கடிதம் எழுதுதல்
தன்னை எழுதுதல்
இப்போதெல்லாம்
கடித கர்ப்பிணி
யாய்
தினம்தினம் அலையும்
தபால்காரரை
காணவே முடியவில்லை
நொடியில்
குரல் கேட்கும்
முகம் பார்க்கும் காலமிது
அன்பின் கசிந்துணர்வை தரவோ பெறவோ
இயலுகிறதா
நவீன கரங்களால்.
அன்புள்ள
எனத் தொடங்கி
உயிருக்குள்
உயிர் ஊறவைக்கும்
கடுதாசி காலம்
அரிதாகிப்போனது
உறவுமுறைக் கடிதங்கள்
எனும் பாடத்தை
நடத்தி முடித்தேன்.
பின் பயிற்சிக்காக
ஐம்பது அஞ்சல் அட்டை வாங்கி அப்பாவுக்கோ அம்மாவுக்கோ
கடிதம் எழுதுங்கள்
என்றேன்
சிலர் மட்டும்
மாமாவுக்கு
சித்தப்பாவுக்கு
தாத்தாவுக்கு என எழுதினர்
பிறகுதான் தெரிந்து
திடுக்கிட்டேன்
இவர்களுக்கு தாய் தந்தை
இல்லை என்று
பதிலித் தாய் தந்தையாய்
மாமா, தாத்தா
சித்தப்பா
போதுமா
மனிதராக இருக்கும்
எவரும் இருக்கலாம்
பதிலித்தாய் தந்தையாய்
இன்று
பதிலித் தபால்காரராய் இருக்கும்
கூரியர் இளைஞரைப் போல.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.