அன்பூவின் நான்கு கவிதைகள்

Anbu four poems in tamil language. Book Day (Website) And Bharathio Tv (Youtube) Are Branches of Bharathi Puthakalayam.தாயமும் தர்ஷிணியும்

தாயம்
உருட்டுகிறோம்
நானும் தர்ஷிணியும்.

வெட்டு
விழுகையிலெல்லாம்
கொத்தியெறிகிறேன்
அவளை.

இதென்னம்மா
விளையாட்டு
என்ற சிணுங்கலில்…
சுண்டிப்போகிறது
பிள்ளையின் முகம்.

இது அவளுக்கு
லாக்டவுன் காலத்தில்
அறிமுகமான
புது
விளையாட்டு.

குத்துப்பட்டு
வெளியே தூக்கி வீசப்படுவதும்
முட்டி முளைத்து
முன்னுக்கு வருவதுமாக…
இது
விளையாட்டல்ல
வாழ்க்கையென்று
கருணையற்ற
என்
அடுத்தடுத்த வெட்டுகளில்…
சுட்டுகிறேன்
அவளுக்கு.

எதுவும் பிடிபடும்
வரைக்கும் தான்
கடிபடும்
கழுத்தென்று
புரிந்து கொண்டாள்
சூட்சுமத்தை.

மட்டுப்பட்டது
கட்டம்…
தட்டுப்பட்டது
தடம்…
தொடர்ந்த நகர்வுகளில்
வெட்டுவதோ…
வெட்டுப்படுவதோ..
சம நிலைக்கு
இழுத்துக் கட்டப்பட்டது
மனது.

தாயமும் இரு பனிரெண்டு
ஈராறு நாலும் போட்டவள்…
பழுக்கும்
தறுவாயில்

என் ஒற்றைக் காயை
விரட்டியடித்து
வீழ்த்திவிட்டு…
எப்படியும் மீண்டு வந்து
என்னை
வெட்டிடுவீங்க
என்று சிரிக்கிறாள்.

வீழ்தலும் மீளுதலுமான
விருத்தத்தின்
தத்துவத்தில்
உலகம் படித்துக் கொண்டாள்
பிள்ளை.

இருத்தலுக்கான
கயிறை
அவள்
இறுக்கிப் பிடித்துக்
கொண்ட பின்னே…
மாக்கோலக் கட்டத்துக்குள்
இனியெனக்கு
எப்போது
விழுந்தாலென்ன
விருத்தம்.சிறகாகிறேன் நான்

சிறகு
முளைத்துக் கொள்கிறதெனக்கு…
வளி கிழித்து
வான் முட்டி கிளையமரும்
அந்த
பறவை பார்த்து.நான் ஒன்றும் சும்மாயில்லை

நான் ஒன்றும்
சும்மாயில்லை…

அந்த வெய்யிலை எடுத்து
கொடியில்
போட்டிருக்கிறேன்…
காய்வதற்கு.

அந்தியிலெடுத்து
மடித்து வைக்கவேண்டும்…
நாளையின்
தேவைக்கு.

மழை வந்தால்
காயக் கிடக்கும் வெய்யில் நனைந்துவிடாது பார்த்துக்கிடந்தே
இடுப்பொடிகிறது…
என் விழிகளுக்கு.

சொன்னால் நம்புங்கள்…
நானொன்றும்
சும்மாயில்லை.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பாவப்பட்ட மேகம்

காலத்தைக்
கையிலெடுத்துக்
கொண்டு
ஒரு எறும்பினைப் போல
ஊர்ந்து கொண்டிருக்கிறது
அந்த மேகம்.

இடையில்
தாகம் எடுத்திருக்கும்
போல….

இரவை ஊற்றி மேகத்திடம்
திணித்தபடி
அதன் கையிலிருந்த
காலத்தை
கை மாற்றிக் கொண்டு
மேற்கே குதித்து
ஓடி மறைகிறான்
கதிரவன்.

இனிப்பைத் தொலைத்த
குழந்தை முகமாய்…
கருத்து நிற்கிறது
மேகம்.

– அன்பூ

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.