ஆனைமலை – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல் : ஆனைமலை
ஆசிரியர் : பிரசாந்த் வே
விலை : ரூ .304
வெளியீடு : எதிர் வெளியீடு
நூலைப் பெற : thamizhbook . com
அடர் காட்டுக்குள், பழங்குடிகளின் வாழ்வோடு உடன் பயணம் செய்ய வாய்ப்பு கொடுத்த உங்கள் நாவலுக்கு மிக்க நன்றி. எல்லாம் மரமே, பறப்பன எல்லாம் காக்கா, குருவியே என மட்டுமே சுட்டியிருந்த எனக்கு காடு என்பதுள்ளான வாழ்வு ஒன்று உண்டு என்பதை நக்கீரன் காடோடியில் உணர்த்தியிருந்தார். அதை மீண்டும் மீண்டும் நினைவூட்டியதற்கு உங்களுக்கு பெரு நன்றி தோழர்.
காடு என்பதற்குள்ளும் ஒரு உலகம் இயங்குகிறது, சென்னையின் நதிக்கரையோரம் வாழ்ந்திடும் குடும்பங்கள் / அவ்வளவாக கவனம் பெறாத ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள(வைக்கப்பட்டுள்ள) அந்த கீழ்த்தட்டு மக்கள் வாழிடங்கள் மத்தியிலும் ஒரு உலகம் இயங்குகிறது, அங்கிருக்கும் மனிதர்கள் மட்டுமே அல்ல உயிரினங்களும் முக்கியமே, வேறெங்கும் அவ்வளவாக காணக் கிடைத்திராத மனிதர்கள்-விலங்கினங்கள் இடையேயான பரஸ்பர உறவு, பேச்சுவார்த்தை என்பது இவ்விடங்களில் ஆழமாக, அழகாக இருக்கிறது என சாதாரணர்களுக்கு உரைத்திடவே ஒரு படைப்பு தேவைப்படுகிறது. அவ்வகையில் இப்படைப்பு ‘ஆனைமலை” முக்கியத்துவம் பெறுகிறது என நினைக்கிறேன். இந்நாவலில் கூடுதலாக மனிதர்கள்-விலங்குகள்-மரங்கள்/செடிகள் என முக்கோண ஒரு உறவாடலும், உரையாடலும் இருக்கிறது என அர்த்தமாகிறது.
இந்நாவலுடன் இணைந்தே மற்றொரு நூலும் படித்து வருகிறேன். அந்த நூல் சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் மற்றும் காஷ்மீர் பகுதியின் “தேசபாதுகாப்பு/வளர்ச்சி” நடவடிக்கைகள் குறித்தான ஆய்வு. Frency Manecksha என்னும் பத்திரிகையாளர் எழுதியது. அதில் ஒரு வார்த்தை என்னை மிகவும் ஈர்த்தது. அது சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் பழங்குடிகள் வாழ்வில் ஒரு ethical reciprocity உள்ளது என்பதே அது. Reciprocate என்பது திருப்பியளி என அர்த்தப்படும். Ethical என்பது நெறிமுறைகள் எனவாகும். பழங்குடிகள் வாழும் பகுதிகள் பழங்குடிகள் – விலங்கினங்கள்-பறவையினங்கள்-மரம் செடி உள்ளிட்ட உயிரினங்கள் என இவை இடையே ஒரு நெறிமுறைக்கு உட்பட்ட திருப்பியளித்தல் இயல்பாக உள்ளது என சொல்கிறார் மாகென்ஷா. “ஆனை மலை” நாவல் தொடங்கிய சில பக்கங்களிலேயே அந்த நெறிமுறைக்கு உட்பட்ட திருப்பியளித்தல் என்பதன் உண்மை அர்த்தம் எனக்கு எந்தவித சிக்கலுமின்றி வெளிச்சமானது. இப்படியான நெறிமுறைக்கு உட்பட்ட திருப்பியளித்தல் இருக்கையில் இக்காடுகளையும், இப்பழங்குடிகளையும், காட்டின் உயிரினங்களையும் இம்மூவரது கூட்டு இல்லாமல் எப்படி ஒன்றை பாதுகாக்க இயலும்? என்பதே இந்நாவல் நம் முன்வைக்கும் கேள்வி என உணர்கிறேன்.
இரண்டாவதாக, வாழிடங்களை விட்டு நீங்குதல் என்பது ஒன்றும் மனிதர்கள் உள்ளிட்ட எந்தவொரு உயிரினங்களுக்கும் எளிமையாக, உவப்பானதாக, பாதுகாப்பான ஒன்றாக இருக்காது. வாழ்வு தேடி நகர்தல் என்பதும் வாழிட மாற்றத்திற்கு பணிதல் என்பதும் ஒன்றல்ல. இந்நாவலில் இடம் பெயர்க்கப்படுகிற பழங்குடிகள் வாழ்வும், நகரங்களின் வளர்ச்சிக்கு நகரங்களை விட்டு புறம் வைக்கப்படுகின்ற அச்சாதாரண மக்கள் வாழ்வும் ஒன்றாகவே இருக்கிறது. அதிகாரத்தின் கயமைப்பேச்சின் வழியே உண்மையான மக்கள் முன்னேற்றமும், அம்மக்களுக்கான வசதிகளும் இருப்பதில்லை என்பதே மிக உண்மை. அதையும் இந்நாவல் சொல்லத்தான் செய்கிறது என்ற போதும் இன்னொரு விஷயமும் சொல்ல வருவதாக உணர்கிறேன். இடவளர்ச்சி அல்லது இட மற்றும் பல்லுயிர்பாதுகாப்பு என்ற பெயர்களின் வழியே செய்யப்படும் செய்கைகளில் எந்த உண்மைத்தன்மையும் இல்லை என்பதும், வளர்ச்சி அல்லது பாதுகாப்பு என்பது கூட உண்மை இல்லை என்பதே அது. காட்டு புலிகள் பாதுகாப்பு வழியே வன அழிப்பும், வன சொத்து பறிபோகுதலும் எளிதான வழியாக்கப்படுகிறது என்பதையே இந்நாவல் சொல்கிறது.
படியுங்கள் மக்களே வெகு சுவாரசியமான நாவலாக இருக்கிறது.
Ganesh Devy யின் சொற்றொடரை கொண்டு தொடங்கும்போதே இந்நாவல் என் ஈர்ப்பானது. ஃப்ரண்ட்லைன் இதழில் இவரது கட்டுரையைத் தான் நான் முதன் முதலில் படிப்பேன். பின்பு பூனாச்சி என்ற பெயர். பெருமாள் முருகனின் பூனாச்சி கதையைப் படித்தவர் யார்தாம் அப்பெயர் மீது காதல் இல்லாது ஆவார்? இப்படியாக படைப்புக்குள் நெருக்கமாக அழைத்து செல்லும் ஆசிரியர், சில உவமைகளை சொல்வார் பாருங்கள், வெகு சுவாரசியம்.. “…. பேச்சைக் கேட்டும் கேட்காமல் போகும் அதிகாரிகளைப் போல யானை காதுகளை விசிறியபடி நடந்தது- என்பது போன்றவை வாசிப்பை சுவாரசியமாக்குகின்றன. சமீபத்தில் கேரள பேரிடரில் வயநாட்டில் மூதாட்டியையும் ஒரு குழந்தையும் யானைதான் காப்பாற்றியது என்பதை முன்பு சொல்லியிருந்தால் நம்பியிருக்க மாட்டேன், இந்நாவல் படித்த பின்பு அதுவும் சாத்தியமே என தோன்றுகிறது.
ஒரு geologist சொல்கிறார், நீருக்கும் ஞாபகத் தன்மை உண்டு, ஆகவே தான் அதன் போக்கிலே சென்றிடவே விழைகிறது என்று” கொஞ்சம் எச்சாக தெரிந்தாலும், அதுவும் கூட காடுகளில் சாத்தியமோ என வாசகனை யோசித்து வியக்க வைக்கிற படைப்பாக இருக்கிறது “ஆனைமலை”.
கட்ட கடைசியாக, இந்நாவல் ஆசிரியரின் உழைப்பு அசாத்தியமானது என நம்புகிறேன். காட்டுவாசியில் ஒருவரே கதை சொன்னால் எப்படி இருக்கும் அப்படி அச்சு அசலாக வெகு detailஉடன் காட்டின் வாழ்வை நமக்கு சொல்கிறார். உண்மையில் இந்த சினிமா டைரக்டர்கள் எல்லாம் படப் பிரமோஷனுக்கு பேட்டி கொடுப்பது போல, நாவலாசிரியர்களே நீங்களும் பேட்டி கொடுங்கள். நாளொன்றுக்கு சுமார் 6 மணி நேரம் பேருந்து மற்றும் ரயில் பயணம் செல்லும் நான் பார்க்கிறேன் இந்த காணொளி என்பதே இப்போது மிகவும் ரசனையான வடிவமாக எல்லோருக்கும் இருக்கிறது, வெகு முக்கியமான நேரக்கடத்தலும் அதே. அப்படியான காலத்தில் நாவலாசிரியர்கள், நூலாசிரியர்கள், கவிஞர்கள் தங்கள் படைப்புகள் மீதான சிறு காணொளிகள், பேட்டிகள் கொடுங்கள். படைப்புகளுக்காக மட்டுமே அல்ல, வாசிப்பை பரவலாக்கவும். பதிப்பகங்களும் இதை செய்யலாம். அவ்வாறான ஒரு உரையாடலில் தோழர் பிரசாந்த் வே காட்டு வாழ்வு, பழங்குடி மக்கள் வாழிடம் எனவாக பல விஷயங்களை பல மணி நேரங்கள் பேச முடியும் என நான் நம்புகிறேன். அந்த உரையாடலில் இன்னும் பிரம்மிக்கத்தக்க ஒரு பெருவாழ்வு புலப்படும் என நம்புகிறேன். {அநேகரும் காணொளி கண்டிருக்க நீ வாசித்தாய் அல்லவா உனக்கு மட்டுமே என் படைப்பு இருந்துவிட்டு போகட்டும் என சொல்லக்கூடிய மக்களை, சூழலை குறித்த அக்கறை இல்லாத படைப்பு ஒன்றும் இல்லை இந்நாவல்.)
நகரவாசியான எனக்கு எந்த ஒரு பொருளின் தனித்துவமோ அல்லது அது தனியான ஒன்று என்பதாகவோ ஒரு கவனம் இல்லை. இதுவும் மரம், அதுவும் மரம், இதுவும் பழம், அதுவும் பழம், இது ஒரு மீன் என்றால் அது ஒரு மீன் அவ்வளவே. வாழ்வோட்டத்தில் எதுவும் கவனம் பெறவில்லை என்ற போதிலும் எதிலும் எனக்கு மரியாதையோ மதிப்போ இல்லை என்பதாகவும் வெட்கம் கொள்கிறேன். அந்த வெட்கம் நாவலாசிரியர் மரத்தின் பெயர், பறவையின் பெயர், ஆனைகளின் வகைகள் என்பதாக ஒவ்வொரு detail உம் கொடுத்திட கொடுத்திட அதிகமாகிறது. ஆனைமலை நாவலுக்கோ அது வெகு சுவாரசியமாகிறது, பிரமிப்பைத் தருகிறது. பழங்குடி மக்களுக்கான சூழல் அறிவு என்பது ஏன் டவுன் மற்றும் நகரவாசிகளுக்கு இல்லை என்பதான கேள்விக்கு நகர மற்றும் டவுன் வாசிகள் கும்கி யானைகள் என்று இந்நாவல் சொல்ல வருவதாகவும் உணர்கிறேன்.
தோழர் பிரசாந்த் வே அவர்களுக்கு நல்வாழ்த்துகள் சிறப்பான படைப்பு என்பதில் பெருமிதம் கொள்ளுங்கள் தோழர். வாழ்த்துகள் மீண்டும்.
”ஆனைமலை” நாவலை வாசியுங்கள்
நூல் அறிமுகம் எழுதியவர் :
ராம் கோபால்
நினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில் thamizhbook.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Pingback: ஆனை மலை - Aanai malai (Novel)