“கனவைக் காத்த மனிதன்” சிறுகதை தொகுப்பு – இப்புத்தகத்தின் ஆசிரியர் தோழர் அமுதன் தேவேந்திரன் பள்ளி படிக்கும் வயதிலிருந்தே வாசிப்பு மீது தீராத ஆசை கொண்டவர். தான் மட்டும் வாசித்தால் போதாது தன்னைச் சுற்றி உள்ளவர்களும் வாசிக்க வேண்டும் என்று புத்தகங்களை அனைவருக்கும் பரிசளித்துக் கொண்டே இருப்பவர். வாசிப்பை மட்டும் ஊக்கப்படுத்தாமல் வாசித்த புத்தகங்களுக்கு விமர்சனங்களை எழுத வைப்பவர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் என பல்வேறு இயக்கங்களுடன் தன்னை ஈடுபடுத்தி கொண்டு மாணவர்களுக்கும் சமுதாயத்திற்கும் வாசிப்பின் மூலம் ஏதேனும் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்ற ஆவல் கொண்டவர். இன்று கனவை காத்த மனிதர் என்ற இவரது முதல் நூலின் மூலம் குழந்தைகளுக்கான சிறுகதைகளை எழுதியுள்ளார். நேற்றுதான் (13.09.2026) இந்த புத்தகம் வெளியிடப்பட்டது. புத்தகம் வாங்கிய கையோடு அதை வாசித்து அதற்கு விமர்சனம் எழுத வேண்டும் என்று ஊரெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கும் விநாயகர் பாடல்களுக்கு நடுவில் புத்தகத்தை வாசித்துவிட்டு சுடசுட பதிவை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
புத்தகத்தை வாசிக்கும் போது ஒரு நல்ல தேர்ந்த வாசகர் எழுத்தாளராக பரிணமித்துள்ளார் என்று தான் தோன்றியது.இப்புத்தகம் இவரின் முதல் படைப்பு என்று கூற முடியாத அளவிற்கு வார்த்தைகளை கையாண்டுள்ளார்.சிறுவர்களுக்கான புத்தகம் எழுதுவது என்பது அவர்களின் உலகில் சென்று அவர்களோடு பயணிப்பவர்களுக்கு மட்டுமே சாத்தியம்.அந்த வகையில் தோழர் அமுதன் தேவேந்திரன் குழந்தைகளோடு பயணித்திருக்கும் அழகை இதில் வரும் ஒவ்வொரு கதையும் கூறுகிறது.
இப்புத்தகத்தின் மொத்தம் 9 கதைகள் வருகின்றன.
1. சிவப்பு சட்டை தாத்தா
2. கனவை காத்த மனிதர்
3. நூறு வீடுகள்
4. கிராமத்து வெயில்
5. ஆயா
6. புத்தக மாமா
7. சிலை
8. விதை
9. இனிப்பு
இந்த ஒன்பது கதைகளுமே கல்வியை மையமாக வைத்தே வருகின்றன. ஒவ்வொரு கதைகளையும் படிக்கும் பொழுது அதில் வரும் கதாபாத்திரங்களும் கதைகளும் முன்பு ஒரு காலத்தில் எங்கள் ஊரில் வாழ்ந்த மனிதர்களை பற்றியது என்பதும்,கல்விக்காகவும்,சமூக மாற்றத்திற்காகவும் பாடுபட்டவர்கள் என்பது நினைக்கும் போது பெருமகிழ்ச்சியாக உள்ளது.
சிவப்பு சட்டை தாத்தா இல்லையென்றால் நாள் முழுவதும் மாடு போல உழைத்து தங்களின் உழைப்பையும்,பணத்தையும் சுரண்டும் பணக்கார வர்க்கத்துடன் மோத யார் வந்திருப்பார்கள்? இயற்கையில் கிடைக்கும் தண்ணீரில் கூட சாதியை பார்க்கும் மிருகங்களை யார் தட்டி கேட்டிருப்பார்கள்? சிவப்பு சட்டையை அணிந்து கொண்டு அவர் செய்த போராட்டங்கள் அந்த ஊரையே தலை நிமிரச் செய்தது.படிப்பறிவில்லாத மக்களை படிப்பறிவை நோக்கி ஓட வைத்தவர்.அந்த ஊரில் பள்ளிக்கூடமும் ரேஷன் கடையும் வர போராடுகிறார்.இதையெல்லாம் குழந்தைகளுக்கு சொல்லும் போது ரியல் ஹீரோ யாரு ரீல் ஹீரோ யாரு என்பதை நாம் புத்தகங்கள் மூலமாக குழந்தைகளுக்கு கடத்தலாம் என்பதை இக்கதை கூறுகிறது.
கனவைக் காத்த மனிதர் கதையில் வரும் செருப்பு தைத்து அதை வியாபாரம் செய்யும் ஶ்ரீராமுலு தாத்தா சிறுவயதில் வறுமை காரணமாக தனக்கு கிடைக்காத கல்வியினால் அவர் அடைந்த அவமானங்கள் எண்ணி கவலைப்படுகிறார். தன் ஊரில் எந்த குழந்தையும் படிப்பை விட்டுவிடக்கூடாது.என் சமுதாயம் முன்னேற கல்வி தேவை.அது அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.அதிகாரத்துடனான கல்வி கிடைக்க வேண்டும்.அதுவரை எங்களுக்கு விடுதலை கிடையாது என்பதை உறுதியாக கொண்ட ஶ்ரீராமுலு தாத்தாவிற்கு எந்த குழந்தை விளையாடினாலும் பிடிக்காது.எப்போதும் அவர்களை விரட்டிக்கொண்டே இருக்கிறார்.படி படி என்று கூறிக்கொண்டே இருக்கிறார்.கல்வி தான் இந்த சமூகத்திற்கான விடுதலை என்பது மீண்டும் இக்கதையின் மூலம் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார் ஆசிரியர்.
நவீனமயமாக்கல், தொலைதொடர்பு,வேலைவாய்ப்பு என என்னதான் நாம் நகரங்களை நோக்கி போனாலும் கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு. கிராமங்களில் இருக்கும் அமைதி,சுத்தமான காற்று,மண்வாசனை ,சாலை எங்கும் நிழல் தரும் மரங்கள் ,காலில் செருப்பிலாமல் நடப்பது கூட ஒரு வித மகிழ்ச்சியை கொண்டாட்டத்தை அளிக்கும் என்பதை கிராமத்து வெயில் கதை கூறுகிறது. நல்ல வெயிலில் கால் சுட சுட நடந்து சென்று உயரமான பனை மரங்களை ஏறி நுங்குகளை பறித்து போட்டு நண்பர்கள் ஒன்றாக அமர்ந்து நுங்குகளை சீவி அதில் வரும் நீரை முகமெல்லாம் பூசிக்கொண்டு சிரித்து பேசி விளையாடிய காலங்கள் கிராமத்து குழந்தைகளுக்கு மட்டுமே உண்டு.அது மட்டுமா நுங்கெல்லாம் சாப்பிட்டு முடித்து விட்டு அதிலேயே வண்டி செய்து தெருவெல்லாம் விளையாடியதும் கிராமத்து வெயில் கதை நியாபக படுத்தி செல்கிறது.
வறுமையின் காரணமாக பள்ளிக்கு செல்லாமல் ஆடு மேய்த்து கொண்டிருக்கும் அன்பு தனக்கு கிடைத்த கல்வியை பயன்படுத்தி எப்படி உணர்ந்தான். போன்ற கதைகள் எல்லாமே கல்வியை மையப்படுத்தியே உருவாக்கப்படுத்தி இருப்பது சிறப்பாக உள்ளது.
புத்தக மாமா கதை கூட எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.வெளியூரில் இருந்து வரும் மாமா மாணவர்களுக்கு புத்தக வாசிப்பை ஏற்படுத்தும் விதம்,குழந்தைகள் அதன் மூலம் வாசிப்பை எப்படி பழகிகொண்டார்கள்.என்பதை கு அழகிரி சாமி எழுதிய அன்பளிப்பு புத்தகத்தை முன்வைத்து ஒரு கதையை உருவாக்கி உள்ளார். உதய சங்கர் தோழர் எழுதிய அதனின் பொம்மை புத்தகத்தை கதைகளுக்குள்ளே அறிமுகப்படுத்தி இருப்பது சிறப்பாக இருந்தது. புத்தக மாமா கதையில் வரும் அந்த மாமா கதாபாத்திரம் அநேகமாக தோழர் தேவேந்திரன் தான் என்று நான் நினைக்கிறேன்.
இப்படி நல்ல நல்ல கதைகளை சிறுவர்கள் புரிந்து கொள்ளும் வகையிலே எளிய எழுத்து நடையில் அளித்துள்ளார் தோழர் அமுதன் தேவேந்திரன்.எழுத்துலகில் இன்னும் பல உயரங்களை அடைய வேண்டும்.நல்ல படைப்புகளை படைக்கவேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.
புத்தகத்தில் முக்கியமாக குறிப்பிட நினைத்த ஒன்று அதில் உள்ள ஓவியங்கள். ஒவ்வொரு ஓவியமும் உயிருள்ளதாக இருந்தது. எங்கள் கிராமத்தையும் அதில் உள்ள கதாபாத்திரங்களையும் அப்படியே பிரதிபலித்ததாக இருந்தது. அட்டைப்படமும் சொல்வதற்கு வார்த்தைகள் அற்றதாக இருந்தது. அட்டை வடிவமைப்பு செய்த ஜாப் ஆபிரகாம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
புத்தகத்தை அனைவரும் வாங்கி படியுங்கள்.உங்கள் குழந்தைகளுக்கு வாங்கி பரிசளியுங்கள்.நன்றி
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | கனவைக் காத்த மனிதன் |
| தொகுப்பாசிரியர்: | அமுதன் தேவேந்திரன் |
| வெளியீடு: | அறிவியல் வெளியீடு |
| விலை: | ₹.60 (5% Discount price was: ₹.57 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 நளினி |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
தொடர்புக்கு: 9444960935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

