ஆனந்தம் துறந்த ஆனந்த தீர்த்தர் – எஸ். ஜெயஸ்ரீ
நம் நாடு சுதந்திரமடைந்து, சுதந்திரத்தின் பவள விழாவைக் கொண்டாடி விட்ட போதிலும் கூட சமூக விடுதலை எந்த அளவுக்கு இருக்கிறது என்று யோசித்தோமானால் இன்றும் பெரிய கேள்விக்குரியதாகவே இருக்கிறது. இன்றும் நாடு முழுவதும், தங்கச் சங்கிலி போட்டுக் கொண்டதற்காக, திருமணத்தை திருமண மண்டபத்தில் நடத்தியதற்காக, பொது இடங்களில் பொது மக்கள் தாகம் தணிப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை எடுத்து அருந்தியதற்காக என்று பலப்பல காரணங்களுக்காக ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பினத்தைச் சேர்ந்தவர் தாக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறார். இன்றும் இந்தத் தீண்டாமைக் கொடுமையை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்த வண்ணமே இருக்கின்றன. ஆடி மாதம் போன்ற விழாக்கால மாதங்கள் வரும்போது, எத்தனையோ கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சினைகள் முளைக்கின்றன.
இதெல்லாம் நடப்பது, இந்த சுதந்திரக் குடியரசு நாட்டில். ஓரளவுக்குப் பண்பட்ட நாகரிகம் வளர்ந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டுக் காலக் கட்டத்திலேயே இப்படி இருக்கும்போது, இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் இந்தத் தீண்டாமை நிலைமைகள் எப்படி இருந்திருக்கும்? மகாத்மா காந்தியடிகளின் ஹரிஜன் சேவா என்பது, சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. ஆனால், தீண்டாமை ஒழிப்பு மட்டுமே தன்னுடைய வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டு வாழ்ந்தவர் ஒருவர் உண்டென்றால், அது ஆனந்த தீர்த்தர் என்பவர் ஆவார்.
ஆனந்த தீர்த்தர், 02.01.1905 அன்று கேரள மாநில தலச்சேரியில், சாரஸ்வத பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். பள்ளியில் படிக்கும்போதே, உடன் பயிலும் தாழ்ந்த சாதி மாணவர்களையும் வீட்டுக்கு அழைத்து வருவதும், அவர்களுடனேயே விளையாடுவதும், அவர்களை வீட்டுக்கு அழைத்து வந்து தாயாரிடம் அவர்களுக்கும் உணவு தரச் சொல்வதும் அவர் வழக்கமாயிருந்தது. படிப்பில் முதல் மாணவனாக இருந்ததால், அவருக்கு கல்வி உதவித் தொகை கிடைத்து இண்டர்மிடியட் முடித்து, மேற்படிப்பு படிக்கவும் உதவித் தொகை கிடைத்தது. இவர் இண்டர்மிடியட் படிக்கும்போது தலச்சேரி காங்கிரஸ் அமைப்பில் பொறுப்பு வகித்த நீதிபதி ஒருவரின் மகன் சிதம்பரநாத் என்பவர் மூலம் கதரும், காந்தி நடத்திய யங் இந்தியா பத்திரிகையும் அறிமுகமாயின. அவருடைய தந்தை ஆர்ய சமாஜத்துடன் தொடர்பில் இருந்ததால், ஆனந்தர் சிறுவனாயிருந்தபோதே, ரமணர், ராமகிருஷ்ண பரமஹம்சர், ராமதாசர் ஆகியோர் பற்றி தெரிந்து கொண்டார். பட்டப்படிப்பினைத் தொடர சென்னையில் பிரசிடென்சி கல்லூரியில் இடம் கிடைத்ததால், அவருக்கு தியோசபிகல் சொசைட்டியும், ராமகிருஷ்ண மிஷனும் அறிமுகமாயின.,
பிரசிடென்சி கல்லூரியில் படிக்கும்போது, ஸ்ரீ நாராயண குரு இவரது கவனத்தைப் பெற்றார். 1920ல் தலச்சேரியில் படிக்கும்போது, நாராயண குரு அந்த ஊரிலுள்ள ஜெகநாதர் கோயிலுக்கு வரும்போது, இவர் அவரை ஒரு குறிப்பிட்ட சாதியினரின் ஆன்மீக குரு என்றே கருதினார். காந்தியும், நாராயண குருவும் சந்தித்துக் கொண்டது பற்றியும், அவர்களுடைய உரையாடல் பற்றியும் ஒரு செய்தித் துணுக்கை அவர் வாசிக்க நேர்ந்தது. மோட்ச சித்தாந்தத்தைப் பற்றிய விளக்கத்தை நாராயண குரு அளித்தபோது, “ மோட்சத்தை இந்து மதத்தின் மூலம் மட்டுமல்ல; எந்த மதத்தின் மூலமும் அடையலாம்; மக்களுக்கு மறுமையில் கிடைக்கும் மோட்சத்தை விட, இம்மையில் கிடைக்கும் விடுதலையே முக்கியமானது’ என்று கூறியிருந்தது ஆனந்தரை மிகவும் கவர்ந்தது. 1923ல் டி.ஆர்.கிருஷ்ணசாமி அய்யரால் பாலக்காட்டில் தோற்றுவிக்கப்பட்ட சபரி ஆசிரமத்தில், ஆனந்தர் 1926ல் சேர்ந்தார். அவர்.
1927ல் காந்தியடிகள் கேரளத்தில் ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, சபரி ஆசிரமத்திற்கு வருகை தந்தார். அவருடைய, : மதுவைக் கைவிடுங்கள்’ கதரணியுங்கள்’ தீண்டாமையை கை விடுங்கள்” என்ற கொள்கையையும் ஆனந்தர் மனதில் ஏற்றார். அதே வருடம், ஸ்ரீ நாராயண குரு, கிருஷ்ணய்யர் வீட்டுக்கு வந்தார். இந்த இரு சந்திப்புகளும் ஆனந்தர் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. 1928ல், அவர் குஜராத்தின் சபர்மதி ஆசிரமத்திற்கு புனித நடைப் பயணத்தை மேற்கொண்டார். போகும் வழியில், மகாராஷ்டிர கிராமம் ஒன்றில், தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் ஒரு பகுதியில் சென்று தாகத்திற்குத் தண்ணீர் கேட்டார். மேல் சாதியினர் ஒருவருக்குத் தண்ணீர் தருவது பாபச் செயல் என்று தரவில்லை. மேல்சாதி குடியிருப்புக்குக் கேட்டபோது, அவர் கீழ்சாதி குடியிருப்புக்குச் சென்று வந்ததால், அசுத்தமானவருக்குத் தண்ணீர் தர முடியாது என்று சொல்லி விட்டார்கள். கடைசியில் ஒரு இஸ்லாமியர் வீட்டில் தண்ணீரும், உணவும் கூடத் தந்தார்களாம். எந்த அளவுக்கு தீண்டாமை புரையோடிப் போயிருக்கிறது என்பதையும், “ ”சாதியைச் சிந்திக்காதே; சாதியைக் கேட்காதே; சாதியைச் சொல்லாதே” என்ற நாராயண குருவின் கொள்கையைப் பின்பற்றுவதன் விளைவையும் உணர்ந்தார்.
1928 மே மாதம் சபர்மதி ஆசிரமத்தை அடைந்தார். அப்போது சிவகிரியிலிருந்து தர்ம சங்கத்திற்கு வரும்படி அழைப்புக் கடிதம் வந்தது. ஆகஸ்ட் மாதம் ஸ்ரீ நாராயண குரு அவருக்கு, காவி உடை கொடுத்து, அவரது இயற்பெயரான ஆன்ந்த ஷெனாய் என்பதை ஆனந்த தீர்த்தர் என்று மாற்றினார்.1929ல் கேளப்பனால் நிறுவப்பட்ட சிரத்தானந்தா வித்யாலயத்தில் பணிபுரிந்தார். அப்போது, தாழ்த்தப்பட்ட மாணவர்களை நெசவாளர் குடியிருப்பின் வழியாக அழைத்துச் செல்லும்போது அவரும், அந்தக் குழந்தைகளும் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கப்பட்டார்கள். 1930ல் ராஜாஜியின் தலைமையில் உப்புச் சத்தியாக்கிரகம் நடந்தபோது, ஆனந்தர், வழிநெடுகிலும் உள்ள தாழ்த்தப்பட்டோரின் சேரிகளைப் பார்வையிடப் பணிக்கப்பட்டார். தாழ்த்தப்பட்டோரின் குழந்தைகளைப் பொது நீர் நிலையில் இறக்கிக் குளிப்பாட்டத் தயாரானார். அந்தக் குழந்தைகள் மேல்சாதி இந்துக்களுக்குப் பயந்து அவருடன் செல்லவில்லை. பொதுக் கூட்டங்களில், அரிஜனர்களை தனியாக அமர்த்துவதைப் பார்த்து தன் எதிர்ப்பைத் தெரிவித்தார். 1930ல் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஆனந்தர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர், தான் குருவாயூர் கோயிலுக்குச் சென்றபோது, சுற்றுப் புறத்தில் எதையோ வாங்கச் சென்றபோது, அவர் என்ன சாதி என்று சொல்லாததற்காக, காலிலியே அடி வாங்கினதை சிறைவாசிகளுடன் பகிர்ந்து கொண்டார்.
1931 நவம்பரில், குருவாயூர் கோவிலில் பாகுபாடில்லாமல் அனைவரும் நுழைவதற்கான குருவாயூர் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடங்கியது. அப்போது, அவருடைய சக போராளிகளான, ஏ.கே.ஜி யும், கேரளீயனும் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு, அவரது கண்ணோட்டம், முற்றிலுமாக மாறியது. காங்கிரஸாரின் போராட்டம், வெறும் அரசியல் விடுதலையைப் பற்றியது மட்டுமே. தீண்டாமை என்பது தொழுநோய் போலப் பரவியிருக்கிறது. அதை எதிர்த்துப் போராடுவதே தன்னுடைய முழு நோக்கம் என்று தீர்மானித்துக் கொண்டார். இந்தத் தாழ்த்தப்பட்ட மக்கள் அடிமைகளைக் காட்டிலும் கீழ்நிலையில் இருக்கிறார்கள்; மதம் சார்ந்த புத்தெழுச்சியின் மூலமாகவே தீண்டாமைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று எண்ணம் கொண்டார். முழுக்க முழுக்க தீண்டாமை ஒழிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
1931ல் பையனூரில் நாராயண வித்யாலயத்தைத் தொடங்கினார். நாராயண விடுதிகளை பல இடங்களில் நிறுவினார்.( ஒரு இடத்தில் அந்தக் குழந்தைகள் படிக்கும் வகுப்பறைகளில் மலக் கழிவுகளைக் கொட்டி வைத்து, படிக்க விடாமல் செய்ய முயற்சித்தார்கள் உயர் சாதியினர் என்று கருதப்பட்டவர்கள்). தாழ்த்தப்பட்ட குழந்தைகளைத் தங்க வைத்து, அவர்கள் பொதுப் பள்ளிக் கூடங்களில் சேர்ந்து படிக்க உதவினார். 1933ல், கேளப்பனுடன் இணைந்து, சாதி ஒழிப்புக்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தினார். சாதிப்பெயரை இணைக்காதிருப்பது, சமபந்தி உணவு, கலப்புத் திருமணம் போன்றவற்றை ஏற்றுக் கொள்பவர்கள் இந்த இயக்கத்தின் உறுப்பினராக அனுமதிக்கப்பட்டார்கள். சாதியமைப்பு ஒழிந்தால் மட்டுமே, இந்துக்கள் ஒரு சமூகம் என்ற தகுதியைப் பெறுவார்கள்; வகுப்பு வாதம் ஒழிந்து, சமூகப் புத்தெழுச்சி பெறும் என கூறினார்..
1947ல், சுதந்திரம் அடைந்த பிறகு, லேபர் பள்ளிக் கூடங்களில்,( இந்த லேபர் பள்ளிக் கூடங்கள் என்பது பிரிட்டிஷாரால் பட்டியிலினக் குழந்தைகளுக்காக ஏற்படுத்தப்ப்ட்டவை), தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவதை ஆனந்த தீர்த்தர், ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பினார்.
இப்படி இவருடைய பணிகள் தொடர்ந்து கொண்டிருந்தபோது, சன்னியாசி சங்கத்தின் தலைவரைத் தேர்ந்தெடுப்பது பற்றிய விவாதம் வந்தது. இவர் வருவதை அவர்களில் பலர் விரும்பவில்லை. சாதி ஒழிப்புக்கான அவரது பணிகளில் அவர்களுக்கு அக்கறையில்லை என்பதை உணர்ந்து கொண்ட அவர், 1974 ஆம் வருடம், தர்ம சங்கத்தின் உறுப்பினர் பதவியையே ராஜினாமா செய்து விட்டார்.
இவர் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் தீண்டாமை ஒழிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார். நிலவுடைமையாளர்களுக்குப் பயந்து தங்கள் நிலங்களைக் கை விட்டவர்களாகவும், அடிமை வேலைகளையும், கூலி பெற முடியாமலேயே வேலை செய்பவர்களாகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வந்தார்கள்.1951ல் அரிஜன சேவா சங்கம் ஒரு திட்டம் வகுத்து, ஆனந்த தீர்த்தரை மதுரை, மேலூர் பகுதியில் பனியாற்றப் பணித்தது. இவரின் பணிகள் தீவிரமாக இருந்தன. தீண்டாமையை ஒழிப்பதில் இவரது எண்ணம் மிகவும் தீவிரமாக இருந்ததால், அடிக்கடி போராட்டம் நடத்துவது, வழக்குப் பதிவு செய்வது என இவர் அதி தீவிரமாக செயல்பட்டார். இந்த வேகம், அந்த சங்கத்துக்குள்ளேயே தலைமைக்கும், யாருக்காக பாடுபாட்டாரோ அந்த மக்களுக்கே கூட பிடிக்கவில்லை.
தாழ்த்தப்பட்ட மக்களை பொதுக் குளத்தில் நீராட அழைத்துச் செல்வது, தேநீர்க் கடைகளில் தேநீர் அருந்த அழைத்துச் செல்வது என இவர் பல நடவடிக்கைகள் எடுத்தபோதெல்லாம், அடிபட்டு, மிதிபட்டு துனபங்களை அனுபவிக்கிறார். இதனால், அவரது பெற்றோர், திரும்பி வீட்டுக்கே வந்து விடும்படிக் கேட்கிறார்கள். ஆனால், இவர், தன் பணியிலிருந்து சற்றும் விலகுவதாக இல்லை. மதுரையைச் சுற்றிப் பல கிராமங்களில் இவர் நடத்திய போராட்டங்கள் நடத்தினபோதும், மக்கள் பயத்தினால் பல போராட்டங்கள் பின்னடைவேயே சந்தித்தன.
காஞ்சிபுரத்தில், ஒரு கோயில்;ல் வாசலில், “ இங்கு தொழு நோயாளிகளுக்கும், பிற்படுத்தவர்க்கும் அனுமதியில்லை” என்ற பலகை இருப்பதைக் கவனித்து, அதை அகற்ற வேண்டி இவர் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றது.
அரிஜன சேவா சங்கத்தின் தலைமை, தாழ்த்தப்பட்டோர் குடியுரிமைக்காக, குறிப்பாக, பொதுக் கிணறுகளில் தண்ணீரெடுத்தல் கோவில் நுழைவு ஆகியவற்றிற்காக, காந்திய வழியில் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்த காந்திஜியிடம் ஆதரவு நாடினார்கள். ஆனால், அவரோ, சத்தியாக்கிரகம் போன்ற போராட்ட வழிமுறைகளை, வெள்ளையர்களுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், நம் சொந்த மக்களுக்கெதிராக பயன்படுத்தக் கூடாது என்று வாதம் செய்து விட்டார்.
1950 முதல் 1974 வரை பல விதமான போராட்டங்களில் இவர் தீவிரமாக ஈடுபடுகிறார். இவருடைய ஒரே நோக்கம் தீண்டாமை ஒழிப்பு மட்டும்தான். இவருடைய தீவிர நடவடிக்கைகள் பிடிக்காததால், சங்கங்கள் இவருக்கு சரியான ஒத்துழைப்பு கொடுக்காததாலும், இவரது நடவடிக்ககளைக் கட்டுப்படுத்தியதாலும். 1974 ல் விலகி வந்து விட்டார். ஆனால்,, அதன் பிறகு, இவர் தீண்டாமைகெதிராக, தனி மனிதப் போராட்டங்களை நடத்த ஆரம்பித்தார்.
1982 நவம்பர் ஒன்றாம் தேதி, குருவாயூரப்பன் கோயிலில் புகழ் பெற்ற குருவாயூர் சத்தியாக்கிரகப் போராட்டப் பொன்விழா ஆண்டில் பங்கேற்க இவரும் சென்றார், அதற்கு அடுத்த நாள், ஊட்டுப்புரை என்றழைக்கப்படும் உணவுக் கூடத்திற்குச் சென்றார். இவரை மேல் துண்டை அகற்றச் சொல்லி, பூணூல் இருக்கிறதா என்று பார்த்து, இல்லாததால், இவரை மேலாளரின் அறையில் தரையில் அமரச் செய்து, பொய்க் குற்றங்களை சாட்டி, போலிஸ் அடித்துக் கைது செய்தது.
குருவாயூர் கோயிலில் அவர் சுற்றுப் பிரகாரக் கடைகளில் சுற்றி வந்தபோது வாங்க ஆரம்பித்த அடி, அவரது வாழ்க்கை முழுவதும் தொடர்ந்திருக்கிறது. ஆனாலும், அவர், தாழ்த்தப்பட்ட பிரிவினத்தைச் சேர்ந்த குழந்தைகள் கல்வியறிவு பெற வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்ததாலேயே நாராயண வித்யாலயத்தைத் தொடர்ந்து நடத்தி வந்தார்.
தொடர்ந்து அடி, உதைகள், போலிஸ்காரர் துன்புறுத்தல்கள் இவற்றால் அவரது உடல் நலன் மிகவும் பாதித்தது. கடைசியாக, குருவாயூரில், மிகவும் குரூரமாக, துணியில் கல்லைக் கட்டி, போலிஸ்காரர் ஒருவர், இவரது தலையில் அடித்து விட்டார். அதன் பிறகு அவர் மிகவும் நலிந்து விட்டார். 1982 – 83 ஆம் ஆண்டுகளில் அவரது உடல் நலன் மிகவும் பாதிப்பு அடைந்தது. 1987 ஆம் ஆண்டு அவர் மகாசமாதியடைந்தார்.
இப்படி, தீண்டாமை மட்டுமே தன் வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டு, சிறு வயது முதலே அதற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஆனந்த தீர்த்தரின், வாழ்க்கைக் குறிப்பு நமக்குக் கிடைக்கக் காராணமாயிருந்தவர் ஏ.எம். அயிரூக்குழியில் என்ற பாதிரியார் ஆவார். அவர் ஆங்கிலத்தில் எழுதியது, மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வந்திருக்கிறது. அதைத் தழுவி, நிர்மால்யா இதைத் தமிழாக்கம், செய்து பாவண்ணனின் இணை ஆக்கத்தோடு வெளிக் கொணர்ந்திருக்கிறார். பிற்சேர்க்கையாக, நாராயண வித்யாச்ரமத்தில் பயின்ற மாணவர்களின் நினைவுக்குறிப்புகளோடு, இந்தப் புத்தகம் வெளி வந்திருப்பது, வாசிப்பவருக்கு, ஆனந்த தீர்த்தர் பற்றிய பெருமையைச் சொல்லும்.
இப்படியெல்லாம் அரும்பாடு பட்டிருக்கிறார்கள் பெரியோர். ஆனாலும், இன்றும் தீண்டாமை முற்றிலும் ஒழிந்து விட்டதா என்கிற பெரிய கேள்விக் குறியை நம் முன் வைத்து, இன்னும் எத்தனை ஆனந்த தீர்த்தர்கள் நம்மிடையே தோன்ற வேண்டும் என்ற பெருமூச்செறிய வைக்கிறது.
—————————————————-
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | ஆனந்த தீர்த்தர்: தலித் உரிமையின் தனிக்குரல் |
| ஆசிரியர்: | ஏ.எம்.அயிரூக்குழியில் (தமிழில் நிர்மால்யா) |
| வெளியீடு: |
பரிசல் வெளியீடு
|
| விலை: | ₹.250 |
| அறிமுகம் எழுதியவர்: |
எஸ்.ஜெயஸ்ரீ
கடலூர்
|
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
