அன்பழகன்ஜி கவிதைகள்

அன்பழகன்ஜி கவிதைகள்

(1) சிதைவுகள்
– – – – – – – – – – – – – – 
நாதியற்று கிடந்த
நான் எழுதிய கவிதை
மீண்டும் மீண்டும்
நானே படித்து
வார்த்தைகள் கலைந்து
எழுத்துகள் உதிர்ந்து
காணாமல் போனது.
மீளப்பிரசவிக்கமுடியாது
கரு கலைந்து
வார்த்தைகள் இழந்த
அகராதியானது மனம்.
அழிந்துபோன என்
 கவிதைப் பக்கங்கள்
நீங்கள் நுகர்வதற்காய்
வெறுமையாய் கிடக்கின்றன.
(2)  கதை இல்லாதவளின் கதை 
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – 
விதவைப் பெண்ணொருத்தி
விறகு வெட்ட
வீதியில் இறங்கிப் போகிறாள்
ஒன்பதாம் வகுப்பு பயிலும்
ஒரே மகனின்  மீதான அவளின்
கனவைப் சொன்னால்
அது
கவிதையாகிவிடும்
இஃதோர்
கதை சொல்லியின் கதை.
சாலையின் ஒரு புறம்
நாணமற்ற நதியொன்று
இரண்டு ஆட்டு குட்டிகளின்
சுமையுடன் கிடக்கிறது
புன்னகைக்காத பூக்களுடன்
புளிய மரங்கள்
இருபுறமும் எதையும் சொல்லாது
மரம் போலவே வரிசையில் நிற்கின்றன.
அவற்றின் அடியில்
நாளை காளான்கள் முளைக்கலாம்.
மதியத்தில் இன்று
மழைவர வாய்ப்புள்ளது.
ஐயனாருக்கு வேண்டிய கடா
ஆற்றோடு போகலாம்.
இயற்கையை எதிர்த்து
இயற்கையாய் வளர்ந்த
புற்பூண்டுகளுக்கு எரிச்சல் தரலாம்.
சோத்துகை பக்கம் திரும்பினால்
ஆற்றை கடக்க பாலம்
சிறகுகளை ஒடித்துக்கொண்ட
ஐந்து பறவைகள் அமரும்
பாலச்சுவர் – குட்டிச்சுவர்
தாண்டி நடக்க வேண்டும்
இடப்புறத்தில் எதற்கும்
ஒப்பிட இயலாத
ஒற்றைப் பனைமரம்.
வலப்புறத்தில்
பத்து மரங்கள் கொண்ட
ஒரு பனந்தோப்பு.
ஒவ்வொரு மரத்திலும்
ஒரு கூடேனும் தொங்கும்
 ஏதேனும் ஒரு மரமேனும்
 உங்களின் கண்களுக்குப் படலாம்
இடதாய் உள்ள
அந்த ஒற்றை பனைமரத்தை
கதைசொல்லிக்கான
கவிதையில் சொன்னால்
மயங்கொலிச் சொல்.
ஆனால் அவளுக்கு
எதுவும் சொல்லத் தெரியாது.
அந்த கதை சொல்லி
ஆயிரம் ஆண்டுகளாய்
விறகு வெட்டிக்கொண்டிருக்கிறாள்.
(3)  கம்பளி பூச்சியும் கோடிட்ட இடமும்
——————————————————–
இது
என்னுடைய கதையில்லை.
என் அப்பன் குதிருக்குள்
இல்லையென்ற கதை.
இந்தக் கம்பளிப் பூச்சிக்கும்
ஆஸ்திரேலியா, அமெரிக்கா,
அர்ஜென்டைனா போன்ற இடங்களில்
சில விசிறிகள் உண்டு.
உரோமங்களின் சிலிர்ப்பில்
மின்மினிப் பூச்சிகளாய்க் கிளம்பி
பறக்கத் தொடங்கும்போது
பகல் பொழுது வந்துவிடும்.
அவைகளின்  முதிர்கொண்ட சூல்
காளான் நிழல் தேடி
காணாமல்
பிறக்கும் முன் இறந்த  பாவம்
வான்மழையைச் சாரும்.
இப்போது இந்த கம்பளிப் பூச்சி
இடம் பெயரப்போகிறது.
எப்படியானாலும்
வழக்கமான வேதாளம்
முருங்கை மரம் ஏறாமல் விடாது.
அதன் உலுக்கலில்
உரோமங்கள் உதிரத் தொடங்கும்.
நெளிந்து வளைந்து எப்படியோ
இலக்கை அடைந்ததும்
கருடனிடம் பாம்பு
நலம் விசாரிக்கும்
அப்போது
அதை பட்டாம்பூச்சி
என்று அழைப்பார்கள்.
கம்பளிப்பூச்சி என்றாலும்
பட்டாம்பூச்சி என்றாலும்
எல்லாம் பூச்சிதான்.
              – அன்பழகன்ஜி 
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *