அமுதன் தேவேந்திரனின் “கனவைக் காத்த மனிதன்” சிறுகதை தொகுப்பு – நூல் அறிமுகம்
கல்வியின் முக்கியத்துவத்தைச் சொல்லும் சிறுகதைகளின் தொகுப்பு
அறிவியல் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ள இந்த சிறுகதைத்தொகுப்பு நூலின் பதிப்புரையை,தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலப்பொதுச் செயலாளர் எம்.எஸ்.முகமது பாஷா எழுதியுள்ளார்: “ ‘கல்வியே விடுதலை யின் திறவுகோல்’ எனும் உயரிய உண்மையை, எளிமையான கதைகள் வழியாகக் குழந்தைகளின் மனதில் விதைக்கும் அரிய முயற்சியே தோழர் அமுதன் தேவேந்திரன் அவர்களின் இந்த நூல். கல்வி என்பது, வெறும் எழுத்தறிவை மட்டுமே வழங்குவதல்ல;அது மனிதர்களைச்சிந்திக்கவும், கேள்வி கேட்கவும் சமத்துவத்தை உணரவும்,சமூக மாற்றத்திற்காகச் செயல்படவும் வழி நடத்துகிறது!”
“புதிய திசையிலிருந்து புதிய குரல்” – தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் கா.உதயசங்கரின் அணிந்துரை இத்தொகுப்பின் சில முக்கியக்குறிக்கோள்களைக் குறித்து நமது கவனத் தைக்கோரும் விதமாக அமைந்துள்ளது.”நவீனத் தமிழ்ச்சிறார் இலக்கியம் காலூன்றத் தொடங்கி இரண்டு-மூன்றாண்டுகளாகின்றன.நம் குழந்தைகளும் தங்களுக்கான சிறந்த படைப்புகளை எழுதத்தொடங்கி விட்டனர். நீண்ட உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது சிறார் இலக்கியம்.ஆனாலும் இன்னமும் நம் காலத்தின் குரலுக்கு நாம் செவிமடுக்கிறோமா என்ற கேள்விகள் மிச்சமிருக்கின்றன.அந்தக் கேள்விக ளுக்கான பதில்களாகத்தான் தோழர் அமுதன் தேவேந்திரனின் கதைகளைப் பார்க்க வேண்டுமென நினைக்கிறேன்!”என உதயசங்கர் மிகத்தெளிவாகக் குறிப்பிடுகிறார். “வாழ்க்கை ஒன்று போல இருப்பதாகப் பாவனை செய்தா லும் எதார்த்தத்தில் அது ஒன்றாக இல்லை. வாழ்க்கையின் முரண்கள் சமமாக இருக்கவில்லை. அதைக்குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும். இந்த ஏற்றத்தாழ்வுகளுக்குக் காரணங்களையும்,அவற்றைச்சரி செய்வதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று சொல்ல வேண்டும் “ என்று குறிப்பிடும் உதயசங்கர்,சிறார் இலக்கியத்துக்குள் அத்தகைய புதிய குரலாக அமுதன் தேவேந்திரன் ஓங்கி ஒலிக்கிறார்.
“புத்தக மாமா” கதையில் எழுத்தாளர் அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ கதை வருகிறது. எழுத்தாளர் உதயசங்கரின் ‘ஆதனின் பொம்மை’ கதையும் வருகிறது. கல்வி மட்டும்தான் வலிமையான ஆயுதமாக இருக்குமென்பதைக் குழந்தைகளுக்கு உரக்கச்சொல்கிற கதைத்தொகுப்பு இது. ஒரு கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் வாழும் குழந்தைகளின் மனநிலை, அந்தச்சூழல் ஆகியவற்றைச்சித்தரிப்பதில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறார் எழுத்தாளர் அமுதன் தேவேந்திரன்.
இந்தக்கதைத் தொகுப்பில் ஒன்பது கதைகள் இருக்கின்றன. ஒரு சிவப்புச் சட்டைத்தாத்தா,கல்விக்கனவைக் காத்த மனிதர்-இம்மாதிரி ஓரிரு சிறந்த மனிதர்கள் வாழும் ‘நூறு வீடுகள்’,ஆயா,புத்தக மாமா,சிலை,விதை,இனிப்பு, கிராமத்து வீடுகள்- ஆகிய கதைகளில் அமுதனின் கனவுகள் சிறகு விரிக்கின்றன.மிக அழகான ஓவியங்கள். “என் கனவைக் காத்த அந்த மனிதரின் அன்பில்,அன்று நான் கற்றுக்கொண்ட பாடம்,எந்தப் புத்தகத்திலும் இல்லாதது” என்கிறார் அமுதன் தேவேந்திரன்.
ஒவ்வொரு கதையைப் பற்றியும் விவரிக்க வேண்டியதில்லை; மாறாக, ஒன்பது கதைகளிலும் அமுதனின் கிராமத்து உழைப்பாளி மனிதர்களும், அவர்களைக் காலம் காலமாக ஒடுக்கிக்கொண்டு உழைப்பைச்சுரண்டி மேலும் மேலும் பெரிய ஆதிக்கச்சக்திகளாக வாழும் உயர் சாதி-உயர் வர்க்க மனிதர்களை அம்பலப்படுத்தி வரும் சிவப்புச்சட்டைத் தாத்தாக்களே கிராமங்களில் எப்போதும் நினைக்கப்பட வேண்டிய,வணங்கப்பட வேண்டிய மாமனிதர்கள்!
“ஐந்து வயதுச்சிறுமியின் கையிலிருந்த கடலைப் பொட்டலம் சிதறி,எல்லாக் கடலை விதைகளும் மண்ணில் உருண்டோடின. அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது. ஆனால்,குமாரும்,முருகனும் அவளிடம் ஓடிப்போய் ஆறுதல் சொல்கிறார்கள்.இருவரும் மண்ணில் விழாதிருந்த கடலைகளைப் பொறுக்கி அவளுடைய பொட்டலத்தில் போடுகிறார்கள். அப்போதும் போதவில்லை. அவர்கள் இருவரும் தமது அப்பா வாங்கியிருந்த கடலைப் பொட்டலத்தைப் பிரித்து அதில் பாதியை அந்தச்சிறுமிக்குக் கொடுக்கிறார்கள். இவர்கள் இருவரோடு,மூன்றாவதாக ஒரு சிறுவனும் வெல்லத்துண்டுகளைச் சிறுமியின் கையிலேயே வைத்து ஆறுதலும் சொல்கிறார்கள்.
சிறுமி சிரிக்கிறாள். வெல்லம் அவள் வாயில் கரைகிறது. ஆனால்,அந்த நாள், அவர்களின் மனதில் கரைந்த இனிப்பு வெல்லத்தால் வந்ததல்ல. ஒரு சிரிப்பைப் பகிர்ந்ததால் வந்தது.
இன்றைய கிராமங்களில் ஒரு புறம் முன்னேற்றங்கள் நடந்திருக்கின்றன; இல்லை என்று ஒரேயடியாக மறுக்க முடியாது;ஆனால்,அந்த ஒரு சிறிய மாற்றம், எவ்வளவு விலைகளைக் கோருகிறது! இத்தொகுப்பில் ஒவ்வொரு கதையும் ஒரு சிறிய மாற்றத்தின் அடித்தளத்தில் என்ன முயற்சிகள், எவ்வளவு காலம்,எத்தகைய தன்னலமற்ற மனிதர்கள் எங்கோ ஊரறியாமல், பேரறியாமல் தங்களின் ஆன்மாவையே அர்ப்பணித்துக் கொண்டு வழிகாட்டி யிருக்கிறார்கள் என்பதான வரலாற்றுப் பதிவுதான். நாம் படிக்கவும்,பகிர்ந்து கொள்ளவும் எத்தனை கதைகள்!
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | கனவைக் காத்த மனிதன் |
| தொகுப்பாசிரியர்: | அமுதன் தேவேந்திரன் |
| வெளியீடு: | அறிவியல் வெளியீடு |
| விலை: | ₹.60 (5% Discount price was: ₹.57 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 கமலாலயன் |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
தொடர்புக்கு: 9444960935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


அருமை. கதைகளைப் படிக்கத் தூண்டும் ஆர்வத்தை நூல் அறிமுகம் ஏற்படுத்துகிறது.
வாழ்த்துகள் தோழர் தேவேந்திரன்
முதல் நூலிலேயே பலரது கவனத்தை ஈர்க்கும் அமுதன் தேவேந்திரனின் சிறார் கதைகளின் நாற்றாங்கால் என்பது அவரது சொந்த வாழ்விமும் அதன் எளிய மனிதர்களும் தந்தவை என தனது பாதங்களை தொடர்ந்து மண்ணில் வைத்து அடுத்து பறக்கவும் வாழ்த்துகள்