து. வி. அன்பழகன் (Anbazhagan D V) கவிதைகள் Anbazhagan D V Four Poetries in Tamil Language. Book Day Literature Website is Branch of Bharathi Puthakalayam

து. வி. அன்பழகன் (Anbazhagan D V) கவிதைகள்



1) நெடிது நீண்ட இரவை
மூன்று துண்டுகளாய்வெட்டினேன்
இரத்தம் கொஞ்சமாய்
கசிந்து கொண்டிருந்தது
வெட்டுண்ட பகுதிகளில்!

உயிர்ப் போகாமல்
துடித்துத் துள்ளிக் கொண்டிருந்த
முதல் துண்டை
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்!

முதல் துண்டின் துடிப்பு
முற்றிலும் அடங்கிப் போனதும்
இரண்டாம் துண்டைக்
கையில் எடுத்தேன்!

அது சடாரென குதித்து
என் கழுத்தில் ஒட்டிக் கொண்டு
மூச்சு விடமுடியாமல்
குரல்வளையை இறுக்கியது!.

மணிக் கணக்காய் அரும்பாடுபட்டு
பிய்த்து எடுத்து அதனை
அறைக்கு வெளியே வீசினேன்!

அடுத்த நொடி
இரவின் கடைசி துண்டு
என்னை இழுத்துத்
தன்னைப் போர்த்தி விட்டது!

போர்வைக்குள்ளிருந்து
வெளியேவர இயலாமல்
காற்றில்லா புழுக்கத்தில்
வெம்பினேன் வியர்த்தேன்!

விடியலில் எப்படித்தான்
தூங்கிப் போனேன் என
எனக்கே தெரியவில்லை!

என்ன செய்வதடி?
நீயில்லா இரவுகளை
இப்படியெல்லாம் தான்
கழிக்க வேண்டியிருக்கிறது!



2) திடீரென ஒருநாள் என்
கடிகார முட்கள்
எதிர்த் திசையில்
சுற்றத் தொடங்கின
சரி ஓடட்டும் என
விட்டுவிட்டேன்!

பன்ரெண்டு மணியை எப்போதுமே
சரியாகக் காட்டிவிடும்
பதினொன்று மணி என்று காட்டினால்
ஒருமணி என்று
புரிந்து கொள்வேன்

பத்து மணி எனக் காட்டினால்
இரண்டு மணி என்று
எடுத்துக் கொள்வேன்

அது என்னோடு
காலம் தள்ளுவதைப் போல்
நானும் அதனோடு காலம் தள்ளப்
பழகிக் கொண்டு விட்டேன்

என் இளமையை நோக்கி
அது ஊர்ந்து கொண்டிருக்க
என் முதுமையை நோக்கி
நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.



3) உயரப் பறந்த பறவையைப் பிடித்து
ஒவ்வொரு இறகாய் பிடுங்க
ஒவ்வொரு முறையும் அது கத்த
பின்னர் அதற்கே அலுத்துப் போய்
சரி பிடுங்கிக் கொள் எல்லாவற்றையும்
என்று விரக்தியில் மௌனம் காக்க

மௌனம் சம்மதம் என்று
மேலும் மேலும் பிடுங்க
உறித்த பறவையது உணவுக்காக
உங்கள் காலையே சுற்றிவர
அதன் விசுவாசத்தை எண்ணி
நீங்கள் பெருமைப் பட

அதற்குக் கொஞ்சம்
தானியமணிகளை நீங்கள் வீச
உங்கள் பறவைப் பாசம் கண்டு
ஊரே போற்றி உங்களை வாழ்த்த

ஆரம்பத்தில் நீங்கள் இழைத்த கொடூரம்
அந்த பறவைக்கே மறந்து போய்விட
மறதியில் மீண்டும்
ஒளிரத் துவங்குகிறது
உங்கள் ராஜகிரீடம்!



4) என் கனவில் நானொரு
ஆடாய்ப் பிறக்கிறேன்
கசாப்புக் கடையில்
சட்டையுரிக்கப் பட்டு
நான் தொங்கிக் கொண்டிருக்க

காலம் தொலைத்த
கணங்களில்
என்னை நானே
தட்டில் வைத்து மிளகுத் தூவி
முள்கரண்டியால் குத்தியிழுத்துக்
கடித்துச் சுவைக்கும் தருணத்தில்

மஜ்ஜை உறிஞ்சி
நான் போடும் என்
எலும்புகளுக்காக
நானே ஒரு நாயாகிக்
காத்துக் கிடக்கும் அவலத்தை
ஜென் நிலையில் நோக்கும்
வெறும் பார்வையாளனாக
நான்!

– து. வி. அன்பழகன் (Anbazhagan D V)
சென்னை.



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 1 Comment

1 Comment

  1. Anbazhagan G

    அருமை.
    பின்னோக்கி நகரும் கடிகாரம் சிறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *