சிறுகதை: கரிக்காரர் – அன்பழகன்ஜி

Image Credits: http://urakudi.blogspot.com/2017/05/photo-gallery.htmlகரிக்காரருக்கு என்று ஒரு பெயர் இருப்பது பெரும்பாலோருக்குத் தெரியாது. நாமும் கரிக்காரர் என்றே அழைப்போம்.

காட்டிலிருந்து வீட்டிற்கு வந்த கரிக்காரர் முற்றத்தில் நின்றுகொண்டு “எங்கடி போனான் பய?” என்றார்.

மனைவியிடம் கேட்ட கேள்விக்குத் தயார் பதிலளித்தார் “இப்பதாம்பா எங்கயோ வெளியே போனான்”

“தின்னுபுட்டு இப்படி வெட்டியா சுத்துனா வயத்துல ஒட்டுமா?”

“காலங்காத்தால ஏந்தான் அவன இப்படி கரிச்சி கொட்டுறீங்க” என உயர்த்திய குரலோடு வெளியே வந்தாள் மனைவி.

“பத்து மணிக்கு வாடா கரி மூட்டம் பிரிக்கணுமுன்னு நேத்தைக்கே படிச்சி படிச்சி செல்லிட்டேன். எங்கையோ ஓடிபுட்டான்னா. நா மட்டும் ஒருத்தனா காலம்பூர உங்களுக்கு ஒழைக்கணுமா”

“ஆமா அப்டியே ஒழச்சி நக நட்டு வாங்கிக் கொடுத்து, வைக்க எடமில்ல பாருங்க இங்க”

“ஏன் நீ பெரிய பணக்காரன பாத்து அப்பயே கழுத்த நீட்டிருக்கலாமில்ல. இந்த கரிக்காரந்தான் கிடச்சானா ஒனக்கு.

“என் அப்பன் ஒரு போக்கத்தவன். சீர் செனத்தி செய்ய வக்குல்லாம ஒன் தலையில கட்டி விட்டான்”

வாய் சண்டையை முடிவுக்கு கொண்டுவர நினைத்த கிழவி “ஏம்பா எப்ப பாத்தாலும் சத்தம் போடுறிங்களே. இதயே எத்தன வருஷம்தான் சொல்லிகிட்டு இருப்பிங்க”

“எல்லாம் நீ கொடுத்த செல்லம்தான் பேரன் இப்படி தீவட்டியா அலையிறான். அவன உருப்புடாம பண்ணிடாத. ஆமா” கரிக்காரர் அடங்கிப்போனார்.

மனைவியும் முணுமுணுத்துக் கொண்டே ஓலை குடிசைக்குள் புகுந்து உப்புப் போட்டு பொங்கலை கிண்டும் வேலையைத் தொடர்ந்தாள்.

இந்த கரி சுடும் வேலை இவரது தந்தை காலத்திலிருந்து இவரது குடும்பம் செய்து வருகிறது. வேலிக்கருவை விறகை வெட்டி கூம்பு போல அடுக்கி களிமண் மணல் கலந்து சாந்து போல குழைத்து மேலே கொட்டி வெளியில் தீ போகாதவாறு மெழுக வேண்டும். அப்போதுதான் விறகு எரிந்து சாம்பலாகாமல் நெருப்பு கட்டிகளாகக் குறிப்பிட்ட நேரம் இருக்கும். மூட்டத்தின் அடியில் ஓர் ஓரமாக தீ வைத்தால் மூட்டம் முழுவதும் தீ பரவி விறகு தகதக என தணலாக இருக்கும்போது மேலே தண்ணீரை ஊற்றி நெருப்பை அணைக்க வேண்டும். நெருப்பு அவிந்து கரித்துண்டுகளாக மாறும். சூடு தணிந்ததும் மூடிய சாந்தை அகற்றி கரியை வெளியே எடுக்க வேண்டும்.

வேலிக்கருவை இருக்கிறதே அது வெட்ட வெட்டத் துளிர்விட்டு வேகமாக வளரும் முற்செடி. அது மர வகையிலும் சேராமல் செடி வகையிலும் சேராத குத்துக் குத்தாக வளரக்கூடியது. அதன் நெற்றுகளை உண்ட கால்நடைகள் இடும் சாணத்தோடு சேர்ந்து வரும் செரிக்காத விதைகள் முளைத்து வெகு வேகமாக நிலப் பரப்பை ஆக்கிரமிக்கும் தன்மை கொண்டது. கரிக்காரருக்கென்று ஒரு ஏக்கர் வேலிக்கருவை மண்டிய நிலம் உள்ளது. அதன் முழு உரிமை அவருக்கா அரசாங்கத்திற்கா என யாருக்கும் சரியாகத் தெரியாது. அவரது பெரியப்பா நேதாஜியின் ஐ.என்.ஏ.வில் இருந்தவர். புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் தியாகிகளுக்கு மூன்று செண்ட் மனைப் பட்டா கொடுப்பதாய் அறிவித்தபோது அவரும் குடியிருந்த பகுதியையும் சேர்த்து பொட்டலாய் கிடந்த புறம்போக்கு நிலத்தை ஒரு ஏக்கர் வளைத்து போட்டு நான் ஐ.என்.ஏ.வில் இருந்த தியாகி எனக்கு இது அரசாங்கம் கொடுத்தது எனப் பீற்றிக் கொள்வாராம். அந்த காலத்தில் பட்டாமணியார் கணக்குப் பிள்ளைதான் ஊரின் எல்லா நிர்வாகமும். அவர்களிடம் இருந்த அதிகாரத்தை பிடுங்கித்தான் கிராம நிர்வாக அலுவலர் என்ற பதவியை உருவாக்கியது அரசு. அந்த கிராமத் தலைவர் என்ற பட்டாமணியார் வருவாய் இலாக்காவை நிர்வகித்த போது கொஞ்சம் நியாயம் இருந்ததாம். அது ஒரு கௌரவ பதவி. உள்ளுர்வாசி என்பதால் சாதிச்சான்று வருமாணச்சான்று கொடுப்பதற்கெல்லாம் காசு வாங்க மாட்டாராம். புறம்போக்குதானே வைத்துக்கொண்டு தொலையட்டும் என்று வீட்டுமனை போக எஞ்சிய பகுதிக்கு பிமெமோ கொடுத்துத் தண்டத் தொகையாகக் கொஞ்சம் வசூலித்து வந்தார். நிர்வாகம் மாறியபோது அதுவும் விட்டுப்போனது. பாவம் பட்டாளத்தில் இருந்து நாட்டைக் காத்தவரென யாரும் கண்டுகொள்ள வில்லை. அப்போதுதான் அவர் தனது தம்பியுடன் சேர்ந்து கரி சுட ஆரம்பித்தார். அவர் இறந்ததும் வாரிசு இல்லாததால் அவரின் தம்பியாகிய கரிக்காரரின் தந்தை உரிமையை அபகரித்தார். அவர் சிவலோக பதவி அடைந்ததும் வாரிசான கரிக்காரருக்கு இரண்டும் கெட்டான் அந்த நில உரிமை வந்து சேர்ந்தது.

அந்த நிலத்தில் ஒரு பக்கத்திலிருந்து கருவை மரத்தை வெட்டி கரி தயாரிப்பார். போதாததற்கு வெளியில் கொஞ்சம் விறகு வாங்குவார். பக்கத்தில் உள்ள அரசாங்கக் காட்டில் கொஞ்சம் திருட்டுத்தனமாய் வேலிக்கருவை மரத்தை வெட்டிக் கொள்வார். காட்டுக் காவல்காரருக்குச் சாராயம் குடிக்க அவ்வப்போது கொஞ்சம் காசு கொடுத்தால் அவர் கண்டுகொள்ள மாட்டார். எல்லாத் தொழிலிலும் நெளிவு சுளிவு இருக்கத்தான் செய்கிறது. கரியைச் சுட்டுச் சுட்டு வெறுத்துப்போன கரிக்காரர் சில நேரங்களில் அதை ஈனத் தொழில் என நொந்து கொள்வார்.இந்த ஈனத் தொழிலுக்கும் போட்டியும் பொறாமையும் ஏற்படுவதுண்டு. மேலிட ஆதரவுடன் காட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சும் ஒரு கோஷ்டி காட்டை அழித்துக் கரி சுட்டால் சுற்றுச் சூழல் பாதிக்கும் அப்புறம் எப்படி மழைபெய்யுமென மூன்றாம் நபர்களைத் தூண்டிவிட்டுப் பார்த்தது. கரித் தொழில் பெரிய தொழிலாக்கும், பாவம் பிழைத்து விட்டுப் போகிறான் என்றும் சாராயம் காய்ச்ச மட்டும் காட்டில் திருட்டுத் தனமாக மரம் வெட்டலாமா என்றும் சிந்தை தெளிவு பெற மக்கள் அதைக் கண்டு கொள்ளவில்லை. பிறகு காவல்துறை மூலம் தொந்தரவு செய்தது கோஷ்டி. காவல் துறையும் கரிக்காரனிடம் மாமூல் வாங்கலாமா என யோசிக்கத் தொடங்கியது.

ஒரு நாள் காட்டுப் பக்கம் வந்து கள்ளச்சாராயம் காய்ச்சும் இடத்தை சோதனையிட்ட பின் மூச்சு முட்ட சாராயத்தைக் குடித்துவிட்டு மாமூலும் வாங்கிக்கொண்ட இரு காவலர்கள் கரி மூட்டம் பக்கம் வந்தார்கள். விஞ்ஞானி ஆராய்ச்சி செய்வதுபோல கரி மூட்டம் விறகு வெட்டிய இடங்கள் எல்லாம் பார்வையிட்ட பின் “ஏன்டா இப்படிக் காட்ட வெட்டுறியே மழை எப்படி வரும்” என்றார் சீருடை போட்ட காவலர்.

“எங்க அப்பா காலத்துலேருந்து இதானய்யா செஞ்சிகிட்டு வர்றோம்.”

“அப்ப யாரும் கேக்கல. இப்ப மக்கள் விழிச்சி கிட்டாங்க”

“நாட்டுல எவ்வளவோ நடக்குது அதயெல்லாம் விட்டுட்டு இந்த ஏழைய வந்து மெரட்டுறிங்களே அய்யா. நீங்களே சொல்லுங்க. இது நல்லா இருக்கா?”

“நீ ரொம்ப பேசுறா. உம்மேல நடவடிக்கை எடுத்தாதான் சரிப்படும்” என மிரட்டினார்.

அதற்குள் சீருடை போடாத காவலர் கரிக்காரரை தனியே அழைத்து “ஏட்டய்யா சொல்லுறது புரியலயா. ஏதாவது கவனிச்சின்னா பொய்டுவார்” என்றதும் கரிக்காரருக்கு மூக்கு சிவந்தது. பின்னே சாது மிரண்டால் என்னாகும்.

தொழிலே போனால் போகிறதென்று நேரே ஏட்டையாவிடம் போனார். “என்னுகிட்ட கொடுக்க பணம் கிணம் எல்லாம் ஏதுமில்ல. வேணுமின்னா ஒரு கரிமூட்ட தாரேன் தூக்கிக்கிட்டு போறிங்களா” என்றார் நக்கலாக. வெறுத்துப்போன போலீஸ் காட்டை காலி செய்து போனது.

அதன் பின் கொஞ்சக் காலத்தில் கருவைக் காட்டுக்கு புதிய பிரச்சினை வந்துவிட்டது. முதலில் இந்த வேலிக்கருவை உற்பத்தி பற்றி சுருக்கமாகப் பார்ப்போம். இம்மரங்களின் பூர்வீகம் தென் அமெரிக்க நாடுகள் ஆகும். இந்த நாடுகளிலிருந்து தான் உலகம் முழுவதும் இம்மரம் பரவி உள்ளது. குறிப்பாகத் தமிழகத்தில் மிக அதிகமாக வளர்ந்த வந்தது. வேலிக்காத்தான், வேலிக்கருவை, காட்டுக் கருவை, எனப் பல்வேறு பெயர்களைக் கொண்டுள்ளது. இந்த தாவரம் காமராஜர் ஆட்சிக்காலத்தில் பரப்பியதாக அறிய முடிகிறது. தமிழகத்தின் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை போன்ற வறட்சியான மாவட்டங்களில் வேறு எந்த விளைச்சலும் செய்ய முடியாததால், அதிகமாக இம்மரங்கள் பரவியுள்ளன. இம்மரங்கள் விறகுக்கு மட்டுமே பயன் படும். இதன் நெற்றை சேகரித்து கால்நடைகளுக்குத் தீவனமாக வைப்பார்கள். நல்ல சத்துள்ளது என்பதால் கால்நடைகள் கொழுகொழுவென வளரும். மாடு வாங்க வரும் தரகர்கள் கூட சில மாட்டை பார்த்தாலே ‘என்ன கருவ நெத்து போட்டு வளர்த்த மாடா?’ என்பார்கள்

அதற்கு ஆப்பு வைத்தது நீதி மன்றம். யாரோ ஒரு புண்ணியவான் இந்த மரங்களால் சுற்றுச் சூழல் ஆபத்து எனவே இதனை அழிக்க உத்தரவிட வேண்டும் என வழக்குத் தொடுத்தார். இம்மரங்கள் நிலத்தடி நீரை உறுஞ்கிறதாம். மற்ற மரங்களெல்லாம் கடல் நீரையா உறிஞ்சுகிறது. வளிமண்டலத்தின் ஈரப்பதத்தை இழுத்து விடுவதால் சுற்றுச் சூழலுக்கு ஆபத்து என்பதே சாரம். சரக்கு எதுவுமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் அவல் கிடைத்தது போல ஆளாளுக்கு அள்ளிவிடத் தொடங்கினர். அந்த மரத்தின் அடியில் மாட்டைக் கட்டினால் மாடு சினைப்படாது. உடல் வற்றி மெலிந்து விடுமென உடான்ஸ் விட்டார்கள். அதன் நிழலில் வளர்ந்தும் அதன் நெற்றைத் தின்றுமே நல்ல பால் கொடுப்பது வளர்ப்பவர்களுக்குத்தான் தெரியும். கரியமில வாயுவை வெளி விடுகிறதாம். சூரிய வெளிச்சத்தில் பச்சை இலைகள் ஒளிச்சேர்க்கையின்போது பிராணவாயுவைத்தான் வெளியிடும் என்பதற்கு மாறாக இந்த கண்டுபிடிப்பு எந்த விஞ்ஞானியுடையது எனத் தெரியவில்லை. அம்மரங்கள் ஈரப்பதத்தை உறுஞ்சும் என்பது உண்மைதான். அதனால் சுற்றுச் சூழல் பெரிதாகப் பாதிக்காது என்பதும் உண்மைதான். யூக்காலிப்டஸ் மரங்கள் கூட அப்படித்தான். ஏன் அதை வளர்க்க ஆதரிக்கிறார்கள். அதன் கூழிலிருந்து தயாரிக்கும் பேப்பரில்தானே பொய் பொய்யாய் புளுகி எழுதித்தள்ள வேண்டும் என்பதாலா!உண்மை அதுவல்ல. இம்மரங்கள் தமிழகத்தில் மிக அதிகமாக வளர்ந்து இருப்பதால் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தில் இது பெரும் பங்கு வகித்தது. இந்த சீமைக் கருவை மரம் அதிகம் தமிழக மக்களின் பயன்பாட்டில் இருப்பதால் தமிழகத்தில் எரி வாயு சிலிண்டர்களின் தேவை மிகக் குறைவாகவே இருந்தது. அதனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் தமிழகத்தில் எதிர் பார்த்த செலாவணியைப் பெறமுடியவில்லை. அதனால் இந்த சீமை கருவை மரங்கள் கார்பன்-டை ஆக்ஸைடை கக்குகிறது, நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சி வறட்சியை உண்டாக்குகிறது என ஒரு மோசடியான பிரச்சாரத்தை கார்ப்பரேட்டுகள் பரப்பி விட்டனர். நீதி மன்றத்துக்குத் தேவை சாட்சியம். இந்த வழக்கில் மனுதாரரின் மனுவுக்கு எதிராக அரசுதானே எதிர் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். மரங்களை அழித்து விடுகிறேன் என்றால் வழக்கு சிக்கலின்றி முடியும். உண்மையை எடுத்துச் சொல்ல எவருமே இல்லை. பாவம் இந்த வேலிக் கருவை மரங்களைக் குற்றவாளிகளாக நிறுத்தி அரசு நிலங்களில் இருக்கின்ற மரங்களை மூன்று மாதங்களுக்குள்ளும் தனியார் நிலங்களில் உள்ள மரங்களை ஆறு மாதங்களுக்குள்ளும் அழிக்க வேண்டுமென மரங்களுக்கு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பை எழுதிய பேனாவின் நிப்பை மேஜையில் அழுத்தி ஒடித்து எறியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காடழிந்ததால் கள்ளச்சாராயக் காரனுக்கு பெரிதாய் இழப்பில்லை. ஏற்கனவே சம்பாதித்த பணத்தைக் கொண்டு ஒரு மெட்ரிக்குலேஷன் பள்ளி துவங்கி விட்டான். அரசின் மதுக்கடைகளுக்கு விநியோகம் செய்ய அரசின் அனுமதியுடன் சாராய ஆலை கூட அவன் அமைத்தால் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. கரிக்காரரின் பிழைப்பில்தான் மண் விழுந்தது. வேறு வேலையைக் கற்றுக்கொண்டு வயிற்றைக் கழுவ வேண்டும். விவசாய வேலைக்குப் போகலாமென்றால் விதைப்பதிலிருந்து வைக்கோலைச் சுருட்டி கட்டுவது வரை இயந்திர மயமாகிவிட்டது. இப்போது இருப்பது உப்பள வேலைதான். உப்பு எடுப்பது மூட்டை தூக்குவது. அதுவும் வேலை கிடைத்தாலும் கூலி கிடைக்க வேண்டும்.

கார்ப்பரேட்கள் மற்றும் காகிதப் புலிகளின் சாகசத்தால் மகிழ்ந்து போனதில் பத்தாம் வகுப்பில் மூன்று முறை தேர்வு எழுதி இன்னும் முடிக்காமல் இருப்பவனும் கரிக்காரரின் மகனுமாகிய சங்கரும் அடங்கும். குலத் தொழிலுக்கு தந்தை இனி அடித்து இழுக்க மாட்டார். ஊர் சுற்றுவதாக நினைத்துக் கொண்டிருக்கும் அவன், தந்தைக்குத் தெரியாமல் இரு சக்கர வாகன பழுது பார்க்கும் பட்டறையில் உதவியாளராக ஏற்கனவே சேர்ந்துவிட்டான். அந்த பதவியை ஹெல்பர் என்பார்கள். சிலர் எடுபிடி என்பார்கள். சக்கரங்களுக்குக் காற்று பிடிப்பது, பழுது பார்த்த வண்டிகளைத் துடைப்பது, டீ வாங்கி வருவது, முதலாளி மற்றும் இரண்டாம் நிலை மெக்கானிக் கேட்கும் நெட்டு, போல்ட், ஸ்பெனர்களை எடுத்து வந்து கொடுப்பது மற்றும் வேலைக்குச் சேர்ந்து எவ்வளவு நாளாச்சி இன்னும் பத்தாம் நம்பர் ஸ்பெனர் எதுன்னு தெரியவில்லை என்று முதலாளி திட்டுவதை கேட்டுக்கொள்வதே முதலில் எடுபிடியின் பணி. முக்கியமான ஒன்று பழுது பார்க்கும் வாகனங்களில் பெட்ரோல் திருடுவது.

இந்த பட்டறை முதலாளியும் பத்து வருடத்திற்கு முன்னர் ஒரு மெக்கானிக்கிடம் எடுபிடியாகத்தான் சேர்ந்தாராம்.

 

——

அன்பழகன்ஜி