எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் எழுதிய குட்டன் பிள்ளை சார் (Kuttan Pillai Sir) சிறுகதையை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை - https://bookday.in/

தோப்பில் முகமது மீரான் (Thopil Mohammad Meeran) எழுதிய ‘குட்டன் பிள்ளை சார்’ சிறுகதை

எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் (Thopil Mohammad Meeran) எழுதிய ‘குட்டன் பிள்ளை சார்’ சிறுகதையை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை

இதைவிட வேறென்ன பெருமை வேண்டும்?

-மணி மீனாட்சிசுந்தரம்

இலக்கியம் எப்போதும் சிறப்பான ஒன்றையே முன்வைக்க விரும்புகிறது. கண்டதைச் சொன்னாலும் நம் கதைகளையே சொன்னாலும், ஓடுகிற மீன்களில் உறுமீனைக் கண் வைத்திருக்கும் கொக்கு போல,பொதுவானவற்றைக் காட்சிப்படுத்தி, அதில் சிறப்பான ஒன்றைக் கற்றுக்கொள்ள, உணர்ந்துகொள்ள வாசகனைத் தூண்டுகிறது.பிடிவாதமான, அடம்பிடிக்கும் குழந்தையை ஒத்த இப்பண்பு இலக்கியத்தையும் சமூகத்தையும் முன் நகர்த்துகிறது.

எல்லோருக்குள்ளும் நினைவுகள் ஒளிர்ந்து கொண்டே இருக்கின்றன. மாணவப் பருவத்தில் நமக்குக் கற்பித்த ஆசிரியர்களும் அந்நினைவில் ஒளிர்கிறார்கள். ஆனால், நமக்குக் கற்பித்த எல்லா ஆசிரியர்களும் அல்ல.

ஒரு மாணவனுக்குக் குறிப்பிட்ட சில ஆசிரியர்களை அல்லது ஆசிரியரை மட்டும் பிடித்துப் போவதற்கான காரணங்கள் அந்த மாணவனைப் போலவே தனித்தன்மையானவை.

எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் எழுதிய குட்டன் பிள்ளை சார் (Kuttan Pillai Sir) சிறுகதையை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை - https://bookday.in/

இயக்குநர் சேரனுக்கு முதல் வகுப்பெடுத்த மல்லிகா டீச்சர் நினைவில் நிற்கிறார்.மேனாள். குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் ஐயாவுக்கு மூன்றாம் வகுப்பு ஆசிரியர் சுப்பிரமணியமே உடனடியாக நினைவுக்கு வருகிறார். எழுத்தாளர்களில் தியோடர் பாஸ்கரனுக்குக் காளியப்ப கவுண்டரும், பிரபஞ்சனுக்குத் திருநாவுக்கரசும்,’ஆயிஷா நடராஜனுக்குப் பெரியசாமி வாத்தியாரும்,அறிவியலாளர் த.வி.வெங்கடேசுவரனுக்குச் சங்கரன் சாரும்,தமிழ்த் தாத்தா உ.வே.சாவுக்கு எப்போதும் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையுமென, ஒவ்வொரு மாணவப் பருவத்தின் உள்ளமும், குவிந்த கைகளுக்குள் சிறகடிக்கும் பட்டாம்பூச்சியின் சிறகசைப்பாய் தம் ஆசிரியர் நினைவுகளை மீட்டியபடியே உள்ளன.

ஒரு ஆசிரியரின் நினைவு ஒருவனுக்கு வாழ்நாள் முழுதும் தொடர வேண்டியதன் நிர்பந்தம்தான் என்ன? சம்பளம் வாங்கிக் கொண்டு தன் பணியைச் செய்யும் தொழிலாளி தானே ஆசிரியரும். ஒருவருடைய வாழ்வின் பல்வேறு தொழில்களில் உடன் வரும் வேறு எவரும் ஆசிரியரைப்போல் நினைவில் மேலெழும்பி நிற்கின்றனரா? இருக்கலாம். ஆனால், ஒருவனின் சிறுவயது முதல் அவன் மனத்தில் சிம்மாசனமிட்டு அமரும் வாய்ப்பு ஆசிரியருக்குத்தான் வாய்த்திருக்கிறது. எழுத்தாளர் தோப்பில் முகமது மீரானுடன் உடன்வரும் குட்டன்பிள்ளைக்கும் அது வாய்த்திருக்கிறது.

எழுத்தாளர் தோப்பில் முகமது மீரானின் ‘குட்டன் பிள்ளை சார்'(Kuttan Pillai Sir) சிறுகதை இப்படித் தொடங்குகிறது.

” புளியமார் கொண்டு தொடையிலும் கைப்படத்திலும் பளார் பளார் என்று

‘வீக்கும்’ குட்டன் பிள்ளை சார் இப்பவும் மனத்தில் நிறைந்து நின்று கொண்டிருக்கிறார்”.

கதையை வாசிக்கத் தொடங்குபவருக்கு இவ்வரிகள் அதிர்ச்சியைத் தரலாம்.தன்னை இப்படி அடித்த ஆசிரியரை ஒருவர் எதற்காக நினைவில் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது.

கதையைக் கூறும் மீரான் பிள்ளை தாம் படித்த பள்ளிக்கு நம்மை அழைத்துச் சென்று அவருடைய ஆசிரியர்களை அறிமுகம் செய்கிறார்.

” கப்டா மீசையும், ஜிப்பா சட்டையும் குள்ளமான குட்டம் பிள்ளை சாருக்கு எடுப்பாகவே இருக்கும்.குட்டம் பிள்ளை சாருடைய வகுப்பில் எல்லோரும் கப்சிப்.அவர் வகுப்பை விட்டு வெளியே கிளம்பும் வரை குலை நடுங்கிக்

கொண்டிருக்கும். கம்பை எடுத்து அக்குளில் இடுக்கிக் கொண்டு அவர் வெளியே கால் வைத்தால்தான் மூச்சு நேராக வரும்.”வலிக்காமல் வட்டக்கொண்டை போட்ட அப்பாவி ஆனந்தவல்லி டீச்சர், அடிக்காமல் கதை சொல்லித் தரும், இனிமையாகப் பாடும் மூக்குத்தி அணிந்த இந்தி டீச்சர் பாருக்குட்டி அம்மா, சிடு மூஞ்சி கருணாகரன் நாயர்,”குணுங்கிக் குணுங்கி ஸ்டைலாக நடந்துவரும் மீனாட்சி அம்மா டீச்சர் ” ஆகியோரைக் கொண்ட வகுப்பு அது.

அவர்களில் மீனாட்சி டீச்சர் பெரிய வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் நடத்துபவர். “வாராண்டா வழியாக மெலிந்த உடல் அசைத்து மீனாட்சி டீச்சர் நடந்து போனாலே வகுப்பு அறைக்குள் ரோஜாப்பூவின் வாசம் சிறுதுநேரம் கட்டி நிற்கும்”.அப்படிப்பட்ட மீனாட்சி

டீச்சர் ஆறாம் வகுப்புக்குள் நுழைந்ததும் “வகுப்பு மாறி வந்து விட்டாரோ?” என மாணவர்களுக்கு ஆச்சரியம்.குட்டன் பிள்ளை சார் (Kuttan Pillai Sir) பள்ளிக்கு வராததால் தலைமையாசிரியர் மாணவர்களைச் சத்தம்போடாமல் பார்த்துக்கொள்ள அவரை அனுப்பி வைத்திருக்கிறார்.

பாடம் இல்லாத வகுப்பறை எப்போதும் ஆசிரியருக்கும் மாணவருக்கும் விடுதலை உணர்வையும் மகிழ்ச்சியையும் தரும்.அங்குப் பாட்டுக்கும் கதைக்கும் பஞ்சமிருக்காது.

இங்கும் அதுதான் நடக்கிறது.மீனாட்சி டீச்சர் “யாருக்குப் பாடத் தெரியும்?” என்று கேட்கிறார்.மாணவர்கள் எல்லோரும் மீரான் பிள்ளையை எழுப்பி விடுகிறார்கள்.

“பாடப்பா, வெட்கப்படாமல் பாடு”

என்கிறார் டீச்சர்.பாடச் சொல்வது மீனாட்சி டீச்சர் அல்லவா? ஒருத்தி வறுமை தாங்க முடியாத நிலையில் மூன்று குழந்தைகளைக் கிணற்றில் தள்ளித் தற்கொலை செய்து கொள்கிறாள்.அதற்குமுன் “பசி தாளாமல் செல்வந்தர் வீட்டு வாசலில் ஒரு பிடி அரிசிக்காகக் கெஞ்சிக் கேட்கும் காட்சியை வருணிக்கும்” பாடலைப் பாடுகிறான் மீரான் பிள்ளை.

“கண்ணோரத்தில் கசிந்த நீரை சேலை முந்தானையால் டீச்சர் துடைப்பதைக் கண்டு கடலளவு ஆனந்தம்” கொள்கிறான் மீரான் பிள்ளை.’நல்ல பாட்டு’ என ஆசிரியர் பாராட்டுகிறார். கிடைத்த முதல் பாராட்டு.நடையாலும் உடையாலும் சிலிர்க்க வைக்கும் மீனாட்சி அம்மா டீச்சர் பாராட்டு என்றால் கேட்கவா வேண்டும்.

மீரான் பிள்ளை பள்ளிக்கூடம் விட்டதும் ஒடோடி வீட்டுக்குச் சென்று வீட்டிலிருந்த தேங்காயை அம்மாவுக்குத் தெரியாமல் எடுத்து விற்றுக் கிடைத்த பணத்தில் இருநூறு பக்க நோட்டு ஒன்றை வாங்கி,தான் வாங்கி வைத்திருந்த பாட்டுப் புத்தகங்களில் இருந்த பாடல்களை மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்தல் விடிய விடிய எழுதுகிறான்.பிற மாணவர்கள் செய்யாத சாதனையைச் செய்துவிட்ட பெருமிதத்தோடு மறுநாள் காலையில் பள்ளிக்குக் கிளம்புகிறான்.

“அன்றும் குட்டன் பிள்ளை சார் பள்ளிக்கு வராமல் இருக்கவும், மீனாட்சி டீச்சர் வரவும்,தன்னைப் பாடச் சொல்லவும் வேண்டி வாலமஸ்தான் சாகிபு கபுரடிக்குச் (சமாதி) சென்று மூன்று மெழுகுவர்த்திகளை ஏற்றி நேர்ந்து கொள்கிறான் மீரான் பிள்ளை.

வேண்டுதலுக்கேற்ப அன்று குட்டன் பிள்ளை சார்(Kuttan Pillai Sir) பள்ளிக்கு வரவில்லை.ஆனால் அவருடைய பாடவேளையில் மீனாட்சி டீச்சர் வராமல் சிடு மூஞ்சி கருணாகரன் நாயர் வந்துவிடுகிறார். மீரானின் ஆசையில் மண் விழுந்து விடுகிறது. அவர் மண்டையில் கொட்டி கணக்குப் போடச் சொல்லிவிடுகிறார். அடுத்த பாடவேளையில் வந்த ஆனந்தவல்லி டீச்சர் மீரான் பாட்டெழுதிவைத்திருந்த நோட்டை வாங்கிக் கொண்டு போய்விடுகிறார்.

மறுநாள் குட்டம் பிள்ளை சார் மீரான் பிள்ளையின் பாட்டு நோட்டோடு வகுப்புக்கு வருகிறார்.மீரான் பிள்ளையை எழுப்பி இதெல்லாம் யார் எழுதிய பாடல்கள்? எனக் கேட்கிறார். ‘நான் எழுதியது’ எனத் தயக்கமின்றி ஓங்கிச் சொல்லி விடுகிறான் மீரான் பிள்ளை.

ஆசிரியர் போனதும்”டேய் உள்ளதைச் சொல்லிப் போடு. பொய் சொன்னால் குட்டம் பிள்ளை சார் கொன்னு போடுவார் ” என எச்சரிக்கிறான் மீராசா.
“உண்மையைச் சொல்லி இருக்கலாம். பிற மாணவ மாணவியர் முன் ஒரு கவிஞனாகக் காட்டுவதற்காகச் சும்மா சொன்ன பொய் இப்போது பெரும் வினையாகிவிட்டது.”

மதியம் ஆசிரியர் அறைக்கு மீரான் பிள்ளையைக் குட்டாம் பிள்ளை சார் கூப்பிட்டு விடுகிறார். ஆசிரியர்கள் புடைசூழ அமர்ந்திருக்கும் சாரின் கையில் மீரானின் பாட்டு நோட்.”ஒரு கவிஞனை வரவேற்கும் பாவனை படர்ந்திருந்தது அந்த அறையில்”. ஆசிரியர்கள் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி.

குட்டாம் பிள்ளை சொல்கிறார்,”மீரான் பிள்ளை, நீ எழுதிய பாடல்களெல்லாம் மிக அருமை. இப்படி ஒரு திறமை உன்னிடத்தில் இருப்பது தெரியாமல் போச்சு. நாளை வரும்போது நமதுபள்ளியைப் பற்றி ஒரு அழகான பாடல் எழுதிக்கொண்டு வா. பள்ளி ஆண்டு விழாவில் பாடலாம் “.

எல்லொரும் மீரான்பிள்ளையையே பார்க்க, நடுங்கும் குரலில் “பல பாட்டுப் புத்தகங்களிலிருந்து இந்தப் பாடல்களைத் திரட்டி நோட்டில் நான்தான் எடுத்து எழுதியது ” என மீரான்பிள்ளை உண்மையைச் சொன்னதும் அதுவரை ஆசிரியர் அறையிலிருந்த கலகலப்பு மறைகிறது.அவரவர் எழுந்து வகுப்புக்குச் செல்கின்றனர். மீரான் பிள்ளையும் குட்டம் பிள்ளை சாரும் மட்டுமே இருக்கின்றனர்.

குட்டம் பிள்ளை சார் மீரான் பிள்ளையிடம் பாட்டு நோட்டைக் கொடுத்துவிட்டு அவன் தோளைத் தொட்டு இப்படிச் சொல்கிறார்.

“மீரான்பிள்ளை, ஒரு பொய் சொல்லியாவது உன்னைக் கவிஞனாகக் காட்டிக் கொள்ள நினைத்தாயே,அதைப் பாராட்டுகிறேன்.இனி நீ ஒரு உண்மையான கவிஞனாகிவிட இன்றிலிருந்து முயற்சி செய். நிறைய நூல்கள் வாசிக்கவும்.என் கிளாஸ் மாணவன் எழுதிய பாடல்கள் என்று பெருமைப்பட்டுப் பிற டீச்சர் முன்னிலையில் உனக்கு அன்பளிப்பு தர நான் வாங்கி வந்த பேனா இது..”

பையில் இருந்து பேனாவை எடுத்து ‘இதை நீ வச்சிக்கோ’ எனத் தருகிறார்.

“வகுப்பையே திகில் அடையச் செய்யும் குட்டாம்பிள்ளை சாரா இது?”

பொய் சொன்னால் புளிய மாரால் அடித்துத் துவைக்கும் குட்டம் பிள்ளை சார் அன்று வேறு ஒருவராக நடந்துகொள்கிறார். தன்னுடைய மாணவரிடம் முளைவிடும் திறமையைக் கண்டுணர்ந்த ஓர் ஆசிரியராக அந்த நிமிடத்தில் காட்சியளிக்கிறார். இயல்பாகவே கவிதை உள்ளம் கொண்டவனாக இருந்தால்தான் இப்படிப் பாடல்களைத் தேடி ஒருவனால் எழுத முடியும் என நம்பும் ஒருவராகத் தெரிகிறார். மாணவரிடம் உள்ள உள்ளார்ந்த திறமையை வெளிப்படுத்த உதவுபவர் தானே நல்லாசிரியர்?

மீரான் பிள்ளைக்கு அழுகை வந்துவிடுகிறது.இந்த மீரான் பிள்ளையே தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரான, தோப்பில் முகமது மீரானாகப் புகழ் பெறுகிறார்.

இப்போது சொல்லுங்கள்.எந்த ஆசிரியர் மாணவனின் நினைவில் என்றென்றும் அழியாச் சித்திரமாக நிலைத்திருப்பார்.அழகான தோற்றம் கொண்டவரா? நேர்த்தியாக உடை அணிபவரா? சிரிக்கச் சிரிக்கப் பேசுபவரா? நவீன முறையில் கற்றுக்கொடுப்பவரா? பாட அறிவில் திறம் பெற்றவரா?

எந்த ஆசிரியர் ஒரு மாணவனின் உள்ளார்ந்த திறமைக்கு ஒரு வெளிச்சப் புள்ளி இடுகிறாரோ, எந்த ஆசிரியர் ஒரு மாணவனின் அறிவு விளக்கில் ஒரு சுடரைப் பற்ற வைக்கின்றாரோ, எந்த ஆசிரியர் ஒரு மாணவனின் உயர்ந்து உயர்ந்து உயர்ந்து செல்லும் ஒரு பட்டத்தின் நூலாக இருக்கின்றாரோ அவரே அந்த மாணவனின் நினைவில் நின்றெரியும் அழியாச் சுடர்.

திருவனந்தபுரத்தில் சாலை ஓரத்தில் பேருந்துக்காக நின்று கொண்டிருக்கிறார் தோப்பில் முகமது மீரான். அப்போது “தலை நரைத்து,பற்கள் ஒழிந்து போன, தொளதொள ஜிப்பா அணிந்த ஒல்லியான வயோதிகர் ஒருவர் நின்றுகொண்டிருக்கிறார். அடையாளம் தெரிந்து நான் யார் என்று அவரிடம் சொல்வதற்குள், புறப்பட்ட பஸ்ஸில் தள்ளாடி ஏறிப்போய் விட்டார், எனக்கு எழுதப் பேனா தந்த குட்டம் பிள்ளை சார்” என்பதுடன் கதை முடிவுக்கு வருகிறது.

எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் (Thopil Mohammad Meeran) சொல்கிறார்,” ஏதாவது எழுதப் பேனா எடுக்கும் போதெல்லாம் குட்டாம் பிள்ளை சாரின் நினைவு வராமல் இருக்காது. என் படைப்பு மனத்திற்குள் எங்கோ ஒளிந்து கொண்டு என்னை இயக்கிக் கொண்டிருப்பது போன்ற உணர்வு எனக்கு”.

இதைவிட வேறென்ன பெருமை வேண்டும் குட்டான் பிள்ளை சாருக்கு?!!

உதவிய நூல்கள் :

1.வேர்களின் பேச்சு (தோப்பில் முகமது மீரான்),அடையாளம் பதிப்பகம்,
திருச்சி -310.

2.கனவு ஆசிரியர் ( க.துளசிதாசன்),
புக்ஸ் பார் சில்ட்ரன்
(பாரதி புத்தகாலயம்),சென்னை – 18.

கட்டுரையாளர் :  

மணி மீனாட்சி சுந்தரம், மதுரையில் அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறேன். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நவீன கவிதை குறித்து முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளேன்.தமிழக அரசின் புதிய பாடநூல் உருவாக்க ஆசிரியர் குழுவில் பணியாற்றியவன். மதுரை பண்பலையில் ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கான ‘தேர்வுக்குத் தயாராகுங்கள்’ நிகழ்ச்சியில் நேரலையில் ஆலோசனைகளை வழங்குபவன். அகில இந்திய வானொலியிலும்,மதுரைப் பண்பலையிலும் நூல் விமர்சனம், சுற்றுச்சூழல் பற்றிய உரைகளைத் தொடர்ந்து வழங்கி வருபவன்.முகநூல் குழுக்களில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களுக்கு விமர்சனம் எழுதி வருபவன். தமுஎகச -வின் புறநகர் மாவட்ட மேனாள் செயற்குழு உறுப்பினர். நன்றி.

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 2 Comments

2 Comments

  1. Amutha

    மாணாக்கர் மனதில் நீங்கா நினைவில் வாழும் ஓர் ஆசிரியராகத் திகழ ஓர் உந்துதல் தரும் அருமையான கட்டுரை….மிக மிக அருமை ஐயா👏👏👏👏👏👏

  2. நாகேந்திரன் இ

    அருமையான பதிவு. அழகான குட்டம் பிள்ளை. மீரான் தோப்பில் முஹம்மது மீரானாக அறிவது இன்னும் சிறப்பு. வாழ்த்துகள் ஐயா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *