“பெரியவர்களுக்கான தகவலை குழந்தைகளுக்கு வழங்குவது,
அவர்களுக்கு எந்த தகவலும் வழங்காததற்கு சமம்!”
ஓவியக் காட்சியில் ஒரு சுவாரசிய ஆய்வு
புரிதலைப் புதுப்பிக்கும் புதிய ஆய்வுகள் – 11
ஓவியத்தின் விவரக்குறிப்புகள் குழந்தைகள் அந்த கலைப்படைப்பை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை நேரடியாக பாதிக்கிறது என்று நெதர்லாந்தின் லெய்டன் பல்கலைக்கழக உளவியலாளர் ஃபிரான்சிஸ்கோ வால்கர் (Francisco Walker, a psychologist at the University of Leiden in the Netherlands) தலைமையிலான ஆய்வு கண்டறிந்துள்ளது.
விளையாட்டுத்தனமான மற்றும் இடைவினையாற்றும் விவரக்குறிப்புகள் இருக்கும்போது, குழந்தைகள் கலைப்படைப்பில் அதிக கவனம் செலுத்துகின்றனர் என்று இந்த கண்-கண்காணிப்பு ஆய்வு (eye-tracking) கண்டறிந்துள்ளது.
ஆய்வின் மற்றொரு கண்டுபிடிப்பு என்னவென்றால், பெரியவர்களுக்கான தகவலை குழந்தைகளுக்கு வழங்குவது, அவர்களுக்கு எந்த தகவலும் வழங்காததற்கு சமமான விளைவை ஏற்படுத்துகிறது என்பதாகும்.
“பல அருங்காட்சியகங்கள் குழந்தைகளுக்கான கல்வி நிகழ்ச்சிகளை வழங்குகின்றன. ஆனால் கேலரியில் இருக்கும் கலைப்படைப்புகளின் விவரக்குறிப்புகள் பெரும்பாலும் பெரியவர்களுக்காக எழுதப்படுகின்றன. இதுவே, பல குழந்தைகள் கலைப்படைப்புகளை உண்மையிலேயே கவனமாகப் பார்க்காமல், அவற்றை மேம்போக்காகவே பார்க்கிறார்கள் என்பதற்கு காரணமாக இருக்கலாம்.”
“கேலரியில் கிடைக்கும் தகவல்கள் அவர்களால் மிகவும் அணுகக்கூடியதாக இருந்தால் வித்தியாசம் ஏற்படுமா?” என தாங்கள் ஆராய முற்பட்டதாக ஃபிரான்சிஸ்கோ வால்கர் கூறுகிறார்.
வால்கர், வெவ்வேறு வகையான தகவல்களின் விளைவை ஆராய ரிஜ்க்ஸ் மியூசியத்துடன் இணைந்து செயல்பட்டார். ஆராய்ச்சிக் குழுவில் லெய்டன் பல்கலைக்கழக மாணவர்களும், VU ஆம்ஸ்டர்டாம், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் அட்டென்ஷன் ஆர்கிடெக்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்களும் இணைந்திருந்தனர்.
குழந்தைகள் கண் கண்காணிப்பானை அணிந்திருந்தனர், இது அவர்களின் அனைத்து கண் இயக்கங்களையும் பதிவு செய்யும் கண்ணாடி போன்றது. இது ஓர் அருங்காட்சியகத்தில் குழந்தைகளின் பார்வை நடத்தையை ஆராயும் முதல் ஆய்வுகளில் ஒன்று என்று வால்கர் கூறுகிறார்.
ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கட்டுரையை நேற்று, 2024 அக்டோபர் 9 அன்று Scientific Reports இல் வெளியிட்டனர்.
10 முதல் 12 வயது வரையிலான 62 குழந்தைகள் ஆய்வில் பங்கேற்பாளர்களாக இருந்தனர். அவர்கள் இதற்கு முன்பு ரிஜ்க்ஸ்மியூசியம் வருகை தந்ததில்லை.
ரிஜ்க்ஸ்மியூசியம் என்பது நெதர்லாந்தின் தேசிய அருங்காட்சியகமாகும். 17-ஆம் நூற்றாண்டு ஓவியங்கள் இங்கு அதிகளவில் உள்ளன.
ஆய்வின் பங்கேற்பாளர்கள், அவர்களுக்கு இதுவரை தெரியாத ஆம்ஸ்டர்டாம் சிவில் கார்டின் விருந்து, விருந்தில் நிலையான வாழ்க்கை மற்றும் குளிர்கால நிலப்பரப்பு ஆகிய மூன்று 17-ம் நூற்றாண்டின் ஓவியங்களைப் பார்த்தனர்:
முதல் குழுவிற்கு கேலரியில் எப்போதும் கிடைக்கும் நிலையான தகவல்கள் மட்டுமே வழங்கப்பட்டன. இது பெரும்பாலும் தகவல் குறிப்புகளால் ஆனது மற்றும் பெரியவர்களுக்காக எழுதப்பட்டுள்ளது.
இரண்டாவது குழுவிற்கு ரிஜ்க்ஸ் மியூசியத்தின் கல்விப் பணியாளர்களால் குழந்தைகளுக்காக குறிப்பாக எழுதப்பட்ட தகவல்கள் வழங்கப்பட்டன. இது ஓவியப் படைப்புகளில் உள்ளவர்களின் பார்வையில், உதாரணமாக, ஸ்கேட்டர் மற்றும் சிவில் கார்டின் உறுப்பினர் போன்றவர்களின் பார்வையில் ஓவியங்களை விவரித்தது. குழந்தைகளுக்கு “ஸ்கேட்டர் எங்கே?” போன்ற தேடல் கேள்விகளும் வழங்கப்பட்டன.
மூன்றாவது குழுவான குழந்தைகளுக்கு எந்த தகவலும் வழங்கப்படவில்லை, அவர்கள் வெறுமனே கலைப்படைப்புகளைப் பார்க்கும்படி கேட்கப்பட்டனர்.
கண் கண்காணிப்பானால் குழுவிற்கு குழந்தைகளின் பார்வை நடத்தையை துல்லியமாக வரைபடமாக்க முடிந்தது. அதிக ஈர்க்கும் தகவல்கள் வழங்கப்பட்ட பங்கேற்பாளர்கள் மிகவும் கவனமாக இருந்தனர். மற்றும் தங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்தினர் என்று வால்கர் தெரிவிக்கிறார். அவர்கள் தங்கள் பார்வையை ஓவியத்தின் சுவாரசியமான மற்றும் கவனத்தை ஈர்க்கும் கூறுகளுக்குத் திருப்பினர். அவை விவரக்குறிப்புகளில் வலியுறுத்தப்பட்டிருந்தன.
ஆனால், மற்றொரு முடிவு இன்னும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது என்று அவர் கூறுகிறார். “குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கான தகவல்கள் வழங்கப்பட்டபோது, இது அவர்களுக்கு எந்த தகவலும் வழங்காததற்கு சமமான விளைவை ஏற்படுத்தியது.”
இரண்டு குழுக்களும் மிகவும் சீரற்ற முறையில் கண் இயக்கங்களை வெளிப்படுத்தி, தனித்துவமான கூறுகளைப் பார்க்க குறைந்த நேரத்தை செலவிட்டன. பின்னர், இரண்டு குழுக்களும் கலைப்படைப்புகளின் பல்வேறு கூறுகளை பெயரிட முடியாத நிலையில் இருந்தன.
அதாவது, குழந்தைகளுக்கு நீங்கள் பெரியவர்களுக்கான தகவல்களை வழங்குவதும், எந்த தகவலும் வழங்காமலிருப்பதும் ஒன்றுதான் என முடிவுகள் காட்டுகின்றன.
“ஓர் ஓவியத்தில் கவனம் செலுத்துவது இளம் பார்வையாளர்களுக்கு கடினமாக இருந்தால், அக் கலைப்படைப்பு என்ன சிறப்பு வாய்ந்தது என்பதைப் பார்க்கவில்லை என்றால் அது உண்மையிலேயே வருத்தமாக இருக்கும். நன்கு வடிவமைக்கப்பட்ட அருங்காட்சியக அனுபவம் அவர்கள் புதிய வழியில் ஓவியங்களைக் கண்டறிய உதவும்.” என்று வால்கர் கூறுகிறார்.
ரிஜ்க்ஸ் மியூசியம் ஆய்வின் முடிவுகளில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறது என்று அருங்காட்சியகத்தின் பொது மற்றும் கல்வித் துறையின் தலைவர் பவுலின் கிண்ட்ஸ் கூறுகிறார்.
“இயற்கையாகவே குழந்தைகளையும் உள்ளடக்கியவர்களே எங்கள் பார்வையாளர்கள், அவர்கள் பார்ப்பதோடு தொடர்பு கொள்ள வேண்டும்; எதையும் உணராமல் வெறுமனே கடந்து செல்வதற்கு பதிலாக, அப்படைப்பில் ஈர்க்கப்பட வேண்டும். இந்த புரிதலை நிச்சயமாக இளம் பார்வையாளர்கள் பற்றிய எங்கள் கொள்கையில் சேர்க்கப்போகிறோம்.” என்கிறார் கிண்ட்ஸ்.
உண்மையிலேயே குழந்தைகளின் கவனத்தை ஈர்க்க வேண்டுமென்றால், குழந்தைகளின் பார்வையில் அவர்களுக்கான உலகை வடிவமைக்க வேண்டும். பெரியவர்களின் பார்வையில் அல்ல…
ரிஜ்க்ஸ் மியூசியத்தில் நடந்த இந்த ஆய்வின் முடிவுகள் அருங்காட்சியகத்திற்கு மட்டுமல்ல, நமது பாடநூல்கள், வகுப்பறைகள் மற்றும் குழந்தைகளுக்கான அனைத்து படைப்புகளுக்கும் பொருந்துமல்லவா?
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்! உங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்!
தொடர்ந்து அறிவியல் பேசலாம்!
வீடியோ இணைப்பு
மூல ஆய்வுக் கட்டுரை இணைப்பு
https://dx.doi.org/10.1038/
கட்டுரையாளர் :
த. பெருமாள்ராஜ்
புரிதலைப் புதுப்பிக்கும் புதிய ஆய்வுகள் தொடரின் முந்தைய கட்டுரையைப் படிக்க : புவியின் ஆதி விவசாயிகள் – எறும்புகள்!
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.