”இதெல்லாம்தான் கல்வின்னு நான் நினைக்கிறேன் சார்….”

“ இதுக்கெல்லாம் உங்களுக்கு அதிகாரம் இருக்கா மேடம்?மாவட்டக்கல்வி அதிகாரி என்கிட்டே கூட ஒரு வார்த்தை கேட்கலே?

பெற்றோர்கள்ட்டேருந்து  புகார் வந்திருக்கு.பள்ளிக்குழந்தைகளுக்கு இதெல்லாம் தேவையாஅப்படின்னு. அதுக்கு விளக்கம் கொடுக்கணும் இப்பொ நீங்க ”

”இந்த சமூகத்திலேதான் நம்ம குழந்தைங்க வாழுறாங்க வளருறாங்க..இந்த சமூகத்திலே இருக்கற எல்லாத்தியும் பத்தி நாமதான் சார் அவுங்களுக்கு சரியா அறிமுகம் செய்யணும்.”

”குழந்தைகளுக்கு எதைக்கொடுக்கணும்னு அரசாங்கம் முடிவு செஞ்சுதான் பாடப்புத்தகம் கொடுத்திருக்காங்க.அதை முறையா நடத்தறது மட்டும்தான் நம்ம வேலை மேடம்.புரிஞ்சிக்குங்க”

“ சார்..பாடப்புத்தகம் ஒரு மேடை மட்டும்தான.அது மேலே  ஏறி நின்னு இந்த சமூகத்தையும் இந்த உலகத்தையும் இந்தப் பிரபஞ்சத்தையும் முழுசாப் பாக்க வைக்கிற தொடர்முயற்சிதானே சார் கல்வி”

“கல்வின்னா என்னான்னு எனக்குக் கிளாஸ் எடுக்கறீங்களா?”

“சாரி..சார்.. அப்படி எடுத்துக்க வேணாம். என்னோட புரிதலை உங்ககிட்ட சொல்றேன். இதுல ஏதும் தப்பிருக்கா சார்..”

“ ஆணவக்கொலையில செத்துப்போன  ரத்தினத்தின் மனைவியை அழைச்சு  மாணவிங்க மத்தியிலே பேச வச்சிருக்கீங்க…சாதிப் பிரச்னைய உண்டாக்கிடுவிங்க போலருக்கு…ஊரெல்லாம் சாதியா இருக்குங்கறது உங்களுக்கு தெரியாதா?”

“ஊரிலே உள்ள இருட்டைப் பள்ளிக்கூடத்திலே இருந்து கிளம்பற வெளிச்சம்தானே சார் போக்கணும்.?.”

“ஸ்…ஆண்டவா..பிள்ளைகளுக்குப் பாடம் நடத்துறதுதான் நம்ம வேலை..ஊரைத்திருத்தறது நம்ம வேலை இல்லை மேடம்.அவ்வளவு ஆர்வம் உங்களுக்கு இருந்தா நீங்களா ஏதாச்சும் உள்ளுக்குள்ள பேசிட்டுப் போங்களேன். இப்பிடி வெளி ஆட்களையெல்லாம் கூட்டிட்டு வந்தா பெரிய பிரச்னை மேடம். அத்தோடு நிறுத்தாம போன வாரம் அந்த ஆனந்தியோட அப்பா அம்மாவக் கூப்பிட்டுப் பள்ளிக்கூடத்திலே பேச வச்சிருக்கீங்க..அப்படியே நீங்க பாட்டுக்குப் போய்க்கிட்டே இருக்கீங்க..ம்?.”

“ பெத்த ஒரே மகளையும் ஆசிட் வீச்சுக்குப் பலி கொடுத்துட்டு நிக்கிற அந்தப் பெற்றோர், நம்ம குழந்தைகளோட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருந்தா அவுங்களுக்கு ஒரு ஆறுதல் கிடைக்குமேன்னு நினைச்சேன்.சார்.”

“ மேடம்..நீங்க ஒரு அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை. அந்த எடத்துல நில்லுங்க.நாம தொண்டு நிறுவனமோ அரசியல் இயக்கமோ கவுன்சலிங் செண்டரோ நடத்தறவங்க இல்லை”

விசாரணை முடிந்து மதுரையிலிருந்து பஸ்ஸில் திரும்பிக்கொண்டிருந்தபோது கார்த்திகா மேடத்தின் மனம் இன்னும் உறுதிப்பட்டிருந்தது. அது அவரது முகத்தின் இறுக்கத்தில் தெரிந்தது.’இதுதான் கல்வி.இதிலிருந்து பின் வாங்க முடியாது’ எனத் தனக்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டார். முதுகை நிமிர்த்தி உட்கார்ந்து கொண்டார்.மனச் சஞ்சலம் குறைந்து சன்னல் வழியே அடித்த மாலைக்காற்று மனசுக்குள்ளும் அடிக்கத் துவங்கியது.கார்த்திகாவின் கணவர் சொல்லி அனுப்பியிருந்தார். எது சொன்னாலும் ரொம்ப எதிர்த்துப் பேசாம டென்சன் ஆகாம, கூலா  பதில் சொல்லிட்டு வாப்பான்னு. அதிக உரசல் இல்லாமல் ஒருவழியாக முடிந்ததில் சிறு ஆசுவாசம் ஏற்பட்டது.

அன்று பள்ளிக்குழந்தைகளை-பெரிய வகுப்பு மாணவிகளை மட்டும்- மரத்தடியில் அரைவட்டமாகக் கீழே மணலில்  உட்கார வைத்து நடுவில் ஆனந்தியின் அப்பா அம்மாவை நாற்காலிபோட்டு அமரவைத்துப் பேசவைத்தார்கள்..ஆசிரியர்கள் எல்லோருமே வந்து பிள்ளைகளுக்குப் பின்னால் வட்டமாக சுற்றி நின்றார்கள்.ஆனந்தியின் அப்பாவுக்கு அவ்வளவாகப் பேச்சு வரவில்லை.கொஞ்சமாக வளர்ந்திருந்த தாடியைத் தடவிக்கொண்டு அப்படியே பித்தாக அமர்ந்திருந்தார்.

ஏதாவது கேட்டால் ஆமாங்க…சரிங்க..என்று ஒருவார்த்தையில் பதில் சொல்லிக்கொண்டும் ஒவ்வொரு வார்த்தையைச் சொன்னதும் ஒரு செருமல் செருமிக்கொண்டும் இருந்தார்.ஆனந்தியின் அம்மாதான் பேசினாங்க. இத்தனைக்கும் அவருதான் கொஞ்சம் படிச்சிருக்காரு.ஒரு மில்லில் வாட்ச்மேனாக வேலை பார்க்கிறவரு.அந்த அம்மா சரஸ்வதி  சுத்தமா படிக்காதவங்க.கட்டிட வேலைக்குச் சித்தாளாகப் போறவங்க.மேடைப்பேச்சின் நாகரிகங்கள், நடைமுறைகள் எதுவும் தெரியாது. அந்தம்மா, பேசுவாங்க என்று சொன்னதும் டக்குன்னு எந்திரிச்சிப் பேச ஆரம்பிச்சுட்டாங்க.

”எங்களுக்கு அவ ஒருத்திதான்.

நாங்கதான் படிக்கல.சீரழிஞ்சோம்.அவளாச்சும் நல்லாப் படிக்கட்டும்னு அவ ஆசைப்பட்டவரைக்கும் படிக்க வச்சோம்.கடன் வாங்கித்தான் படிச்சா.பிட்டெக் வரைக்கும் படிச்சா.அதுக்கு மேலே உங்களக் கஷ்டப்படுத்த விரும்பல.படிச்சது போதும்.வேலைக்குப் போறேன்னு சொன்னா.வேலை கிடைச்சதும் உங்க ரெண்டுபேரையும் உக்கார வச்சி நான் பாத்துக்குவேன்.அப்புறம் நீங்க எந்த வேலைக்குக் போகக்கூடாது சரியா..ஒகேவா டாடி..ன்னு…இப்பிடி விரலை ஆட்டி ஆட்டி..(இந்த இடத்தில்  சற்றே உடைந்து கலங்குகிறார்.) பேச்சற்றுச் சில நிமிடங்கள் குழந்தைகளை வெறித்துப்பார்த்தபடி நிற்கிறார்.

Image

ஓவியம் மணிவண்ணன் 

பெங்களூருலே வேலை கிடச்சது.

அப்பாவைக்கூட்டிக்கிட்டு கிளம்பிட்டா.இவருக்குத்தான் ஒண்ணுமே தெரியாதே.சேலத்திலே போய் என் தம்பி ஒருத்தன் இருக்கான்.அந்தா நிக்கிறான் பாருங்க அவன் தான்.கொஞ்சம் படிச்சவன். அவனையும் கூட்டிட்டுப் போனாங்க.வேலையிலே சேத்திவிட்டுட்டு, ஆஸ்டல்ல விட்டுட்டு வந்துட்டாங்க.

வீடே வெறிச்சின்னு கெடக்கு.அவ ஒருத்தி இல்லாதது வீட்டையே தொடச்சி எடுத்த மாதிரி ஆயிடுச்சி.ரெண்டு பேருக்குமே வீட்ல இருக்கவே பிடிக்கல. சீக்கிரமே கிளம்பி வேலைக்குப் போயிருவோம். ராத்திரி வந்து மககிட்டப் போன் போட்டு ரொம்ப நேரம் பேசிட்டு பெருமூச்சோட படுத்துக்கிடப்போம். கண்ணுக்குள்ள வச்சி வளர்த்த பிள்ளை.வெளியூர் எங்க போனாலும் மூணு பேரும்தான் சேர்ந்து போவோம். இப்பத்தான் முதல் தடவையா அவ மட்டும் தனியாப் போயிருக்கா.அவளைப்பத்தியே நெனச்சுக்கிட்டுப் படுத்திருப்போம்.தூக்கம்கிறது வராது.எப்படித்தான் அவள வளர்த்தோம்.எப்படித்தான் படிக்க வச்சோம்னே தெரியல.யோசிச்சு யோசிச்சு அலுப்பாகி அப்படியே தூங்கிடுவோம்.

அந்த கணேஷ்ங்கிறவன் அப்பப்ப வந்து என்னா ஆனந்தி போன் பண்ணிச்சான்னு கேப்பான்.அவளைப் படிக்க வைக்க அவன்கிட்டத்தான் நிறையக் கடன் வாங்கிருந்தோம்.அவ ஒரு பில்டிங் காண்ட்ராக்ட் காரன். பாதிக்குமேலே கடனை அடைச்சிட்டோம். இன்னும் பாதிதான் இருக்கும்.ஆனந்தி சம்பளம் வாங்கிட்டான்னா ஆறு மாசத்திலே அடைச்சிடலாம்னு அவ சொல்லியிருந்தா.

கொஞ்சம் தண்ணி குடுங்களேன். என்று கேட்டு வாங்கித் தண்ணீர் குடித்து விட்டுத் தொண்டையைச் செருமிக்கொள்கிறார்.

மாசம் தவறாமப் பணம் அனுப்புவா.முதல் மாசச் சம்பளத்திலே அப்பாவும் அம்மாவும் புதுத்துணி எடுத்து உடுத்திக்கிட்டு அதைப் போட்டோ எடுத்து போன்ல அனுப்பச் சொன்னா.இந்தச் சீலைதான் என்று சேலை முந்தானையை குழந்தைகளுக்கு விரித்துக் காட்டுகிறார்.அப்படியே விரித்தபடிக்கே சற்று நேரம் நின்று விடுகிறார்.பேச்சு மீண்டும் தடைப்பட்டு நிற்கிறது.ஓரிரு  பெண் குழந்தைகளுக்குக் கண்ணீர் வந்துவிட்டது.

ஒரு ஆசிரியர் போய் தண்ணீர் பாட்டிலை நீட்டுகிறார்.தலையை ஆட்டி மறுத்துவிட்டுத் தொடர்கிறார்.

ஒருநா இவன் வந்து, அதுதா அந்த  கணேசுங்கிறவன் தான்  இவரு கிட்டே(கணவரைக் காட்டி) ப்பேசுறான்.”நானும் படிச்சிருக்கேன்.நல்ல வருமானமும் இருக்கு.வீட்டில பொண்ணு பாக்குறாங்க.நீங்க ஆனந்தியை எனக்குக் கெட்டிக்குடுத்துருங்கன்னு கேக்குறான்.எனக்கு திக்குன்னு ஆயிப்போச்சு.இவன்கிட்டத் துட்டு இருந்தா போதுமா?நல்லவனா இருக்க வேணாம்.

இவுரு ஒரே முட்டா மாட்டேன்னு சொல்லுறாரு.ஒம் படிப்பு என்னா அவ படிப்பு என்னன்னு சொல்றாரு. நீங்க வாங்கின கடனை எதுவும் தர வேணாம்.நகை நட்டு எதுவும் போட வேணாம்.கல்யாணச் செலவு பூராவும் நானே பாத்துக்கிறேன்னு சொல்றான்.அவங்கிட்டக் கடன் வாங்குனது குத்தமா?பாருங்க.

ரெண்டு நா கழிச்சு இவுரு வேலை பாக்கிற மில்லு கேசியரைக் கூட்டிட்டு வாறான்.சப்போட்டுக்கு.நாங்க நல்லாருப்பிங்கய்யா போங்க.நாங்க இப்ப எங்க பொண்ணுக்குக் கல்யாணம் பண்ற நினைப்பிலேயே இல்லேன்னு சொல்றோம்.நிசத்துக்குமே அவ என்னா பச்சைப்பிள்ளைதானே.இப்பத்தானே படிப்ப முடிச்சுட்டு வேலைக்கின்னு போயிருக்கா.

நாங்க எதையுமே ஆனந்திகிட்டச் சொல்லல.ஆனா பாருங்க.இவன் அவ நம்பரை எப்பிடியோ பிடிச்சி அவளுக்கே போன் போட்டுப் பேசியிருக்கான்.அவ இவன்கிட்டப் பக்குவமா எடுத்துச் சொல்லிருக்கா..உங்கள மாதிரி படிச்ச பிள்ளையில்லியா அவ…மீண்டும் கலங்கி நிற்கிறார்.

”இங்க பாருங்க சார்…நான் இப்பதான் வேலைக்கு வந்திருக்கேன்…எங்க அப்பா அம்மா வாழ்க்கை பூராவும் ரொம்பக் கஷ்டப்பட்டுட்டாங்க…அவுங்கள நல்லா வச்சிப் பாக்கணும்கிறதத் தவிர வேற எந்த நினைப்பும் எனக்கு இப்போ இல்லே.என்னை விட்டுடுங்கன்னு சொல்லிருக்கா.

அப்ப விட்றணுமில்லே?

அவந்தான் நல்லவனே இல்லையே…

மறுக்கா மறுக்கா போன் போட்டுக்கிட்டே இருக்கான்.அவ போனை எடுக்கறதே இல்லே.சுச்சாப் பண்ணி வச்சிட்டா.

ஆறு மாசம் கழிச்சி அவன்கிட்ட வாங்கின பணத்தை வட்டியோட சேர்த்துக் கொடுக்க இவுரு அவன் வீட்டுக்குப் போறாரு.அங்க வச்சிப் பெரிய பிரச்னை.அவனோட மாமனோ யாரோ ஒரு ஆளு.இவுரு கிட்டே ரொம்ப நாயம் பேசிருக்காரு.அவந்தான் ஒண்ணுமே வேண்டாம் ஒங்க பொண்ண மட்டும் குடுத்தப் போதும்னு கேக்குறான்.குடுத்தா என்னான்னு கேட்குறாரு.சாதியும் உங்கள விடக் கூடுன சாதி பையந்தான? காசு பணம் இருக்கு.சொந்த வீடு இருக்கு.என்ன இல்லே பையன்கிட்ட?ஒங்க பொண்ணுதான் வேணுமின்னு பைத்தியமா இருக்கானே?உங்களுக்கு இதுக்கு மேலே என்ன வேணும்?

எங்களுக்கு இஷ்டமில்லேன்னா விட்ற வேண்டியதுதானன்னு மூஞ்சியில அடிச்ச மாதிரிச் சொல்ல இந்த மனுசனுக்கு வாய் வரலே.எம் பொண்ணுகிட்டக் கேட்டுச் சொல்றேன்னு சொல்லிட்டு, அப்போதைக்கி அங்க இருந்து வந்தாப்போதும்னு பணத்தைக் குடுத்துட்டு வந்திட்டாரு.நாற்காலியில் அமர்ந்திருந்த ஆனந்தி அப்பா இப்போது கண்ணீர் வழிய துண்டால் கண்களைத் துடைத்துக்கொள்கிறார்.மாணவிகள் அவரையே பார்க்கிறார்கள்.

சரஸ்வதியம்மாளும் அவரைத் திரும்பிப் பார்த்து “இப்ப அழுது?” என்று தானும் குரல் உடைகிறார்.

பெங்களூருக்குப் போன புள்ள ஏழு மாசம் கழிச்சி தீபாவளிக்குத்தான் வாறா வீட்டுக்கு. விடியக்காலம் அஞ்சு மணிக்கு மதுரை ரயிலடியிலே நிக்கோம் நாங்க ரெண்டு பேரும்.மகளைக் கூட்டிட்டு வர. ரயிலை விட்டு இறங்கிப் பையை இழுத்துக்கிட்டு வாறா.தூரத்தில அவளைப் பாத்ததுமே எனக்குத் தலையைச் சுத்திட்டு வருது.சந்தோசத்திலதான்.

அவ கிட்ட வந்ததும் நீ ஏம்மா இந்த நேரத்தில வந்தே? அப்பாவை மட்டும் அனுப்பியிருக்க வேண்டியதுதான?ன்னு கேக்கா. வீட்டுல இருக்க முடியாமத்தான இங்க வந்து நிக்கேன்.அதச் சொல்லலை அவகிட்ட.வாடா செல்லம்னு அவ ரெண்டு கையையும் பிடிச்சிட்டு நிக்கேன்.புதுசா கண்ணாடி எல்லாம் மாத்தி. காப்பிக்கலர்ல ஒரு சொட்டர் போட்டு சிரிச்சமானக்கி அப்பிடி ஒரு அழகா இருக்கா எம் பொண்ணு..(கண் கலங்கஒரு நிமிடம் பேச்சை நிறுத்துகிறார்)அவ கையை விடவே மனசில்லாம நிக்கேன்.

போன்லேயே காரு வரச்சொல்லி, எம்மக எங்களைக் காரிலேயே கூட்டிட்டு வாறா எஞ்செல்லம்..

வேட்டி சட்டை,சேலை எல்லாம் பெங்களூருலேயே எடுத்துட்டு வந்துட்டா எங்களுக்கும் அவளுக்கும்.இன்னொரு பையிலே பட்டாசெல்லாம் கூட வாங்கிட்டு வந்திருக்கா..மக்களே…நீங்க எல்லாருமே எம்புள்ளைகதான்…மக்களே அப்படி ஒரு தீபாவளிய நாங்க எங்க சென்மத்துல கொண்டாடுனதில்லேன்னு சொல்லும்போதே மாலை மாலையாகக் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டுகிறது.ஆனால் பேச்சை நிறுத்தாமல் சமாளித்துப்பேச இப்போது பழகிக்கொண்டுவிட்டார் போலத்தோன்றியது.

தீபாவளிக்கு வடை,பாயாசம் எல்லாம் செஞ்சோம்.என்னை எங்கே செய்ய விட்டா?அவளே இழுத்துப்போட்டு எல்லா வேலையும் செஞ்சா.மத்தியானம் சாப்பிட்டுட்டு மூணு பேரும் ஒரே பாயிலே குறுக்க மறுக்கா படுத்துக்கிட்டு அப்பிடித்தான் பேசிக்கிட்டுக் கிடக்கோம்.கண்டதையும் கடியதையும் பேசுறோம்.அந்த நாளு திரும்பி வருமா..ன்னு மறுபடி கலங்குகிறார்.இன்னும் அஞ்சு வருசத்திலே புது வீடு கட்டணும்பான்னு சொல்றா..நீ எத்தனை வீடு கட்ட செங்கலும் சிமிண்டும் சுமந்திருப்பம்மான்னு சொல்லி என் கைகளை தன்னோட மடியிலே எடுத்துப் போட்டுக்கிட்டு தடவிக்குடுக்குறா.யம்மா..என்னா ஒரு தீவாளியம்மா அது?

அப்ப வெளியிலேருந்து ஜெயபால்னே..ஜெயபால்னே..ன்னு இவரைப் பேரைச் சொல்லி யாரோ கூப்பிடறாப்பிலெ கேக்குது.மூணு பேரும் எந்திரிச்சு உக்கார்ந்துட்டம்.அத்தோட முடிஞ்சது அந்தச் சந்தோசம்.

அவன் தான் அந்த கேணேசுங்கிறவன் வந்து நிக்கான்.அவனோட மாமன் தான் கூப்பிட்டது.இவுரு திரும்பி வந்து இப்ப என்ன செய்யன்னு கேக்குறாரு.எனக்குன்னா கோவம் அப்பிடி வருது.எம்புள்ள பொறுமையா அவுங்கள உள்ள கூட்டிட்டு வாங்கப்பான்னு சொல்லுது.

பாயை விரிச்சி அவுங்க ரெண்டு பேரையும் உக்கார வச்சி..எம்புள்ள பள்ளிப்புள்ளைங்களுக்குப் பாடம் நடத்தறாப்புல அவுங்ககிட்டச் சொல்றா…

”இங்க பாருங்கண்ணே…எனக்கு இப்ப கல்யாணம் பத்தியெல்லாம் யோசிக்க நேரமே இல்லை.எங்க குடும்பத்திலேயே முத முதல்ல பட்டப்படிப்பு படிச்சவ நாந்தான்.என்னைப் படிக்க வைக்க எங்க அப்பா அம்மா அவ்வளவு கஷ்டப்பட்ருக்காங்க.நான் அவுங்களுக்கு திருப்பிச் செய்யணும்.தயவு செஞ்சு புரிஞ்சுக்குங்கண்ணே.கல்யாணம் பத்தியெல்லாம் பேச எனக்கு நேரமே இல்லை.தயவு செஞ்சு விட்ருங்க.”

அவந்தா நல்லவனே இல்லியே..

நான் காத்திருக்கத் தயாரா இருக்கேன்.எப்ப சொல்றியோ அப்ப வச்சிக்கலாம்.இப்ப ஒண்ணும் கட்டாயப்படுத்தலேங்கிறான்.

அப்ப எம்பொண்ணு சொல்றா என்னிக்குக் கலியாணம் பண்ணினாலும் உன்னைக் கலியாணம் கட்டவே மாட்டேன். சும்மா சும்மா என்னைத் தொல்லை பண்ணாதே…போன் பண்ணி என் வேலையை இனிமே கெடுக்காதா..இதோட போயிடுன்னு உடைச்சுச் சொல்றா..

ஏன்..ஏன்னு கேக்கான்.

எனக்கு இஷ்டமில்லேன்னா போயிடணும்.அதுதான் உனக்கு மரியாதைன்னு கோபமாச் சொல்றா எம்பொண்ணு.

கூட வந்த மாமன்காரன் பட்டுன்னு எந்திரிச்சி…வாடா மாப்ளே..உனக்கு ஆயிரம் பொண்ணு வரிசையிலே நிக்கா..நீ இந்தன்னு ஒரு கெட்ட வார்த்தை சொல்லி என் மகளைத் தரக் குறைவாப் பேசுறான்.

எம் மக அதுக்குக் கோபப்படலே..சிரிக்கிறா..எப்படியாப்பட்ட அறிவுள்ள பிள்ள எம்புள்ளே…இவுரு பயப்படுறாரு…

”அந்த ஆளுக்கு இருக்கிற மானம் ரோசம் கூட உனக்கு இல்லையே..போ..  வெளியேன்னு சொல்றா…”

அவங்கள வெளியே அனுப்பிட்டுக் கதவை டப்புன்னு அடைக்கிறா..அவனுக போயிட்டானுக…

காப்பி போடும்மா குடிப்போம்னு சொல்லிட்டு  உக்காந்துட்டா.

அன்னிக்கு அதுக்கப்புறம் நாங்க மூணு பேருமே சந்தோசமா இருக்க முடியல.ராத்திரி மூணு பேரும் ஒண்ணுமே பேசாமப் படுத்துக்கிடந்தோம்.மறுநாள் கொஞ்சம் சரியானோம்.எம்பொண்ணுதான் பேசிச் சிரிச்சி எங்களை தைரியப்படுத்தினா.சிக்கன் எடுத்து சமைச்சோம்.

அதுக்கு அடுத்த நாள் கிளம்பிட்டா.அதுக்கு அடுத்த நாள் கிளம்பிட்டா…ன்னு சொல்லிட்டு அப்படியே பேச்சு வராம நிக்கிறாங்க.கால் லேசா தள்ளாடுது.கார்த்திகா மேடம் ஓடி வந்து அவுங்களைப் பிடிச்சி சேர்ல உக்கார வைக்கிறாங்க.அந்த மாமனும் பக்கத்திலே வந்து நிக்கிறார்.சரஸ்வதியம்மா…நீ பேசுன்னு அவரைப் பேசச்சொல்றாங்க…

மதுரை வரைக்கும் பஸ்ஸிலேயே போகலாம்னு ஆனந்தியும் மச்சானும் மட்டும் கிளம்பிருக்காங்க. அக்காவை அலைய வேண்டாம்மான்னு வீட்டிலேயே நிப்பாட்டிட்டா. சாமி கும்பிட்டு திருநீறெல்லாம் பூசி அக்கா அனுப்பி வைக்கிறாங்க.அவுங்க ஊரு சின்ன ஊருதான்.ஒரு பேரூராட்சி.ஒரு சின்ன பஜார் இருக்கும் அது முடியிற எடத்துல பஸ் ஸ்டாண்ட்.

அந்த பஸ் ஸ்டாண்ட் வாசல்கிட்டே இவுங்க ரெண்டு பேரும் போறப்போ பைக்கிலே வேகமா வந்து அந்த கணேஷ் ஒரு பாட்டில் நிறையா வச்சிருந்த ஆசிட்டை ஆனந்தி மூஞ்சியிலேயே ஊத்திட்டு ஓடுறான். அய்யோ..அம்மான்னு அலறிக்கிட்டு ஆனந்தி கீழே விழுந்து தெருவுல உருளுறா…ஸ்..அச்சோ..அய்யோ..ன்னு மாணவிகள் பலவிதமான சத்தங்களோட அதிர்ச்சியும் சோகமுமா கேக்குறாங்க.

கூட்டம் கூடிடுச்சு.போலீசும் வந்துடுச்சு.

அப்பறம் என்ன.மதுரை பெரியாஸ்பத்திரி,சென்னையிலே தனியார் ஆஸ்பத்திரின்னு கடுமையான முயற்சி பண்ணினோம்.முகம் அப்பிடியே மெழுகு மாதிரி உருகிடுச்சு.கண் பார்வை போயிடுச்சு.அப்பவும் அவ எங்க அக்காகிட்டச் சொல்றா…கண்பார்வை இல்லாட்டிக்கூட நான் சரியாகி அதுக்குத் தக்கன ஒரு வேலைக்குப் போயி உங்களக் காப்பாத்துவேம்மான்னு.. இப்ப.. சைன்ஸ்லே நிறையக் கண்டுபிடிச்சிட்டாங்கம்மா… எப்படியும் என்னைக் காப்பாத்திடுவாங்க. பயப்படாதேன்னு தைரியம் சொல்றா..அக்கா எங்க குலதெய்வ சாமி போட்டாவை ஆனந்தியோட தலையணைக்கு அடியிலே வச்சுக் கும்பிடுறா…

41 நாள் போராட்டம்.சாமியும் காப்பாத்தலே.சைன்ஸும் காப்பாத்தலே.ஆனந்தி செத்து இன்னிக்கு ஆறு மாசம் முடிஞ்சிடுச்சு.அக்காவும் மச்சானும் நடைப்பிணமாயிட்டாங்க.இன்னிக்குத்தான் அக்கா இம்புட்டுப் பேச்சுப் பேசிருக்கா…பிள்ளைங்க உங்க முகத்தைப் பார்த்துத்தான் அக்காவுக்குப் பேச்சு வந்துருக்கு…உங்க எல்லோருக்கும் நன்றி..கார்த்திகா மேடத்துக்குத்தான் ரொம்ப நன்றி சொல்லணும் .மெனக்கெட்டு அவுங்க காரை அனுப்பி எங்களை அழைச்சிட்டு வந்ததுக்கு…

தமிழ் மிஸ் வந்து “இப்போ நாம விவாதத்தை ஆரம்பிக்கலாம்னு பிள்ளைங்க முன்னாடி வந்து நிக்கிறாங்க. கார்த்திகா மேடம் அவுங்க மூணு பேரையும் தன்னோட ரூமுக்கு டீ சாப்பிட அழைச்சிட்டுப் போறாங்க.

வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப் படுத்த கார்த்திகா மேடத்துக்குத் தூக்கமே வரவில்லை.அவுங்க கிராமத்துக்கு விடப்போயிருந்த அவங்களோட காரும் திரும்பி வந்துடுச்சி.அவங்க கணவர் வெளியூர் போயிட்டு  கொஞ்சம் லேட்டா வந்து சேருகிறார்.அவரிடம் கொட்டினாத்தான் அவுங்களுக்கு நிம்மதியாத் தூக்கம் வரும் போலிருந்தது.எப்பவுமே அப்படித்தான்.ஸ்கூல் பிரச்னையிலிருந்து சொந்தப்பிரச்னை,ஊர்ப்பிரச்னை எதுவானாலும் அவருகிட்டேக் கொட்டித்தீர்த்திட்டாத்தான் இவுங்களுக்கு நல்லா இருக்கும்.

இன்னிக்கு ஆனந்தியோட அப்பா அம்மா ஸ்கூலுக்கு வந்திருப்பாங்க மேடம் மன அழுத்தத்தோட இருப்பாங்கன்னு அவருக்கும் தெரியும்.சீக்கிரமா சாப்பிட்டுட்டு படுக்கையில உக்காந்ததும் சொல்லுப்பா… அவுங்க பேசினதிலே ரொம்ப எமோசனலாயிட்டியா ..என்றார்.

அதுகூட எதிர்பார்த்ததுதாங்க..ஆனா நம்ப புள்ளைங்க பண்ணுனதுதான் ரொமபக் கலங்கடிச்சிடுச்சு..என் ரூம்ல அவுங்களுக்கு டீ,பிஸ்கட் குடுத்துட்டுப் பேசிட்டிருக்கோம். ஆனந்தியின் கதையை முன் வைத்து நாம என்ன கத்துக்கணுன்னு அங்கே விவாதம் போய்ட்டிருந்தது. விவாதம் முடிஞ்சதும் ஒரு பத்துப்பிள்ளைங்க என் ரூமுக்கு வந்தாங்க. என்கிட்ட பெர்மிஷன் கேட்டுட்டு ஆனந்தியோட அம்மாவை அப்படியே ஆவிசேரச் சேர்ந்துக் கட்டிக்கிட்டாங்க. ஒருத்தி கன்னத்திலே முத்தம் குடுக்கறா..ஒருத்தி அவங்க கையப் பிடிச்சி முத்தம் குடுக்கறா.. இன்னொருத்தி அவுங்க கையை எடுத்துக் கண்ணுல வச்சிக்கிறா…நாங்கள்லாம் இருக்கோம்மா உங்களுக்கு… எங்கள உங்க பிள்ளையா நெனைச்சி மனசைத் தேத்திங்கம்மான்னு ஆறுதல் எல்லாம் சொல்றாங்க..

அப்பறம் மாணவிகள் எல்லோரும் சேர்ந்து கலெக்ட் பண்ணின பணம் பத்தாயிரம் ரூபாயை (இதை எப்ப கலக்ட் பண்ணிணானுகள்னு எனக்கே தெரியல) ஒரு கவர்லே போட்டு இதை ஆனந்தி அனுப்புன பணமா நெனைச்சு வாங்கிக்கம்மான்னு கொடுக்கறாங்க.எனக்குன்னா ஒண்ணுமே புரியலே.கண்ணெல்லாம் கலங்கிடுச்சு..

அவங்க வாங்கிக்கிட்டாங்களா…

அய்யொ அத ஏன் கேக்கறிங்க….என் பொக்கிஷமே போயிடுச்சு..இந்தப் பணத்த வச்சி நான் என்னம்மா செய்யப்போறேன்..உங்க அன்பே போதும்னு கடைசிவரைக்கும் வாங்கவே இல்லை..

நிகழ்ச்சி முடிஞ்சு ஒரு மாதம் இருக்கும்.ஆனந்தியோட மாமன் கார்த்திகா மேடத்துக்கு போன் பண்றார்.”மேடம் ..சாரி..மேடம்..உங்ககிட்டே எப்பிடிச் சொல்றதுன்னு விட்டுட்டேன்..நேத்து அக்கா எலிமருந்து சாப்பிட்டு சூசைட் பண்ணிட்டாங்க.இன்னிக்கு போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சதும் சாயங்காலம் அடக்கம் ”

கார்த்திகா மேடமும் அவுங்ககணவரும்  கொஞ்சம் ஆசிரியர்களும் (பிள்ளைகளுக்குச் சொல்லவில்லை) ஒரு வேன் எடுத்துட்டுப் போய் இறுதி நிகழ்ச்சியிலே கலந்துட்டு வாறாங்க.மக செத்ததை அவுங்களால ஏத்துக்க முடியலேபாவம்…அன்னிக்கே சொன்னாங்கள்ள..வேலைக்குப் போனப்பவே வீட்டில இருக்கவே பிடிக்கலேன்னு…ஆனந்தி வாழ்ந்த வீட்டிலே அவ இல்லாம எப்படி அவுங்களால இருக்க முடியும்?ஒவ்வொரு நிமிசமும் ரணமாத்தானே இருந்திருக்கும்…வேனுக்குள் கவலை தோய்ந்த பேச்சுக்கள்.கார்த்திகா எதுவும் பேச முடியாதவராக முன் சீட்டில் அவ்வப்போது கண்களைத் துடைத்துக் கொண்டு ரோட்டை வெறித்துப் பார்த்தபடி வந்துகொண்டிருந்தார்.

அதிலிருந்து நாலாவது மாசம் ஆனந்தியின் அப்பாவும் இறந்துவிட்ட செய்தி வந்தது.சூசைட் இல்லை.ஆஸ்துமாவுக்குச் சரியாக மாத்திரை மருந்து சாப்பிடாம அப்பிடியே விட்டதிலே மூச்சு அடைச்சி அட்டாக் வந்திருச்சி.கிட்டத்தட்ட தற்கொலைதான்.

கார்த்திகா அன்று இரவு கணவரிடத்தில் பேசிக்கொண்டே இருந்தார்.பேச்சு நிற்கவே இல்லை.அவரும் இடையில் குறுக்கிடாமல் கேட்டுக்கொண்டே இருந்தார்.கார்த்திகா அவரைப்பார்த்துப் பேசவில்லை.யாரோ ஒரு குற்றவாளியை எதிரே நிறுத்திப் பேசுவது போல  நிலைகுத்திய பார்வையோடு பேசிக்கொண்டிருந்தார்.

Flickriver: Photos from dhalavai sundaram

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்

“ சுத்தமா ஒரு குடும்பத்தையே நம்ம கண் பார்வையிலேருந்து துடைச்சி எடுத்தாச்சா..இப்ப திருப்தியா? ஜெயில்ல கிடக்கானே அந்தப் பயலா குற்றவாளி..அவன் வாழ்க்கையும் போச்சில்லே?அவனும் படிச்சிப் பட்டம் வாங்கியிருக்கானே?அந்தப் படிப்பு என்ன பண்ணிருக்கு அவனை?அவனை ஒண்ணுமே பண்ணலியே?அப்புறம் என்னா படிப்பு இது?

இந்தக் குழந்தை என்ன தப்புப் பண்ணிச்சு?அந்தக் குடும்பம் என்ன தப்புப் பண்ணிச்சு?அப்பாவிகளா இருந்ததுக்கு  இவ்வளவு பெரிய தண்டனையா?பொம்பளப் பிள்ளைகளை விரட்டி விரட்டி லவ் பண்ற மாதிரி லட்சம் சினிமா எடுங்க..அதப் பாக்கிற பசங்க இப்படி பின்னாடியே அலைஞ்சா அவ கிடச்சுடுவான்னு நம்பி சாவட்டும்..இல்லே சாவடிக்கட்டும்..

என்ன பாதுகாப்பு இருக்கு பெண் குழந்தைகளுக்கு இந்த சமூகத்திலே?இது யாருக்கு வேணாலும் நடக்கலாமில்லே…நெட்லே போய்ப் பாத்தா ஆசிட் வீச்சுக்கு இரையானவங்க தனியா சங்கம் வைக்கிற அளவுக்கு ஆயிரக்கணக்கிலே இருகாங்க நம்ம நாட்டிலே …சூப்பனகையை மூக்கறுத்த மாதிரி ..அவ மறுத்துட்டா அவ முகத்தை உருக்குலைக்கணும்கிற புத்தி எத்தனை ஆயிரம் வருசமா இருக்கு இந்த நாட்டிலே?முகம் சிதைஞ்ச பொண்ணுங்க ஒவ்வொண்ணும் பேசிற பேச்சை நெட்டிலே போய்ப் பாருங்க…அப்பிடியே நீங்களும் நொறுங்கிப்போயிடுவிங்க…பிடிக்கலேன்னு சொன்னா விட்டுட்டு கண்ணியமா ஒதுங்கணும்கிறத நம்ம பசங்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டாம்?

எப்படிக்காப்பாத்தப்போறோம் நம்ம பசங்களையும் பொண்ணுங்களையும்..இதைச் சொல்லாம பள்ளிக்கூடத்திலே வேற என்னாத்தைச் சொல்லித்தந்து மண்ண வாரிப்போடப்போறோம்?

17 thoughts on “சிறுகதை: ஆனந்தி – எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்”
 1. மிகவும் உருக்கமானதொரு கதை…. அறிவின் பயன் என்னவகையான சமூக விளைச்சலை உற்பத்தி செய்து வைத்திருக்கிறது என்பதை கண்ணத்தில் அறைந்தார் போல் சொல்லி இருக்கிறது.நாம் எதை கல்வியென கற்றுக்கொண்டிருக்கிறோம்.உண்மையில் அது நடைமுறை வாழ்வியல் பிரச்சனைகளுக்கு உதவுவதாக இருக்கிறதா இல்லையென்றால் ஏது கல்வி என்கிற கேள்வியை எழுப்பி இருபாபதோடு அறிவுக்கும் நடைமுறை வாழ்வுக்குமான இடைவெளியை இங்கு எது ஆக்கிரமித்து வைத்திருக்கிறது என்பதையும் உணர்த்துவதாக அமைந்திருக்கிறது.

 2. கண் கலங்க வைத்து விட்டாரே தோழர்.ச.தமிழ்ச்செல்வன்….

 3. மானுட வாழ்க்கையைக் கேள்வி கேட்குற மாதிரியான சிறுகதை. நம்முடைய கல்வி, வாழ்க்கை குறித்தான மதிப்பீடுகளைச் சாட்டையால் சொடுக்கி யிருக்கிறார். கலைக்கே உரிய அமைதி கெடாமல். மனிதர்கள் மீது இருந்த கோபத்தை சமூக அவலத்தின் மீது திருப்பிவிடுகிள சாயலுள்ள கதை. வெயிலுக்குப் பின் சுள்ளென அடிக்கும் இன்னொரு வெயில்.

  1. நடைமுறைக் கல்வியின் எதார்த்தத்தை அப்படியே எடுத்துக்காட்டியுள்ளார்.
   பாடப்புத்தகத்தை தாண்டி வாழ்க்கைக் கல்வியை கற்றுத்தரும்
   தன்னார்வ ஆசிரியர்களின் கழுத்தை இறுக்கிப் பிடிக்கும் அதிகாரம். வாங்குற சம்பளத்துக்கு சொல்ற வேலைய மட்டும் செஞ்சிட்டு போங்க என்பது அறம் பிறழ்ந்த அதிகாரத்தின் குரலே.

   மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத, அண்டி இருப்பவர்களைக் கூட சுரண்டி வாழ்வதை தவறென்று சொல்லித்தராத தற்போதைய கல்வியில் மாற்றம் வருவது தான் எப்போதோ…

   பாடப்புத்தகத்தை தாண்டிய கல்வியை பள்ளிக்கூடத்தில் நுழைய வைத்து கலங்க வைத்த தமிழ்ச்செல்வன் ஐயா அவர்களுக்கு அன்பும் பாராட்டுக்களும்.

  2. மிகவும் எதார்த்தமாக இன்றைய கல்வியின் அபத்தங்களை தலைமை ஆசிரியரின் வழியாகக் கூறியுள்ளார். எத்தனை வளர்ச்சி வந்தாலும் ஆனந்திகள் ஏதோ ஒரு ரூபத்தில் செத்துக் கொண்டே இருக்க இந்தக் கல்வி முறை மிக முக்கியமான காரணம் .

   மனது வலிக்கிறது.

 4. இன்றைய சமூகத்தின் அவலம் மனதைப் பிழிந்தெடுக்க கதையை கேவலினூடேதான் படிக்க முடிகிறது… நாம் பெண்பிள்ளைகளை வளர்ப்பதில் காட்டும் அதே அக்கறையை இன்னும் சொல்லப் போனால் அதீத அக்கறையோடு கூடுதல் பொறுப்பு உணர்த்தி ஆண் பிள்ளைகளைநெறிப் படுத்தி வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்…

 5. எது கல்வி….? மாணவர்களுக்கு என்ன கற்று தர வேண்டும்? என்பதை உருக்கமான கதை மூலம் உணர்த்திய தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

 6. ஏதோ ஒரு கதை எழுதினோம் என்று எழுதாமல் ஒரு கதையின் வழியே சரியான குற்றவாளி யார் என்பதை சமூகத்தைப் பார்த்து காரமாக கேட்கிறார் எழுத்தாளர்.

  ஆம் கல்வி முன்னேற்றம் அடைந்து விட்டது உண்மை என்றால் ஒரு பிரச்சினையை எப்படிக் கையாள்வது, அதற்கான சரியான தீர்வு என்ன, ஒரு செயலைச் செய்யும் முன் அதற்கான விளைவுகள் பாதிப்புகள் என்னென்ன என்று சீர்தூக்கிப் பார்த்து செயல்படும் திறனை கல்வி கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் காட்டுமிராண்டி சமூகத்தில் இருந்த மனித மாண்பும் சிதைந்த சமூகமாக மாறி நிற்கும் சூழலுக்கான காரணியை இப்போதும் சரி செய்யாமல் விட்டோமேயானால் அடுத்தடுத்த சந்ததிகள் ஒருவருக்கொருவர் கொடூர செயல் செய்பவர்களாக மாறி வாழ்வது நரகமாகிவிடும்.

  படிக்கும் ஒவ்வொருவரையும் தன்னைத் தானே மறுபரிசீலனை செய்ய வைக்கும் இதுபோன்ற படைப்புகள் தொடர்ந்து வரவேண்டும். அதேபோல பாடப் புத்தகங்களை தாண்டி சமூகத்தை வாசிக்க மாணவர்களை பக்குவப்படுத்த வேண்டும்.

 7. கல்வி என்பது என்ன?அது போதிக்கும் விஷயங்கள் குழந்தைகளின் நடத்தையிலும், குணநலன்களிலும் எத்தகைய மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் வடிவமைக்கப்படுகிறது என்ற பெரும் கேள்வியை எழுப்புகிறது இக் கதை.

  ஆதிகாலம் தொட்டுப் பெண்ணை உடைமைப் பொருளாகப் பார்க்கும் மனநிலை இருந்து வந்துள்ளது.அதன் விளைவே இது போன்ற நிகழ்வுகள் என்று வெகு எளிதாகச் சமாதானம் செய்து விட்டுக் கடந்து போகிறவர்கள் தான் அநேகம்.

  ஆனால் ஆதிமனிதனுக்குக் கிடைத்திராத கல்வி அறிவும், வன்முறை மனநிலையை மடைமாற்றும் பகுத்தறிவும் இந்த காலகட்டத்தில் அனைவருக்கும் கிடைத்திருந்தும், தனக்குக் கிடைக்காத பட்சத்தில் பெண் ஓர் உயிர் என்ற அடிப்படையையும் மறந்து அவளை அழித்தொழிக்கும் மனநிலையை எந்த வகையான கல்விமுறை மாற்றும்?என்ற வினா மனம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.கண்ணீர் வழிய வழியக் கதையை வாசித்து முடித்த பின்னரும் இதன் தாக்கத்தில் இருந்து விடுபட இன்னும் நீண்ட காலம் ஆகும் என்று தோன்றுகிறது.

  சமீபத்தில் சங்க இலக்கியப் பயிலரங்கில் ஆசிரியரிடம் அவர் எழுதிய சிறுகதைகளைப் பற்றிப் பேசியபோது , தற்போது தான் சிறுகதைகள் எழுதுவதில் லை என்று கூறினார்.ஆனால் மீண்டும் சிறுகதை எழுத ஆரம்பித்துள்ளார் என்ற தகவல் அறிந்த போது எழுந்த மகிழ்ச்சித் ததும்பல் இந்தக் கதை தந்த சோகத்தில் சோப் பு நுரை போலப் பட்டென்று அடங்கிப் போய் விட்டது.

  என் போன்ற வாசகர்களுக்காகவாவது ஐயா தொடர்ந்து சிறுகதைகளும் எழுத வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். நன்றி!

 8. நெ.பி.ராஜேஷ் -சித்தாலபாக்கம்,சென்னை says:

  ஆடிய கால்களும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பதுபோல் எழுத்தாளனால் எழுதாமல் இருக்கமுடியாது..பலவருடங்களுக்கு பிறகு அவர் சிறுகதை ஒன்றை எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.மனதை உருக்கும் சிறுகதை. ஐந்து நிமிட கதையிலும் வாசகனின் கண்ணிலிருந்து நீர் திவலைகளை வரவைக்கமுடியும் என்று மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறார். சிறுகதை எழுதுவதை தயவு செய்து தொடருங்கள்.

  நெ.பி. ராஜேஷ்
  சித்தாலப்பாக்கம்

 9. பு.கி.புவனேஸ்வரிதேவி
  கரூர்.

  இது கதை அல்ல. நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் வன் கொடுமைகளுள் இதுவும் ஒன்று. ஆசிரியர் மட்டும் பொறுப்பேற்றுக் கொண்டால் போதாது. பெற்றோர்கிய நாம் நம்முடைய ஆண் பிள்ளைகளை பணம் சம்பாதிப்பதற்காக மட்டும் வளர்க்காமல் சமுதாயப் பொறுப்பு உள்ளவர்களாக வளர்க்க வேண்டியது நம்முடைய கடமை என்பதை இக் கதை சுட்டிக் காட்டுகிறது.
  படித்து நல்ல வேலையில் இருந்தாலூம் பெண்களின் சுதந்திரம் பெயரளவில் மட்டுமே என்பதை தோழர் தமிழ்செல்வன் அவர்கள் அவரது பாணியில் அழகாக விளக்கியுள்ளார்.
  புவனேஸ்வரிதேவி
  கரூர்

 10. என்னைப் பொருத்தவரை கல்வி என்பது சக மனிதனையும் இந்த சமுதாயத்தையும் படிக்க உதவ வேண்டும். பள்ளிக்கூடம் சென்று அரசு வழங்கிய பாடத் திட்டங்களை படிப்பது மூலமாக மட்டும் இது சாத்தியமாகாது. ஆனால் அதை சாத்தியமாக்க வேண்டும். அதை இக்கதை மிகச்சரியாக சொல்லிச் செல்கிறது.

 11. ஒரு நல்லது, கெட்டதை பிரித்தரிய கூட தெரிந்து கொள்ள முடியாத சமுதாயத்தை உருவாக்கும் கல்வியை…. கல்வி என எப்படி ஒற்றுக்கொள்ள முடியும்…. என்ற கோபத்தின் வெளிப்பாடாக இந்த கதையை நான் பார்க்கிறேன்….
  இதற்கு யார் பதில் சொல்வது ?

 12. கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.தொடர்வோம் பயணம்

 13. ஆனந்தியைப்போல் எத்தனை பெண்களை நாம் இழந்திருப்போம்.எத்தனை,எத்தனை பெண்களையும்,அவர்களை தங்கள் கனவாய் கொண்டாடிய குடும்பங்களையும் இழந்திருக்கிறோம்.ஏன் இந்த அவலம்?எதை நோக்கிபோய் கொண்டிருக்கிறது சமூகம்?

  வாழ்க்கை வாழ கற்றுக் கொடுக்க வேண்டிய பள்ளிக்கூடங்கள், இன்று வாழவே தெரியாத பிள்ளைகளை உருவாக்கி கொண்டிருக்கிறது.பெற்றோர்களின் பங்கும் இதில் இருக்கத்தான் செய்கிறது.நாமும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

  ஒரு மனிதனை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிப்பது கல்வி.அப்படிப்பட்ட கல்வி எங்கு தவறியிருக்கிறது என்று யோசித்தால், கல்வி முறையே தவறாகயிருக்கிறது என்று தான் தோன்றுகிறது. கார்த்திகா மேடத்தைப்போல், எத்தனை ஆசிரியர்கள் இவற்றை பேச துணிகிறார்கள்.அப்படியே பேசினாலும் அவர்களை யார் ஆதரிக்கிறார்கள்.உங்கள் வேலை புத்தகத்தைப் படிப்பிப்பது மட்டும் தான்.அதை தாண்டி வேறு எதையும் செய்ய வேண்டாம் என்று வாயடைத்து உட்கார வைக்கிறார்கள்.

  பள்ளியில் நுழையும்போதே சிறுகுழந்தையிடத்தில், படித்து நீ என்னவாக போகிறாய்?என்று கேட்கிறார்கள்.படிப்பு என்பதே வேலைக்கு செல்வதற்கு தான் என்ற எண்ணத்தை ஆழத்தில் சுமந்துகொண்டு, பிள்ளைகளின் பயணம் தொடங்குகிறது. பிறகு படிப்பு,வேலை என்ற இரண்டைத் தவிர வேறொன்றையும் நினைக்காத அளவிற்கு கவனமாய் பார்த்துக் கொள்கிறது பள்ளிகள்.பெற்றோர்களும்தான்.

  ஆசிட் வீச்சு செய்யும் பையன்களுக்கு மத்தியில், சில பக்குவப்பட்ட பையன்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.தன் காதல் நிராகரிக்கப்பட்டால்,காதலித்த பெண்ணை தொந்தரவு செய்யாமல் ஒதுங்கி நின்று,தன் காதலை சுமந்துகொண்டு காத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட பிள்ளைகள் மிகவும் சொற்பம்.எந்த இடத்தில் தவறி இருக்கிறோம் என்று யோசிக்க வேண்டும். அப்படிப்பட்ட பக்குவமான பையன்களை அணுகினால் பாடப்புத்தகத்தை தாண்டிய ஏதோ ஒரு கற்றலை அவர்களிடத்தில் காணமுடிகிறது.

  பாடம்,பரிட்சை என்பதைத் தாண்டிய விடயங்களில் பள்ளிகள் கவனம் செலுத்த வேண்டும்.கார்த்திகா மேடம் போன்ற ஆசிரியர்கள் சிலர் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.அவர்களை ஒதுக்காமல் ஆதரிக்க வேண்டும்.கார்த்திகா மேடத்தின் இணையர் கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது.சற்று மாற்றியோசித்தால் ஏன் வீண்வேலை?வேலையைப்பார் என்பவர்கள் மத்தியில் தனித்துநிற்கிறார்.

  இந்த சிறுகதை என்னுள் பல வாசல்களை திறக்கிறது.செய்தித்தாளில் இதுபோன்ற செய்திகளை வாசித்து உச்சுக்கொட்டி கடந்து போகும் மன நிலையை தாண்டி, இந்த உயிரோட்டமான எழுத்துக்கள் மனதை கவ்வி இழுக்கிறது.சிறுகதையின் ஒவ்வொரு அசைவும் பல ஆழமான கருத்துக்களை என்னுள் ஊன்றுகிறது. சமூகத்திற்காக குரல் கொடுக்கும் எழுத்துக்களால் நிரப்பப்பட்டு என் முன் எழுந்து நிற்கிறாள் ஆனந்தி.இக்கதையை வாசித்து வருத்தப்பட்டு கடந்து போவதை தாண்டி, இனிமேலும் ஆனந்திகளும்,கணேசன்களும் உருவாகாமல் தடுக்க என் சார்பில் நான் என்ன செய்ய வேண்டும் என்ற நீண்ட நெடுங்கேள்வியொன்று என்னை சுற்ற தொடங்கியுள்ளது.

  அழகான கதைநடையையும்,ஆழமான கதை கருவையும்,உயிரோட்டமிக்க கதாபாத்திரங்களையும்,சமூக அவலங்களையும்,அதற்கான மாற்று வழியையும் சுமந்து நிற்கும் ஆனந்தி பல நூறு ஆண்டுகள் வாழ போகிறாள்…..பல மாற்றங்களை உருவாக்குபவளாக…தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் அர்த்தமிக்க படைப்பால்.

  தோழர் ச.தமிழ்செல்வன் அவர்களுக்கு என் உளம்நிறைந்த வாழ்த்துகள்….

  சு.இளவரசி.
  சிவகங்கை.

 14. இச்சமூகத்தில் ஏழைகளின் நிலையையும், பெண்களை பெற்றவர்களின் நிலையையும் படம் பிடித்து காட்டியிருக்கிறார். ஆனந்தி போல, படித்த பெண்கள் பிரச்சினைகளை பக்குவமாக கையாள வேண்டும் என்பதையும் உணர்த்தி இருக்கிறார். இறுதியாக இக்கால ஊடகங்களும், சினிமா போன்ற மீடியாக்களும் மக்களை தவறாக வழி நடத்தி சீரழிப்பதையும் ஆணித்தரமாக கூறியுள்ளார். கல்வி என்பது நமக்குள் எதை விதைக்க வேண்டும் என்றும் அதற்கான கல்வி திட்டம் அமைய வேண்டும் என்பதுமே ஏற்க தக்க கருத்து.

 15. நெடுநாள் கழித்து எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதியிருக்கும் கதை…கதைகள் விதவிதமாக தமிழில் எழுதப்படுகிறது.கதையை வாசிக்கும் போது ஏற்படும் கலக்கமும் கண்ணீரும் நெடுநேரமாகியும் நிற்கவில்லை.அதிலும் கல்விப் புல கதை என்பதால் அடிக்கடி எனக்குள் எழும் என்னத்த சொல்லிக்கொடுத்து என்ன செய்ய எனும் குற்ற உணர்ச்சியை கீறிவிடுகிற சொற்கள் கதைக்குள் ஊடாடிச் செல்கிறது..அந்தக் குழந்தைகள் கட்டிச் சேர்ந்து முத்தம் தரும் புள்ளியை கதைக்குள் கடக்க எனக்கு வெகு நேரம் ஆகிவிட்டது..கதையை இந்த இடத்தோடு முடித்திருக்க முடியும்.அப்படி முடிக்கிறவர்தான் தமிழ்ச்செல்வன்.ஆனாலும்அதைத்தொடர்வதறௌகும். கொஞ்சம் பேசவேண்டி அவரை உந்தி தள்ளியதும் உண்மை மட்டுமே…..
  ம.மணிமாறன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *