காலம் மெதுவாகப்
பருகிக் கொண்டிருந்த அந்த இரவு
என் வாழ்க்கையின்
மிக நீண்ட ஒன்றானது
எதிர்பார்ப்பின் எச்சங்கள்
மூழ்கடித்திருந்தன என்னை
கைகளும் மனமும்
போட்டியிட்டுப் பிசைந்து கொண்டன
போர்க்கள பரபரப்பில் இயங்கிய
அந்த பிரசவ அறையின் வெளியே
தன் முழு பாரத்தையும்
இறக்கி வைத்திருந்தது அமைதி
அந்தக் காத்திருப்பு அறையில்
என்னைச் சுற்றி
ஆதியில்
பள்ளத்தாக்குகளின் புல் வெளியில்
பாலையின் மணற்பரப்புகளில்
பரவிய அதே ரத்த நெடி
உயிரை உந்தித் தள்ளிய
தாய்மை வலியின் அதே இன்பக் கதறல்
பிறப்பின் அதே சுகமான மணம்
குகைகளின்
கருங்கற்களில் முட்டி
இருட்காடுகளின்
பெருமரங்களில் பட்டு எதிரொலித்த
அதே முதல் அழுகை ஒலி
ஆனந்த இசையெனக் கசிந்தது
வாழ்வின் முடிச்சு ஒன்று
அவிழும் ஓசையின் பின்னணியில்
மூடிய கண்ணாடிக் கதவின் இடுக்குகளில்
கருவறை உலைக்களத்தின்
குறையாச் சூட்டில்
உருகா பனிக் குவியலாய்
தாய்மையில் மிதந்த
அணையா ஒளிப் பந்து ஒன்று
அசையா மேகப் பொதியென
நம்பிக்கையின் ஏராளமான சாயலுடன்
என் கைகளில் பூப்போல
முழுப் பரிமாணத்தில் நிறைந்து
பொங்கி வழிந்த நீல ஒளிச் சுடர்
அதன் கண்களில்
என் வாழ்வின்
ஒரு புதிய பாதைக்கு வெளிச்சம் ஊட்ட
கன்றிடுமோ கன்னம் – முத்தம்
ஒன்று தரின் என அஞ்சி
உச்சந்தலையில் நான் அதைத் தர
என்னை நிரப்பியது அது
இன்பத்தின் துண்டுகளாய் உடைந்து
மனைவியைப் பார்த்தேன்
மகிழ்ச்சியும் வலியும்
மாறி மாறி மையமிட்ட அவளது முகம்
சிவப்பும் வெளுப்பும் ஆனது
மாறி மாறி
நிலம் கிழித்து
மேல் வரும் முளையில்
அதே நிலம் துளைத்து
கீழ் இறங்கும் வேரில்
கவுரவம் கொண்ட விதையானாள்
தாய் என
தன் அடையாளம் மாறியதில்
என் மனமெங்கும் மகிழ்வு மழை
கண்களில் வழிந்தது அது
சில சொட்டுகளாய்த்
தன்னைச் சுருக்கி
வாழ்வின் சாரமென
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

