(‘இரு தரப்பும்’ என்று கூறுவது, வெறுப்பை விதைப்பவர்களையும் அங்கீகரிக்க வேண்டும் என்றும், உயர்வாகக் கருதவேண்டும் என்றும் கூறுகிறது. அதாவது, குற்றம்புரிந்தவர்களையும், குற்றத்திற்கு ஆளானவர்களையும் சமமாகப் பாவிக்க வேண்டும் என்று சொல்கிறது.)
பெரிய பத்திரிகை அலுவலகங்களில், செய்தியாளர்களின் அறைகளில் இளநிலை செய்தியாளர்கள், தலைமை ஆசிரியர் சொல்வதற்கு எதிர்க்கேள்வி கேட்பதென்பது எல்லாம் அநேகமாக இருக்காது. ஊடக நிறுவனங்களில் பெரும்பாலானவைகள், தங்கள் செய்தியாளர்கள் அவர்களுடைய ‘புரட்சி’ அனைத்தையும், வெளியில்தான் வைத்துக்கொள்ள வேண்டும், உள்ளே தாங்கள் சொல்வதைத்தான் தங்களுக்குக் கீழே உள்ளவர்கள் அடியொற்றி நடந்திட வேண்டும் என்றே எதிர்பார்க்கும். நானும் அவர்கள் சொல்வதற்கெல்லாம் பக்திசிரத்தையுடன் கட்டுப்பட்டு இருப்பதற்கே முயற்சிப்பேன். எனினும், வினோத் மேத்தாவால் சமீபத்தில் ‘அவுட்லுக்’ இதழில் வெளிவந்த கட்டுரை, இதனை மாற்றும் விதத்தில் அமைந்திருந்தது.
நீங்கள், சமீபத்தில் ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர், அய்ஷே கோஷ் அவர்களால் எழுதப்பட்ட ஒரு கருத்தை, வெளியிட்டிருந்தீர்கள். அந்தக் கட்டுரை, ஜேஎன்யு பல்கலைக்கழகத்தைக் கீழே இறக்க வேண்டும் என்ற முயற்சிகள் நடந்துவருகின்றபோதிலும், இப்போதும் அது ஓர் உயர்ந்த பல்கலைக்கழகமாக இருப்பது ஏன், என்பதை விவாதித்தது. இதற்கு உங்கள் வெறித்தனமான கருத்தை அளிக்கும் விதத்தில், இது தொடர்பாக இரு தரப்பினரிடமிருந்தும் கருத்துக்களைப் பெற்று வெளியிட வேண்டும் என்று கூறி, ஏபிவிபி அல்லது பாஜக உறுப்பினரிடமிருந்து கருத்தைக் கோரியிருந்தீர்கள்.
இதற்குப் பல்கலைக் கழக முதல்வர் ஒப்புக்கொள்ளவில்லை. அதுகுறித்து பின்னர் நான் வருகிறேன்.
பாஜக இளைஞரணி தலைவர் எழுதியிருந்த கட்டுரை, ஜேஎன்யு ஓர் அறிவார்ந்த திறமைமிகு மையமாக இருப்பதோடு, அது கலாச்சார மையமாக மாற்றப்படுவதற்காக, அங்கேயுள்ள தேச விரோத சக்திகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று வாதிடுகிறார். நீங்கள் இதனைப் படித்துவிட்டு, அச்சுக்கு அனுப்புவதற்காக ‘ஓ.கே.’ சொல்லிவிட்டீர்கள். அவருடைய கட்டுரைக்குள், ஜனவரி மாதத்தில் மாணவர்கள் மீதான தாக்குதலுக்குப் பின்னணியில் ஜேஎன்யு மாணவர் சங்கம் இருந்தது என்றும், அதன் தலைவர் அய்ஷே கோஷ் முகக் கவசம் அணிந்த குண்டர்களுக்குத் தலைமை தாங்கி விடுதிக்குள் அழைத்து வந்தது கேமராவில் தெரிந்தது என்றும் கூறுகிறார். இவை அனைத்தும் வடிகட்டிய பொய்களாகும். அய்ஷே கோஷ் தலை அடித்து நொறுக்கப்பட்டது. இந்தத்தாக்குதலில் கடும் பாதிப்புக்கு உள்ளானவர் அய்ஷே கோஷ் என்பதற்கு ஏராளமான சாட்சியங்கள் உண்டு. இந்தத் தாக்குதலை நடத்திய குண்டர்களில் அவரும் ஒருவர் என்று இதுவரை எவரும் சொல்லவில்லை.
இந்தப் பொய்க்கதை குறித்து நான் உங்களிடம் எடுத்துக்காட்டியபோது, ‘அது அவருடைய கருத்து’ என்று கூறி நழுவிக்கொண்டீர்கள். ஒரு பொய், ஒரு கருத்தாகிவிடாது. பொய் மூட்டைகளையும், நிலைநிறுத்தப்படாத குற்றச்சாட்டுகளையும் ஒரு வாதத்தில் முன்வைத்திட முடியாது. ‘அது அவருடைய கருத்து’ என்று கூறுவதன்மூலம், நாம் நம் கைகளைக் கழுவிக்கொள்ள முடியாது. அதனை நாம் பிரசுரிப்பதன் மூலம், நாம் அதற்கு ஒரு சட்டபூர்வ அங்கீகாரத்தை அளித்திருக்கிறோம். அவர்களின் பொய்மூட்டைகளை இயல்பானதாக மாற்றியிருக்கிறோம். அவர்களின் பொய்க் கூற்றுக்களையும் ஊதிப் பெரிதாக்கி இருக்கிறோம்.
மேலும், நம்மில் சிலர் நினைப்பதுபோல் அது தீங்கற்ற ஒன்றுமல்ல. ஒருவிதத்தில் பார்த்தோமானால் அது மிகவும் ஆபத்தானதாகும். இது குறித்து நாம் வாதிடுவோம். ஜேஎன்யு மாணவர்கள் குண்டர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கக்கூடிய சமயத்தில், அவர்களைத் தேச விரோதிகள் என்றும், மாணவர்களுக்கு ஆபத்தை விளைவிப்பவர்கள் என்றும் ஒரு சிந்தனையோட்டத்தைப் பதிவு செய்திருக்கிறீர்கள். அதனைப் படிப்பவர்கள், உடனே ஜேஎன்யு-விற்குச் சென்று, ஜேஎன்யு மாணவரைத் தாக்குவார் என்று நான் கூறவில்லை. ஆனால், அத்தகைய வாசகங்கள், பல்கலைக்கழகத்தின் மாண்பினை பொது வெளியில் இழிவுபடுத்திடும் என்பது நிச்சயம். அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதற்கு நிர்வாகத்திற்கும் ஊக்கத்தை அளித்திடும். ஜேஎன்யு மாணவர்களை கடுமையாகத் தாக்க முடியும், தாக்கப்பட்ட அவர்களையே மற்றவர்களைத் தாக்கியதாக வழக்குகள் ஜோடிக்க முடியும், அனைத்தையும் அரசின் ஒப்புதலுடன் செய்திட முடியும் என்ற சூழ்நிலையையும் உருவாக்கிடும்.
“இரு தரப்பும்” என்கிற கொள்கைக்கு இப்போது வருகிறேன். ராஜஸ்தான் மாநிலத்தில் பெஹ்லுகான் என்னும் பால் வியாபாரம் செய்யும் வியாபாரி ஒருவர், மாட்டுச் சந்தையிலிருந்து, பணம் கட்டி ரசீது பெற்று, பசு மாடுகளைக் கொண்டுவந்தவரை, ‘பசுப்பாதுகாப்புக்குழு’ என்னும் குண்டர் கும்பல் கொலை செய்தபோது, ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சராக இருந்த குலாப் சந்த் கட்டாரியா என்ன கூறினார்? “இரு தரப்பினரும் தவறு செய்தார்கள்,” என்றார். இதன்மூலம் அவர் பெஹ்லு கானும் ‘பசுக்களைக் கடத்தி வந்ததன்’ மூலம் ஒரு குற்றத்தைப் புரிந்திருந்தார் என்ற தொனியில் அவருடைய கூற்று அமைந்திருந்தது.
பெஹ்லுகான் அதனைச் செய்தாரா இல்லையா என்பது குறித்து நேர்மையானவர்கள் உலகத்தில் வாதிடுவது பொருத்தமற்றது. ஆனாலும், இது தொடர்பாக ஒரு வாதத்தைக் கிளப்பியிருப்பதால், பெஹ்லுகான் அந்தப் பசுக்களை ஒரு மாட்டுச் சந்தையில் வாங்கிவந்தார் என்றும், அதற்கு அவர் ரசீதுகள் வைத்திருந்தார் என்றும், எனவே அவரை எப்படிக் பசுக்களைக் கடத்தி வந்தார் என்று கூற முடியும் என்றும் கேட்க வைக்கிறது.
இவ்வாறு “இருதரப்பும்” என்று கூறி வெறுப்பை உமிழும் நடவடிக்கைகள் அங்கீகரிக்கப்படுகின்றன. “ஒரு தரப்பு” என்று கூறி அவ்வாறு கூறுபவர்களுக்குக் கவுரவமான இடம் அளிக்கப்படுகிறது. குண்டர் கும்பல் கூட்டத்தினரும், அவர்களால் பாதிப்புக்கு ஆளாகிறவர்களும் சமப்படுத்தப்படும் வேலை இதன்மூலம் செய்யப்படுகிறது. குண்டர் கும்பலின் வெறியாட்டங்களுக்கும், அவர்களால் பாதிக்கப்படுபவர்களுக்கும் இடையேயான வித்தியாசத்தை, பத்திரிகை ஆசிரியர் பார்க்காது உதாசீனம் செய்திருக்கிறார். இது ஒரு பத்திரிகை ஆசிரியருக்கு அழகல்ல. இது, ஓநாயையும், ஓர் ஆட்டுக் குட்டியையும் சமமாகப் பார்க்கும் பார்வை போன்றது. ஓநாயை ஒரு பக்கத்திலும், ஓர் ஆட்டுக்குட்டியை மறுபக்கத்திலும் நிற்க வைத்து, பார்வையாளர்களிடம், “இங்கே பாருங்கள்! நாம் இப்போது ஓர் உயிரோட்டமான விவாதத்தை நடத்தப் போகிறோம்,” என்று சொல்வதுபோல் இருக்கிறது.
இன்றைய தினம் உள்ள இதழியல் துறையில், அதனை நடத்துபவர்களுக்கு ஏற்பட்டுள்ள அரசியல் கட்டாய நிலைமைகளை நான் உணர்கிறேன். இவ்வாறு ஆசிரியர் கூறியிருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் “இது எங்கள் பத்திரிகையின் கொள்கை” என்று கூறிக்கொண்டே இதனை நீங்கள் செய்யும்போது, நிச்சயமாக அதனை நான் ஒப்புக்கொள்ளவில்லை.
நீங்கள் முன்வைத்திருக்கும் வாதத்தின்படி, எதிர்காலத்தில் ஓரினச் சேர்க்கை குறித்த பிரச்சனை விவாதிக்கப்பட்டால், ஓரினச் சேர்க்கையாளரிடமிருந்து கருத்த கோருவீர்களா? அப்போது மட்டும் ஏன் அவ்வாறு செய்ய மாட்டீர்கள்? அவர்களும் ஒரு “தரப்பினர்”தானே!
தேசப் பாதுகாப்பு குறித்து ஒரு விவாதம் நடைபெற்றால், ஹபீஷ் சையித் அல்லது அஜ்மீர் தர்கா வெடிகுண்டு வழக்கில் வெடிகுண்டுகளை விதைத்ததற்காகத் தண்டிக்கப்பட்ட பவேஷ் பட்டேலை விவாதத்திற்கு அழைப்பீர்களா? ஒரு ட்விட்டர் நபர் இவ்வாறு வேடிக்கையாகக் கேட்டிருந்தார். இப்போது கொரோனா வைரஸ் எதிர்ப்பு கதைகளாகவே வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் இரு தரப்பும் வேண்டும் என்று கூறுகிற சமநிலைவாத ஆசிரியர்கள் (balance-wadi editors) எவரும் கொரோனா வைரஸ் ஆதரவு கதைகளை வெளியிடுவதில்லையே, ஏன்?

வெறுப்பு உமிழப்படுவதற்கு எதிராக, பாகுபாடு காட்டப்படுவதற்கு எதிராக, ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டும் விதத்தில் நேர்மையானமுறையில் விவாதங்களுக்கு வழிவகுக்கப்பட வேண்டும் என்பதே என் தாழ்மையான வேண்டுகோளாகும். வெறுப்பை உமிழ்வது என்பது ஒரு கருத்தாக இருந்திட முடியாது. இத்தகைய கருத்துக்கள், செல்வாக்குள்ள பேர்வழிகளால் உச்சரிக்கப்படும்போது, செய்தியேடுகள் சில இவற்றைத் தாங்கி வருகின்றன என்பது உண்மைதான். ஆனால் அத்தகைய தீயக் கருத்துக்களுக்கு விஷக் கருத்துக்களுக்கு திறந்தவெளி விவாதங்களுக்கான பக்கங்களில் இடமளிக்கக் கூடாது. இதழியல் விவாதம் என்பதும், நீதி, நேர்மை, கனிவு, முற்போக்கு, மதச்சார்பின்மை, பகுத்தறிவு முதலானவற்றை அடிப்படையாகக் கொண்டும், இதழியல் வட்டத்திற்குள் முகம் சுழிக்க இடம் கொடுக்காத விதத்திலும் அமைந்திட வேண்டும்.
ஜோசப் புலிட்சர் கூறிய வார்த்தைகளில் சொல்வதானால், “ஓர் இதழின் இதயம் மற்றும் ஆன்மா என்பது, அதன் அறிவாற்றலிலோ அல்லது அது பிரசுரித்திடும் செய்திகளிலோ அல்லது அதன் புத்திகூர்மையிலோ இல்லை. மாறாக, அது எந்த அளவிற்கு ஒடுக்கப்பட்டோருக்காக இரக்கத்துடனும், மனிதாபிமானத்துடனும், நேர்மையுடனும், துணிவுடனும் ஓர் அறநெறி உணர்வை வெளிப்படுத்துகிறதோ அதில்தான் அடங்கி இருக்கிறது. அதன் சுதந்திரம், பொது நலன்களில் அதற்கு இருந்திடும் அர்ப்பணிப்பு, பொது சேவைகளை மேற்கொள்வதில் அதற்கு இருந்திடும் ஆர்வம் முதலானவற்றில் இருக்கிறது.”
அறநெறி உணர்வை வரையறுப்பது யார் என்று நீங்கள் அடிக்கடி கேட்டிருக்கிறீர்கள். நிச்சயமாக மூத்த எடிட்டர்கள்தான். இதில் எவருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. இதழியலுக்கு, தீர்ப்பு எதுவும் வழங்காத வழியைத் தேர்ந்தெடுப்பதில் நீ நம்பிக்கைகொள்ள வேண்டும் என்று நீங்கள் கூறியிருக்கலாம். ஆனால் அது எப்படிச் சாத்தியம்? ஒவ்வொரு கணமும் தீர்ப்புகளை வழங்கிக்கொண்டே இருக்கிறீர்கள். எந்தச் செய்தியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதிலிருந்து, அதனை எப்போது செய்ய வேண்டும் என்பதுவரையிலும், எந்தத் செய்தியை வெளியிடக்கூடாது என்பதிலும், எந்த செய்தியாளர்களையும், எடிட்டர்களையும் வாடகைக்கு அமர்த்திக்கொள்ள வேண்டும் என்பதிலிருந்து, அச்சுக்கு எந்த எழுத்துரு (font)வைப் பயன்படுத்த வேண்டும் என்பது உட்பட, அனைத்திலும் உங்களின் தத்துவார்த்த மற்றும் அரசியல் அம்சத்தின் தீர்ப்புகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன.
ஒரு சமூகத்தின் கூட்டு உணர்வு (collective consciousness), இதுவரை கவிஞர்களாலும், கலைஞர்களாலும் வடிவமைக்கப்பட்டு வந்திருக்கின்றன என்று ஓர் அறிவார்ந்த பேராசிரியர் எனக்குக் கூறினார். அவர் பத்திரிகை ஆசிரியர்களைக் குறிப்பிடவில்லை, ஆனாலும், அவர்களுக்கும் நிச்சயமாக இதில் ஒரு பங்கு உண்டு என்றே நான் கருதுகிறேன்.
சிறிய நகரங்களில் வாழும் கவிஞர்களும், கலைஞர்களும் உள்ளூர்களில் வெளியாகும் சஞ்சிகைகளும் – அனைத்தும் இவ்வாறு கூட்டுச் சமூக உணர்வை வடிவமைக்கின்றன. அவ்வாறு இருந்துவந்த நிலைமையை இப்போது சமூக ஊடகங்களின் வருகை அரித்துக் கொண்டிருக்கிறது என்பது வேறு விஷயம்.
ஆனால், இவ்வாறு கூட்டுச் சமூக உணர்வை நிர்ணயிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு பத்திரிகை ஆசிரியர்கள் ஏன் கூச்சப்பட வேண்டும்? அவர்கள் அவ்வாறு கூச்சப்படுகிறார்கள் என்றால், அவர்கள், சமூகத்தில் நலிவடைந்தவர்கள் பக்கம், விளிம்புநிலையில் உள்ளவர்களின் பக்கம், விவசாயிகளின் பக்கம், மதச்சிறுபான்மையினரின் பக்கம், ஒடுக்கப்பட்ட சாதியினரின் பக்கம் அல்லது ஒடுக்கப்பட்ட இனத்தினரின் பக்கம் நிற்பதற்குப் பயந்து, ஒதுங்குகிறார்கள் என்றே நான் கருதுகிறேன்.
இந்த மாதத்தின் முற்பகுதியில் அமெரிக்காவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனடர் டாம் காட்டன், நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியிட்டிருந்த கருத்து குறித்து கடும் மோதல் ஏற்பட்டதைப் பார்த்தோம். அவர் கறுப்பினத்தைச் சேர்ந்த, ஜார்ஜ் ஃப்ளாயிட், கொல்லப்பட்டதற்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருவது தொடர்பாக, (சில இடங்களில் அவற்றில் வன்முறை வெடித்துள்ளன), அவர், அந்த இடங்களுக்கு அமெரிக்க ராணுவத்தை அனுப்பி அவர்களை அடக்க வேண்டும் என்று வாதிட்டிருந்தார். இத்தகைய இவருடைய கூற்றுக்கு எதிராகக் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதன்பின்னர் நியூயார்க் டைம்ஸ் இதழின் ஆசிரியர்கள், அவருடைய கட்டுரை குறித்து ஒரு பதிவை வெளியிட்டார்கள். அதில், “அந்தக் கட்டுரை. பத்திரிகையின் தரத்திற்கு ஏற்புடையதாக இல்லை,” என்றும், “அதனை நாங்கள் வெளியிட்டிருக்கக்கூடாது” என்றும், கூறியிருந்தார்கள்.
‘நியூஸ்கில்ட் ஆப் நியூயார்க்’ என்னும் இதழ், மேற்படி கட்டுரையை, “ஒரு பொறுப்பற்ற தேர்வு” என்று கூறி, அரசு வன்முறையை ஏவவேண்டும் என்று கோரியிருப்பது, கறுப்பின மக்களையும் பழுப்பின மக்களையும் காயப்படுத்தி இருக்கிறது,” என்று எழுதியிருந்தது.
இதுதொடர்பாக என் பிரசங்கத்தை முடித்துக்கொண்டு, என்னுடைய செய்தியாளர் பணிக்குத் திரும்புவதற்கான நேரம் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன். இது எனக்கு வேறொரு சிந்தனையையும் கொண்டுவருகிறது. ஒரு சாதாரண செய்தியாளர், சாதாரணமான சமயங்களில் எழுதும் செய்திகளிலும்கூட, உண்மையை மதிப்பிட முடியுமா என்பதேயாகும். பத்திரிகை ஆசிரியர்கள் நிச்சயமாக அதனைச் செய்கிறார்கள், அவர்கள் எப்போதும் அதனைச் செய்தே வந்திருக்கிறார்கள். இந்த மதிப்பீடுகளை அவர்கள் நிறுத்திவிட முடியாது. ஜேஎன்யு-வில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து உண்மையை வெளிக்கொணரும் விஷயத்தில் இதற்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்தது. ஜேஎன்யு சம்பவங்கள் குறித்து, முழுமையாக சமரசம் செய்துகொண்ட போலீசால் மட்டுமே மூன்றாம்தரமாக எழுதப்பட்ட கதைகளை நம்ப முடியும். நீதிமன்றங்கள் … நல்லது, அது குறித்து எழுதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள நான் விரும்பவில்லை.
ஆனால், ஜேஎன்யு-வில் நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பாக வெளியாகியிருக்கிற சாட்சியங்களிலிருந்து, அவற்றை ஏவிய கயவர்கள் யார், அவற்றில் பாதிப்புக்கு ஆளானவர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதில் சிரமம் எதுவும் இல்லை. ஊடகம் ஒன்று ரகசியமாகப் பதிவு செய்த அக்சத் அவஸ்தி என்கிற ஏபிவிபி நபர், தாக்குதல் குறித்தும் அதில் அவர் பங்கேற்பு குறித்தும் அளித்திட்ட ஒப்புதல் வாக்குமூலம், முகமூடி அணிந்திருந்த பெண், ஏபிவிபி-யைச் சேர்ந்த கோமல் சர்மா என்று அடையாளம் தெரிந்த பின்னணி, ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் அய்ஷே கோஷ் அடைந்திருந்த கொடுங்காயங்கள் மற்றும் பலர் அடைந்த காயங்கள் ஆகிய அனைத்தும், அங்கே நடந்த சம்பவங்களின் உண்மை என்ன என்பதைத் தெளிவாகவே வெளிப்படுத்தும். இவ்வாறிருக்கையில், இதற்கு எதிராக, வெறுப்பு, அதிகார பலம் மற்றும் கலாச்சார மேலாதிக்கவாதம் ஆகியவற்றில் வேரூன்றியுள்ள சிந்தனைகளுடன் உள்ள ஒருவருக்கு, பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட இடம் அளிக்கப்படுகிறது என்றால், அது நேர்மையற்ற செயல் என்றே நான் நினைக்கிறேன்.
ஜேஎன்யு-வைக் குறை கூற ஏராளமான விஷயங்கள் உண்டு. ஆனால், ஜேஎன்யு தேச விரோதமான ஒன்றா, இல்லையா என்று விவாதிக்க, நம்மை நாம் அனுமதிக்கிறோம் என்றால், இனப்படுகொலைகளுக்குத் துணைபோகும் தொலைக்காட்சி அலைவரிசைகள் போன்றே நாமும் போலிக் கருத்துக்களை உருவாக்குவதற்கு இடம் கொடுக்க அனுமதிக்கிறோம் என்றே அர்த்தமாகும். இது, ஜேஎன்யு-விற்கு எதிராக திட்டமிட்டு பாகுபாடு காட்டப்படுவதற்குப் பங்களிப்பினைச் செய்திடுவது மட்டுமல்லாமல், இது விமர்சனரீதியாக நம்மை வளப்படுத்துவதற்கோ, நாம் முன்னேறுவதற்கோ உதவவும் செய்யாது.
விவாதத்தின் வீச்சு எப்போதும் நீதியின் நெறிமுறைகளுக்கு உட்பட்டே இருந்திட வேண்டும்.
(கட்டுரையாளர், அவுட்லுக் இதழின் சிறப்புச் செய்தியாளர்)
நன்றி: Outlook