An Introudction to Theorising Tamil Literature தமிழ் இலக்கியத்தின் கோட்பாட்டிற்கு ஓர் அறிமுகம்

தமிழிலக்கியத்தைக் கோட்பாட்டுக்கு உட்படுத்தல் தமிழ் இலக்கியப் பனுவல்களை ஆங்கிலத்திலும் பிறமொழிகளிலும் கொண்டு செல்வதே அரிதாக இருக்கிறது. தமிழ் இலக்கியத்தில் திறனாய்வு இப்போதுதான் தொடங்கியிருக்கிறது என்று சொல்லலாம். திறனாய்வு என்பது ஒரு நூலுக்கு வெறும் பொழிப்புரை தந்து பாராட்டுகளைப் பதிவு செய்வது என்ற நிலைமாறி இப்போதுதான் திறனாய்வுக்கோட்பாடுகளைப் பயன்படுத்தி ஒரு நூலை ஆய்வு செய்யும் முயற்சி நடைபெறுகிறது. எனினும் தமிழ்நூல்களை அவ்வாறு ஆங்கிலத்தில் செய்வதைக் காணமுடிவதில்லை. அக்குறையை முனைவர் இளங்கோவனின் An Introduction to Theorising Tamil Literature கட்டுரைத் தொகுப்பு போக்குகிறது என்று சொல்லலாம்.

இத்தொகுப்பிலுள்ள ஏழுகட்டுரைகளும் தமிழ்ப் படைப்புகளை முன்வைத்து திறனாய்வுக்கான தளத்தை அமைத்து, கோட்பாடுகளை வரவழைக்க முற்படுகின்றன.
முதற்கட்டுரை ஏ.கே. ராமானுஜன் தொல்காப்பியரின் கவிதையியல் பற்றிக் கூறியிருப்பதை ஆராய்கிறது. தமிழில் கவிதையியல் என்பதே இல்லை, வடமொழியிலிருந்துதான் தமிழ் கடன் வாங்கியது என்று சொன்னவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராமானுஜன் எழுதிய கட்டுரையை பேராசிரியர் இளங்கோவன் நமக்கு விளக்குகிறார். திராவிடக் கவிதையியல், அழகியல் என்பது எவ்வாறு வடமொழியின் ஆன்மீகப் பின்புலத்திலிருந்து வேறுபட்டது என்பதையே கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. தொல்காப்பிய செய்யுளியலில் இடம் பெறும் சிறப்பிடத்தை ராமானுஜன்வழியில் ஆராயும் ஆசிரியர் தமிழ் கவிதையில் குறிப்பாக அகப்பாடல்களில் தனியாள் பின்புலத்தில் இருக்க பொதுமைப் பண்பு முன்னிற்கிறது என்பதையும் இடம் எனும் அதிகாரப் பொருள் மேலோங்குகிறது என்பதையும் எட்வர்ட் சாஹித்தின் கோட்பாட்டோடு பொருத்துகிறார். அதுபோலவே இடம்சொல்லும் உத்திகள் ஃபூக்கோவின் அதிகாரக் குறியீடுகளாக ஆவதைச் சுட்டிக் காட்டுகிறார். கனமான கருத்துகள்; இன்னும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கம் வேண்டும். எனினும் மேலைக் கோட்பாடுகளைத் தமிழ் செய்யுளியலோடு பொருத்திக் காட்டும் முயற்சி பாராட்டிற்குரியது.

இரண்டாம் கட்டுரை கந்தசாமியின் நாவலான சாயாவனத்தை சுற்றுச்சூழலியல் கோட்பாட்டின் அடிப்படையில் ஆராய்கிறது. அடுத்த கட்டுரை கீழ்ப்பட்டவர்களின் குரல்களின் தொகுப்பான ஓர் ஆங்கில நூலை அறிமுகப்படுத்துகிறது. காயத்திரி ஸ்பிவாக்கின் ”கீழ்ப்பட்டவர் பேசமுடியுமா?” என்றகட்டுரையின் தாக்கத்தில், Subaltern Studies க்கு ரனஜித் குகாவின் முன்னுரையை மேற்கோள்காட்டி இந்தியாவின் பல மொழிகளில் தலித் இலக்கியம் வேர்விடுவதை நான்காம் கட்டுரை விளக்குகிறது. கிருதிகாவின் வாசவேசுவரம் உடல் இன்ப உச்சக்கட்ட நாட்டம் எப்படி தனிமனிதனையும் சமூக ஒழுக்க நெறியையும் பாதிக்கிறது என்பதை தொன்மத்தை மறு ஆக்கமாகக் காட்டுகிறது அடுத்த கட்டுரை.

பாலமுருகனின் சோளகர் தொட்டி பல தளங்களில் ஆராயப்பட வேண்டிய ஒரு நூல். அதன் உரையாடல் ஒன்றை என்னுடைய எடுத்துரைப்பியல் பற்றிய கட்டுரைக்குப் பயன்படுத்தியுள்ளேன். ஆட்சியாளரின் மேலாதிக்கம்பற்றி கிராம்சியைவிட யார் அதிகம் சொல்லமுடியும்? திறனாய்வாளர் அந்தக் கோட்பாட்டைக் கொண்டு பழங்குடியனர் பற்றிய நாவலை ஆராய்கிறார்.

கடைசி இரண்டு கட்டுரைகளையும் கவிதைகளைப்பற்றி ஆராய்கின்றன. சுந்தரராமசாமி என்கிற பசுவையாவின் கவிதைகள் சிலவற்றில் காணப்படும் தமிழ் அழகியலைப் பற்றி குறிப்பிடுகிறது. கடைசிக் கட்டுரை ஈழக் கவிதைகளின் பன்முகத்தன்மை பற்றி ஆராய்கிறது. இரண்டு கட்டுரைகளிலும் எடுத்தாளப்பட்ட செய்யுட்களை கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான இளங்கோவனே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.

தமிழ் இலக்கியத்தை மேலைநாட்டுக் கோட்பாடுகளின் துணை கொண்டுபார்க்கும் இளங்கோவன் இந்நூலை ஆங்கிலத்தில் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் வளமான செய்யுளியலும் அழகியலும் இருக்கின்றன என்பதை உலகத்திற்குத் தெரிவித்துத் தெளிவு செய்யும் பணியை ஆசிரியர் மேற்கொண்டிருக்கிறார். இதுபோன்ற திறனாய்வுக் கட்டுரைகள் அதிகம் அதிகமாக வரவேண்டும் என்பதே என்போன்றோரின் விருப்பம்.

 

                     நூலின் தகவல்கள் 

நூல் : An Introudction to Theorising Tamil Literature: A Collection of Critical Essays

நூலாசிரியர் : Dr. M.இளங்கோவன் 

பக்கங்கள் : 58

விலை : ரூ.295

 

                 அறிமுகம் எழுதியவர் 

                       ச. வின்சென்ட்இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *