மோடிஜி! மோடிஜி! என்று அரசியல் அரங்கில் குரல்கள்
கூச்சலிட்டுக்கொண்டிருக்கும்போது கார்ப்பரேட் அரங்கில் 5ஜி! 5ஜி! என்று குரல்கள் கேட்கின்றன. இதுவரை நிலக்கரி, மின்சாரம், துறைமுகம், விமான நிலையம் என்றிருந்த அதானியின் சாம்ராஜ்ஜியம் தொலைதொடர்புக்குள் நுழையப்போகிறது. தொலைதொடர்பு, எண்ணெய் சுத்திகரிப்பு, நுக ர்வோர் துறை என்றிருக்கற அம்பானியின் சாம்ராஜ்ஜியத்திற்கும் அதானியின் சாம்ராஜ்ஜியத்திற்கும் பயங்கர மோதல் நிகழப் போகிறதா என்று ஒரு கட்டுரை கேட்கிறது.கேவலம் வெறும் 2டாலர்களுக்கா அதானி மிகப் பெரும் தொகையை ஒதுக்குவார் என்றும் கேட்கிறார்கள்.அதென்ன 2 டாலர் என்று தெரிந்துகொள்ளு முன் 5ஜி பற்றி சிறிது தெரிந்து கொள்வோம்.
5ஜி என்றால் ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பம் என்று புரிந்துகொள்ளலாம். 4ஜி எல்லா இடங்களுக்கும் இணைப்பு கொடுப்பது குறித்து கவனம் செலுத்தும்போது 5ஜியானது அதை கிளவுட் தொழில்நுட்பம் மூலம் செய்கிறது. அதிக வேகம், செல்லுலார் முறையிலிருந்து வைஃபை முறைக்கு எளிதாக மாறுதல் போன்றவை இதில் அடங்கியுள்ளன.
அதிக வேகம் பயனாளர்களுக்கு நல்லதுதானே என்று கேட்டால் நம்மைப் போன்ற சாதாரண பயனாளர்களுக்கு 5ஜி யில் கிடைக்கும் வேகம் தேவையில்லை. சில எடுத்துக்காட்டுகள் மூலம் நமக்கு தேவையான இணைய வேகங்களைப் பார்க்கலாம்.
1.நெட் பிளிக்ஸ், டிஸ்னி, அமேசான் பிரைம் போன்ற தளங்களை பார்ப்பதற்கு 2 முதல் 6Mbps. நேரடி ஒளிபரப்பு என்றால் 8Mbps.
2.சூம், மைக்ரோசாப்ட் டீம், கூகுள் மீட் போன்ற காணொளி கூட்டங்களுக்கு 1-3Mbps.
3.நமது பிராதன கவலையான வாட்ஸ் ஆப் வீடியோ அழைப்புகளுக்கு 0,1-0,25Mbps
இந்தியாவில் 4ஜி சேவை வேகம் சராசரியாக 14Mbps. (நாம் இதில் உலக நாடுகள் தர வரிசையில் 115ஆவது இடத்தில் இருக்கிறோம் என்பது வேறு விஷயம்). ஆகவே நமது இப்போதைய தேவைகளுக்கு 4ஜி சேவை வேகம் போதுமானது. இதைவிட 10 மடங்கு வேகமான 5ஜி சாதாரண மக்களுக்கு எதற்கு?
இங்குதான் 5ஜியானது பிரச்சனைகளை தேடும் தீர்வு என்று சொல்லப்படுகிறது. முதலாளித்துவம் மக்களிடையே தேவைகளை உண்டாக்கி தனது லாபகரமான பண்டங்களை விற்கும். அது மக்களின் இயல்பான தேவைகளை நிறைவேற்றுவதில் இலாபம் இல்லையென்றால் அதில் இறங்காது. அதைத்தான் கொரோனா காலத்தில் மருத்துவ மனைகள் மூடிக்கிடந்ததையும் தடுப்பு ஊசி தயாரிப்பில் போட்டி போட்டுக்கொண்டு இறங்கியதையும் பார்த்தோம்.
5ஜி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெறாது என்பதற்கு இன்னும் சில காரணங்கள் உண்டு. ஒன்று அதன் கட்டணம் அதிகமாக இருக்கும். முதலில் சொன்ன 2 டாலர் விவகாரம் இதைத்தான் பேசுகிறது.. இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சராசரியாக ஒரு நுகர்வோரிடமிருந்து மாதம் ஒன்றிற்கு பெறும் வருவாய் 2 டாலர்கள்தானாம். அதை ரூபாயில் பார்த்தால் மன்மோகன் காலம் என்றால் ரூ 130-140 என்று இருந்திருக்கும். நமது மோடிஜி காலம் என்றால் 140-160 ஆக இருக்கும். இன்னும் ரூபாய் சதம் அடிக்கும் என்கிறார்கள். அப்படியானால் தொலை தொடர்பு நிறுவனங்களின் வருமானம் மாதம் ஒன்றிற்கு ரூ 200/. மிக சொற்பமாக தெரிந்தாலும் இந்திய நுகர்வாளர்களின் எண்ணிக்கை 100கோடி என்பதையும் பார்க்க வேண்டும்.. தேவையான வேகம் 4ஜியிலேயே கிடைக்கும்போது அதிக கட்டணம் செலுத்தி சாதாரண மக்கள் 5ஜிக்கு மாற மாட்டார்கள். மேலும் அதற்கான கைபேசிகள் சராசரியாக ரூ 30000/ வரை இருக்கும். ஆக 5ஜி இணைப்புகள் பொதுமக்களுக்கு இப்போதைக்கு பயன்படாது. அது நிறுவனங்களின் தேவைகளுக்கே பொருத்தமானது. அப்படியானால் ஏன் அதானி அம்பானியுடன் போட்டி போடுகிறார்?
அவரது நிறுவனங்களுக்குத் தேவையான 5ஜி அலைக்கற்றையை அவர் பிரத்தியேக உபயோக ( captive private network) திட்டத்தின் கீழ் மிக மலிவாக பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் ஒரு நிறுவனம் தனது பயன்பாட்டிற்கு மட்டும் என்றால் வெறும் ரூ 50000 / மட்டும் செலுத்தி 10 வருடங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். எவ்வளவு சலுகை கட்டணம் பாருங்கள்! உரிமக் கட்டணமும் கிடையாதாம்; அலைக்கற்றைக் கட்டணமும் கிடையாதாம். இந்தக் கட்டணம் ஒரு வருடத்திற்கு ரூ 5000/ என்று ஆகிறது.சாதாரண பொது மக்களே இதைவிட அதிகம் செலுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
வணிக பயன்பாட்டிற்கு வேண்டுமென்றால் ஏலத்தில் பங்கு பெற்று அங்கு நிர்ணியிக்கப்படும் கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில்தான் அதானி நுழைகிறார். அவரது நிறுவனமே பெரும் கடன் தொகையை சர்வீஸ் செய்ய வேண்டியதிருக்கிறது. அந்த நிலைமையில் இலாபமில்லாத ஒரு முதலீட்டில் பெரும் தொகையை அவர் ஏன் முடக்குகிறார் என்ற கேள்வி எழுகிறது. இதற்கு அம்பானியின் எடுத்துக்காட்டையே கூறுகிறார்கள். அவர் 2016இல் தொலைத்தொடர்பு துறையில் நுழையும்போது அலைக்கற்றைகளை வாங்கி வைத்துக்கொண்டார். ஐந்து ஆண்டுகளில் அந்த துறை வளர்ச்சி அடைந்து இப்போது இலாபம் சம்பாதிக்கிறார். அது போல அதானியும் சிந்திக்கலாம் என்கிறார்கள். தள்ளாடிக்கொண்டிருக்கும் வோடோபோன் ஐடியா நிறுவனத்தை கபளீகரம் செய்யலாம்.
இரண்டு பெரும் சாம்ராஜ்ஜியங்கள் மோதிக்கொண்டிருக்கட்டும். பொதுமக்களுக்கு பி எஸ் என் எல் 4ஜி அலைக்கற்றை சேவையை தொடங்க அரசு உதவ வேண்டும் என்பதே நமது கோரிக்கை.
கட்டுரைக்கு உதவிய இணைப்புகள்
5G in India – does the common man even need it? – Crast.net
https://economictimes.indiatimes.com/industry/telecom/telecom-policy/no-license/entry-fee-for-enterprises-seeking-5g-spectrum-for-captive-networks-dot/articleshow/92499835.cms
https://telecom.economictimes.indiatimes.com/news/adani-vs-ambani-are-indias-richest-men-about-to-battle-over-2-customers/92882234?action=profile_completion&utm_source=Mailer&utm_medium=ET_batch&utm_campaign=ettelecom_news_2022-07-17&dt=2022-07-17&em=cmFtYW5hbnNhdHR1cjUzQGdtYWlsLmNvbQ==
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.