Anand Prabhu Poems | கௌ.ஆனந்தபிரபுவின் கவிதைகள்

1

கிடைத்தகாசுக்கெல்லாம்
புத்தகப் பண்டல் வாங்கி
அத்தனை அழகாய் அடுக்கி
பூரித்துப் போய்
புன்னகைக்கிறான் பாரதி.
பக்கத்துவீட்டில்
கைப்பிடிஅரிசி
கடன்கேட்டுக்கொண்டிருக்கிறாள்
செல்லம்மா.

2

கடுஞ்சண்டை.
பெரும்வாக்குவாதம்.
மனம்வெதும்பி
புத்தனைப்போல்
இல்லறத்திலிருந்து
விடுதலையடைய எண்ணி
அவனைப் போலவே
நடு இரவில் வீடு துறந்து
தெருவின் எல்லையைத்
தொட்டு விட்டேன்.
கிட்டத்தட்ட ஏழெட்டு
பைரவர்கள் தொலைவில்
நின்றிருந்தார்கள்.
இல்லறத்தையேதொடரலாமென்று
வீடுதிரும்பிவிட்டேன்.

3

முதல் நாள் முழுதும்
போராடிப் பார்த்தேன்
முடியவில்லை.
இன்று போய் நாளை வா
என்றான்.
இரண்டாம் நாள்
அவ்வளவு ஆயத்தமோடு
போயும் முடியவில்லை.
இன்று போய் நாளை வா
என்றான்.
மூன்றாம் நாள் ஒரு முடிவோடு
போனேன்.
விடுமுறை தினம் போல.
அலட்சியமாய் இன்று போய் நாளை வா
என்றான்.
முடிகிற கதையல்லவென
தெரிந்துவிட்டது.
நான்காம்நாள்தொடங்கியதும்
ஐநூறைக் கையில் வைத்தேன்.
உடனே முடிந்துவிட்டது.

4) முதுகெலும்பு வலிக்கிறது

வட்டிக்கு விடுபவனிடம்
குனிந்திருக்கிறேன்.
வங்கி மேலாளரிடம்
குனிந்திருக்கிறேன்.
காக்கியுடையை
கண்டவுடனே
குனிந்திருக்கிறேன்.
கும்பலோடு நிற்பவனிடம்
குனிந்திருக்கிறேன்.
கரை வேட்டி கட்டியவனிடம்
குனிந்திருக்கிறேன்.
அதிகாரத்தில் அல்ல
அதன் நிழலில் யாரேனும்
நின்றிருந்தால் கூட
குனிந்திருக்கிறேன்.
முதுகெலும்பு வலிக்கிறது.
அவ்வளவு குனிந்திருக்கிறேன்.
ஏனிப்படி குனிகிறாய் எனக்
கேட்காதீர்கள்.
நீங்கள் குனியும் போது
நானும் பார்த்திருக்கிறேன்.

5) அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்

இல்லறக்கடலில்
இனி ஒன்றாய் பயணிப்பது
இயலாதென்று
எங்கள் படகுகளை
திசை திருப்பிக்கொண்டோம்.
இணைந்து வாழ்வதென்பது
ஆகதென்றதும்
இணங்கிப்பிரிந்தோம்.
பிரிவின் வெக்கை
தாளாத நேரங்களில்
பரிவு காட்டுவது நீ விட்டுச்சென்ற
மிச்சங்கள் தான்.
மழையில் தலைநனைந்த மரம்
மழை நின்றபின்பும்
சொட்டுச்சொட்டாய் ஈரத்தை
உதிர்ப்பதைப்போல.
தனிமை இருட்டுக்குப்பயந்து
இசை மெழுகுவர்த்தி ஏற்றுகிறேன்.
காற்றில் கசிகிறார் பாடும்நிலா.
“சில நாழிகை நீ வந்துபோனது.
என் மாளிகை அது வெந்துபோனது”
அங்கே உன்னறையில்
நாமெப்போதும் இணைந்து கேட்குமொரு
பாடலின் கடைசிப்பல்லவியை
நீ கேட்டிக்கொண்டிருக்கிறாயா?
“உடனே வந்தால் உயிர்வாழும்.
வருவேன் அந்நாள் வரக்கூடும்”
என் அலைபேசி அழைக்கிறது.

எழுதியவர்: 

கௌ.ஆனந்தபிரபு
9585517592

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *