அம்ருதா கவிதை மொழிபெயர்ப்பு (தமிழில்: கி.ரமேஷ்)

நீ மெதுவாக மரணிக்கத் தொடங்குகிறாய்;

உன் பழக்கங்களுக்கு நீ அடிமையானால்,

அதே பாதையில் தினமும் நடந்து சென்றால்…

உன் வழக்கத்தை மாற்றா விட்டால்,

பல்வேறு வண்ணங்களை நீ அணியாவிட்டால்

நீ அறியாதவர்களுடன் பேசாவிட்டால்

 

நீ மெதுவாக மரணிக்கத் தொடங்குகிறாய்:

உன் கண்களைக் கசியச் செய்யும்

உன் இதயத்தை வேகமாகத் துடிக்கச் செய்யும்

கொந்தளிக்கும் உணர்வுகளுடன் கூடிய

வேட்கையை உணர்வதை நீ தவிர்த்தால்;

 

நீ மெதுவாக மரணிக்கத் தொடங்குகிறாய்:

நிச்சயமற்ற ஒன்றுக்காக பாதுகாப்பானதை இழக்கும்

சாகசத்தைச் செய்யாவிட்டால்,

ஒரு கனவுக்குப் பின்னால் செல்லாவிட்டால்,

வாழ்க்கையில் ஒருமுறையாவது

நீ ஒடிப்போவதை

நீ அனுமதிக்காவிட்டால்,

நீ மெதுவாக மரணிக்கத் தொடங்குகிறாய்! ! !

உன் வாழ்க்கையை நேசி உன்னை நேசி . . .

பப்ளோ நெரூதா

ஸ்பானியக் கவிஞர்

Amrita Pritam Quotes | 25 Profound Quotes by Punjab's First Female Poet | Winged Soul

அம்ரிதா ப்ரீதமின் உயில்:

என் முழு நினைவுடனும், நல்லாரோக்கியத்துடனும், நான் இந்த உயிலை வரைகிறேன்:

என் மரணத்துக்குப் பிறகு

என் வீட்டில் எங்கும்

திறந்து கிடப்பதையும்

சிதறிக் கிடப்பதையும்

ஒவ்வொன்றையும் தேடுங்கள்

என் அறையைத் தோண்டித் துருவுங்கள்.

 

சமையலறைக்கும் படுக்கையறைக்கும் இடையில்

தமது உலகை இழந்த பெண்களுக்கும்

எதைக் கனவு காண வேண்டுமென்று

பல்லாண்டுகளுக்கு முன் மறந்த பெண்களுக்கும்

என் கனவுகளைத் தானமிடுங்கள்.

 

அமெரிக்காவின் மின்னும் நகரங்களில்

குழந்தைகளைத் தொலைத்து விட்டு

மூத்தோர் இல்லங்களில் வசிப்போரிடம்

என் சிரிப்பைச் சிதறவிடுங்கள்

 

எனது மேசையின் மேல்

சில வண்ணங்கள் கிடக்கின்றன

அந்தப் பெண்ணின் சேலை முனையில் 

மூவர்ணக் கொடியில் போர்த்தப்பட்டு

நேற்று மாலை அடக்கம் செய்த

அவள் கணவனின் ரத்தம் தோய்ந்த சேலையில்

அந்த வண்ணங்களைத் தோய்த்தெடுங்கள்.

 

அனைத்துக் கவிஞர்களுக்கும்

என் கண்ணீரை அளித்திடுங்கள்

ஒவ்வொரு துளியும்

ஒரு கவிதையாய்த் துளிர்க்கும்

நான் உறுதியளிக்கிறேன்

 

தன் மகள் படிப்பதற்காகத்

தன் உடலை விற்கும்

பெண்களுக்கு

என் மரியாதையும், மதிப்பும் செல்க.

 

இந்த நாட்டின் ஒவ்வொரு இளைஞனையும் பிடித்து

அவனிடம் என் கோபத்தின் பொருளை ஊட்டுவதை

உறுதிப்படுத்துங்கள்

புரட்சி வரும்போது

அது அவர்களுக்குத் தேவைப்படும்.

 

கடவுளைத் தேடி

அனைத்தையும் விட்டுச் செல்லும்

அந்த சூஃபிக்கு

என் பரவசம்

அனைத்தும் சொந்தம்.

 

இறுதியாக

மீதமிருக்கும்

என் பொறாமை

என் பேராசை

என் கோபம்

என் பொய்கள்

என் சுயநலம்

இவற்றை

என்னுடன்

எரித்து விடுங்கள். . .

அம்ருதா.

(இந்தி – பஞ்சாபி எழுத்தாளர், கவிஞர்)

தமிழில்: கி.ரமேஷ்