புத்தக அறிமுகம்: “அன்பென்பது ஒரு தந்திரம் அல்ல” – அசோக் குமார்



நூல் : “அன்பென்பது ஒரு தந்திரம் அல்ல”
ஆசிரியர் : ச.மாடசாமி
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
விலை: ₹65.00
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/anbenbadhu-oru-thandhiram-alla/

பேராசிரியர் ச.மாடசாமி ஐயா அவர்களின் பல்வேறு புத்தகங்களை முன்னரே படித்திருந்த நிலையில் விரும்பி வாங்கி படித்த நூலே இது. கல்வி குறித்தான எனது பார்வையில் புதிய சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்ததில் ஐயாவின் படைப்புகளுக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டென்பதே நிதர்சனம். அளிவொளி இயக்கத்தின் அனுபவங்கள் வாயிலாக எமது அறிவுக்கண்களைத் திறந்தவரே மாடசாமி ஐயா அவர்கள்.

“எனக்குரிய இடமெங்கே, என் சிவப்புப் பால் பாயிண்ட் பேனா, போயிட்டு வாங்க சார், தெருவிளக்கும் மரத்தடியும், ஆசிரிய முகமூடி அகற்றி” முதலிய அவரின் நூல்களை முன்னரே படித்திருந்தமையால் இந்நூலின் மீது இயல்பிலேயே இனம்புரியாத ஈர்ப்பு உண்டானது என்பதே உண்மை. அதனை இந்நூலும் எள்ளளவிலும் பொய்ப்பிக்கவில்லை என்பதே மெய்.

புத்தகம் பேசுது, இந்து தமிழ், ஜூனியர் விகடன், மானுடன், புது விழுது, திருப்பூர் தாய்த் தமிழ்ப் பள்ளி மலர், புதிய தலைமுறைக் கல்வி முதலிய இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். வழக்கம்போல் மிக நேர்த்தியாக வடிவமைத்து ஐயா அவர்களின் படைப்புகளை வெளியிட்டுள்ள பாரதி புத்தகாலயத்திற்கும் மிக்க நன்றி. இந்நூலில் 12 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

1.அன்பென்பது ஒரு தந்திரம் அல்ல
2. அப்பாவியா? முட்டாளா?
3. இலக்கணக் கண்கள் காணாத சித்திரங்கள்
4. தேவை – தலைகீழ் வகுப்பறை
5. ஒரு புத்தகம்… ஒரு கொலை – சிவாஜி யார்?
6. அறிவொளி இறக்கி வைத்த சுமை
7. மதம்…அதிகாரம்.. மத்திய வர்க்கப் பார்வை
8. தமிழ் வாசகர்களுக்கு சுஜாதா அறிமுகப்படுத்தும் FREAKONOMICS
9. உண்மையான அஞ்சலி
10. கடைசி மைல்கள் கடினமானவை
11. வகுப்பறைக்கு மனித முகம்
12. என் பயணம்.

“என் பயணம்” மட்டுமே புதிய தலைமுறை இதழில் வெளியான நேர்காணல். அற்புதமான நேர்காணல். ஐயா அவர்களின் வாழ்வியல் குறித்து ஓரளவு அறிந்து கொள்ள கிடைத்த பொன்னான வாய்ப்பாகவே இதனைக் கருதுகிறேன். மற்றவை அனைத்தும் கட்டுரைகளே… சுஜாதா அவர்களின் கட்டுரைக்கு எதிரான கட்டுரை மட்டுமே சற்று அந்நியப்பட்டதாக உணர்கிறேன். ஆனால் அதுவும் நாம் அனைவரும் அறிந்து கொள்ள அவசியமான ஒன்றே.

இந்நூலிலுள்ள கட்டுரைகளின் தலைப்புகளே நம்மை எளிதில் ஈர்க்கும் வண்ணம் தானே அமைந்துள்ளன. இந்நூலில் படித்து வியந்த சில வரிகளை மேற்கோள் காட்டுவது மிக அவசியமென கருதுகிறேன். அவையாவும் நம் அகத்தைக் கிளறி நம்மை புதிய கோணத்தில் நிச்சயம் பயணிக்க உதவுமென உறுதியாக நம்புகிறேன்.

வளரும் கவிதை: பேராசிரியர் ச.மாடசாமி ...

” பள்ளி தரும் தண்டனைகள் ஒரு வன்முறை என்றால், அது வழங்கும் ரேங்கும் பரிசும் தந்திரங்கள்! யாவரும் சமம் அல்ல என்பதைத் திரும்ப திரும்ப வலியுறுத்தும் தந்திரங்கள்”

(ரேங்க் முறையை ஒழித்த தமிழக அரசுக்கு நன்றி)

“பள்ளிக்குப் பெருமை ‘ரிசல்ட்’ அல்ல. அன்பின் மையங்களை உருவாக்கும் ஆசிரியர்கள் தான் பள்ளிக்குப் பெருமை.”

“சமூகம் வழங்கும் அடையாளங்கள் -ஒருவிதமான அநீதி. (அப்பாவி, முட்டாள்). வகுப்பறையிலும் இந்தப் பிரச்சனை இருக்கிறது – குழந்தைகளைப் புரிந்து கொள்வதிலும் அவர்களுக்கு அடையாளம் வழங்குவதிலும்!”

“தகவல்களைத் திணிக்கும் வகுப்பறை அல்ல- தகவல்கள் உயிர்பெறும் வகுப்பறைதான் இன்றைய தேவை”

“மாணவர்கள் வெளியே கற்றுவந்து வகுப்பறையில் அதுகுறித்து விவாதிக்கும் வகையில் பாடத்திட்டத்தில் ஒரு சிறு பகுதியையாவது வடிவமைக்க வேண்டும்”

“‘தரம் என்பதுதான் வகுப்பறைக்குள் நுழைந்த முதல் வன்முறை’- என்பார் டால்ஸ்டாய். மத்திய வர்க்கத்தை மயக்கும் வார்த்தை ‘தரம்’. எளிய வீட்டுக் குழந்தைகளை வகுப்பறையில் இருந்து துரத்துமா வார்த்தை ‘தரம்'”.

“குழந்தைகள் வகுப்பறையைவிட்டு விலகித் தீப்பெட்டி ஆபீஸ் வந்ததற்கு வறுமை அல்ல முக்கிய காரணம். பாடப் புத்தகமும் பரீட்சையுமே முக்கிய காரணம். எளிய வீட்டுக் குழந்தைகளின் உலகை அச்சுறுத்தும் பூதம் – தேர்வு!”
(புதிய கல்விக் கொள்கை குறித்தான கட்டுரை)

” வகுப்பறையில் நட்பை மலர வைப்பதற்காகத் தோற்றுப் போங்கள். தோற்பதற்குக் கூச்சப்படாதவர்கள்தான் உண்மையான வீரர்கள்; உண்மையான ஆசிரியர்கள்.”

“வயோதிகம் படரப் படர, விலகல் அல்ல ஒட்டுதலே விரும்பத்தக்க தீர்வு. ஒடுங்குதல் அல்ல விரிதலே மகிழ்ச்சி”.

“குழந்தைகளின் உலகங்கள் உயிர்பெற, தொழில்நுட்பம் மட்டும் போதாது; பாடப்புத்தகம் மட்டும் போதாது. உள்ளமும் உணர்வும் கனிந்த ஒரு வகுப்பறை வேண்டும்.”

“எத்தனை கற்றால் என்ன? அங்கீகரிக்கக் கற்றுக் கொள்வது அனைத்திலும் முதன்மையானது”

“வரலாற்றைச் சும்மா எல்லாம் மாற்றிவிட முடியாது. அதற்கு நீங்கள் தியாகம் செய்ய வேண்டும்”- பாலோ பிரையர்.



மேற்கூறிய கருத்துக்கள் யாவும் இந்நூலின் அடையாளத்திற்கான சிறுதுளிகளே… இதுபோல் ஏராளமான தகவல்களும் , துணுக்குகளும், நகைச்சுவைகளும், விடுகதைகளும், நாட்டுப்புறப் பாடல்களும், சொலவடைகளும் விரவியுள்ளன. ‘நக்கீரன்’ கோபால் அவர்கள் குறித்த கட்டுரை நமது கல்வித்திட்டத்தின் குறைபாடுகளைத் தோலுரித்துக் காட்டும் ஆவணமாகவே கருதுகிறேன்.

டால்ஸ்டாயின் ” முட்டாள் இவான்” என்ற கதையையும் கிறிஸ்டோபர் மையர்ஸ் எழுதிய ‘என் பேனா’ (My pen) கதையையும் வேல.ராமமூர்த்தி எழுதிய “கிறுக்கு சண்முகம்” கதையையும் கோவிந்த் பன்சாரே எழுதிய “யார் சிவாஜி?” என்ற நூலையும் அறிஞர் அண்ணாவின் “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” நாடக நூலையும் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தையும் தூண்டுகிறது இந்நூல். ஒரு நூல் பல நூல்களைக் கற்பதற்கான வாசலைத் திறக்கும் என்பதையும் இந்நூல் நிரூபணம் செய்கிறது.

ஒவ்வொரு ஆசிரியரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூலே இது. ஆசிரியர்கள் வாசிப்பதுடன் நில்லாமல் அதனை நோக்கி பயணிக்க முயல்வதுடன் நின்றுவிடாமல் மற்றவர்களும் வாசிப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளுதல் அவசியமானதாகும். சமூக மாற்றமே இன்றைய கல்வி மாற்றத்திற்கான அடிப்படை தேவையாகும்.

பேராசிரியர் ச.மாடசாமி ஐயா போன்ற கல்வியாளர்களை தமிழக அரசும் பள்ளிக் கல்வித் துறையும் பயன்படுத்தி புதிய கல்விக் கொள்கையை மாணவர்கள் நலன் சார்ந்து உருவாக்க முனையும் என்ற நம்பிக்கையுடன் இந்த நூலறிமுகத்தை நிறைவு செய்வது சாலப் பொருத்தமாக இருக்குமென கருதுகிறேன்.
முடிந்தால் கீழ்க்கண்ட விடுகதைகளுக்கும் விடை காண முயலுங்கள்.

” பிணம் வேகும்; துணி வேகாது?”
அது என்ன?
“பத்துப் பைசாவுக்குச் சரக்கு வாங்கி
ரெண்டு லாரி லோடு ஏத்தி
சரக்கு இன்னும் மிச்சம் கிடக்கு”

அது என்ன?
வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள். நன்றி.