பு ற ம்
– – – – – – –
சின்னஞ்சிறு புள்ளியிலிருந்து
தொடங்குகின்றன கோடுகள்.
தடித்த மெலிந்த
நேரான வளைந்த
வடிவங்கள் கொண்ட
கோணல் மாணல்
நிறைந்த கோடுகள்.
பாட்டன் முதல்
பையன் வரை
டேக்கார்ட், ஹான்ட்
மார்க்ஸ்,ரூசோ
யோகி, ஞானி
வழிப்போக்கன்
வந்தவன் போனவன்
வரைந்த கோடுகள்
என் கோடுகள்
என்னில் இல்லை
ஞான மாயை
———————–
புற்கள் குத்தி
புண்ணாகிப் போன கால்கள்
மிதிபட்டு மிதிபட்டு
புற்களும் கற்களும்
பூவாகிப் போயின.
என் தடத்தில்
யாரும் வரவேண்டாம்.
கண்ணாடிச் சில்லுகளும்
கூரிய ஆணிகளும்
நிரம்பிக் கிடக்கின்றன.
நானும் நீங்களும்
தனித்தனி மாயைகள்
சூனியங்கள் ஒன்றுபோல்
தெரிந்தாலும் அதில்
சுற்றும் வெறுமைகள்
வெவ்வோறானவை.
நன்றாக யோசித்துப் பாருங்கள்
நீங்கள் யார்?
உங்கள் கொள்ளுத் தாத்தாவின்
எந்த எலும்பையாவது
உங்களால் கண்டெடுக்க முடியுமா!
எப்போதும் நான்
என்னைக் கண்டுபிடிக்க
முயற்சித்துக் கொண்டுள்ளேன்.
இல்லாத மையப்புள்ளியை
விட்டு விலகி எங்கோ.
அநேகமாக மரணத்துக்குப் பின்னும்
அது சாத்தியப்படாது.
நீங்கள் உங்களுக்குத்
தெரியாமலே உங்களை
தேடிக்கொண்டிருப்பது
மூங்கில் காட்டில்
காதுக்குள் நுழையும்
ஏதோ ஒர் இரைச்சலை.
அதில் உருகி வழியும் ராகம்
ஆலாபனையென ஏமாற்றும்
வெறும் சுரங்கள்.
நிஜமான ஒற்றை ரகசியம்
நிஜமே இல்லை.

– அன்பழகன்ஜி

