இயற்கையின் கவிதையே காடுகள்தான். அந்தக் கவிதை ஒழித்து வைத்திருக்கும் இயற்கையின் ரகசியங்கள் ஏராளம் ஏராளம். அந்தக் கவிதையின் அங்கமாய் வாழத் தொடங்கிய மனிதன், காலப்போக்கில் நாகரிக வளர்ச்சியில், இயற்கையை விட்டு விலகி வாழத் தொடங்கி விட்டான்.
விலகி வாழத் தொடங்கியதோடு மட்டுமல்லாமல் இயற்கைக்கு, ஏராளமான அழிவுகளையும் தந்து கொண்டிருக்கிறான். ஆனால் அந்த காடுகள் மட்டும் இல்லை என்றால் ஏராளமான பல்லுயிர்களும் ஏன் மனிதனுமே இந்த பூமியில் நிலை கொண்டிருக்க முடியாது என்ற உண்மையை ஏனோ வசதியாய் மனிதன் மறந்து விட்டான்.
ஆனாலும் இன்னும் காடுகள் உயிர்ப்போடு இருப்பதற்கான காரணங்களில் ஒன்று அங்கு வாழும் பழங்குடி மக்கள் என்றால் அது மிகையில்லை.
அப்படி ஆனைமலை (Anaimalai) தொடர்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆதி குடியினரை பற்றியும், அவர்கள் வாழ்வியலில் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றியும் ஆனைமலை என்ற இந்த நாவல் ஆழமாய் பேசுகிறது.
ஆனைமலை தொடரில் காடர், மலை மலசர், மலசர், புலையர் போன்ற ஆதிக்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அப்படி அவர்கள் வாழும் ஒரு பகுதி தான் வேங்கைப் பதி. எத்தனை இன்னல்களைச் சந்தித்தாலும் இயற்கையோடு இணைந்து வாழும் ஒரு வாழ்வியலை கொண்டவர்கள்.
அவர்கள் வாழ்வியலைப் பற்றி எல்லாம், மிக அழகாக இந்த நூலில் ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார். இதற்காக இரண்டு வருடங்கள் அந்த பகுதிகளில் தங்கி அவர்களுடைய வாழ்வியல் முறைகளை அறிந்து கொண்டு இந்த நாவலில் பதிவு செய்துள்ளார்.
அவர்களது வாழ்க்கை முறை எளிமையானதும் அழகானதும் கூட. காட்டில் உள்ள எந்த உயிர்களையும் துன்புறுத்தாத அவர்களின் குணம், தேன் எடுக்கும் போதும் கூட முழுமையாக எடுத்து விடாமல் தனக்கு கொஞ்சம் மற்றவர்களுக்கு கொஞ்சம் என விட்டு வரும் அவர்களின் வழக்கம், தோண்டும் மாகாணி கிழங்குகளில் பல கிழங்குகளை செடிக்கும் விட்டு வைக்கும் அவர்களுடைய பண்பு அவற்றையெல்லாம் வாசிக்கும் பொழுது, தேவைக்கு மீறி எதையும் சேர்த்துக் கொள்ளாத அந்த ஆதி மக்களின் முன்னால் , பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்க்கும் நாகரிக மனிதன் தலைகுனிய தான் வேண்டும்.
தேவைகள் அதிகம் இல்லாததால் ஆசைகள் அதிகம் இல்லாத மனிதர்கள் அவர்கள். ஆனால் சமவெளியில் வாழும் நாகரீக மனிதனின் தேவைகளும், அவர்களுடைய நுகர்வோர் கலாச்சாரமும் இந்த ஆதி குடிகளை எப்படி எல்லாம் விரட்டி அடிக்கிறது என்பதை வாசிக்கும் போது கட்டாயம் மனது வலிக்கும்.
எல்லா உயிர்களையும் காக்கும் காடு தங்களையும் பாதுகாத்து வருகிறது என்பது வேங்கப்பதியினரின் நம்பிக்கை. ஆனால் அரசாங்கம் அந்தப் பகுதியை புலிகள் காப்பகமாக மாற்றத் துடிக்கிறது. அதனால் அங்கு வாழும் ஆதிகுடியினரை அவர்கள் வாழ்விடத்தில் இருந்து விரட்டி அடிக்க அத்தனை ஏமாற்று வேலைகளையும் செய்கிறது.
கோர் ஜோன் என்ற பெயரில் அவர்கள் வாழ்ந்த பகுதிகளில், அவர்கள் சுதந்திரமாக நடமாட முடியாதபடி கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. தன்னுடைய காடு என்று வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கு அது பெரிய அதிர்ச்சி. இருந்தாலும் வாழ்தல் வேண்டி, தோட்ட வேலைகளுக்கு வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உருவாகிறது.
புலிகளை காப்பதற்காக, புலிகள் காப்பகமாக காடு மாற்றப்பட்டது என்பது உண்மை என்றால் சுற்றுலா பயணிகளுக்கு கொடுக்கப்படும் அனுமதிகள் ஏன் அங்கு வாழும் ஆதி குடியினருக்குத் தரப்படுவதில்லை? அதில் எத்தனை அரசியல் இருக்கிறது என்பதை வாசிக்கும் போது நம்மால் உணர முடியும்.
காட்டு ராசா , மூப்பன் போன்ற பழங்குடி பழங்குடி மக்கள் இந்த கதையின் கதாபாத்திரங்கள். எத்தனை கொடுத்தாலும் காடுகளை விட்டு வெளியேற மறுக்கிறார்கள். சிலர் அவர்களுடைய 10 லட்சம் ரூபாய் பணம் வீடு என்ற ஆசைகளுக்கு பலியாகி வெளியேறி விடுகிறார்கள். அங்கே போனாலும் அவர்கள் ஏமாற்றவேப்படுகிறார்கள்.
புலிகள் காப்பகமாக மாற்றப்பட்ட கதை, ஆழியாறு அணை உருவான கதை, அணை கட்டும் போது கேள்விக்குள்ளாகும் ஆதிவாசிகளின் வாழ்வியல் மற்றும் அவர்களின் உயிர்ப்பலி என்று பல விஷயங்களை இந்த நாவல் உண்மையாக பேசுகிறது.
அதோடு மட்டுமல்லாமல் இயற்கையோடு இயந்து வாழும் அந்த மக்களின் வாழ்வியல் முறை, அவர்களுடைய திருமணச் சடங்கு, அவர்களுக்குள் இருக்கும் காதல் எல்லாவற்றையுமே பேசுகிறது.
மேலும் வனவிலங்குகள் கணக்கெடுக்கின்ற போது, அதிகாரிகள் செய்யும் தகிடு தத்தங்களை பற்றியும் பேசுகிறது.
அதையெல்லாம் தாண்டி இந்த நாவல் ஆனை மலை (Anaimalai) காடுகளுக்குள் நம்மை கைப்பிடித்து உள்ளே அழைத்துச் செல்லும். நாவல் ஆரம்பித்த இடத்திலிருந்து ஏராளமான பறவைகள், விலங்குகள், மரங்களைப் பற்றியத் தகவல்கள் வாசிக்க வாசிக்க ஒரு அலாதியான இன்பத்தை தரும்.
பச்சைப் பஞ்சுருட்டான், காட்டுச் சேவல், மயில், மந்திப்புறா, நீல இறகு கிளி, ஆந்தை, தவிட்டுக் குருவிகள் என்ற சிலம்பன், பச்சை குக்குறுவான், கரிச்சான் குருவி, உண்ணிக் கொக்கு, நீலச்சிட்டு, பறக்கும் மலை அணில், பொன்முதுகு மரம் கொத்தி, இருவாச்சி என பல்வேறு பறவைகளைப் பற்றிய அறிமுகங்களும் , அவற்றின் உடல் அமைப்பு, அந்தப் பறவைகளின் ஒலி எல்லாவற்றையும் இந்த நாவலில் ஆசிரியர் அருமையாக பதிவு செய்திருக்கிறார். இதை வாசிக்க வாசிக்க ஒரு அருமையான பறவை பார்த்தல் அனுபவமே நிகழ்வது போல இருக்கும்.
இந்தப் பகுதிகளை எல்லாம் என் மகனோடு சேர்ந்து நான் வாசித்தேன். பறவை பார்த்ததில் எனக்கான குரு அவன்தான்.
இவற்றோடு இன்று டாப்ஸ்லிப்பில் இருக்கும் அனைத்து தேக்கும் மரங்களையும் வளர்த்த ஹியூகோ வுட் என்ற வன அதிகாரியை பற்றிய தகவல், ஆனை மலை (Anaimalai) காடுகளின் சிறப்பம்சமான யானைகளை பற்றியான தகவல்கள், கும்கி யானைகளை பழக்குவது பற்றி என்று பல்வேறு செய்திகளையும் இந்த நூலில் நாம் அறிந்து கொள்ளலாம்.
நூலை எடுத்தால் எந்தவித அயற்சியும் இல்லாமல் வாசிக்க வைக்கும், அருமையான எழுத்து நடை இந்த நூலின் மற்றும் ஒரு சிறப்பு.
காடு என்பது ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு புதிய வசீகரத்தை கொடுத்துக் கொண்டிருப்பது போல, இந்த நூலை மூன்று முறை வாசிக்கும் போதும் , புதுப்புது வாசிப்பு அனுபவத்தை தந்தது என்று சொல்லலாம்.
பழங்குடி மக்களின் வாழ்வின் துயரத்தை இந்த நூல் சமூகப் பொறுப்போடு பதிவு செய்கிறது. நிச்சயம் நீங்களும் வாசித்துப் பாருங்கள்.
நூலின் தகவல்கள்:
நூல் : ஆனை மலை (Anaimalai)
ஆசிரியர் : வே.பிரசாந்த் (Prashanth Ve)
பதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
பக்கங்கள் : 240
விலை : ₹320.00
புத்தகம் வாங்க: www.thamizhbooks.com
நூல் அறிமுகம் எழுதியவர்:
பூங்கொடி பாலமுருகன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.