“ஆனந்தியம்மாள்” சிறுகதை – கு. மணி

“ஆனந்தியம்மாள்” சிறுகதை – கு. மணி

“ஆனந்தியம்மாள்” சிறுகதை – கு. மணி

அம்மா! உங்க வீட்டுக்காரர் இறந்து பத்து மணி நேரத்துக்கு மேல ஆகுது உங்க சொந்தக்காரங்க உங்க மகன் இப்ப வந்துருவாங்கன்னு சொல்லி புலம்பிகிட்டே இருக்கே ஒன்னு அவங்களை சீக்கிரமா வரச் சொல்லு இல்லே அனாதை பிணம் என்று அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்யறோம்.

ஐயா! உங்க போன கொஞ்சம் கொடுங்க கடைசியா ஒரு தடவை என் மகன் கிட்ட பேசிகிடுறேன்.

ஏம்மா உன்னோடு பெருந்தொல்லையா போயிடுச்சு. இத்தோட எத்தனை தடவை தான் போன் தர்றது பிணவறையின் காவலர்.

ஐயா! ராசா கடைசியா ஒரு தடவையா…. மனமில்லாமல் தந்தார் பிணவறையின் காவலர்.

போனை வாங்கி நம்பரை அழுத்தினாள் கழுவாயி. ரிங்சென்றது.

உனக்கு வேற வேலை இல்லை. அந்த ஆளு தான் செத்துப் போயிட்டாரு எங்களைஏன் உயிர வாங்குற. பேசாம நீயும் செத்துத் தொலை.

முருகா கடைசியா வந்து உங்க அப்பாமுகத்தை ஒரு முறை பாருப்பா அவருக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யுடா தங்கம்.

உனக்கு அறிவே கிடையாதா நீங்க தான் எப்பவோ செத்து போயிட்டீங்கன்னு தான் சொல்லிட்டு தானே ஊரை விட்டு சென்னைக்கு வந்தேன்.

ஐயா! அந்த மனுசனும் நானும் என்னையா தப்பு செஞ்சோம்.காலம் போன கடைசியிலே கஞ்சி தான் ஊத்தலே பட்டினி கிடந்தே போயிட்டாரு இளைப்பு நோய் கேன்சர் என்று மனுஷன் அழுத்தியே செத்துப் போயிட்டாரு. அவர் உடம்பு நல்லா இருக்குற வரைக்கும் உனக்காகத்தான் கஷ்டப்பட்டாரு.உன்னை ஒரு டிப்ளமோ வரைக்கும் படிக்க வச்சாரு கல்யாணம் காட்சியின்னு பண்ணி வைக்கலையா?

பெரிய டிப்ளமோ படிப்பு அவனவன் என்னவெல்லாம் படிக்க வைக்கிறான்.என்னவெல்லாம் செய்கிறான். சாதாரண டிப்ளமோ படிக்க வச்சிட்டு எப்ப பார்த்தாலும் சொல்லிக்காட்டுறது தன் பிள்ளைக்காக எவ்வளவு சொத்து என்னவெல்லாம் சேர்த்து வைக்கிறாங்க நீ இருந்த ஒரே வீட்டையும் அவர் நோய்க்கு பார்க்க போறேன்னு சொல்லி அதையும் வித்துட்டே.

அதுகூட பரவாயில்லை வீட்டுக்கு வந்த மருமக சங்கிலியை யாருக்கும் தெரியாம எடுத்து அடகு வச்சு அந்த ஆளுக்கு வைத்தியம் பார்த்தாயே அதனால எவ்வளவு பெரிய பிரச்சனையை சந்திச்சேன் உனுக்கு தெரியாது.

தப்புதான்யா அதுக்காக உங்க ரெண்டு பேரு காலில் விழுந்து நாங்க மன்னிப்பு கேட்கலையா!

யார் பேசுறது? உங்க அம்மாக்காரியா போனை இங்கே கொடுங்க.

உங்களுக்கெல்லாம் ரோஷம் மானம் சூடு சொரணை எதுவுமே கிடையாதா? அந்த ஆளு செத்துப்போன போராரு. நாட்டில் ஒரு சனத்தொகை குறையட்டும். நீங்க எல்லாம் உயிரோட இருந்து என்ன ஆகப்போகுது மருமகள் காத்தாயி.

அம்மா காத்தாயி ஒரு மகன் இருந்தும் அவர் அனாதை பிணமா கெடக்காரும்மா. அவருக்கு செய்ய வேண்டிய கடைசி காரியத்தை மட்டும் வந்து செய்யுங்கம்மா கழுவாயியின் கதறல்.

என்னைக்கு அந்த நகை விஷயத்தில் உன் புருஷன் என்னை அடிச்சு வீட்டை விட்டு துரத்தினாரோ அன்னைக்கே முடிவு பண்ணிட்டோம். இனி செத்தாலும் உங்க மூஞ்சியிலே முழிக்க கூடாதுன்னு.

தப்புதான் நீ கேட்ட கேள்விக்கு அந்த மனுஷன் தெரியாம பண்ணிட்டாரு பெரிய மனசு பண்ணி அந்த மனுஷனுக்கு செய்ய வேண்டிய காரியத்தை வந்து செய்யுங்க. உங்க காலில் விழுந்து கேட்டுக்கறேன்.

ஏய்…. கிழவி உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாது. போ… அனாத பிணமா அந்த ஆளை கொண்டு போய் அடக்கம் பண்ணு. அப்பத்தான் உங்களுக்கு எல்லாம் அறிவு வரும்.

ஊரிலேயே பெரிய சண்டியர் அவரு.

அதான் ஊரே உங்களை ஒதுக்கி வச்சிருச்சே. நேர்மை நேர்மை நேர்மைன்னு நேர்மையைக் கட்டி அழுதாருலே. இந்த நேர்மைக்கு கிடைத்த பரிசு பாத்தியா?

இங்க பாருங்க! இந்த கிழவி கண்ட போன் நம்பர்ல இருந்து போன் பண்றா பேசாமல் இரண்டு நாளைக்கு போன சுவிட்ச் ஆப் பண்ணுங்க இல்லே வேற சிம்ம மாத்தி போடுங்க காத்தாயியின் மிரட்டல்.

என்னம்மா பேசிட்டியா பிணவறைக் காவலரின் கேள்வி. வயதான அந்த கிழவியின் பூழைபடிந்த கண்களில் கண்ணீர் தாரைதாரையாக பொங்கியது.

இங்க பாருங்கம்மா! பிணத்தை மார்ச்சுரியில்இருந்து பிணக்கிடங்குக்கு கொண்டு போயிட்டா நிறைய ஃபார்மாலிட்டிஸ் இருக்கு . ஒன்னு சொல்றேன் உசிலம்பட்டியில் ஆனந்தி அம்மான்னு ஒரு சமூக சேவகி இருக்காங்க அவங்க கிட்ட பேசுங்க எப்படியும் உங்க கணவரை சாயந்திரத்துக்குள்ள உங்க மத சம்பிரதாயப்படி எரிக்கவோ அடக்கமோ செஞ்சுருவாங்க. இந்தா போன் போட்டு தாரேன் பேசு. பிணக்காப்பாளர் போன் செய்த தர…..

ஹலோ…..

ஹலோ யார் பேசறது?

கழுவாயால் பேச முடியவில்லை துக்கம் தொண்டையை அடைத்தது.

அம்மா சொல்லுங்க யார் பேசுறது?

தழுதழுத்த குரலில் நான் கழுவாயி பேசுறேன்.

சொல்லுங்கம்மா!

அம்மா என் வீட்டுக்காரர் க. விலக்கு ஆஸ்பத்திரியில் செத்துப் போயிட்டாரு. சொந்த பந்தம் இருந்தும் அனாதப்பிணமா கிடைக்காரு.அவரை அடக்கம் செய்ய கூட பத்து பைசா என் கையில இல்லை. வாட்ச்மேன் தம்பி தான் உங்ககிட்ட பேச சொன்னாரு.

நான் உங்களுக்கு என்ன உதவி செய்யணும்?

அம்மா பெத்த மகன் இருந்தும் நாங்க ரெண்டு பேரும் அனாதைகள் தான். வீடு வாசல் எந்த சொத்தும் கிடையாது. விவசாய கூலி வேலைக்கு போவோம். ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒரு குடிசை வீடு போட்டு அதுல தங்கி இருக்கோம். மனுசனுக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி இளைப்பு நோயும் கேன்சர் இருக்குன்னு டாக்டர் சொன்னாங்க. நானும் எவ்வளவு போராடி பாத்துட்டேன் அவர காப்பாத்த முடியலே. எனக்கு முந்திக்கிட்டாரு ஒரே ஒரு பையன் குடும்பத் தகராறு எங்க முகத்திலேயே முழிக்க மாட்டான். குலுங்கி குலுங்கி அழுதாள் கழுவாயி.

"Anandyammal" Tamil Short Story Written By K Mani | www.bookday.in

சில பிரச்சினைகள் ஊரே எங்களை ஒதுக்கி வைத்திருச்சு.

அழாதீங்கம்மா இப்ப நான் என்ன உதவி செய்யனும் ஆனந்தி அம்மாவின் அன்பான குரல்.

அம்மா என் புருஷனை அனாதை பிணமா அடக்கம் செய்ய மனசு வரலே செத்த பிறகு நாலு பேருதூக்கிக் கொண்டு போய் சுடுகாட்டில் அடக்கம் செய்யணும்.

ஒன்னும் கவலைப்படாதீங்க ஆஸ்பத்திரியிலேயே இருங்க.நான் இன்னும் ரெண்டு மணி நேரத்துல வந்துடறேன் போனை வாட்ச்மேன்தம்பி கிட்ட கொடுங்க.

தம்பி நான் இன்னும் ரெண்டு மணி நேரத்துல வந்துடறேன் அவர் டீட்டைல் பற்றி எனக்கு வாட்ஸ்அப்ல அனுப்புங்க மத்த பார்மாலிட்டி எல்லாம் நான் பாத்துக்கிறேன் அந்த அம்மாவை அங்கேயே இருக்க சொல்லுங்க சீக்கிரம் நான் வந்துடறேன்.

ஆனந்தி 9 பெண் குழந்தைகளில் ஒன்பதாவதாகப் பிறந்து கள்ளிப்பாலில் இருந்து தப்பிய குழந்தை இன்று சமூக சேவகியாக.திருமணம் முடிந்து மலடி என்ற பெயரோடு விட்டுவிட்டு துரத்தியடிக்கப்பட்டவர். யார் என்றே தெரியாத அனாதைப்பிணங்களை எடுத்து அவற்றை முறைப்படி அடக்கம் செய்வது அவற்றுக்கான சடங்குகளையும் செய்து அம்மாவாக பலரின் மனங்களில் நிற்கிறார். இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனாதை பிணங்களை அடக்கம் செய்ததோடு எந்த சமூகம் தன்னை மலடி என்று புறம்தள்ளியதோ அந்த சமூகத்திற்கு அன்னையாக தன்னை அர்ப்பணித்து வருகிறார்.

ஆனந்தியின் முயற்சியால்ஐ. பி. சி 174 இன்கீழ் வழக்குப் பதிவு செய்து போஸ்ட்மார்டம் செய்து தயாராக வைக்கப்பட்டிருந்த கழுவாய் கணவரது பிரேதம் துணியில் மூடப்பட்டு ஸ்ட்ரக்சரில் வைக்கப்பட்டிருந்தது.

ஆனந்தி பிரேத அறைக்கு வந்தவுடன் இங்கே கழுவாயியாரம்மா? நான்தான் அம்மா.

நான் தான் ஆனந்தி.

கழுவாயிஆனந்தியின் காலில் ஓடிச் சென்று விழுந்து கதறி அழுதாள்.

அம்மா அழாதீங்க. நான் வந்துட்டேன்ல. உங்க கணவருக்கு செய்ய வேண்டிய எல்லாச் சடங்குகளும் தானேநடக்கும் ஒன்னும் கவலைப்படாதீங்க.

ஆனந்தி அம்மாவுடன் ஏழு எட்டு பேர் வந்திருந்தனர்.

அம்மா உங்க வீட்டுக்காரரை எரிக்கணுமா புதைக்கணுமா?

என் புருஷனை நாலு பேரு தூக்கிட்டு போய் சுடுகாட்டுலே எரிச்சாலும் சரி புதைச்சாலும் சரி. எரிச்சா எத்தனையோ சடங்கு இருக்கும் எனவே புதைச்சுடுங்கம்மா.

உங்க ஆசை என்னன்னு சொல்லுங்க அப்படியே செய்திடுவோம்

பெத்த புள்ள உயிரோடு இருக்கான். அவன்வந்து கொள்ளி போடனும்.அது நடக்கப் போவதில்லை அதனால் புதைச்சிடுங்கம்மா.

வாட்ச்மேன்: ஹாஸ்பிடல் பார்மால்டீஸ் ஸ்டேசன் என எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சு. பாடியை கொடுத்தீங்கன்னா நாங்க ஆக வேண்டிய காரியத்தை பார்த்து விடுவோம் என்று சொல்லியவாறு ஆனந்தி சில டாக்குமெண்ட்டுகளை வாட்ச்மேனிடமும் டாக்டரிடமும் ஒப்படைத்தார் . ஆனந்தியின் சமூக சேவை அனைவரும் அறிந்ததே. எனவே ஹாஸ்பிடல் ஸ்டேஷன் என எல்லா பார்மாலிட்டியும் உடனே அவர்களுக்கு செய்து கொடுப்பார்கள்.

ஃபார்மாலிட்டிஸ் முடித்து கழுவாயி கணவரது பிரேதம் வெளியே கொண்டுவரப்பட்டது. அம்மா எங்கு அடக்கம் செய்யப் போறீங்க .

அம்மா அவர் பிறந்த ஊர் மரிக்குண்டு அந்த ஊரிலேயே… என இழுத்தாள் கழுவாயி. ஊர்லே ஏதாவது பிரச்சினை பண்ணு வாங்களமா?

அதைப் பற்றி எல்லாம் ஒன்னும் நீங்க கவலைப்படாதீங்க நாங்க பார்த்துக்கிறோம்.

தயாராக இருந்த இந்தியன் ரெட் கிராஸ் ஆம்புலன்ஸின் கழுவாயின் கணவர் ரத்தினத்தின் உடல் ஏற்றப்பட்டது . அதற்கு முன்பாக அவரது உடல் மீது சந்தனம் பன்னீர் தெளிக்கப்பட்டது. ஆனந்தி முதல் மாலையை ரத்தினத்தின் பூத உடலுக்குப் போட உடன் வந்தவர்களும் மாலையை அணிவித்து அவரைத் தொட்டு வணங்கினர். ரத்தினத்தின் உடல் ஆம்புலன்ஸ்சில் ஏற்றப்பட்டது.

அதற்கு முன்பாகவே இருவர் மரிக்குண்டு சென்று ஊர் பெரியவர்களிடம் பேசி அங்குள்ள வெட்டியானின் உதவியுடன் சுடுகாட்டில் குழிதோண்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஒரு மணி நேர பயணத்திற்கு பின் சுடுகாடு வந்தடைந்தது ரத்தினத்தின் உடல். ஊரிலிருந்து யாரும் வரவில்லை. ஊர் கட்டுப்பாடு காரணமாக யாரும் வரவில்லை ஆம்புலன்ஸிலிருந்து ஆனந்தி அம்மாள் உடன் வந்த காவலர் கழுவாயம்மாள் என வந்திறங்கினர்.

வெட்டியயான் தனது வழக்கமான பணியினை முடித்தார். ரத்தினத்தின் உடல் தோண்டப்பட்ட குழிக்குள் இறக்கப்பட்டது. அம்மா நீங்க முதல்லே மண்ணை போட்டு அவருக்கு பால் ஊத்துங்க. நிற்க முடியாமல் நின்ற கழுவாயி ரத்தினத்தின் உடலில் மண்ணை போட்டு பாலை ஊற்றினாள்.

ஆனந்தி அம்மாள் நீ என்ன மதமோ அதை எடுத்துக் கொள் என்று சொல்லி ஒரு பிடி மண்ணும் யாருமே அனாதை இல்லை. நீ இறந்தாலும் உன் குடும்பத்துடன் இருந்து உன் வம்சாவழிகளை வாழவை என்று சொல்லி இரண்டாம் பிடி மண்ணும் நல்ல மனிதர்களை எனக்கு கொடு என் சேவையை மேம்படுத்து என்று சொல்லி மூன்றாவது பிடிமண்ணும் போட்டு உடன் பால் ஊற்ற உடன் வந்தவர்களும் பால் ஊற்ற மண்ணைப் போட்டு மூடினர் ரத்தினத்தின் உடலை. அதன் மீது மாலை பூக்களைத் தூவி வணங்கினர் வெட்டியான் முட்களை வெட்டி குவிக்கப்பட்ட மண் மீது போட்டுக் கொண்டிருந்தார் .

கழுவாயி ஆனந்தியின் கால்களை பிடித்து அழுதபடியே இதுக்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று புலம்பித் தவித்தாள்.

அம்மா இனிமே நீங்க எந்த ஊரில் இருக்க வேண்டாம் ஏதாவது ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறேன் நிம்மதியா இருங்க உங்க மகனைப் பற்றியும் யாரையும் பற்றி கவலை கொள்ள வேண்டாம். நாங்க இருக்கிறோம் என்று சொல்லியவாறு ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்றனர் கழுவாயியை. ஆம்புலன்ஸ் தனது அடுத்த பயணத்தை தொடரச் சென்றது.

டிரைவர் தம்பி! எங்களை பஸ் ஸ்டாண்டில் இறங்கி விட்டுருங்க. ஆம்புலன்ஸ் கொடுத்து உதவியதற்காக உங்க சாருக்கு நன்றி சொல்லுங்க.

ஆனந்திக்கு அடுத்த போன் கால் வந்தது.

இன்னும் ரெண்டு மணி நேரத்துல வாடிப்பட்டியில் இருப்போம் கவலைப்படாதீங்க இதோ வந்திடுறோம். ஆனந்தியின் புனித சேவைக்கு அடுத்த அழைப்பு வந்தது.
கழுவாயிஆனந்தியின் கைகளை பற்றியவாறே அழுது கொண்டே வந்தாள்.

“நல்லார் ஒருவர் உளரேல்
அவர் பொருட்டு
எல்லாருக்கும் பெய்யும் மழை.”

வானம் கண்ணீர் சிந்தியது……

ஈரமனமுள்ள
மனிதர்களுக்காக….

எழுதியவர் : 

✍️ – கு. மணி
த/பெ: குருசாமி
தெற்குப் புது தெரு
சக்கம்பட்டி –625512
ஆண்டிபட்டி
தேனி மாவட்டம்.

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளதிற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *