நூல் அறிமுகம் - செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்: அமுதா செல்வி எழுதிய "மையிருளி" நாவல் புத்தகம் | Amutha Selvi's Maiyiruli Tamil Novel Book Review | Popular Book Reviews | www.bookday.in

நூல் அறிமுகம் – செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்: அமுதா செல்வி எழுதிய “மையிருளி” நாவல்

அமுதா செல்வி எழுதிய “மையிருளி” நாவல்

இருளில் நகரும் பெண்கள்

நளினி ஜமிலா எழுதிய “எனது ஆண்கள் “ நூல் முன்னாள் பாலியல் தொழிலாளி கதையைப் பேசியது.பெண்கள் பாலியல் தொழிலாளியாக களத்தில் சந்தித்தவை ,சமூகத்தின் பார்வைகள்,நெருக்கடிகளையும் அதில் எழுதியிருந்தார்.அது அவரின் சொந்த அனுபவத்தில் இருந்து மலையாளத்தில் எழுதப்பட்ட புத்தகம் .எழுத்தாளர் ஜி.நாகராஜன் பாலியல் தொழிலாளர்களை முன்வைத்து நாவல்கள் எழுதியுள்ளார்.மகாநதி படம், இதைப் போலொரு களத்தைக் காட்டியுள்ளது.அந்த திரைப்படத்தில் பாலியல் கூடச் சிறையில் இருந்து மீட்டு வரப்பட்ட மகள் தூக்கத்தில் புலம்பும் காட்சியை  இப்போது நினைத்தாலும் அதிர்வு வந்து போகும்.இதுபோன்று இலக்கியங்கள்,திரைப்படங்கள் பாலியல் தொழிலை கதைக் களமாக கொண்டு பேசியுள்ளன.

சமூகப் பணியில் முதுகலைப்பட்டம் பெற்ற அமுதா செல்வி எழுதி தற்போது வெளியாகியுள்ள, “மையிருளி” நாவல், 380 பக்கங்களில்  பாலியல் தொழிலின் இருண்ட பக்கங்களின் நிழல்கள் மீது வெளிச்சமூட்டுகிறது.அதன் கோரமுகம் வாசகனை அச்சுறுத்துகிறது.நீண்ட காலமாக  தற்போது வரை இந்திய சமூகத்தில் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் பாலியல் சுரண்டல் மற்றும் அதன் நீட்சியாய் நிகழ்த்தப்பட்டு வரும் கொடுமைகளின் உச்சத்தை புனைவின் சரட்டில் கோர்த்து நாவலை எழுதியுள்ளார்.உண்மைகளின் தடத்தில் நாவல் செல்கிறது.

நூலாசிரியர் அரசு சாரா பெண்கள் மேம்பாட்டு அமைப்பில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டு வாழ்ந்த பெண்கள் நலனுக்காக  பணிபுரிந்துள்ளார்.அப்போது அவர் சந்தித்த பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையை புனைவாக்கியுள்ளார்.எனவே இந்த நாவலில் சிந்தப்படும் ரத்தம்,கண்ணீருக்கு இள வெப்பம் உண்டு.அதைத்தான் பதினைந்து ஆண்டுகள் சுமந்து நம் கைகளுக்கும் கடத்தியுள்ளார்.

அறையின் மூலையில் பழைய பாயில் சுருண்டு கிடக்கும் சைலஜாவில் தொடங்கும் கதை அவளிடம்தான் முடிவடைகிறது.அதற்குள் எத்தனையோ சைலஜாக்கள் வேறு வேறு பெயரில் வருகிறார்கள்.வருவதென்றால் ,காதல் பேசி ஏமாற்றி,வீட்டில் உள்ளவர்கள் வாங்கிய கடனுக்கு ஈடாக,வறுமையின் காரணமாக இழுத்து வரப்படுகிறார்கள்.இவை எல்லாவற்றுக்குப் பின்னும் நேரிடையாகவோ,மறைமுகமாகவோ ஒரு ஆண் இருக்கிறான் என்பதே அதிர்ச்சியற்ற உண்மை.

பாலியல் தொழிலில் தள்ளப்படும் பெண்களை மீட்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள கேசவராஜ்,செம்மலர்,லீலா ஆகியோரையும் எண்ணற்ற பாதிக்கப்பட்ட பெண்களையும் புள்ளியாக கொண்டு சிக்கலற்றவாறு கதையை கொண்டு சென்றுள்ளார்.இது ஒரு சவாலான எழுத்து.கிளைக் கதைகள் பலவும் வந்து போகின்றன.ஆனால் நாவலின் மைய சரடை சைலஜா என்னும் பாத்திரம் கையில் தந்துள்ளார்.

நேற்று இறந்த புருஷனை எரித்த சூடு அடங்கும் முன் தொழிலுக்கு வரும் சாவித்திரி,உடைந்துப் போன பொம்மைகளை வைத்து விளையாடும் நான்கு வயது மகனோடு அறைக்கு வரும் உமா,உமாவுக்காக பணக்கார வாடிக்கையாளர்களை விட்டுத் தரும் ஜோதி,கமலா,ரேகா,கெங்கம்மா,மோனிஷா,கடவுள் கண்ணன் மீது பித்துக் கொண்ட காஜல் என்று பெண்களின் கதைகள் நீள்கின்றன.இவையெல்லாவற்றையும் இலைகளென மிதக்க விட்டு கதை ஆழமிக்க அமைதியான நதியென நகர்கிறது.

கிருஷ்ணகிரி ,ஆந்திரா,கர்நாடகாவிலும் சோனாகட்சி,காளிகட்,பெத்தாபுரம் என்று பல நிலப்பகுதிக்கு கதை சென்றாலும் பெண்கள் சந்திக்கும் கொடுமைகள் ,துரோகங்கள் மட்டும் மாறவில்லை.

ஆண்களின் புத்தியில் உறைந்துக் கிடப்பது போல இந்த பெண்கள் யாரும் விரும்பி இந்த வாழ்க்கைக்குள் வருவதில்லை.அவர்கள் கடத்தப்பட்டு ,ஏமாற்றப்பட்டு இதில் இழுத்து வரப் படுகிறார்கள்.குடும்ப அமைப்புக்குள் கட்டுப்பட்டு கிடக்கும் பெண்களும் ,கணவரால் குடும்பம் சந்திக்கும் பொருளாதார சிக்கலாலும் இதற்குள் தள்ளப்படுகிறார்கள்.”கூலி வேலை செய்தாவது பிழைக்கலாம்” என்று அறிவுரையைத் தூக்கி வருபவர்களுக்கு சொல்லப்படுதெல்லாம் இக்கதையில் வரும் பெண்கள் பலரும் பாலியல் தரகர்களால் சுரண்டபடுபவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.ஆண் சித்தாளுக்கும் பெண் சித்தாளுக்கும் இருக்கும் கூலி இடைவெளியையும் நாம் சேர்த்தே பார்க்க வேண்டியுள்ளது.மேலும் ஒருமுறை எதன் பொருட்டோ இழுத்து வரப்படும் பெண்கள்  திரும்பி சென்றால் சாத்தப்படும் வீட்டின் கதவுகள்தான் இங்கு அதிகம்.இவ்வாறு பேசுவதற்கு பன்முக சிக்கலானப் பக்கங்களை உடைய பிரச்சனை இது.

அவர்கள் அறைகளுக்குள் சந்திக்கும் பாலியல் வன்முறையின் பத்திகள் எளிதாக வாசிக்கப்பட முடியவே இல்லை.கடித்து குதறப்பட்ட மார்பகங்களை காட்டி அழும் சைலஜாவுக்கு மருந்திட்டு மீண்டும் உள்ளே அனுப்பப்படுகிறாள்.புண்ணாய் வெடித்து இருக்கும் ஆண் உறுப்பை வாயில் திணிக்கப்பட்ட சரோஜாவைப் போல எத்தனை பெண்கள் அருவறுப்பின் உச்சத்தை வாழ்வில் சந்தித்துக் கொண்டிருப்பார்கள் ?அதே போல சமய சடங்குகளை பழக்கமாக கொண்ட பெண்களும், இளம்பெண்களுக்கு செய்யும் கொடுமைகளுக்கும் குறைவில்லாத சமூகமல்லவா நாம்?நாவலில் வரும் கெங்கம்மா என்ற பெண்ணுக்கு, மலைக்கோவிலில்  குளிர் நிறைந்த இரவில் வட்டக்கல்லில் கிடத்தி பிறப்புறுப்பில் செதுக்கிய குச்சி செறுகப்படுகிறது.சமய சடங்குகளின் பெயரால் பெண்கள் இப்போது வரை சந்திக்கும் துன்பங்களுக்கு எப்போதுதான் ஓய்வு?அப்போது கெங்கம்மா ஒரு கேள்வி கேட்பாள் , “தனது பிறப்புறுப்பில் செறுகப்பட்ட குச்சிதான் சிவபெருமான் என்கிறார்கள்.கடவுள் எப்படி குச்சி வடிவத்தில் இருக்க முடியும்?இந்த மக்கள் ஏன் கேள்வி கேட்பதே இல்லை?”

சதி கொடுமை பின்னணியில் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்ட பெண்களும் கதையில் வருகிறார்கள்.மாமனார் வக்கிரத்தால் பாலியல் தொழிலுக்குள் வந்து சேர்ந்த வசந்தி என்ற பெண்ணும் உண்டு.வாழ்வின் நெருக்கடியால் கணவனால் கைவிடப்பட்டு நோயுற்றுத் தொட்டுத் தூக்க ஆளற்று தெருவில் இழுத்துவரப்பட்ட பேரழகி சுமதி ,மகன் நந்தனால் நெருப்பூட்டப் படுகிறாள்.கணவன் தந்த எச்ஐவி வைரசால் பாதிக்கப்பட்ட தங்கம்மா, அவள் கணவனால் துரத்தப்படுகிறாள்.குழந்தையைக் காப்பாற்ற வேலைக்கு செல்பவளை “தான் நோயுற்றவள்” என்று அவளே கதறியும் முதலாளி உள்ளிட்ட ஊர் ஆண்களால் பாதிப்புக்குள்ளாகிறாள்.மனநலம் குன்றியவளும் இரையாக்கப் படுகிறாள்.இப்படி நூற்றுக்கணக்கான பெண்களின் துயரமிக்க  வாழ்வை நாவல் முன்வைக்கிறது.எனவேதான் மை போன்ற இருளில் நகரும் பெண்களின் வாழ்வைக் குறிக்க “மையிருளி” என்று பெயர் வைத்துள்ளார் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் நாவலில் எச்ஐவி தடுப்பு நடவடிக்கையை கூட புரிந்து கொள்ளாமல் காவல்துறையினர் செயல்படுவது அதிர்ச்சி ஏற்படுத்தவில்லை.அதே நேரம் ஒரு மாவட்ட ஆட்சியர் அதனை அணுகும் முறை கொஞ்சம் ஆறுதலாகிறது.

பொதுவாக நாவலாசிரியர் அமுதா செல்வியின் அரசியல் பார்வைத் தெளிவையும் இந்த நாவலில் உணர முடிகிறது.பாலியல் சுரண்டலுக்குள் தள்ளப்படும் பெண்களின் கொடுமைகளுக்கான வேர்களாக உள்ள மதவாத அரசியலையும் அத்தியாயங்களில் தேவையான இடங்களில்  பேசுகிறார்.ஒரு சில பக்கங்களில் இந்த அரசியல் கூறியது கூறலாக மீண்டும் வருகிறது.ஆனால் அவர் வைக்கும் வாதங்களில் இருக்கும் ஆதாரங்கள் மிக முக்கியமானவை.

கல்பனாகோஷ் என்ற விதவைப் பெண்னை வைத்து விதவைகள் எவ்வாறு இச் சமூகத்தால் கைவிடப்பட்டு பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்டார்கள் என்பதை நாவல் எடுத்துரைக்கிறது. செம்மலர் என்ற பாத்திரம் நண்பர்களுடன் உரையாடுவதன் மூலம் பல கேள்விகள் சமயங்களை நோக்கி வைக்கப்படுகின்றன.’’பாலியல் தொழிலாளிகள் பொருளாதார தேவைகளுக்காக, சொகுசான வேலைக்காக இத்தொழிலில் இருப்பதாக நாம் நினைப்பது போல் இல்லை.அவர்கள் இத்தொழிலில் தள்ளப்பட , மோசமான பொருளாதார சூழலே காரணம்’’ என்றும்  அதன் பின்னணி அழுத்தங்களையும் அப்பாத்திரத்தின் மூலம் வாசகனுக்கு நாவலாசிரியர் புரிய வைக்கிறார்.இத்தொழிலின் வேர்கள் எங்கெல்லாம் போய் நிற்கின்றன என்பதை செம்மலர் பாத்திரம் மற்றவர்களோடு உரையாடுகிறது.அந்த உரையாடல் பாத்திரங்களுடனானது மட்டுமல்ல.வாசக மனங்கள் உடனானதும்தான்.

பாலியல் சந்தைகளின் அடித்தளமாக சமய நம்பிக்கைகள் இருப்பதை நாவல் பல இடங்களில் வலியுறுத்துகிறது.சமய சூழ்ச்சிகளில் சிக்கிய காலவந்துலுக்களும் தேவதாசிகளும் பாலியல் சந்தைக்குள் மாட்டிக் கொண்டதையும் தெளிவாக முன்வைக்கிறது.”ஆண்களின் இச்சை உணர்வும் பொருளாதாரக் காரணிகளும் அந்தக் காலத்து இறையடியார்களைப் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்குச்சு.இன்னிக்கு அதே பொருளாதாரக் காரணியும் இச்சை உணர்வும்தான் பெண்களைப் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்குது “ என்று நாவலில் செம்மலர் ஒரு இடத்தில் கூறுவார்.

காளிகட் கோயிலை சுற்றிதான் தொழில் பலமாக நடக்கும்.கொடுமைகள் உள்ளிட்ட எல்லவற்றுக்கும் சாட்சியாக காளியே இருப்பாள்.ஆனாலும் பாதிக்கப்பட்ட பெண்களும் காளியையே சரணடைந்து நிற்பார்கள்.அதே நேரம் பெத்தாபுரத்தில் அனைத்து வீடுகளிலும் ஏசுநாதர் படம் மாட்டப்பட்டு இருக்கும்.அப்போது அத்தெரு வழியே மதுரவாணியும் ,சைலஜாவும் நடந்துக் கொண்டே பேசி செல்வார்கள்.”அத்தெருவுக்கு கிறிஸ்துவை போதிக்க வரும் போதகர்கள் பாலியல் தொழில் செய்யாதே என்று சொல்லவில்லையா “ எனக் கேட்டுக் கொள்வார்கள்.”பிறகு இவங்க வாழ்க்கையில் மதம் என்ன வேலையைப் பண்ணுது?”

இவ்வாறு காணிக்கையை மட்டும் மனதில் எண்ணும் மதங்கள் குறித்து அவர்களின் பார்வையின் மூலம் இந்து,கிறிஸ்தவ வேறுபாடின்றி மதவாதிகளின் அலங்கரிக்கப்பட்ட முகங்களின் பின் உள்ளவற்றை காட்சிப்படுத்த நாவல் முயல்கிறது.

நாவல் செல்லுமிடமெல்லாம் அந்தந்த நிலத்தின் வரலாற்றையும் ,மக்களின் வாழ்வையும் சேர்த்தே வாசகனுக்கு தெரியப்படுத்த விரும்புகிறது.நாவல் முழுக்க அந்த வரலாற்றைப் பேசிவிட இயலாத போதும் புதிய செய்திகளை கூறி அறிமுகம் செய்ய விழைகிறது.ஒரு சில இடங்களில் நாவலாசிரியர் பேசும் விசயங்கள் துறுத்தலாக இருந்தாலும் அது கதையின் போக்கை தொந்தரவு செய்யவில்லை.

அச்சு அசலான உண்மையை பேசும் இடங்களில் உக்கிரமாகவும்,வாழ்வை அவ்வப்போது விசாரணை செய்து கொள்ளும் போது தத்துவமாகவும்,கோதாவரி நதி,கடல் ,இரவின் மடிகளில் தலை சாய்க்கும் பத்திகளில் கவித்துவமாகவும் மொழி ஆளுமை மனதை அடைகிறது.

சைலஜாவின் பதட்டத்தை கூறும்போது , “அது பிடிப்பட்ட பறவையின் நடுக்கம் போல இருந்தது” என்று எழுதி இருப்பார்.ரெட்சில்க் காட்டன்மரம் பற்றி ஒரு பத்தி எழுதப்பட்டு இருக்கும்.பெத்தாபுரம் மழைக்காலத் தெய்வமான மரிட்டம்மா கோவில் திருவிழாவும் வரும். மதுரவாணியைப் பற்றி சொல்லும்போது, “அவள் சில நேரம் உணர்வு ஓட்டிற்குள் சுருங்கி மறையப் போகும் சூரியனின் விளிம்பைப் பார்த்தவாறே மெளனத்தில் மூழ்கி கிடப்பாள் “ என்று கூறியிருப்பார்.மதுரவாணியும் ,சைலஜாவும் பேசிக்கொண்டே வரும்போது அவர்களைப் பின்தொடர்ந்து அன்னநடை போட்டு கழுத்தை ஆட்டியபடியே வந்த கொக்குகளைப் பார்த்து என் கழுத்து சுளுக்கியது என்றால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்?..

.ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் பெளத்த துறவிகள் தங்கள் துக்கத்திலிருந்து விடுதலை பெற்ற வாழ்க்கை பயணத்தின் அனுபவங்களை சொல்லும் உன்னத பாடல்கள் அடங்கிய பேராசிரியர் ரமணி மொழிபெயர்த்த “தெரகாதா” என்ற பாடல் தொகுப்பில் இருந்து கவிதைகள் எடுத்தாளப்பட்டு உள்ளன.அப்பாடல்கள் பொருத்தமாகவும் மனதில் படியும் துயரத்தின் நிழலில் காவியத் தன்மையை அழுத்தமாக வரையவும் செய்கின்றன.

பாலியல் தொழிலில் சிக்கிய, இருளடைந்த பெண்களின் வாழ்வில் .மறைந்திருந்த உண்மைகளைப் பேசுகிறது.அத்தோடு இந்த நாவலின் சிறப்பு முடியவில்லை.கடவுளின் பெயரால் ,மநு தர்ம அடிப்படைவாதிகளின் கொடும் கரத்தால் அழுத்தப்பட்டு  பெண்கள், வரலாற்றில் பெற்ற துயரங்களின் வேர் வரை  சென்றுள்ளது என்பதே உண்மை.

எல்லாத் துயரங்களையும் தாண்டி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விழிப்புணர்வும்,அவர்தம் குடும்பத்திற்கு பாதுகாப்பும்,குழந்தைகளுக்கு கல்வியும் தர முன்வந்து செயலாற்றும் மனிதர்கள் இருப்பதுதான் பெரும் ஆறுதலையும் மனிதர்கள் மீதான நம்பிக்கையின் கடைசி புள்ளியையும் காட்டுகிறது.அதே நம்பிக்கையோடு கடைசி அத்தியாயத்தில் மின்னும் கோதாவரி நதியில் பார்க்கிறேன்.அலையும் நீரில் அப்பெண்களின் முகங்கள் மிதக்கின்றன.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: “மையிருளி” நாவல் (2026)
ஆசிரியர்: அமுதா செல்வி
வெளியீடு:
அடையாளம் பதிப்பகம்
விலை: ₹.500
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 ஸ்டாலின் சரவணன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *