எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் (C. S. Chellappa) 'சாயல்' சிறுகதையை (Sayal Short Story) முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை

சி.சு.செல்லப்பாவின் ‘சாயல்’ சிறுகதை

எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் (C. S. Chellappa) ‘சாயல்’ சிறுகதை-யை (Sayal Short Story) முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை

கேலிப் பேச்சும் குழந்தை மனமும்

– மணி மீனாட்சிசுந்தரம்

பிறரது மனநிலையைக் கருத்தில் கொள்ளாமல் அவர்களது உருவத்தைப் பார்த்துக் கேலி பேசிச் சிரிப்பது நம் பொதுவான பண்பாக இருக்கிறது.’உருவு கண்டு எள்ளாமை வேண்டும் ” என்ற வள்ளுவனின் குரல் இப்பண்பின் தொன்மையை ஒலித்த படியே இருக்கிறது.

பள்ளியில் மாணவர்கள் தமக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர்கள் படித்து ஏற்கனவே பல பட்டங்களைப் பெற்றிருந்தாலும் புதிய பட்டங்களைத் தருவதற்குத் தயங்குவதில்லை. ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட அந்தப் பட்டப் பெயர்களை ஆசிரியர்கள் அறிந்தும் அறியாமலும் இருப்பர். மாணவர்களிடையே அந்தப் பட்டப் பெயர்கள் சர்வ சாதரணமாகப் புழங்கும். பொதுவாக ஆசிரியர்களின் உருவம், நடவடிக்கை தொடர்பாகவே அப் பட்டப் பெயர்கள் இருக்கும். பெரியவர்களிடமிருந்து சிறுவர்களுக்குத் தொற்றிக் கொண்ட பழக்கம் அது. மிகப் பொருத்தமாகப் பெயர் சூட்டும் மாணவர்களின் திறன் நம்மை வியப்பிலும் சிரிப்பிலும் ஆழ்த்தும்.

அதேபோன்று, ஆசிரியர்களும் மாணவர்களைப் பட்டப் பெயர் சொல்லி அழைப்பதுண்டு. ஆசிரியருக்குரிய பட்டப் பெயர்களை மாணவர்கள் மறைவாகச் சொல்லிக் கொள்வதுபோல் அல்லாமல், ஆசிரியர் நேரடியாகவே சம்பந்தப்பட்ட

மாணவனைப் பட்டப்பெயர் சொல்லி அழைப்பார். ஆசிரியர் வைக்கும் பட்டப்பெயர்கள் பெரும்பாலும் மாணவனின் உருவம்,முக உறுப்புகள்,நிறம் தொடர்புடையவை.

மாணவனை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கம் அதில் முழுமையாக இருக்காது என்றாலும் மாணவர்களுக்கு அதில் எப்போதும் வருத்தமே ஏற்படும்.ஆசிரியர் மீதுள்ள அன்பு காரணமாகவும் மதிப்பு காரணமாகவும் மாணவர்கள் அதைப் பொறுத்துக் கொள்வர்.இக்காலத்தில் இப்பழக்கம் வெகுவாகக் குறைந்து விட்டாலும் கருமேகங்களுக்கிடையே ஆங்காங்கே மின்னும் விண்மீன்களைப் போல இருக்கத்தான் செய்கிறது.

வீடுகளிலும்கூட உரிமை,அன்பு மிகுதியால் பெரியவர்களிடமும் இந்தப் பழக்கம் உண்டு. ஆனால், பெரியவர்களின் விளையாட்டுத்தனமான‌ இச்செயல் குழந்தைகளிடம் எவ்விதமான நடத்தை மாற்றத்தை விளைவிக்கும் என்பதை அவர்கள் உணர்வதேயில்லை.

அப்பிரச்சனையை மிக நுட்பமாக உணர்த்தும் சிறுகதையே எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் (C. S. Chellappa) ‘சாயல்’.

“சௌம்யா ,கருவுற்றிருக்கிற தனது அம்மாவின் வயிற்றைப் பார்த்து, ‘ஏம்மா, நீ இன்னக்கி நிறைய சாப்பிட்டியா? உன் வயிறு ரொம்பப் பெரிசாக இருக்கே’எனக் கேட்கிறாள்.”

“குழந்தைக்குச் சமாளிப்புப் பதில் சொல்ல அம்மாவுக்கு வக்கணையாக வார்த்தைகள் சட்டெனத் தோன்றவில்லை.”

“ஆமாம் டாக்டர் என்னை நிறைய சாப்பிடச் சொல்லியிருக்கார்.உனக்கு

அம்பி பாப்பா வேணுமோல்லியோ அதுக்காக.”

அம்பி பாப்பா என்றைக்குப் பிறக்கப் போகிறான் என்று அம்மாவைக் கேட்டபடி இருக்கிறாள் சௌம்யா.

ஆனால், அத்தை அவள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் ” சௌம்யா அம்பி பாப்பா பிறக்கப்போகிறான் பாரு.உன்னை வெளுத்துக்கட்ட” என்று சௌம்யாவைச் சீண்டிக் கொண்டிருக்கிறாள்.

நாள்கள் ஓடுகின்றன.ஒரு நாள் அப்பாவும் அத்தையும் அம்மாவை மருத்துவமனைக்குக் கூட்டிக்கொண்டு போகிறார்கள். அம்பி பாப்பா பிறக்கப் போவதாகச் சொல்கிறார்கள்.சௌம்யா மகிழ்ச்சியில் ‘அம்பி பாப்பா அம்பி பாப்பா ‘ என்று கூறிக்கொண்டே விளையாட்டில் முனைகிறாள்.

மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்த அத்தை, அம்மாவுக்கு அம்பி பாப்பா பிறந்திருப்பதாக சௌமியாவிடம் கூறுகிறாள். அதோடு இன்னொன்றையும் கூறுகிறாள்.

“இந்தச் சௌம்யாவே தான் அது… இந்த மொண்ணை மூக்கு..இதே கன்னம்,சப்பை வாய்…’ என்று சௌம்யாவின்‌ மூக்கைப் பிடித்தும் கன்னத்தைக் கிள்ளியும் கேலி செய்கிறாள். அம்பி பாப்பா பிறந்த சந்தோசத்தில் இந்தக் கேலி சௌம்யாவுக்கு உறுத்தவில்லை.

மாலையில் அப்பா சௌம்யாவை அம்பி பாப்பாவைப் பார்க்க மருத்துவமனைக்குக் கூட்டிக்கொண்டு போகிறார்.”சௌம்யாவைத் தூக்கி அம்மா பக்கத்தில் நெளிந்து கொண்டிருந்த அம்பி பாப்பாவை அப்பா அவளுக்குக் காட்டினார். அப்பா குழந்தையை நன்றாகப் பார்த்துவிட்டு, சௌமியாவின் மூக்கைப் பிடித்துக்கொண்டே இதே மூக்குதான்,அதே உப்பக் கன்னம்தான்! என்று கன்னத்தையும் திருகினார்.’போங்க அப்பா’ என்று சௌம்யா அப்பா கையைத் தள்ளினாள்”.

அத்தையும் சத்தமாக சிரித்துக்கொண்டே சௌம்யாவை நெருங்குகிறாள்.அத்தையின் குறி தன் மூக்காகத்தான் இருக்கும் எனப் புரிந்துகொண்ட சௌம்யா உடனே தன்னுடைய மூக்கை மூடிக்கொள்கிறாள்.அத்தை விடவில்லை.” நீ ஒரு உப்பக் கன்னி, அவன் உப்பக் கண்ணன்” என கன்னத்தைத் தடவுகிறாள்.

அம்மா படுக்கையிலிருந்தபடி,”என்னத்துக்கு எல்லோருமாகக் குழந்தையைச் சீண்டுகிறீர்கள். பாவம், சௌம்யா, அவர்கள் சொல்லிட்டுப் போகட்டும்.என் அழகு எனக்குப் போதும்னு சொல்லிடு” என்கிறாள். தாயின் சமாதானத்தை சௌம்யாவின் மனம் ஏற்கவில்லை.அதற்குப் பிறகு அவள் அம்பி பாப்பாவையும் பார்ப்பதற்குத் தவிர்த்துத் தந்தையுடன் வீடு திரும்புகிறாள்.

அதற்கடுத்த ஒவ்வொரு நாளும் உறவினர்களும் சுற்றத்தாரும் குழந்தையைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்தவர்கள் வீட்டுக்கும் வருகிறார்கள்.” ஒவ்வொருவரும் சொல்லி வைத்தாற்போல சௌம்யாவிடம் வருகிறார்கள்.எல்லாம் இவளே மாதிரிதான் அவனும் மொண்ணை மூக்கு….இப்படி,அவள் மூக்கைப் பிடிக்க வந்து கன்னத்தைத் திருகி அவளிடம் கொஞ்சுகிறார்கள்.”

” சௌம்யாவின் மென்மையான இருதயம் இதுக்குமேல் இந்த விதக் கொஞ்சலைத் தாங்க முடியவில்லை.இந்தக் கேலி அலுக்கும்படியாக ஆகி அவளுக்குள் ஆழப்பதிந்து புண்ணாகிவிட்டது. இதற்குமுன் யாரும் இப்படி அவளைக் குத்திக்காட்டினதே இல்லை. அத்தைகூட எப்போதாவதுதான் சொல்லிக் காட்டுவாள். இப்போது அம்பி பாப்பாவினாலே எல்லோரும் அவளைச் சொல்லிக் காட்டினால்?”

அம்பி பாப்பாவைப் பார்க்க அப்பா அழைத்தபோதெல்லாம் சௌம்யா மறுக்கிறாள்.அவனைப் பற்றி நினைக்கிறபோதெல்லாம் ‘ மொண்ணை மூக்கும் உப்பக் கன்னமும் சப்பை வாயும்தான்’ அவளுக்கு நினைவுக்கு வருவதால் வர மறுக்கிறாள்.

சௌம்யாவிட சில ஆண்டுகள் மூத்தவனான ரமணியிடம் ” இந்த அம்பி பாப்பா ஏன் பிறந்தான்?” என்று கசப்புடன் கூறுகிறாள்.அவன் என் மாதிரி இருக்கிறதுனாலே தானே மொண்ணை மூக்கு சப்பை வாய்ன்னு எல்லோரும் என்னைச் சும்மா சும்மா சொல்றா” என்கிறாள். சிறுவனான ரமணி சௌம்யாவின் மனது புண்பட்டிருப்பதை உணர்கிறான். அவளைச் சமாதானப்படுத்த அவனால் முடியவில்லை.” அவன் வயதுக்கு மீறிய பிரச்சனையாக அது இருந்தது”.
பேச்சை மாற்றுவதற்காக மதுரைப் பாட்டி நாளை வீட்டுக்கு வரப்போவதாகக் கூறுகிறான்.

“பாட்டியும் என் கன்னத்தைத் திருகுவாள்?” என்கிறாள் சௌம்யா.

“அந்தப் பாட்டி நல்லவா.அதெல்லாம் செய்யவே மாட்டாள். அவளிடம் இந்தப் பிரச்சனையைக் கூறலாம்” எனச் சமாதானப்படுத்துகிறான் ரமணி.

அம்மாவை வீட்டுக்கு அழைத்துவரும் நாளன்றும் சௌம்யாவை அவள் அப்பா மருத்துவமனைக்குக் கூப்பிடுகிறார்.அன்றும் வர மாட்டேன் எனப் பிடிவாதம் பிடிக்கிறாள். மீண்டும் குழந்தையின் முகத்தைத் தன்னோடு ஒப்பிட்டுத் தன் கன்னத்தைத் தடவ வரும் அத்தையின் கைகளை ” விடுங்கோ அத்தை சும்மாச் சும்மா கன்னத்தைக் கிள்ளிண்டு” எனத் தட்டி விடுகிறாள்‌. அப்பாவுக்குச் சௌம்யாவின் நடவடிக்கைகள் வருத்தமளிக்கின்றன.

“ஏன் இவள் இப்படி நடந்து கொள்கிறாள்?” என்றதும் அத்தை, “சில குழந்தைகள் அப்படித்தான் இருக்கும். அடுத்தது பிறந்துவிட்டால் சகிக்காது. வித்தியாசப்பட்டுக்கொள்ளும்” என்கிறாள்.

பெரியவர்கள் தாம் செய்கின்ற தவறை உணராமல் சின்னக் குழந்தையின் மீது பழி கூறுகின்றனர். பெரியவர்கள் தம் மனம்போன போக்கில் குழந்தைகளிடம் நடந்து கொள்வதால் குழந்தைகள் மனம் பாதிக்கும் என நினைப்பதில்லை.

பெரியவர்கள் குழந்தைகளிடம் விளையாடுவதாக எண்ணிக் கொள்கின்றனர். ஆனால்,பெரியவர்களின் விளையாட்டைக் குழந்தைகள் எப்பொழுதும் விளையாட்டாக எடுத்துக் கொள்வதில்லை.

அம்பி பாப்பாவும் அம்மாவும் வீட்டுக்கு வந்துவிடுகிறார்கள். அதைத் தூர இருந்தே சௌம்யா பார்க்கிறாள்.அம்மாவும் அம்பி பாப்பாவும் இருக்கும் தனியறையில் குடும்பத்தினர் அனைவரும் கலகலப்பாகப் பேசிச் சிரித்தபடி இருக்கின்றனர். சௌம்யா அறைக்குள் செல்ல நினைத்தாலும் தன் மூக்கும் கன்னமும் நினைவுக்கு வரவே அங்கு போவதைத் தவிர்க்கிறாள்.

அம்மா பலமுறை அழைத்தும் அந்த இரவு வரை சௌம்யா அம்பி பாப்பா இருந்த அறைக்குள் கால் வைக்கவில்லை.

அடுத்த நாள் பாட்டி ஊரிலிருந்து வருகிறார். சௌம்யா பாட்டியின் முகத்தையே பார்த்தபடி இருக்கிறாள். பாட்டி வந்த சில மணிநேரம் கழித்து தனியே இருந்த பாட்டியிடம் ரமணி சௌம்யாவுக்கு நடந்ததைக் கூறுகிறான்.

ரமணி சொன்னதை எல்லாம் ஒரு இளஞ்சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்த பாட்டி ,” பாவம் குழந்தை எதற்கு அப்படி நோகப் பண்ணனும்” என்று சௌம்யாவின் தலையைத் தடவிக் கொடுத்துவிட்டு சௌம்யாவின் அப்பாவையும் அத்தையையும் கூப்பிட்டு “நன்றாகக் குழந்தையைக் கரித்திருக்கிறீர்கள்.பாவம் அதுக்கென்ன புரியும் உங்கள் கேலி எல்லாம்.அதன் முகத்தையும் வாயையும் நன்னா பழிச்சேள்” என்று கண்டிக்கிறாள்.

அப்பாவும் அத்தையும் நமுட்டுச் சிரிப்புடன் மீண்டும் ஏதோ சொல்ல வாயெடுக்க, ” இந்தப் பாட்டிக்கும் மூக்கு அப்படித்தானே இருக்கு.சப்பை வாய்.இந்தோ” என பாட்டியின் முகத்துக்கு நேராகக் கையை நீட்டிக் கூறிவிடுகிறாள் சௌம்யா.

சௌம்யாவின் இந்தச் செயல் அப்பாவுக்கும் அத்தைக்கும் தர்மசங்கடத்தை உண்டாக்கி விடுகிறது.உண்மையில் அப்பா,அத்தையின் தாயான பாட்டியின் முகத்தை உரித்தபடி பிறந்தவள் சௌம்யா.தாம் குழந்தையைக் கூறிய கேலி வார்த்தைகள் தம் தாயை தொட்டு நிற்பதை உணர்ந்து அவர்கள் ஒன்றும் கூற முடியாமல் நெளிகிறார்கள்.

” பெரியாவாளை அப்படியெல்லாம் சொல்லக் கூடாது” என்கிறான் ரமணி.

“ஏன் பாட்டி, சின்னவாளையும்தானே கேலி பண்ணக்கூடாது?” என்ற சௌம்யாவை அணைத்துக் கொள்கிறாள் பாட்டி.

” நீ சின்னவளா இருக்கிறப்போ உன்னையும் இப்படித்தானே கேலி பண்ணினா இல்லையா பாட்டி ? என்ற சௌம்யாவின் கேள்விக்குத் திடுக்கிட்டு விடுகிறாள் பாட்டி.

” பாட்டிக்குத் தான் குழந்தையாக இருந்தபோது தன்னை அப்படிக் கேலி செய்தது தெளிவாக ஞாபகத்துக்கு வந்ததோ இல்லையோ,புக்காத்திலே மாமியார் ஒரு சமயம் பழித்துச் சொன்னது பளிச்சென நினைவில் கொப்பளித்து மேலே வந்தது.சில வினாடிகள் அந்தப் பழைய சம்பவ நினைப்பிலே ஆழ்ந்துவிட்டாள்”.

” நாளைக்கி அம்பி பாப்பா என் மாதிரி பெரியவனானப்புறம் அவனையும் இப்படித்தான் கேலி பண்ணுவாளா?” என்று கவலை தொனிக்கும் குரலில் கேட்கிறாள் சௌம்யா.

” ஆமாம் பண்ணுவா.சொல்லிவிட்டுப் பாட்டி சௌமியாவின் முகத்தை உற்றுக் கவனித்தாள். என்னையும் உன்னையும் கேலி பண்ணின மாதிரி என்று சேர்த்தாள்”.

ஏதோ தீவிர யோசனையில் ஆழ்ந்த சௌமியாவை அழைத்துக் கொண்டு பாட்டி, அம்பி பாப்பா இருக்கிற அறைக்குள் நுழைகிறாள் .
” ஏண்டி கண்ணு, பாட்டி கூடத்தான் அம்பி பாப்பாவைப் பார்க்க வரணும்னு இருந்தியா?” என்று அம்மா கேட்டதைக்கூட லட்சியம் செய்யாமல் சௌம்யா குழந்தையைக் கூர்ந்து கவனிக்கிறாள்.அம்பி பாப்பாவின் முகத்தின்மீது பதிந்த விழிகள்,அவனது மொண்ணை மூக்கும் சப்பை வாயும்!”

” என்ன அப்படிப் பார்க்கிறே குழந்தையை?” பளிச்சென்று சௌம்யா பேசினாள்.

“அம்பி பாப்பாவை யாராவது மொண்ணை மூக்கு, சப்பை வாயின்னு சொல்லட்டும், பாரு!”

“என்ன பண்ணுவே”

“என்னவோ பண்ணுவேன். அப்போ சொல்ல மாட்டேன்!”குரலில் ஒரு அழுத்தம். சொல்லிவிட்டு வெளியே ஓடுகிறாள் சௌம்யா.

மாமியாரும் மருமகளும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொள்கிறார்கள்.

” குழந்தைகளிடம் விளையாடுவது நெருப்போடு விளையாடுகிற மாதிரி.நம் கேலியால் அதுகள் மனம் கருகும்படி ஆகிவிடக் கூடாது” என்று பாட்டி கூறுவதுடன் கதை முடிகிறது.

இக்கதையில் குழந்தைகளின் மனநிலையை நன்கு புரிந்து எதிர்வினை செய்பவர்களாகக் குழந்தைகளே இருக்கின்றனர்.சௌம்யாவின் வருத்தத்தை ரமணியே புரிந்துகொள்கிறான் ; பாட்டியிடம் கூறுகிறான். பாட்டி முதலில் அதைச் சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும்,அக்கேலி தன்னைச் சுட்டித் தொடங்குவதை அறிந்தே தீவிரமாகிறாள். கடைசியில் சௌம்யா தனக்கும் தன் பாட்டிக்கும் நேர்வது தன் தம்பிக்கும் நேரக் கூடாது என முடிவெடுக்கையில் மற்ற எல்லோரையும் விடத் தனித்தும் உயர்ந்தும் நிற்கிறாள்.

கதையில் ஓரிடத்தில் அத்தை பாட்டியிடம், “அம்மா, கேலியை இது எவ்வளவு நிஜமாக எடுத்துக் கொண்டுவிட்டது பாரேன்” என்கிறாள்.
அதற்குப் பாட்டி, ” கேலியும் நிஜமும் குழந்தை உலகத்தில் ஒன்றுதான்” என்கிறாள்.

இந்த வரிகளின் தீவிரத்தைப் பெரியவர்கள் அனைவரும் உணரத்தான் வேண்டும்.

கட்டுரை ஆசிரியர் குறிப்பு:

மணி மீனாட்சி சுந்தரம், மதுரையில் அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழக அரசின் புதிய பாடநூல் உருவாக்க ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். அகில இந்திய வானொலியிலும், மதுரைப் பண்பலையிலும் நூல் விமர்சனம், சுற்றுச்சூழல் பற்றிய உரைகளைத் தொடர்ந்து வழங்கி வருபவர். முகநூல் குழுக்களில் தொடர்ந்து இலக்கியம் சார்ந்து இயங்கி வருபவர்.

உதவிய நூல் :

1.சி.சு.செல்லப்பா (C. S. Chellappa) சிறுகதைகள் (தொகுப்பாசிரியர் – பேரா.காவ்யா சண்முகசுந்தரம்),காவ்யா,சென்னை – 24

 

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 2 Comments

2 Comments

  1. நாகேந்திரன் இ

    சாயல் சிறுகதை நுட்பமான சிந்தனைகள் நிறைந்த கதையாக இருக்கிறது ஐயா. அதனில் உங்கள் பார்வை… தேர்வு… மிகவும் சிறப்பு ஐயா . வாழ்த்துகள்

  2. உயிரோட்டம் உள்ள கதை, கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் ,இதுவும் உண்மை, சிறுவயதில் தெருக்களின் கூட்டமாகவிளையாடும்போது உண்மை பெயர்மறைந்து பட்டப்பெயர்களை அழைப்பார்கள், ஆனால் இன்று அவற்றிற்கு இடமில்லாமல் போனது, குழந்தையை நாம் பொத்தி பொத்தி வளர்கின்றோம் தெருக்களில் விளையாட அனுமதி இல்லை, உண்மையான உறவுகள் இல்லை, ஆதனால் இன்றைய பொழுது குழந்தைகள் எதையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமல் வாழ்கிறார்கள். பெற்றோர்களிடம் அடம் பிடித்துக் கொள்கிறார்கள்,இன்றைய நவீன உலகில் தொலைக்காட்சி,செல்போன் குழந்தைகளை முடங்க வைக்கிறது.வீட்டிற்கு வரும் உறவினர்களை குழந்தைகளுடன் சகஜமாக பழக நாம் முன்வர வேண்டும்.விருந்தினர் வரும்போது குழந்தையை தனியாக அறைக்கு அனுப்பக் கூடாது, சிறந்த கதை நெகிழ வைக்கிறது. இன்றைய மாணவர்களின் மன வலிமையை அதிகப்படுத்த இது போன்ற கதைகளை தரலாம்.
    , நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *