விளக்குகளின் சுடரொளியில் ஒரு சிற்றுலா
குளிர்கால மாலைப் பொழுது விரைவாகவே இரவைக் கொண்டு வருகிறது. வெளிச்சம் வெளியேற விடமாட்டோம் என்பது போல வீட்டு வாசல்களிலும், சுற்றுச் சுவர் மேடைகளிலும் வரிசையாய் அலங்கரித்தன அகல் விளக்குகள். படிக்கட்டுகளின் முன்பாக விளக்கு வைப்பதற்காகவே மாலையிலும் புதிதாகக் கோலங்கள் வரையப்பட்டன. சில நவீன கட்டடங்களிலும் கூட முகப்புச் சுவர்களில் விளக்குகள் வைப்பதற்கென்றே மாடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கதவோரம் விளக்குகளின் சுடர்கள் அமைதியாகத் தலையாட்டிக்கொண்டிருக்க லாவகமாக வெளியே செல்வதற்கும் வீட்டுக்குள் வருவதற்கும் ஒரு பயிற்சி தேவைப்பட்டது. களிமண் அகல் விளக்குகளோடு பிளாஸ்டிக் விளக்குகளும் அணி சேர்ந்தன. கார்த்திகை மாலையில் தெரு அழகாக இருந்தது. மாதம் முடிந்து விட்டதால் அகல்விளக்குகள் வீட்டுககுள் போய்விட, மார்கழிக் காலையின் கோலங்களிலும் சிலர் பூக்களுக்கு நடுவே சிறு குத்துவிளக்கை வைத்திருக்கிறார்கள். இன்னும் சில வீடுகளின் தாழ்வாரங்களில் தொங்கிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்களுககுக் கீழே வைத்த மெழுகுவர்த்திகள் டிசம்பர 25 நெருங்குவதைச் சொல்கின்றன.
விளக்கேற்றுவதன் நற்பலன்கள் பற்றித் தொலைக்காட்சிகளில், யூடியூப் சானல்களில், கைப்பேசி ஊடகங்களில் வந்து அறிவுறுத்திக்கொண்டிருந்தார்கள். இந்த மாதத்தில் இந்த நேரத்தில் விளக்கு வைத்தால் இந்த நன்மைகள் விளையுமென்ற போதனைகளை நம்பித் திரியேற்றுகிறவர்கள்; விளக்கு வைக்காவிட்டால் துன்பம் வந்துசேருமென்று சொல்வதைக் கேட்டுப் பயந்து செய்கிறவர்கள்; அதெல்லாம் தெரியாது, எங்கள் அம்மா செய்தது அழகாக இருந்ததால் நானும் தொடர்ந்து செய்கிறேன் என்று பின்பற்றுகிறவர்கள்; எதற்கும் இருக்கட்டும் ஏதாவது நல்லது நடக்குமென்றால் அதை ஏன் தடுக்க வேண்டுமென்று சேர்ந்துகொள்கிறவர்கள்… இப்படியாகப் பலவகை மனிதர்கள், பலவகை விளக்குகள்.
இவ்வாறு விளக்குகளை எரியவிடும் விழாக்கள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றன. பல மதங்களிலும் பண்பாடுகளிலும் கடைப்பிடிக்கப்படுகின்றன. பொதுவாக, விளக்கின் சுடர் புனிதத்தையும் நம்பிக்கையையும் அவரவர் வணங்குகிற கடவுளோடு இணைந்த ஒரு “தெய்வீகச் சூழலையும்” அடையாளப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
நாட்டுக்கு நாடு
தமிழகத்தில் இந்துக் குடும்பங்களில் தமிழ் மாதமாகிய கார்த்திகை அகல் விளக்குகளுடன் வரவேற்கப்படுகிறது. வேறு சில மாநிலங்களிலும் இது போல் இருக்கும். வடக்கே தீபாவளிக் கொண்டாட்டத்தில் தீபங்களை ஏற்றுவதற்கே முன்னுரிமை. பட்டாசுகளைக் கொளுத்துவதெல்லாம் அப்புறம்தான். ஆறுகளிலும் குளங்களிலும் மிதக்கவிடப்படும் விளக்குகளின் ஒளி தண்ணீரில் பிரதிபலிப்பது ஒரு தனி அழகு. விளக்குகளை ஏந்தி வந்து தண்ணீரில் விடுகிற பெண்களின் முகங்களிலும் சுடர்.
கிறிஸ்துமஸ் விழாவுக்கு முந்தைய வாரங்களில் திருவருகைக்கால மெழுகுவர்த்திகள் ஏற்றி வைக்கப்படுகின்றன. பசுமையான இலை வளையத்தைத் தரையில் வைத்து அதன் விளிம்பின் உட்புறமாக மெழுகுவர்த்திகள் வைக்கப்பட்டிருக்கும். பண்டிகைக்கு முதல் நாள் அல்லது கிறிஸ்துமஸ் நாளில் வளையத்தின் நடுவில் ஒரு மெழுகுவர்த்தி ஊன்றப்படும். உயிர்ப்பு நாள் என்று கூறப்படும் ஈஸ்டர் ஞாயிறையொட்டி, முதல் இரவில் பெரிய, உயரமான மெழுகுவர்த்திகளை ஏற்றிவைக்கும் வழக்கமும் இருக்கிறது.
புத்த பூர்ணிமா, வைசாகம், விசாகம் என்ற பெயர்களில் கொண்டாடப்படும் புத்தர் பிறந்த நாள் விழா கூண்டு விளக்குகளிலும் மெழுகுவர்த்திகளிலும் சுடரேற்றிக் கொண்டாடப்படுகிறது.
தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் புத்த மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்ட சிறு மிதவைகளை நீர்நிலைகளில் மிதக்க விடுகிறார்கள். விளக்குகள் ஒளிரும் பலூன்களை வானில் பறக்க விடுகிறார்கள்.
இஸ்லாமியத்தில் நெருப்பு சார்ந்த வழிபாட்டு முறைகள் தவிர்க்கப்படுகின்றன என்றாலும், சில நாடுகளில் ஈத் விழாவின்போது கூண்டு விளக்குகள் ஏற்றப்படுகின்றன. எகிப்து நாட்டில் ரமலான் விழாவில் பாரம்பரியமான. கலை வேலைப்பாடுகளுடன் கூடிய விளக்குகள் சுவர்களையும் தெருக் கம்பங்களையும் அலங்கரிக்கின்றன.
சீக்கிய மக்களின் ஒரு விழா பாண்டி சோர் திவஸ். கைதியின் விடுதலை விழா என்று பொருள். குரு ஹர்கோபிந்த் சிறையிலிருந்து விடுதலையாகி வந்ததைக் கொண்டாடும் இந்த விழாவில் விளக்குகள் ஏற்றப்படுவது ஒரு முக்கியமான நிகழ்வு.
வளத்தின் அடையாளம்
யூத மக்கள் பல மெழுகுவர்த்திகளை 8 முனைகள் கொண்ட உலோகத் தாங்கிகளில் வைத்து ஹனூகா என்ற ஒளிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு இரவுக்கும் ஒரு மெழுகுவர்த்தியை வைத்து ஏற்றுவார்கள். எட்டாவது நாள் எல்லா மெகுகுவர்த்திகளையும் எரிய விடுவார்கள்.
ஈரான் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட மதம் சரதுசம் அல்லது ஜோரோஸ்ட்ரியம். இதைச் சார்ந்துள்ள மக்கள் தங்கள் ஆலயங்களில் அணையாத நெருப்பைப் பராமரித்து வருகிறார்கள்.
சீனாவில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் முடிவில் விளக்குகள் ஏற்றப்பட்டு, பலூன்களில் வைத்து வானில் பறக்க விடப்படுகின்றன. வேலை, கல்வி என்று பிரிந்து சென்றவர்கள் குடும்பங்களுடன் மறுபடி இணைவதையும், வளமான வாழ்வையும் அந்த விளக்குகள் அடையாளப்படுத்துகின்றன என்று கருதுகிறார்கள்.
ஜப்பானில் புத்த–கன்பூசிய மரபு சார்ந்த விழாவின்போது, முன்னோர்களின் ஆன்மாக்கள் தங்களுடைய வாரிசுகளைக் காண வருவதாக நம்பப்படுகிறது. அவர்கள் தங்களுடைய உலகத்திற்குத் திரும்பிச் செல்ல வழிகாட்டும் வகையில் கலை வண்ணக் கூண்டு விளக்குகள் ஏற்றப்படுகின்றன.
ஆப்பிரிக்க சமூகங்களிலும், அமெரிக்காவின் தொன்மைக் குடிகளிடையேயும் விளக்கேற்றுவது, தீப்பந்தத்தை எரிய விடுவது, மற்றும் அவை போன்ற நெருப்புடன் தொடர்புள்ள விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. நெருப்பைச் சுற்றி அமர்ந்து கதைகள் சொல்வது ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் விழாக்களில் ஒரு சுவையான நிகழ்வு.

நெருப்போடு விளையாடி
உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இவ்வாறு நெருப்பும் விளக்குகளும் மெழுகுவர்த்திகளும் பயன்படுத்தப்படுகிற விழாச் சடங்குகள் பரவியிருக்கின்றன. இறை வழிபாடாக மட்டுமல்லாமல், காலம் சென்றோரை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்துகிற விழாவாக, மக்களின் ஒற்றுமைச் சின்னமாக, நம்பிக்கையின் அடையாளமாக, ஞானத்தை உருவகப்படுத்துவதாக எனப் பலவகைகளில் விளக்குகள் ஏற்றப்படுகின்றன.
மனித வரலாற்றோடு நெருப்பு இணைந்ததன் தொடர்ச்சியாக இந்த விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. சாம்பலைத் துடைத்துவிட்டுப் பார்த்தால் கண்ணாடிச் சிமிழ் விளக்கு பளிச்சென்று தெரியும். அதே போல நம்பிக்கைகளையும் சடங்குகளையும் விலக்கிவிட்டுப் பார்த்தால், மனித வாழ்க்கையோடும் பண்பாட்டு வளர்ச்சியோடும் நெருப்புக்கு உள்ள தொடர்பு தெளிவாகப் புலப்படும்.
ஒளியும் வெப்பமும்
நம் ஆதித் தாத்திகளும் தாத்தன்களும் முதன் முதலில் நெருப்பின் பயனைக் கண்டுபிடித்த பிறகு, வாழ்க்கை முறையே புதிய தடத்திற்கு மாறியது. இரவில் வெளிச்சம் பரப்புகிறது. குளிருக்குக் கதகதப்பூட்டுகிறது, உணவுகளை உண்பதற்கு இலகுவாகவும் சுவையாகவும் சமைத்துத் தருகிறது. தாக்க வரும் விலங்குகளிடமிருந்து தப்பிக்க உதவுகிறது. இயற்கைச் சூழல்களில் தாக்குப் பிடித்து வாழ்வதற்கும் நெருப்பு துணையாகிறது.
அப்படிப்பட்ட நெருப்பு, தொடக்கத்தில் மின்னல், எரிமலை வெடிப்பு உள்ளிட்ட காரணங்களால் இயற்கையாக எரியும் காட்டு மரங்களிலிருந்துதான் எடுக்கப்பட்டிருக்கும். இவ்வவளவு பயன்களை விளைவிக்கும் நெருப்பை அணையவிடாமல் பாதுகாக்க வேண்டுமென்ற முனைப்புடன், மரக் கிளைகளையும் சுள்ளிகளையும் போட்டுக்கொண்டே இருந்தார்கள். எரியும் நெருப்பைப் பராமரிப்பது ஒரு சமூகக் கடமையாகவே, எல்லோரும் பங்கேற்ற பணியாக உருவாகியிருக்கும். அந்தச் சமூகப் பங்கேற்பின் மாறிய வடிவம்தான் சடங்குகள்.
சிக்கிமுக்கிக் கற்களை உரசி நெருப்பை உண்டாக்கியதற்கான திட்டவட்டமான ஆதாரங்களுக்கு வயது கிட்டத்தட்ட 40,000. ஆயினும் 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இது தொடங்கியிருக்கும் என்று கருதப்படுகிறது. நெருப்பின் வரலாறுகளைத் தேடிப் படித்தால் சுவையான, வியப்பான தகவல்கள் கிடைக்கும்.
புனிதக் கதைகள்
இயற்கையாகக் கிடைத்துப் பராமரிக்கப்பட்ட நெருப்பும், மரக்கட்டையைக் கடைந்து உருவாக்கப்பட்ட அல்லது சிக்கிமுக்கிக் கல் நெருப்பும் மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்தன. அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு போன்ற அழிவுகள் அச்சத்தையும் ஏற்படுத்தின, அந்த அச்சத்தைப் போக்கிக்கொள்வதற்கு அதே நெருப்பையே வழிபடுகிற பழக்கம் வந்திருக்கும். அல்லது, இயற்கைக்கு அப்பாற்பட்டதாக நம்பப்படும் சக்தியை அதே நெருப்பால் வழிபடுகிற பழக்கம் ஏற்பட்டிருக்கும்.
திரும்பத் திரும்பச் செய்த நடைமுறைகள் சடங்குகளாக வகுக்கப்பட்டிருக்கும். காலப்போக்கில், மத அமைப்புகள் உருவாக்கப்பட்ட பிறகு, கடவுள் கதைகளின் மூலமாக, நெருப்பின் புனிதம் பற்றிய நம்பிக்கைகள் விதைக்கப்பட்டிருக்கும். கண்கூடான இந்தப் புவியுலகத்திற்கும், கற்பனையால் கட்டப்பட்ட மேலுலகத்திற்கும் இடையே ஆன்மாவுக்கான பாலம் என்று நெருப்பைக் கருதுவதும், போற்றுவதும் பண்பாட்டுச் செயல்களாகப் பரிணமித்தன. இந்த நாட்களில் இப்படிப்பட்ட சடங்குகளோடு விளக்கேற்றினால் ஆன்மா அமைதியடையும், உலக வாழ்க்கை தூய்மையடையும் என்று கதைகளால் கற்பிக்கப்பட்டன. தூய்மை என்பதற்குப் புனிதம் என்ற புனைப்பெயர் சூட்டப்பட்டது. .
இந்த நிகழ்வுப்போக்குடன் இணைந்ததாக, நாகரிகம் வளர வளர, ஊர்கள் தோன்றி மனிதர்கள் குடில்களில் வாழத் தொடங்கினார்கள். மாலைப் பொழுது கவியும்போது, வீடு திரும்ப வசதியாகத் தீப்பந்தங்கள் தெருக்களிலும் வாசல்களிலும் எரியவிடப்பட்டன. இருட்டில் நடமாடும் பூச்சிகளைக் கண்டு ஒதுங்கி நடக்கவும் அந்த வெளிச்சம் தேவைப்பட்டது. அத்துடன் நம்பிக்கைகளும் சேர்ந்துகொண்டன. அறிவியலின் துணையோடு புதிய புதிய கண்டுபிடிப்புகள் வந்து வாழ்க்கையை மாற்றினாலும், அந்த நம்பிக்கைகளும் பழக்கங்களும் தொடர்ந்தன. இன்றளவும் பலவகை விழாக்களாகவும் சடங்குகளாகவும் தொடர்கின்றன.
இன்று நெருப்பை உருவாக்குவதற்குத் தீப்பெட்டிகள் கூட பழைய ஏற்பாடாகிவிட்டன. வாயு அடுப்பைத் தூண்டுகிற பர்னர்கள், சட்டைப் பையில் விரலடக்கமான லைட்டர்கள் என என்னென்னவோ வந்துவிட்டன. நெருப்பு மூட்டுவதே தேவையற்றதாகிவிட்ட ஓவன்கள் பரவலாகிவிட்டன. விலங்குகளின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கிற தேவை போய், மனிதர்களிடமிருந்து விலங்குகள் தப்பிக்க வேண்டியிருக்கிறது. வகைவகையான வேலைப்பாடுகளுடன் மின் விளக்குகள் ஒளி பாய்ச்சுகின்றன. கோடையில் அறையைக் குளிர்விக்கும் ஏசி எந்திரத்திலேயே, குளிரில் கதகதப்பூட்டும் தொழில்நுட்பமும் இணைந்துவிட்டது.
இருந்தபோதிலும், நெருப்பின் வரலாற்றை மறந்து, சடங்குகள் இன்னும் மறக்காமல் செய்யப்படுகின்றன. மகிழ்ச்சியைத் தேடுகிற மனிதர்களின் இயற்கையான தேவையாகிவிட்ட கொண்டாட்டங்களோடு நெருப்பு கலந்துவிட்டது. அகல் விளக்குகளாகவும் கூண்டு விளக்குகளாகவும் மெழுகுவர்த்திகளாகவும் சுடர்கள் ஒளிர்ந்துகொண்டிருக்கின்றன. அந்தச் சுடர்களில் எரிந்துபோவதற்கு மதப் பகைமைகளும் சாதிய ஆணவங்களும் பாலினப் பாகுபாடுகளும் சமூக அநீதிகளும் ஏற்றத் தாழ்வுகளும் ஆதிக்கப் போர்களும் காத்திருக்கின்றன. ஞாயிறின் பிஞ்சாக ஞாலத்திற்கு அன்பெனும் ஒளியும் அறிவெனும் வெப்பமும் தரும் விளக்குகளை அணையாமல் பாதுகாக்கிற கைகள் குவிகின்றன.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


அருமையான, முழுமையான அதே நேரத்தில் மத கலாச்சாரங்கள் ஒருங்கிணைந்த மனிதத்திற்கான தகவல்.
நன்றி 🙏
மா பா அன்புசிவன்