கடன்காரனைக்கண்டு
பெட்டிக்கடையின்
பின்னால் பதுங்குகிறது
பீடிபுகைத்துக்கொண்டிருந்த
திருவிழா புலியொன்று.
*******
சுற்றும்முற்றும்
பார்த்துவிட்டு
டாஸ்மாக்கில்
பாய்கிறார்
சற்றுமுன்வரை
அனுமனாய் அருள்பாலித்தவர்.
********
மேலாளரின்
எந்தக்கேள்விக்கும்
பதிலில்லாதவர்
சப்பென அறைகிறார்
கேள்விகேட்ட
மனைவியை.
**********
சமையலயறையின்
அடுக்குகளின்கீழே
ஒளிந்துகிடப்பவரை
முதல்தகவலறிக்கை
இல்லாமலே கைதுசெய்து
குதூகலமாகிறான்
காவலர்மகன்.
********
மனைவிகேட்ட
கதைப்புத்தகத்தை
மறந்துவிட்டு
தலைசொறிகிறார்
நூலகர்.
********
கடைஉணவு
ஒத்துக்கொள்ளாதென்று
மதியசாப்பாட்டை
வீட்டிலிருந்து கொணர்ந்தார்
உணவக முதலாளி..
********
காலையிலிருந்து
வசவெறிந்து
வேலைவாங்கியவர்
மாலையில்
தோளணைத்து
கிசுகிசுக்கிறார்
“நாளைக்கு வாங்கிக்க”
********
இப்படியொரு கஞ்சனாவென
அப்பாவை சபித்ததெல்லாம்
நிழலாடுகிறது
மாதக்கடைசியில்
மகன் சைக்கிள்
கேட்கையில்.
*********
எழுதியவர்:
கௌ.ஆனந்தபிரபு
9585517592
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

