அன்பாதவன் கவிதைகள்கவிதை: 01

சிதைந்த பாறைத்துண்டுகளின் எச்சங்களில்
கல்லாயுதம் கண்டவனிந்த குகையன்.

நெடிய வலிய மரக் கிளைத்துண்டுகள் குத்தீட்டிகளாக
இரும்பின் அறிமுகத்தில் வெட்டுக்கத்தியும் அம்பும்

எதிர்பாரா மூங்கிலுரசலில் கானகம் எரிய
தீயா விலங்கின் மாம்சத்தில் புதுருசியின் சுவை

மலைக் கிளம்பி தரைவர
சமவெளியின் நதிப்படுகை நல்விளைச்சலில்
உழுகுடியானான் கால்நடைத் துணைவர…

வரப்புயர நீருயர்ந்து
பூச்சிகளைக் கண்டவன் கொல்லிகளைத் தந்தான்
மனிதரும் மாண்டுபோக
பெயரில் என்ன இருக்கிறது..?கவிதை: 02

வனங்களில் புகுந்தவனுக்கு அகோரப்பசியாசை
தருக்கள் வீழ
வீதிகளில் வேழ முழக்கம்
கடல் கடந்தன பட்சிகள்
உயிர் மீண்ட கொடுநாகம் துரத்துகிறது
நாடோடியாய்த் தேடுபவனை…

உங்களில்ல கண்ணாடியில்
அவன் பிம்பம்கவிதை: 03

உன்னை யாரோ கண்காணிக்கிறார்கள்…
என்னையும்

நடவடிக்கைகளை உளவுப் பார்க்கும் விழிகள்
உரையாடல்களை ஒட்டுகேட்கும் செவிகள்
பாதா அடிகளின் திசைகளிலும் முகங்காட்டா ஒற்றர்கள்

மிரட்டல் கலந்த கடும் வசவுகளால் எச்சரித்து
மீறல்கள் மரணத்திற்கு பாதையென ‘அன்போடு’ அறிவுறுத்தப் படுகிறோம்

விதிகளால் கட்டமைக்கப்பட்ட வாழ்வைப் போதிக்கிறார்கள் நம்மிடையே
ஒழுங்கமைவா யமைந்த மரபு திணிக்கப்படுகிறது நம்மீது

எண்திசையும் இருட்டு
கண்ணாடிச் சன்னல் வழி கசிகிறது பவுர்ணமி
பொங்கும் நதிக்குண்டு கரை
அடியாழச் சுழல் வேகம் அறிந்தவர் ஆர்?
சுற்றி வைக்க முடியுமோ
தெளி
சுதந்தரமென்பதோ சுடுநெருப்பு

கதவுகள் யாவும் அடைபட
இரகஸ்யமாய் உள் நுழையும்
சாவித்துவாரக் காற்றுகவிதை: 04

தேசமெங்கும் திடீரென சூன் யங்களின் பெருகல்
சூன் யங்களால் நிரம்பி வழிகிறது..இராஜசபை
இன்மைகளை உண்மைகளைப்போல் அலங்கரித்து தேசமெங்கும் உலவ விடுவதே ராஜனின் ரகஸ்யம்
‘மன்னர் வாழ்க’ குரலெழுப்பி கோஷமிட்ட பூஜ்ய ராஜ்யக் குடிகளுக்கெல்லாம் விநியோகிக்க கொண்டைக்கடலையோடு சுவைக்கூடிய சூனிய வடை!
போற்றிப்பாடியப் புலவர் பாணருக்கும் பரிசிலாய் சூன்யக்கிழி
உயிரெண்களுக்கு வலப்புறம் நிரப்புவதாய் நினைத்து இடப்புறமாய் சுழிகளை நிரப்பும்
தொண்டரடிப்பொடியாழ்வார் களின்
தொலைக்காட்சி விவாதங்கள்
“தொடங்குவது எதுவும் சூன் யத்திலிருந்து தானே”
கேள்வியின் வினா
” எதுவும் முடிந்தபின் சூன் யம் தானே”பதில் பகர்ந்தது விடை
காதங்களைப் பாதங்களால் கடக்கும் கூட்டத்துக்கு
எதிரில் பெருஞ்சூன் யம்..
பசியோடும் நம்பிக்கை யோடும் பறந்து உடன் வரும் கழுகுகள்
சூன் யத்தின் சங்கிலிகளை அவிழ்ப்பதா உடைப்பதா
கரங்கோத்து யோசிக்கின்றன சூன் யத்துக்கெதிரான சுத்தியல்கள்