தமிழ் உரைநடையின் பெருமித பதிப்பு முயற்சி – டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப.

தமிழ் உரைநடையின் பெருமித பதிப்பு முயற்சி – டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப.

 

2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதி வாரத்தில் கடலூர் பகுதியைப் பெரும் புயல் தாக்கியது. வருடந்தோறும் புயலுக்கு இலக்காகும் பகுதியாக கடலூர் இருந்தாலும், அந்த ஆண்டு புயலின் தீவிரமும், பாதிப்புகளும் அதிகமாக இருந்தன.  புயல் நிவாரணப் பணிக்காகத் தொடர்ந்து பதின்மூன்று நாள்கள் கடலூரில் தங்க நேர்ந்தது. அவரசமாகக் கடலூருக்குக் கிளம்பியதால், எப்போதும் உடன் எடுத்துச் செல்லும் புத்தகங்களைக் கொண்டு செல்லவில்லை.  முதல் மூன்றுநாள்கள் இரவு பகலாக நிவாரணப் பணிகள் தீவிரமாக இருந்தன. நான்காம் நாளில் இருந்து இரவு நேரங்கள் எனக்குக் கிடைத்தன. இரவுகள் எப்பொழுதுமே எனக்கு விருப்பமானவை. விடிய விடிய விழித்திருந்து எழுத, படிக்க. முழு இரவும் விழித்திருந்து எழுதிவிட்டு. பகலில் வழக்கமான பணிகளுக்குத் திரும்ப முடியும்.

வழக்கமாக இரவுகளில் படிப்பதற்குக் கட்டாயம் புத்தகம் வேண்டும் எனக்கு. நான்காம் நாள், நான் தங்கியிருந்த கடலூரிலிருந்து கிளம்பி,அருகிலுள்ள புதுச்சேரிக்குச் சென்றேன்.  ஒரு புத்தக விற்பனை நிலையத்திற்குச் சென்று, நோட்டம் விட்டேன். மனசுக்குள் ஒரு புத்தகம் வாசிக்க வேண்டும் என்றொரு எண்ணமிருந்தது. நான் தேடி வந்தது கண்ணில்படவில்லை.  “ஆனந்தரங்கப் பிள்ளை டைரி இருக்கிறதா?”என்று கேட்டேன்.  “இல்லை”என்ற பதில் வந்தது. இரண்டு மூன்று கடைகள் அடுத்தடுத்து ஏறி இறங்கினேன். எங்கும் அதே பதில்.

“ஆனந்தரங்கப் பிள்ளை டைரி எங்கு கிடைக்கும்?”

“சார்,அது இருப்பு இல்லை. ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு தொடர்ந்து அந்தப் புத்தகத்தைக் கேட்பார்கள். நாங்கள் இல்லை என்று சொல்வோம். இப்போதெல்லாம் யாரும் கேட்கிறது கூடக் கிடையாது. ரொம்ப வருசத்திற்குப் பின்னால் நீங்கள் கேட்டு இருக்கிறீர்கள். வேறு புத்தகம் எதுவும் வேண்டுமா சார்?”

“இல்லை. ஆனந்தரங்கப் பிள்ளை தான் வேண்டும்.”

“சார், ஆனந்தரங்கப் பிள்ளை வீடு மார்க்கெட்டை ஒட்டி இருக்கு. அந்தத் தெரு பெயரே ஆனந்தரங்கப் பிள்ளை தெரு தான். அங்க அவரது கொள்ளுப்பேரன் ஆனந்த ரவிச்சந்தர் இருக்கிறார். அவரிடம் வேண்டுமானால் ஏதாவது பிரதியிருக்கும். கேட்டுப்பாருங்கள்” என்று புத்தகக்கடைக்காரர் முடித்துக் கொண்டார்.

என்னோடு வந்தவர்களுக்கு ஆனந்தரங்கப் பிள்ளையின் வீடு தெரிந்திருந்தது. அடுத்த பத்து நிமிடங்களில் நாங்கள் அழகிய மரவேலைப்பாடுகள் கூடிய ஆனந்தரங்கரின் வீட்டின் முன்நின்றோம்.

பெரிய வேலைப்பாடுகளுடன் கூடிய மரக்கதவுகள். விசாலமான வராந்தா,மிக அழகிய முற்றம், முற்றத்தைச் சுற்றி நான்கைந்து அறைகள், முற்றத்தின் ஓரத்தில் மாடிக்குச் செல்ல அழகிய மரப்படிக்கட்டுகள் என்று நம் காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாத எழில் மாளிகையாக இருந்தது. மாளிகையின் தோற்றமே மிரட்சியைக் கொடுத்தது. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்த ஒரு மனிதன், ஒரு நாளைக்கு மூன்று நான்கு முறை கூட கவர்னரைச் சந்தித்திருக்கிறார். வாழ்நாளில் ஒரு முறை கூடக் கவர்னரைச் சந்திக்க வாய்ப்பு இல்லாத எத்தனையோ லட்சம் மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் கவர்னர்களுக்கு ஆலோசனை சொல்லும் செல்வாக்கில் இருந்த ஒரு மனிதர் இங்கு வாழ்ந்து இருக்கின்றார்.  கவர்னர்கள் முன்னிலையிலே தன்னைத் ‘தமிழர்களின் குவர்னதோர்’ என்று அழைத்துக்கொண்ட ஓர் ஆளுமை வாழ்ந்த மாளிகைக்குள் நின்றிருக்கிறோம் என்ற பெருமிதம் மேலோங்கியது.

ஆனந்தரங்கப் பிள்ளையின் வழிவந்த ஆனந்த ரவிச்சந்தரை அன்று சந்தித்தது மிக முக்கியமான தருணம்.  சுய அறிமுகத்திற்குப் பின், “சார்,அது பன்னிரெண்டு தொகுதி.  என்னிடம் சில தொகுதிகள் மட்டுமே இருக்கின்றன.  ஆனால் படித்தால் அவ்வளவாகப் புரியாது. நீங்க ஆர்வமாகக் கேட்கிறீங்க.  என்னிடம் இருக்கும் பிரதியைத் தருகிறேன். மறந்திடாமல் திருப்பிக் கொடுத்து விடுங்கள்”என்று சொல்லி,இரண்டு தொகுதிகளைக் கொடுத்தார்.

Picture of Ananda Ranga Pillai House, Pondicherry

பெரும் திரவியம் கிடைத்தது என்று எண்ணி உள்ளம் பூரித்து,புத்தகங்களை எடுத்துக் கொண்டு கடலூருக்குப் பயணப்பட்டோம். கடலூர் சேரும் வரை பொறுமையில்லை. புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தேன்.  புத்தகத்தில் எழுத்துகள் மிக மங்கலாகத் தெரிந்தன. புத்தகம் பதிப்பித்த வருடத்தைப் பார்த்தேன். 1996 என்று இருந்தது.  இருபது வருடங்களுக்குள் எப்படி இப்படி ஆகிவிட்டது என்று ஆராய்ந்த போது, புத்தகம் அச்சிடப்படாமல் ஸ்கேன் செய்யப்பட்டு, அச்சிட்டு இருக்கிறார்கள் என்று புரிந்தது.பார்வையைக் கூர்மையாக்கி ஒரு பக்கம் படித்த போது, தெரிந்த பல வார்த்தைகளோடு தெரியாத சில வார்த்தைகளும் இருந்தன. தெரியாத அந்த சில வார்த்தைகளே பொருள் புரிந்து கொள்வதற்கான மைய வார்த்தையாக இருந்தன. சர்க்கரைப் பொங்கலில் நெய்யில் வறுத்த முந்திரியையும், உலர்ந்த திராட்சையையும் தேடியவன் வாயில் கல் அகப்பட்டதைப் போல ஆகி விட்டது.

கடலூரில் தங்கியிருந்த அடுத்த பத்துநாள்களும் தூங்குவதற்கு முன்பு ஆவலோடு புத்தகத்தை எடுப்பதும் ஒரு பாராபடிப்பதற்குள் தூங்கி விடுவதுமாக நாள்கள் நகர்ந்தன. பணி முடித்து,சென்னை திரும்பும்போது புதுச்சேரி அரசின் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வந்தேன்.  அங்குள்ள நூலகத்தில் சில மணி நேரத்தேடுதலுக்குப்பின் ஆனந்தரங்கப் பிள்ளையின் பனிரெண்டு தொகுதிகளும் கிடைத்தன. ஆனந்தரங்கப் பிள்ளையின் வீட்டிற்குச் சென்று,இரவல் வாங்கியிருந்த புத்தகத்தைக் கொடுத்து விட்டுச் சென்னைக்குத் திரும்பினேன்.

அடுத்தவந்த ஒவ்வொரு நாளும் ஆனந்தரங்கரை ஆவலோடு எடுப்பதும் பொருள் விளங்காமல் சோர்ந்து போவதுமாகப் பொழுதுகள் ஓடின.  படித்த பின்பு தான் தூக்கம் என்ற நிலைமாறி,புரட்டிப் பார்த்தாலே தூக்கம் என்ற நிலையை அடைந்தேன்.

அடுத்த இரண்டு நாளில் நடந்த புத்தகக்கண்காட்சியில் ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பின் ஆங்கிலப்பதிப்பை வாங்கினோம்.ஆங்கிலத்தில் படித்து, பின் தமிழில் படித்தபோது, ஓரளவுக்கு என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆங்கிலம் வழியாகக் கடின சொற்களின் பொருளறிய முடிந்தது.

1736-ஆம் ஆண்டு முதல்  1761-ஆம் ஆண்டுவரையான 25 ஆண்டுகால வரலாற்றை, அன்றாட நிகழ்வுகளை ஆனந்தரங்கப்பிள்ளைப் பதிவு செய்துள்ளார்.  தென்னிந்தியாவில் பத்து கிலோமீட்டருக்கு ஒரு கோட்டை இருந்த காலம் அது. தமிழகத்தில் மட்டும் 350 கோட்டைகள் இருந்திருக்கின்றன. துர்க்கம், கிரி, கோட்டை, மலை என்று முடியும் அனைத்து ஊர்களிலும் ஒரு காலத்தில் கோட்டைகள் இருந்தன. இதைத் தவிர்த்துப் பெரும் மதில் சுவர்கள் உள்ள அனைத்துக் கோயில்களுமே கோட்டைகளாகப் பயன்பட்டன.  துப்பாக்கிகள் மட்டுமே போர் ஆயுதமாக இருந்தவரை கோட்டைகள் பல முடையனவாகக் கருதப்பட்டன. பதினேழாம் நூற்றாண்டில் பீரங்கிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, கோட்டைகள் பாதுகாப்பற்றதாக ஆகிவிட்டன.

பனைமரம் அளவு உயரமுள்ள ஒரு மண் மேடையின் மீது பீரங்கிகளை ஏற்றிவைத்து சுட்ட போது, கோட்டையின் சுவர்கள் மிக எளிதாக உடைந்து போயின. இதைத் தடுப்பதற்காகக் கோட்டைகளின் நான்கு மூலைகளிலும் நான்கு ஐந்து பேர் நிற்கும் அளவிற்கு வெளியில் துருத்திக் கொண்டிருக்கும் அலங்கம் என்ற அமைப்பைப் புதிதாக உருவாக்கினர். தூரத்தில் மாட்டு வண்டிகளும் மனிதர்களும் இழுத்துக்கொண்டு வரும் பீரங்கியைக் கோட்டை அலங்கத்திலிருந்து பார்த்து, அவர்களைத் துப்பாக்கியால் தாக்குவதற்கு அலங்கங்கள் பயன்பட்டன.

பல்லக்குகளைத் தூக்குவதற்கும் போரில் இடிந்த கோட்டைகளைச் சரி செய்யவும், எதிரியினுடைய கோட்டையை இடிக்கவும் போயர் இனத்தவர் பயன்படுத்தப்பட்டனர். யுத்த நேரத்தில் ஆயுதங்களைச் சுமப்பதற்கு என்றே வலுவான உடல் அமைப்பும் பயந்த சுபாவமும் உள்ள ஷோலாப் பூர்பகுதியில் வாழ்ந்த லம்பாடிகள் தேர்வு செய்யப்பட்டார்கள். எதிரிகளுக்குச் சொந்தமான கிராமப்புறங்களைக் கொள்ளையடிக்க, மதுரைப்பகுதி கள்ளர்களுக்குச் சம்பளம் கொடுத்து வைத்திருந்தனர்.ரோஹில்லா, அங்கிரியா பகுதியிலிருந்து வந்த வீரர்களுக்குச் சம்பளம் தர வேண்டியதில்லை.  அவர்களே கொள்ளையடித்துக் கொண்டு அதைச் சம்பளமாக எடுத்துக் கொள்ளலாம்.

வரலாற்றை பறைசாற்றும் டைரி ...

செய்தித் தொடர்புகளுக்குக் கடிதங்களே பயன்பட்டன. தபால் அனுப்புபவருடைய தகுதியை வைத்தும் தபாலைப் பெறுபவருடைய தகுதியை வைத்தும் காகிதத்தின் தரம் இருக்கும். சிலருக்குப் பட்டுப் பையில் காகிதம் அனுப்ப வேண்டும். சிலருக்கு வெல்வெட் துணியில் அனுப்ப வேண்டும். சிலருக்குச் சகலாத்து என்னும் விலை உயர்ந்த ஐரோப்பிய கம்பளித் துணியில் வைத்து காகிதம் அனுப்ப வேண்டும்.  தபாலை எடுத்துச் செல்வதற்குப் பிராமணர்கள் பயன்படுத்தப்பட்டனர். எதிரிகள் கையில் கடிதத்தோடு மாட்டினாலும் இவர்கள் பிராமணர்கள் என்பதால் துன்புறுத்தப்படமாட்டார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.  அதனால் காகிதத்தில் சில செய்திகளும், வாய் வார்த்தையாகப் பல செய்திகளும் பரிமாறப்பட்டன.

சென்னப்பட்டணம், செஞ்சி, புதுச்சேரி தவிர்த்து வேறெங்கும் சென்றிடாத ஆனந்தரங்கப்பிள்ளை, பிரெஞ்சு அரசவையில் நடக்கும் செய்திகள், பிரெஞ்சு அரசரின் காமக்கிழத்தியான மதாம்பம் பிடாரின் அரசியல் செல்வாக்கு, லாகூர் கோட்டையை ஆப்கானியர் தாக்கியது.  டெல்லியை நாதிர் ஷா சூறையாடியது, வங்காளத்தில் நவாப் சிராஜ் உத்தவுலாவின் தோல்வி, மீர்ஜாபரின் துரோகம், ராபர்ட் கிளைவ்,சர் அயர் கூட் ஆகியோரின் வங்காள வெற்றி ஆகியவற்றை ரங்கப்பிள்ளை ஓர் இந்தியனின் பார்வையில் பதிவு செய்துள்ளார்.

25 ஆண்டுக்காலத் தொடர்பதிவு என்பது உலகில் ஆனந்தரங்கப் பிள்ளையைத் தவிர்த்து யாரும் செய்ததில்லை.  சாமுவேல் பெப்பிஸை (23.2.1633 – 25.5.1703) நாட்குறிப்பின்தந்தை என்று அழைப்பார்கள்.  சாமுவேல் பெப்பிஸ் ஆனந்தரங்கப்பிள்ளையை (30.03.1709 – 12.01.1761) விட காலத்தால் முந்தையவர். பெப்பிஸ் தனது இருபத்துஏழு வயதில் நாட்குறிப்பு எழுத ஆரம்பித்து 36 வயதில் எழுதுவதை நிறுத்திவிட்டார்.  இந்த ஒன்பது ஆண்டுகளில் லண்டன் தீவிபத்து, லண்டனைத் தாக்கிய பிளேக்நோய், இரண்டாம் டச்சுப்போர், இரண்டாம் சார்லஸ் அரசரின் காலத்தில் நிகழ்ந்த கலாச்சாரச் சீரழிவுகளைப் பதிவு செய்துள்ளார்.

Portrait of a gentleman “Samuel Pepys” by Godfrey Kneller on artnet

பெப்பிசின் தனிப்பட்ட வாழ்க்கைப் பதிவுகள் அவர் வாழ்ந்த கலாச்சார சீரழிவின் பிரதிபலிப்பாகவே இருக்கின்றன.அவரது காமம், அவரது வேலைக்காரர்களின் காமம் என்று நாட்குறிப்பின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ளன. நாட் குறிப்பு தொடர்ந்து எழுதினால் கண்பார்வை பாதிக்கும் என்றெண்ணிய பெப்பிஸ் நாட்குறிப்பு எழுதுவதை நிறுத்திவிட்டார். அதற்குப் பின்பு 34  ஆண்டுகள்உயிர் வாழ்ந்தார்.  ரங்கப்பிள்ளைத் தனது கடைசி நாள் வரை நாட்குறிப்பு எழுதியவர்.  இறப்பதற்கு முன்பு அவர் பேசிய கடைசி வார்த்தை கூட பதிவாகியிருக்கிறது.  ஆனந்தரங்கப்பிள்ளை அவர்களின் சமூக, பொருளாதார, அரசியல் பதிவுகள் உண்மைக்கு மிக நெருக்கமானவை. உண்மையில் நாட்குறிப்பின்தந்தை என்ற கிரீடம் ஆனந்தரங்கப் பிள்ளைக்கே பொருத்தமாக இருக்கும்.

பிள்ளையவர்களின் நாட்குறிப்பைப் படிப்பவர்களுக்குப் பதினெட்டாம் நூற்றாண்டில் கால் நூற்றாண்டு கால வாழ்வை வாழ்ந்து பார்த்த அனுபவம் கிடைக்கும். அந்தப் பேரனுபவத்தை வாசகர்களுக்கும் தர நானும் கவிஞர் அ.வெண்ணிலாவும் முடிவு செய்தோம். இந்த முடிவை எடுத்தவுடன் நாங்கள் முதலில் சந்தித்தவை, அன்பான அறிவுரைகள், அக்கறையான எச்சரிக்கைகள், அனுபவமொழிகள், ஆயாசத்தை ஏற்படுத்தும் கருத்துகள்.

எங்களுக்கு ஆலோசனை சொன்னவர்களுடைய கருத்துகளை முழுமையாக ஏற்றுக்கொண்டோம். அவர்கள் சொல்வது போல இது எளிய பணியன்று. பிள்ளை அவர்களின் நாட்குறிப்பை மூலம் மாறாமல் தந்தால் மட்டுமே எழுத்தில் ஜீவன் இருக்கும். அதே சமயம், இக்கால வாசகர்களுக்குப் புரியும் வண்ணம் தர முடிவு செய்தோம். அதற்காகச் சற்று மெனக்கெட வேண்டியிருந்தது.

தமிழ் அறிஞர்கள் அறிவோம் ...

பிள்ளையவர்கள் ஒரே சொல்லைப் பலவாறாகப் பயன்படுத்துகிறார்.  உதாரணமாக அவரது ஆரம்பகாலப் பதிவுகளில் திரு, மதிப்பிற்குரிய என்பதைக் குறிக்கும் பிரெஞ்சுச் சொல்லான மான்சியர் என்பதைச் சில இடங்களில் முசியே என்றும் சில இடங்களில் முசே என்றும் சில இடங்களில் சீனியோர் என்றும் எழுதியுள்ளார். அதைப்போல ஆங்கிலேயர்களை இங்கீலீசுக்காரர்கள் என்றும் இங்கிரேசுக்காரர்கள் என்றும் சொல்கிறார்.  செய்திகளைக் கொண்டு செல்வோர்களை அறக்காரர் என்றும் சேதியாளர் என்றும், ஒட்டகச்சுவார் என்றும் அழைப்பார்.  ஆட்சியாளர்களை கவர்னர், குவர்ணதோர், பிரபு, துரை என்று அழைப்பார்.

இருபத்தைந்து ஆண்டுக்காலம் எழுதப்பட்ட நாட்குறிப்பு என்பதால் இந்த மாறுபட்ட வார்த்தைப் பிரயோகங்கள் தவிர்க்க முடியாதவை தான். அதைக் கருத்திற் கொண்டு பிள்ளையவர்கள் பயன்படுத்தியபடியே சொற்களைப் பயன்படுத்தியுள்ளோம்.  பொருள் அறிய முடியாத சில வார்த்தைகளுக்குப் பக்கத்தில் கேள்விக்குறி போட்டுள்ளோம். 12 தொகுதிகளுக்கும் அந்தத் தொகுதியிலுள்ள முக்கியச் செய்திகளைத் தொகுத்து முன்னுரை ஒன்று எழுதியுள்ளோம். விரைந்து தேடுவதற்காகப் பெயர்ச்சொல் அடைவு (Index)  உருவாக்கியுள்ளோம்.  ஆங்கிலத்தில் ரைஸ், ஹுயுபர்ட் மொழிபெயர்ப்பையும் தமிழில் புதுச்சேரி அரசு வெளியிட்ட தொகுதிகளையும் பயன்படுத்தியுள்ளோம்.

ஆனந்தரங்கரின் நாட்குறிப்பைச் செம்மைப் பதிப்பாகக் கொண்டு வர வேண்டும் என்று முயற்சித்த இந்த ஐந்து ஆண்டுகளில் புதுச்சேரி ஆனந்தரங்கப் பிள்ளையின் மாளிகை,எந்த நேரமும் வரலாம் என்ற உரிமையை எங்களுக்குக் கொடுத்தது. ஆனந்தரங்கப்பிள்ளையினுடைய வாரிசாக இருக்கக்கூடிய ஆனந்த ரவிச்சந்தர் புதுச்சேரியிலுள்ள முன்னூறு ஆண்டுக்கால பழமையான மாளிகையின் உரிமையாளர் போல் நடந்து கொள்ளமாட்டார். மாளிகையின் நேர்த்தியை, ஆனந்தரங்கர் பயன்படுத்திய பொருட்களைப் பார்க்கவரும் ஆர்வலர்களுக்கு அவர் ஓர் அன்பான வழிகாட்டி.

புதுச்சேரி தனி மாநிலமாக இருந்தாலும், ஒரு போதும் அம்மாநிலத்தை அந்நியமாக நினைக்க முடிந்ததில்லை. தமிழ்ப் பேசும் மாநிலம் என்பது ஒரு காரணமா, பக்கத்து நகரம் போல் இருக்கும் அதன்அ ருகாமையா, தமிழ்ப் படைப்பாளிகளுக்கும், கலைஞர்களுக்கும் புதுவையுடன் உள்ள உறவா… ஒன்றுடன்ஒன்றுகோர்த்துக்கொண்டகாரணங்கள்ஒன்றிணைந்து, புதுவையுடனான நெருக்கத்திற்குக் காரணமாக இருக்கின்றன. புதுவையின் புகழ்மிகு ஆளுமைகளும், புதுவையில் அடைக்கலமாகச் சென்ற ஆளுமைகளும், புதுவையை வாழ்விடமாகத் தேர்ந்து, குடிபெயர்ந்துள்ள ஆளுமைகளுமாக, புதுவை எப்பொழுதுமே விருப்பத்திற்குரிய இடமாக இருந்து வந்திருக்கிறது. கிராமத்தின் வசதிகளோடும் அழகோடும் வாழ்வதற்கான பட்டணமது.

கடந்த நான்காண்டுகளாக நாங்களும் புதுவையின் அங்கமாக அல்ல, புதுவையின் பிரஜைகளாகவே மாறிவிட்டோம்.  இன்னும் கூட கொஞ்சம் அதிர்ஷ்டம் வாய்க்கப்பெற்றவர்கள் எனலாம். ஆம்; முந்நூறு ஆண்டுகளுக்கு முந்தைய புதுச்சேரியின் பிரஜைகளானோம். சென்னப்பட்டணம் வாசல், வழுதாவூர் வாசல், வில்லியனூர் வாசல், கூடலூர் வாசல் எனக் கம்பீரமாக, மாபெரும் தேசத்தின் நகரத்திற்குரிய கம்பீரமாய் இருந்த புதுச்சேரி எங்களின் நடமாடும் இடமானது.

எங்கள் நினைவுகளில் எல்லாம் புடைவைப் பார்க்கும் சாலைகளும், வண்ணாந்துறைகளும், நாள் முழுக்ககூடலூருக்கும் (கடலூருக்கும்), தேவனாம்பட்டணத்திற்கும், ஆலம்பறைக்கும், சென்னப் பட்டணத்திற்கும் சென்றுவரும் சுலுப்புகளும், தோணிகளும். பலகாத தூரங்களை ஒரே நாளில் கடந்து, அவசர செய்திகளைக் கொண்டு வரும் சேதியாளர்கள், சூரிய உதயத்தைக் கொண்டு நேரத்தைக் கணிப்பதை விட, கடற்கரையிலும் பட்டணத்திலும் பீரங்கிப்போடும் சப்தங்களில் இருந்து நேரத்தைக் கணித்தல், பட்டணம் முழுக்க ஒலிக்கும் வித விதமான ஓசைகளைக் கொண்ட மொழிகள், மனதிற்கு நெருக்கமான வட தமிழகத்தின் சொற்களை மீண்டும் கேட்டு மகிழும் வாய்ப்பு, தென்னிந்தியா மட்டுமல்லாது குஜராத்திகள், மராட்டியர்கள், முகலாயர்கள் என எத்தனையோ மாநிலத்தவர் இயல்பாகப் புழங்கிச் செல்வது என எங்கள் கண் முன்னால், மூன்று நூற்றாண்டு வாழ்க்கை, உயிர்ப்பெற்று ஓடிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் இன்று நாம் வழக்கமாகப் பேசும் சொற்களைத் தவிர்த்து, ரங்கப்பிள்ளை காலத் தமிழில் பேசிப்பார்க்கும் அளவிற்கு நாங்கள் யதார்த்தத்தில் இருந்து துண்டிக்கப்பட்டோம்.

போதி: ஆனந்தரங்கப் பிள்ளை

குறிப்பாக, கடந்த (2019) ஜனவரி 12-ஆம் தேதியில் இருந்து குறைந்தது 10 முதல் 20 மணி நேரம் மணி நேரம் கூட, ரங்கப்பிள்ளையின் நாட்குறிப்புகளில் தான் மூழ்கிக்கிடந்தோம். கூட்டுப் புழுக்களைப் போல் எங்களைச் சுருக்கிக் கொண்டதால் தான், இன்று 12 தொகுதிகளையும் ஒரே நேரத்தில் முழுமையாக வெளிக்கொண்டு வர முடிந்திருக்கிறது.

தொடக்கத்தில் சின்னத் தயக்கமும் இருந்தது. ‘ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பு, தமிழில் தான் எழுதப்பட்டிருக்கிறது. அதற்கு ஓர் உரையும் விளக்கமும் தேவையா? அப்படிச் செய்வது, அவரின் மூலப்பிரதியைச் சிதைப்பதாகாதா?’என்ற கேள்வி.

ஆனால் ஆனந்தரங்கப் பிள்ளையின் தினசரிகளைப் பொறுத்தவரை, தமிழின் முதல் உரைநடை பொக்கிஷம், முந்நூறு ஆண்டுகளுக்கு முந்தைய தென்னிந்தியாவின் வாழ்வியல். இந்திய-ஐரோப்பிய நாடுகளின் வியாபார போட்டாப் போட்டிகளிலும் அதிகாரப் போட்டிகளிலும் சிக்கி, தன் அடையாளத்தை இழந்து கொண்டிருந்த நாள்கள், வண்ணச் சித்திரமாக ரங்கப்பிள்ளையின் தினசரிகளின் பக்கங்களில் இருக்கின்றன. வெறும் சம்பவங்களின் கோர்வையாக மட்டுமல்லாமல், அன்றைய வரலாற்றின் பக்கங்களாக இன்று மாறியுள்ளன. ஐரோப்பிய ஆவணங்களைத் தவிர்த்து, இந்தியர் ஒருவரால் எழுதப்பட்ட மிக முக்கியமான ஆவணம்.

ரங்கப்பிள்ளையின் ஆவணத்தில் எத்தனையோ வரலாற்றுப் புதையல்கள் உள்ளன. பிரெஞ்சு, பிரிட்டிஷ் அதிகாரிகளின் இந்திய வாழ்க்கை, நாடு பிடிப்பதற்காக ஐரோப்பியர்கள் உள்ளூர் ஆட்சியாளர்களை எவ்வாறு தங்கள் கைப்பாவைகளாக மாற்றிக் கொண்டார்கள், நவாபுகளின் ஏற்றமும் வீழ்ச்சியும், பொதுமக்களின் கஷ்ட ஜீவனம், கடல் வணிகம், ஐரோப்பா வரை மேலாதிக்கம் செலுத்திய துணி வர்த்தகம், அன்றைக்கு இருந்த பிற தொழில்கள், பத்துக்கும் மேற்பட்ட மொழிகள், இன்று வழக்கொழிந்து போன சொற்கள் என ரங்கப்பிள்ளையின் ஆவணங்களில் இருந்து ஓராயிரம் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யலாம்.

அதற்கு இன்றைக்கு வரலாற்றை வாசிக்கும் ஆர்வமும், தேடலுமுள்ள வாசகர்களும் ஆய்வாளர்களும் வாசிக்கும் வகையில் ஒரு பதிப்பு தேவை என்பதை உணர்ந்தோம். தெளிவற்ற அச்சும், எளிதில் புரிந்து கொள்ள வழி விடாத நீண்ட வாக்கியங்களும், கூட்டெழுத்துகளும், இன்றைய தலைமுறையினரை, ரங்கப்பிள்ளையிடம் இருந்துவிலக்கி வைத்திருக்கின்றன. ரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பினைச் சமகாலத்த வரை வாசிக்க வைக்க வேண்டுமென்றால், நன்கு அச்சிடப்பட்ட பதிப்பும், வழிகாட்டும் வகையிலான குறிப்புகளும், பிற மொழிச் சொற்களுக்கான பொருளும் தேவை என்பதை உணர்ந்தோம்.

மூலத்தின் தன்மை குலையாமலும், அதே நேரம் வாசிப்புக்குலகுவாகவும் மாற்றவேண்டும் என்பது பெரும் சவாலாகவும் கடினமான பணியாகவும் இருந்த போதும், அதைச் செய்து முடித்திருக்கிறோம். இப்பணிக்குத் தமிழில் முன்னோடி பதிப்புகள் இல்லாத நிலையில், ஆங்கிலப் பதிப்பு பெருமளவுக்குத் துணை நின்றது. ஆங்கிலப்பதிப்புக்கும் தமிழ்ப்பதிப்பிற்குமிடையில் ஆங்காங்கே வேறுபாடுகள் காணப்பட்டன. அவைப் பிரதியெடுப்பின் போது நேர்ந்த தவறுகளாக இருந்தன. தகவல் வேறுபாடுகளை ஆங்காங்கு அடைப்புக் குறிப்புக்குள் கொடுத்திருக்கிறோம்.

வாசிப்பில் பின் தொடர கடினமாக இருக்கும் இடங்களில் அடைப்புக் குறிக்குள் விளக்கங்கள் கொடுத்திருக்கிறோம். பல இடங்களில், அடுத்து வரப்போகும் செய்தியைப் புரிந்து கொள்வதற்கு உதவும் என்பதற்காக, அந்தத் தொடருக்கு முன்பாகவும் அடைப்புக் குறிக்குள் விளக்கங்கள் கொடுத்துள்ளோம். அவர் எழுத்தில் உள்ள ர,ற,ழ பயன்பாடுகள் இன்று சரியாகப் புரிந்து கொள்ளப்படாமல் போகலாம் அல்லது பிழையாக அச்சிட்டு உள்ளதாக எண்ண வைக்கும் என்பதால் அவ்விடங்களில் இன்றுள்ள எழுத்து முறையையே பின்பற்றியுள்ளோம். உதாரணமாக றாணுவு – ராணுவு, உளுக்கார்ந்து – உட்கார்ந்து, கேழ்க்கப்பட்டது – கேட்கப்பட்டது போன்றவை.

ஆனந்தரங்கப் பிள்ளையின் தினசரிகளில் பேச்சுத் தமிழும், கடினமான எழுத்துத் தமிழும் கலந்தே இருக்கின்றன. பேச்சுத் தமிழுக்கும் தேவைப்படும் இடங்களில் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

தொகுதிகள் வரிசைப்படுத்தப்பட்ட விதத்திற்குப் புதுவை அரசு வெளியிட்டுள்ள தமிழ்ப்பதிப்பையும், மாத வாரியாகத் தனித்தனியாக வரிசைபடுத்தியதற்கு ஆங்கிலப்பதிப்பையும் அடிப்படையாகக் கொண்டோம். எட்டாம் தொகுதி மட்டும் தமிழில் பகுதி-1, பகுதி–2 ஆக வெளிவந்துள்ளன. ஆங்கிலப் பதிப்பைப் போல், நாங்களும் வசதி கருதி, பகுதி-1 &பகுதி–2 இரண்டையும் இணைத்து, தொகுதி – 8 என்றே கொண்டு வந்திருக்கிறோம்.

பிள்ளையவர்கள் பிரெஞ்சு ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளைப் பதிவு செய்தவர். அவரது சமகாலத்திய ஆங்கிலேய கவர்னர்களின் கடிதங்களை மொழிபெயர்த்து, அவைகளைப் பிற்சேர்க்கையாகச் சேர்த்துள்ளோம். ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் பார்க்க முயல்வது போல அன்றைய சூழலை இரண்டு பார்வைகளில் பார்க்க இது வாய்ப்பளிக்கிறது. ஆனந்தரங்கப் பிள்ளை காலத்தின் அரசியலைத் தீர்மானித்தவர்கள், செல்வாக்குமிக்கவர்கள், புகழ்பெற்றிருந்தவர்கள் என இந்த நாட்குறிப்பின் பக்கங்களுக்கு ஊடாகவரும் முக்கியமான மனிதர்களைப் பற்றிய சிறு குறிப்பு, முதல் தொகுதியின் பின்னிணைப்பா கஉள்ளது. அன்றைய காலக் கட்டத்தில் மனிதர்கள் பேசப்பட்ட அளவிற்கு கோட்டைகளும் பேசப்பட்டன. மனிதர்களைப் போல் செல்வாக்காக இருந்த கோட்டைகள் பற்றிய குறிப்புகளும் பின்னிணைப்பில் உள்ளன.

சென்னை நகரம் உருவானது எப்படி? | Chennai …

இவ்விடத்தில் கொஞ்சம் நிறுத்தி, அன்று செல்வாக்காக இருந்த கோட்டைகள் இன்றைக்கு எவ்வாறு இருக்கின்றன என ஒரு வரலாற்றுப் பயணம் போனோம். அதைப்பற்றியும் சொல்ல வேண்டியிருக்கிறது. புதுச்சேரிக் கோட்டை 1761-லேயே தரைமட்டமானது. தேவனாம் பட்டணம் கோட்டை இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக இருக்கிறது. ஆலம்பறைக் கோட்டை, மொத்தமாகச் சிதிலமடைந்து செங்கல் சுவர்கள் மட்டும் கடல் பார்த்து இருக்கின்றன. ஆற்காடு நவாபுகளின் கேந்திரமாக இருந்த வந்தவாசிக் கோட்டை சிதிலமடைந்து முட்புதர்மண்டிக் கிடக்கிறது. திமிரி, கருங்குழிசேத்பட், கலவைக்கோட்டைகள் இருந்த இடம்கூடத் தெரியவில்லை. சென்னை செயின்ட் ஜார்ஜ்கோட்டை மட்டும் பழைமை மாறாமல் தலைமையிடமாக இருந்து வருகிறது.

இக்கோட்டைகளின் வரிசையில் அடிக்கடி படித்த கோட்டை, திருவிதிக் கோட்டை. அந்த ஊரும் கோட்டையும் பண்ருட்டி அருகில் இருக்கிறது என்பதையறிந்து, அங்கு சென்றால், ஊரில் கோட்டையே இல்லையென்றார்கள். மிகப் பெரிய வாணிகமும், செல்வாக்கும் நிரம்பிருந்ததாகச் சொல்லப்பட்ட ஊரில் அதன் அடையாளமே இல்லை. கோட்டையின் சிதிலமடைந்த தடயம் கூடவா கிடைக்காது என்று தேடியதில், வயற்காடுகளுக்கு மத்தியில் கோட்டை அஸ்திவாரத்தின் கல்வரிசை மட்டும் இருப்பதைக் கண்டுபிடித்தோம். கோட்டைகள் மண்மேடாகிக் கிடப்பதாக எண்ணவில்லை. மண்ணுக்குள் நம் வரலாறுகள் புதைத்து கிடப்பதாகவே தோன்றியது. அழுத்திய சோகத்தைத் தாங்க இயலாமல் கோட்டையைத் தேடும் பயணத்தை நிறுத்திக் கொண்டோம்.

மீண்டும் பிள்ளையவர்களிடம் வருவோம்.

தனி நபர் வாழ்க்கையில்  25  ஆண்டு காலம் என்பது மிக நீண்ட காலம். அக்காலத்தின் சமூக வாழ்க்கையும் தனி மனித வாழ்க்கையைப் போல் வேகமாக மாறி வந்த காலக்கட்டமே. அதன் பிரதிபலிப்பு, வார்த்தைப் பிரயோகங்களிலும் தொடர்வதை உணரலாம்.

ஜே.எப்.ரைஸ், ரங்காச்சாரி, ஹென்றிடாட்வெல் ஆகியோரின் ஆங்கில மொழிபெயர்ப்பு பதிப்பையும், தமிழில் புதுச்சேரி அரசு வெளியிட்ட தொகுதிகளையும் மூலப்புத்தகங்களாகப் பயன்படுத்தியுள்ளோம். புதுவை அரசு வெளியிட்டுள்ள தினப்படி சேதிக் குறிப்புகளில் சில விடுபடல்கள் இருக்கின்றன என்றும், முதலில் அதைப் பிரதியெடுத்துப்பதிப்பித்தவர்கள் சில பகுதிகளைப் பதிப்பிக்காமல் விட்டிருக்கிறார்கள் என்றும் அறிந்தோம். அவைகளைக் கண்டடைந்து சேர்க்க வேண்டுமென்றால், மூலப் பிரதியுடன் ஒப்பிட்டுச் சரிபார்த்து, விடுபட்டவைகளைச் சேர்க்கவேண்டும். அதற்கு இன்னொரு வாழ்நாள் வேண்டியிருக்கும். அரசாங்கமோ, பல்கலைக்கழகங்களோ அந்தப்பணியை முன்னெடுப்பது சரியாக இருக்கும். ஏற்கனவே பதிப்பிக்கப்பட்ட நாட்குறிப்பை, இன்றைக்குள்ளவர்களும் சோர்வின்றிப் படித்தறியும் வகையில் இந்தச் செம்பதிப்பைக் கொண்டு வருகிறோம்.

துபாஷிகள் என்று அழைக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்கள், உள்ளூர் மற்றும் ஐரோப்பிய ஆட்சியாளர்களுக்குள் நடக்கும் தகவல் பரிமாற்றத்திற்கும், வாணிப பேச்சுவார்த்தைகளுக்கும் உதவியாக இருந்தார்கள். ஆட்சியாளர்களுடன் இவர்கள் நெருக்கம் என்பதால் சமூகத்தில் உயரிய இடத்தையும், பொருளாதாரரீதியில் மிகச் செழிப்பாகவும் இருந்தனர். ஆனந்தரங்கப்பிள்ளை போன்றவர்களும் அரசாங்கத்தில் மரியாதைக்குரியவர்களாக இருந்தனர். குணம் கெட்ட கவர்னர்கள் வந்த போதோ, நல்ல கவர்னர்களின் குணம் கெட்ட வேளையிலோ உதாசீனப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் வேலை கத்தி மேல் நடப்பது போல் தான் என்றாலும், ரங்கப்பிள்ளை, துபாஷி என்ற இடத்திலிருந்து, ஒரு ராஜ தந்திரியாகத் தன்னை உயர்த்திக் கொண்டதால், அவரை, பிரெஞ்சுக் கவர்னர்கள் கவனமாகவே கையாண்டார்கள். ரங்கப்பிள்ளையின் தாத்தா முறையில் இருந்த நையினியாப்பிள்ளை துபாஷ் பதவி பறிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். பாப்பய்யாப்பிள்ளை, மதானந்த பண்டிதர் போன்ற துபாஷிகள் ஆட்சியாளர்களிடம் பல நேரங்களில் அடி உதை வாங்கியதும் உண்டு.

கிழக்கு இந்திய கம்பெனி துபாஷிகள்

தனிப்பட்ட வாழ்வில் நேர்மை, தனது எஜமானர்கள் மீதான விசுவாசத்தைப் பிள்ளையவர்கள் வாழ்வின் இறுதிக்காலம் வரை கடைபிடித்தார்.  அவர் வாழ்நாளில் புதுச்சேரி இரண்டு முறை முற்றுகையிடப்பட்டது.  ஒரு முறை தளபதி போஸ்கோவேனால் 50 நாளுக்கு மேலாக முற்றுகையிடப்பட்டது.  அடுத்ததாக ஆனந்தரங்கப்பிள்ளைக்கு மரணம் சம்பவித்த காலத்தில் ஆங்கிலேய தளபதி அயர் கூட்டால் முற்றுகையிடப்பட்டது.  இரண்டு முறையும் புதுச்சேரிக்குப் புகலிடம் தேடி வந்த நவாப், நிசாம் குடும்பத்தினரும், பல கம்பெனி வணிகர்களும் ஏன் பிரெஞ்சுக்காரர்களுமே புகலிடம் தேடி புதுச்சேரியை விட்டு கிளம்பிய போதும் பிள்ளையவர்களும் அவருடைய குடும்பத்தினரும் புதுச்சேரியை விட்டுப் போகவில்லை.  தனக்கு வாழ்வளித்த புதுச்சேரியை விட்டு எந்தச் சூழலிலும் வெளியே செல்லமாட்டேன் என்ற வைராக்கியத்தில் பிள்ளையவர்கள் இருந்தார்.  அவர் இறந்த நான்காவது நாள் புதுச்சேரி கைப்பற்றப்பட்டது.  அவர் தினந்தோறும் சென்று வந்த செயின்ட் லூயிஸ் கோட்டை தரைமட்டமாக்கப்பட்டது. இதை ஒரு யதார்த்த நிகழ்வாக எண்ணிக் கடக்க முடியவில்லை.

பிள்ளையவர்களின் சாதுர்யம். பன்மொழிப்புலமை. நகைச்சுவை, கிண்டல்கேலி, விசுவாசம், தூரதேசத்தில் இருந்தும் செய்தி சேகரிக்கும் திறமை இவற்றை அவரது நாட்குறிப்பில் காணமுடிகிறது.  திருக்குறள், இராமாயண மகாபாரத நிகழ்வுகளோடு பழமொழிகளையும் ஆங்காங்கே எழுதியுள்ளார்.  திருக்குறளை நீதி நூல் என்று ரங்கப்பிள்ளை எழுதுகிறார்.  ரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பைத் திருக்குறள் பற்றிய குறிப்பு வரும் முதல் உரைநடை நூல் என்று கூட சொல்லலாம்.

பிள்ளையவர்களின் நாட்குறிப்பைப் படிப்பவர்களுக்குப் பதினெட்டாம் நூற்றாண்டின் கால்நூற்றாண்டு கால வாழ்வை, வாழ்ந்து பார்த்த பரவச அனுபவம் கிடைக்கும். அந்தப் பேரனுபவத்தை வாசகர்களுக்கும் தர முடிவு செய்தோம். அதன் விளைவே ஆனந்த ரங்கப்பிள்ளையின் 12 தொகுதிகள்.

ஆனந்தரங்கப் பிள்ளை நாட் குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை அவர்களின் தினப்படி சேதிக் குறிப்பு பதிப்புக்காக, புதுவையில் இருப்பவர்களே பொருத்தமானவர்களாக இருப்பார்கள் என்பதால், புதுவையில் இருக்கும் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், ரங்கப்பிள்ளையின் தினசரியில் தேர்ச்சியுள்ள வரலாற்று ஆர்வலர்களையே தேடினோம். புதுச்சேரியில் 22.11.2015 அன்று முதல் கூட்டம் நடந்தபோது, ஆர்வமாக 12 தொகுதிக்கும் ஒவ்வொருவர் என்று முடிவு செய்த பிறகும், ஆர்வமுடன் நானும் செய்கிறேன் என்று மேலும் பலர் கேட்ட போது, ஒரு தொகுதியை இருவருக்குமாகப் பிரித்துக் கொடுத்து, எழுதச் சொன்னோம். ஏறக்குறைய மொழிபெயர்க்கும் பணி போலத்தான்.

ஆர்வத்துடன் தொகுதிகளைப் பெற்றுச் சென்றவர்கள், நூலின் பக்கங்களையும், முடிச்சிட்டுக் கொண்டு, முடியாமல் நீண்ட வாக்கியங்களையும், ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் இருக்கும் பெரும் வரலாற்றுக் குறிப்புகளையும் பார்த்து பயந்து போய், இரண்டொரு நாளிலேயே தங்களால் இயலாது என்று திரும்பக் கொடுத்து விட்டார்கள். சிலர் தங்களின் உடல்நிலை காரணமாகச் செய்ய இயலாத நிலையில் இருந்ததைச் சொல்லி, திரும்பக் கொடுத்தனர். சிலர் எழுதியதைப் பயன்படுத்த முடியாத நிலை. வெளிப்படையாகத் தங்களின் இயலாமைகளைச் சொல்லி, எங்களுக்கு உதவியாக இருந்தவர்கள் எங்களின் நன்றிக்குரியவர்கள். ‘முடித்துவிட்டோம், இன்று தருகிறேன், நாளைதருகிறேன்’ என்று நான்கு ஆண்டுகளாகக் காரணங்களைச் சொல்லி, கடைசி வரை செய்ய இயலாமல் போனவர்களும் உண்டு.

நிறைவாக, ருத்ரதுளசிதாஸ் (இளம்பாரதி), பேரா.சு.ஆ.வெங்கடசுப்புராயநாயகர், ந.மு.தமிழ்மணி, பேரா. இரா.நடராஜன், நல்ல.வில்லியன், தேவி.திருவளவன், கவிஞர்மு.முருகேஷ் ஆகியோரை கொண்ட பதிப்புக் குழுவே இப்பணியைச் செய்து முடித்திருக்கிறது.

முந்நூறு ஆண்டுகளைக் கடந்தும், தமிழ் உரைநடையின் முன்னோடியாகக் கிரீடம் சூடி, இன்றும் ஆகச் சிறந்த நம் வரலாற்று ஆவணமாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் ரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பைப் பதிப்பித்ததன் மூலம் பெருமிதம் மேலோங்குகிறது.

 

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *