என் அம்மா கூந்தலோடுதானே இருந்தார்.

நீங்களும் அப்படி இருந்திருக்கலாமே, ஏன் இந்த முடிவை எடுத்தீர்கள்? தர்மத்தின் பெயரில் இந்த முடிவை எடுக்கலாமா?” என்றும் கேட்கிறார். ”தர்மத்தின் பெயரைச் சொல்லி இத்தனை ஆண்டுகள் வயிற்றை நிரப்பினோம். இப்போது அது வேண்டாம் என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? உங்கள் கதை வேறு.

உங்கள் அப்பா அரசாங்க வேலையில் இருந்தவர். தர்மத்தின் பேச்சைக் கேட்கவேண்டிய கட்டாயம் உங்கள் குடும்பத்துக்கு இல்லை” என்று அமைதியாகப் பதில் சொல்கிறார் ராகம்மா. எந்தச் சமூகவியல் வழியாகவும் பெறமுடியாத ஒரு ஞானத்தை ராகம்மா தம் அனுபவங்கள் வழியாகப் பெற்றிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் காலில் விழுந்து ஆசி பெற்றுக்கொண்டு விடைபெறுகிறார். அதனால் மிகவும் நெகிழ்ந்த மனநிலையில் ”நல்லா இரு தெய்வமே” என்று வாழ்த்துகிறார் ராகம்மா. பிள்ளைகளை தெய்வமே என விகல்பமில்லாமல் அழைக்கும் அந்த முகத்தை தம் வரிகள் வழியாக நம்மைக் காணவைக்கிறார் வசுதேந்த்ரா.

’அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்’ தொகுதியைப் படித்து முடித்த கணத்தில் ஐம்பது ஆண்டுகாலமாக ஒரு குடும்பச் சேமிப்பாக இருக்கும் பழைய படங்களின் தொகுப்புகளைப் புரட்டிப் பார்த்த மகிழ்ச்சியும் நிறைவும் ஏற்படுகின்றன. நல்லதம்பி வழக்கம்போல சிறப்பானதொரு கன்னடப் புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து தமிழ்வாசகர்களுக்கு விருந்தாக அளித்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள்.

நூலின் தகவல்கள் : 

நூல் :- அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்
ஆசிரியர்:- மூலம் கன்னடம்: வசுதேந்த்ரா, தமிழாக்கம்: கே.நல்லதம்பி
பதிப்பகம் : டூ ஷோர்ஸ் ப்ரெஸ், 3, முதல் பிரதான வீதி, அம்மையப்பா நகர், திருச்சி -620017
விலை : ரூ. 350

நூல் அறிமுகம் எழுதியவர் : 

பாவண்ணன் - Tamil Wiki

பாவண்ணன்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *