Ammavin Vadagai Veedu Book By Indrajith Bookreview By A. Kumaresan. நூல் அறிமுகம்: இந்திரஜித் எழுதிய ‘அம்மாவின் வாடகை வீடு’ - அ. குமரேசன்

இலக்கியம் எவ்வாறு உலகத்தை இணைக்கிறது என்றால், மக்களின் வாழ்நிலைகள் மாறுபட்டாலும் அடிப்படை அன்புக்கான ஏக்கம், அதற்குச் செய்யப்படும் துரோகங்கள் ஆகியவை எங்கும் ஒரே மாதிரியாக இருப்பதை வெளிப்படுத்துவதன் மூலமாக. வரலாறு சார்ந்து மலேசியா, தாய்லாந்து, பர்மா உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்த் தொழிலாளர்களின் குருதியும் வியர்வையும் உறிஞ்சப்பட்ட கொடுமைமைப் பேசுகிறது எழுத்தாளர் இந்திரஜித் எழுதிய முதல் நாவலான ‘ரயில்‘. இரண்டாவது நாவல் ‘அம்மாவின் வாடகை வீடு‘ நம் சமகால நிலைமையொன்றைக் காட்டுகிறது.

பொதுவாகவே பலர் தங்கள் அம்மாவையே வாடகை வீடாகத்தான் நினைக்கிறார்கள். அவர் வயிற்றில் குடியிருந்து வந்ததற்காக வயிற்றுக்குச் சோறிட்டால் போதும் சில வசதிகளைச் செய்துகொடுத்தால் போதும் செலவுக்குக் கொஞ்சம் காசு கொடுத்தால் போதும் என்றுதான் நடத்துகிறார்கள். சொத்துள்ள அம்மாக்களுக்குக் கிடைக்கிற மரியாதை வேறு, பிள்ளைகளுக்காகவே சொத்தைக் கரைத்திருந்தாலும் அவர்களுக்குக் கிடைக்கிற மரியாதை வேறு. நாவலைப் படித்து முடிக்கிறபோது நம்மில் சிலருக்குக் குற்றவுணர்ச்சி ஏற்படக்கூடும்.

சிங்கப்பூர் இந்த நாவலின் கதைக்களம். நம் மனங்களில் சிங்கப்பூர் சூழல், வாழ்நிலை குறித்து ஏற்படுத்தப்பட்டுள்ள பிம்பங்களைக் கலைத்துப்போடுகிறது நாவல். 87 வயது வாசுகியின் கை அவ்வாறு கலைத்துப்போடுகிறது. அரசு ஊழியரான கணவர் முருகேசு கிராணி வாங்கிப்போட்ட சொந்த வீட்டில் வாழ்ந்தவர்தான் வாசுகி. அவர் ஏன் சிங்கப்பூரின் ரெட்ஹில்ஸ் பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கிறார்?

ஆண் சிங்கங்களாக ஏழு பிள்ளைகளைப் பெறுகிறார். அவர்களும் அரசாங்க ஊழியர்களாகிவிட வேண்டும் என்று பாடுபட்டு, அவர்களையும் பாடுபடுத்தி வளர்க்கிறார். அவர்கள் அரசாங்க வேலைக்குப் போகாவிட்டாலும் ஏதோவொரு நல்லநிலைக்கு வருகிறார்கள். குடிபோதையால் அனைத்தையும் (குடும்பம் உட்பட) இழக்கும் கடைசி மகன் ராஜா, துறவறம் பூண்டு வாடகை கொடுப்பதற்காக தியான மண்டபம் நடத்தும் நான்காவது மகன் சந்திரன் ஆகியோரைத் தவிர்த்து. ஆனாலும் தனக்கு யாருமே இல்லை என்று வாடகைக் கட்டடப் பொறுப்பாளரிடம் சொல்கிற நிலைமை ஏன் ஏற்படுகிறது?

தனியுடைமைச் சமுதாய அமைப்பு தனிமனிதக் கோபதாபங்களையும் பேராசைகளையும் கட்டி வளர்த்து உறவுகளையும் வாழ்க்கையையும் சின்னாபின்னப்படுத்துகிறது. பெண்ணுக்குப் பெண் எதிரியாக்குகிறது. இந்தச் சொற்கள் இல்லாமலே இது உணர்த்தப்படுவது படைப்பின் ஒரு சிறப்பு.

பெண்ணுக்குப் பெண் எதிரி என்றால் மாமியார மருமகள்கள் பகை மட்டுமல்ல. வாசுகியின் அம்மாவே கூட எதிரியாகிறார். மகள் விரும்பிய மாமன் பகலேயைப் புறக்கணித்துவிட்டு, அவசர அவசரமாக முருகேசுவுக்குக் கட்டிவைக்கிறார். முருகேசு மீது கடைசிவரையில் வாசுகிக்கு அன்பு ஏற்படலில்லை. ஆளால் அற்த ஆத்திரத்தில் ஏழு பிள்ளைகளைப் பெற்றுப்போடுகிறார். எவ்வளவு நுட்பமான வாழ்வியல். பகலே, வாசுகி உறவைச் சித்தரிப்பதிலும் அதே நுட்பம். முருகேசு இறந்துபோன பிறகு அவருடைய மூக்குக் கண்ணாடியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டுதான் சாப்பிடுகிறார் வாசுகி. உணர்வின் இந்த நுட்பத்தை என்னவென்பது?

பெண்ணுக்குப் பெண் நெருங்கிய நட்பு கொள்வதும் நடக்கிறது. ஒரு சிட்டுக்குருவியைச் செடியின் கீழ் நல்லடக்கம் செய்ய வாசுகிக்கு உதவும் காயத்திரியின் நட்பு அத்தகையதுதான். இருவருக்கும் வயது வேறுபாடு 60! காதல் மணம் செய்துகொண்ட காயத்திரி பின்னர் கணவரைப் பிரிந்து தன் இரண்டு பெண்களோடு வாடகை வீட்டிற்கு வந்த கதையொன்றும் நாவலில் குடியேறியிருக்கிறது.

கணவர் மேல் காயத்திரிக்கு அப்படி என்னதான் கோபம்? “ஆடு வளர்க்கிறவன்கிட்ட ஆட்டுக்கு என்ன கோபம் இருக்கும்? என் கணவரு என்ன நெனச்சாருன்னா நான் எங்க அம்மா வீட்ல புருஷன் இல்லாம கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன். என்னைக் கொண்டுவந்து அவரோட அம்மா வீட்ல வெச்சுட்டா நான் நல்லா இருப்பேன்னு நெனைச்சுட்டாரு.” உரிமைகள் உள்ளிட்ட பெண்ணுணர்வுகள் அவமதிக்கப்படுவதை வாசுகி–காயத்திரி உரையாடல் எடுத்துக்காட்டுகிறது.

தன் பெண்களுக்கு எதுவும் சொல்லப்போவதில்லை, தனது அனுபவம் தனக்கு மட்டும்தான் உதவும். அவர்களுக்குத் தான் கொடுக்கப்போவது சுதந்திரமும் சோறும்தான் என்று சொல்லும் காயத்திரியை வாசுகிக்கு ஏன் பிடித்துப்போகாது? கல்யாணம், மதித்தல், படிப்பு, அன்பு, காதல் பற்றி அவர்கள் தொடர்ந்து பேசுவது ஒரு தத்துவ விசாரணை.

ஆணாதிக்கக் கட்டமைப்பு உலகில் பல பெண்களுக்கும் இப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் தேர்வு செய்ய விடுகிறது. வாசுகி, காயத்திரி மட்டுமல்லாமல் ராஜாவை விட்டு விலகி பிள்ளைகளோடு எங்கோவொரு வாடகை வீட்டைத் தேடிப் போகும் நளினா குமாரியின் கதையும் இதைத்தான் காட்டுகிறது. வாசுகிகளையும் காயத்திரிகளையும் நம் ஊரில், நம் தெருவில் பார்க்கலாம். பல நாடுகளிலும் பல சமூகங்களிலும் காணலாம். ஆகவே “பிரபஞ்சப் பேரோசை” பற்றி பேசுகிற இந்த நாவல் இந்த உலகத்துக்குப் பொதுவானதுதான்.

நிகழ்வுத் தொகுப்பாக அல்லாமல், கதாபாத்திரங்களின் குணநலன்களின் வழியாகக் கதை சொல்லப்படுகிறது. வயதான பின்பு எல்லோருக்கும் ஏற்படுவது போன்றே சகோதரர்களுக்குத் தங்கள் தாயைச் சந்தித்து அழைத்துக்கொள்ள விருப்பம் ஏற்படுகிறது. ஆறு சகோதரர்கள் சந்திக்கிறார்கள். இன்னொரு சகோதரன் பற்றி யாருக்கும் தெரியவில்லை. ஜாவாவுக்குச் சென்றுவிட்டதாக ஊகிக்கப்படுகிறது. அங்கே சென்றவர்கள் திரும்புவதில்லையாம். யாரோ ஒரு பெண்ணுடன் வாழ்ந்துகொண்டிருப்பான், அல்லது யாரோ ஒரு பெண்ணுக்காகச் செத்துப்போயிருப்பான்…!

அத்தனை பேர் நிற்கக்கூட இடமில்லாத வீட்டில் அவர்களைச் சந்திக்கிறார் வாசுகி. அவர்களுக்கு நிதானமான முறையில் அவர் சொல்லும் பதில் எதிர்பார்க்கத் தக்கதாக இருக்கிறது. ஆனால் அந்த இறுதிக்கட்டத்தில் எதிர்பாராத முக்கியமானதொரு திருப்பம் வருகிறது. நாவலின் பொதுத்தன்மை மட்டுமல்ல, வாசுகிகளின் தனித்தன்மையும் அக்காட்சியால் மேலோங்குகிறது.

எந்த எலியை அடித்துக் கொல்ல கம்பெடுத்தாரோ, அதே எலியின் மீது அன்பு கொள்ளும் ஹென்ரி மாமா போன்ற துணைப்பாத்திரங்கள், நாவலின் செய்திக்குத் துணைசெய்கின்றன. எலிக்குக் கொஞ்சம் தோசை பிய்த்துப்போடும் ஹென்ரி அதன் பக்கத்திலேயே உட்கார்ந்து சாப்பிடுகிறார். இடையில் ஏதோ நினைத்துக்கொண்டு அதனை வணங்குகிறார். அது அவரை நிமிர்ந்து பார்க்கிறது. அது ஏதாவது யோசிக்கிறதா என்று பார்க்கிறார். இல்லை பேசாமல் பார்க்கிறது.. எலி எதுவும் யோசிக்காது போலிருக்கிறது… இப்படியாக வரும் வரிகள், எதையும் யோசிக்கத் தயாராக இல்லாத மனிதர்களுக்கானவை.

இன்னொரு இடத்தில், எண்ணங்களை என்ன செய்வது என்று யோசிக்கிறான் ராஜா. “நினைக்காமல் இருப்பதற்கு என்னவெல்லாம் நினைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்”! உண்மையில் உலகில் எவரும் எதையும் நினைக்காமல் இருக்க முடியுமா என்று நினைக்க வைக்கிற கேள்வி இது.

“சொந்தமாக ஒரு வாடகை வீடு” – இத்தகைய முரண்சுவை மிக்க சித்தரிப்புகளும் சமூக விமர்சனமே. முன்னுரையில் இந்திரஜித், “நான் சில கருத்துகளைச் சொல்ல விரும்புகிறேன். அதைப் பதிவு செய்ய விரும்புகிறேன். என்பதற்காக இந்த நாவலை எழுதவில்லை. இது இப்படி இருந்தது என்பதைச் சொல்கிறேன்,“ என்கிறார். ஆனால் வாசுகிகளுக்கும் மற்றவர்களுக்கும் என்ன நேர்ந்தது, எப்படி நேர்ந்தது என்று வெளிப்படுத்துவதே மனிதர்களுக்கு இப்படியெல்லாம் நேரக்கூடாது என்ற கருத்திலிருந்துதானே!

வாழ்க்கை, சமூகம், தத்துவம் எனப் பல கோணங்களில் நினைக்க வைக்கும் நாவலைக் கொடுத்திருக்கிறார் இந்திரஜித். சிறப்பான முறையில் அதனைக் கொண்டுவந்திருக்கிறது ‘உயிர்மை.’

நூல்: அம்மாவின் வாடகை வீடு
ஆசிரியர்: இந்திரஜித்
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள்: 126
விலை: ரூ.160
எண் 5, பரமேஸ்வரி நகர் முதல் தெரு, அடையாறு சென்னை – 600020
தொலைபேசி 91–44–48586727
மின்னஞ்சல்: [email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *