குடந்தை பிரேமியின் (Kudanthai Premi) அம்மாவின் டைரி (Ammavin Diary) நூல் அறிமுகம் (Book Review) written by தி. தாஜ்தீன் (Taj Deen) - https://bookday.in/

“அம்மாவின் டைரி” (Ammavin Diary) – நூல் அறிமுகம்

“அம்மாவின் டைரி” (Ammavin Diary) எனும் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கதையும் படிக்கின்ற ஒவ்வொரு வாசகர்க்கும் தன் வாழ்வில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எங்கோ நடந்திருப்பதாகவும், சில கதைகளில் தானே ஒரு கதாபாத்திரமாக இருப்பது போன்றும் அழகான சிந்தனையோடு ஆழமான கருத்துக்களை நமக்கு தந்துள்ளார் இந்நூலின் ஆசிரியர்.

ஆசிரியரின் சிறுகதைகளில் என்னை மிகவும் கவர்ந்த சில கருத்துக்களை பகிர விரும்புகிறேன்.

புத்தகத்தில் மொத்தம் 15 சிறுகதைகள் வெவ்வேறு கோணங்களில் உணர்ச்சிமிக்க பல தலைப்புகளில் அமைந்திருப்பது புத்தகத்திற்கு மேலும் ஒரு சிறப்பு. ஆசிரியரின் எழுத்தாற்றலும் கற்பனையும் சில எதார்த்தங்களும் அழகாக தெரிகிறது. இப்புத்தகத்தின் ஆசிரியர் குடந்தை பிரேமி அவர்கள் குமுதம்,அவள் விகடன், ராணி, தேவி போன்ற பல்வேறு இதழ்களில் சிறுகதைகள் மற்றும் தொடர்கதைகள் எழுதி வருகிறார் என்பது இன்னும் எழுத்தாளருக்கு சிறப்பை தருகிறது.

“வருஷம் 2050” இப்புத்தகத்தில் முதல் கதையாக உள்ளது. ராமசாமி என்பவன் 2050இல் மின்சாரம் இல்லாமல் இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற கனவை இரவில் கண்டு மறுநாள் காலையில் விழித்தவுடன் தற்போதைய வாழ்க்கையை சற்று சிந்தித்துப் பார்க்கிறான்.
உண்மையிலே மின்சாரம் இல்லை என்றால் புகையில்லாத ஆரோக்கியமான காற்று கிடைக்கும், மனிதர்கள் நோயில்லாத வாழ்க்கை வாழலாம், அடுக்கு மாடி கட்டிடங்களும் தொழிற்சாலைகளும் இல்லாமல் இயற்கையோடு சேர்ந்து வாழலாம்,கார் பைக் பஸ் புகையுடன் கூடிய வாழ்க்கை இல்லாமல் டிவி ஏசி பிரிட்ஜ் பிளாஸ்டிக் பைகள் போன்ற ஆபத்து ஏற்படுத்தும் பொருட்கள் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம் என்று நினைத்துப் பார்த்து உணர்கிறான். இக்கதையை படிக்கக் கூடிய நேசர்களையும் சிந்திக்க வைக்கும் எண்ணத்தை ஆசிரியர் அழகாக குறிப்பிட்டுள்ளார்.

“மாற்றம் தந்தவன்” எனும் கதையில், விபத்தில் ஒரு கால் இழந்து செயற்கை கால் பொருத்திக் கொண்டு கல்லூரியில் பேராசிரியராக பணி செய்யும் ஒரு இளம் பெண்.அவளுக்குள் இருக்கும் குறையை எண்ணி தினந்தோறும் வருந்தி கொண்டும், பெற்றோர்கள் அவளை திருமணம் செய்துக்கொள்ள எவ்வளவு வற்புறுத்தினாலும், தனக்கு திருமணம் வேண்டாம் என்று முடிவெடுத்துக் கொண்டாள். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனுக்கு அவளை போன்ற ஒரு கால் இளம்பிள்ளை வாதத்தினால் செயல்படவில்லை. ஆனால் அவன் அந்தக் குறையை சற்று எண்ணி வருந்தியதே கிடையாது. அவன் மனதில் இருக்கும் தைரியத்தையும், நம்பிக்கையும் கண்ட இளம் பேராசிரியருக்கு,அந்த சிறுவன் மூலம் அவளுக்கு தைரியம் நம்பிக்கை தைரியம் வந்தது. உடனே, பெற்றோரின் ஆசையை நிறைவேற்ற, தனக்குள் நம்பிக்கையை விளைவித்து திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாள். குறை என்பது உடலில் இல்லை, உள்ளத்தில் தான் உள்ளது என்பதை தெளிவுபடுத்தும் அழகான கதை.

குறைந்த கட்டணத்தில் டியூஷன் எடுத்துக் கொண்டிருக்கும் கணித ஆசிரியர் லட்சுமணனை மாணவர்களும், பெற்றோர்களும் புகழ்ந்து பேசுவது பாராட்டுவது வழக்கம். ரமா என்ற மாணவி நன்றாக படிக்கக் கூடியவள்,கணித ஆசிரியரின் டியூஷன் மாணவி.ரமா மீது ஆசிரியர் லட்சுமணனுக்கு சந்தேகம். ஏனென்றால் டியூஷன் நேரம் முடித்த உடனே தோழிகளுடன் சேர்ந்து செல்லாமல் தனியாகவே வேகமாக அவசரமாக செல்வாள். ஒரு நாள் ஆசிரியர்,ரமா மாணவியை சந்தேகித்து பின்தொடர்ந்து சென்றார்.பின்பு அந்த மாணவியை மனதார பாராட்டினார். காரணம் அந்த மாணவி கற்றதை தினந்தோறும் தன் வீட்டிற்கு செல்லும் வழியில் உள்ள சேரி பகுதிக்கு சென்று ஐந்து குழந்தைகளுக்கு இலவசமாக பாடம் சொல்லிக் கொடுப்பாள் ரமா. குறைந்த கட்டணத்தில் டியூசன் சொல்லித் தருவதும், இலவசமாக டியூஷன் எடுப்பதும் எவ்வளவோ வித்தியாசம் என்பதை புரிந்து அவளை மனதார பாராட்டினார் கணித ஆசிரியர் லட்சுமணன். எதையும் எதிர்பார்க்காமல் உதவும் எண்ணத்தை “உயர்ந்த உள்ளம்” என்னும் கதையில் ஆசிரியர் காட்சியளித்துள்ளார்.

சிறுவயதில் ஒரு தாய் கஷ்ட பட்டு மகனை நன்றாக வளர்த்து படிக்க வைத்து சிறப்பாக திருமணம் செய்து வைத்த தாயை மனைவியின் பேச்சைக் கேட்டு முதுமை காலத்தில் முதியோர் இல்லத்தில் தன் தாயை சேர்த்து விடுகிறான் மகன். மகன் நல்லா இருக்க வேண்டும் மருமகளோடு சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தாயும் எந்த ஒரு கவலையும் இன்றி மனதில் கொஞ்சம் கூட தயக்கம் இன்றி அவன் செயலுக்கு ஒத்துப் போவது தாயின் கருணையுள்ளத்தை மிக அழகாக புரியவைக்கிறது “அம்மாவின் டைரி” எனும் கதையில்.

ஆசிரியர் குடந்தை பிரேமி தன் எழுத்தாற்றலை இன்னும் உலகறிய செய்து தன் சிந்தனைகளை தொடர்ந்து தூவ வேண்டும் என்ற ஆவலோடு பாராட்டுகிறேன்.

நூலின் தகவல்கள்:

புத்தகத்தின் பெயர்: அம்மாவின் டைரி (Ammavin Diary)
ஆசிரியர்: குடந்தை பிரேமி
வெளியீடு: மௌவல் பதிப்பகம், 2023
பக்கங்கள்:148
விலை:150

நூல் அறிமுகம் எழுதியவர்:

தி. தாஜ்தீன்
முதுகலை ஆசிரியர்,
அரசு உதவி பெறும் கிரசண்ட் மேல்நிலைப்பள்ளி,
ஆவணியாபுரம்.



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *