சாப்பிட்டாச்சா

மணிக்குப் பத்துமுறையாச்சும்
என்னைச் சாப்பிட
அழைத்தவாறே இருப்பாள்
என் செண்பகப் பாட்டி.வீட்டுப்பாடங்கள் செய்வதிலோ
விளையாடுவதிலோ
கவனமாயிருக்குமெனக்கு…
உறைத்ததேயில்லை
பேரன்பினை மட்டுமே
சுமக்கத் தெரிந்த
பாட்டிம்மாவின் தாகங்கள்.ஆனாலும்
என் கவனமின்மையை
ஒருபோதும் சட்டை செய்ததேயில்லை
அவளின் குரல்.

பள்ளிவிட்டு வந்ததும்…
கை கால் அலம்பி வா
ஊட்டிவிடுகிறேன்
என்பாள்.

பசியில்லையென்ற
ஒற்றை வார்த்தையோடு
கற்றை அன்பை
அத்தனை எளிதாய்க்
கடந்திருக்கிறேன்.

அதன்பிறகும்
என் போக்கினூடே
துரத்திக் கொண்டேயிருக்கும்…

சாப்பிட்டு வேலையைப்
பாரென்ற
அந்தக் குரல் மட்டும்.ஓடிக் கழித்த காலத்தில்
ஓடமுடியாத களைப்பில்
இப்போது நான்.வீடுபேறு சமைத்து
ஆந்து சோந்து ஆயாசமாய் அமர்கையில்…
தட்டில் சோறோ
காப்பியோ நீட்டி
இந்தா சாப்பிடென்று
வாஞ்சை தெளிக்கும்
ஓர் குரலில்லாது…
நெஞ்சுக்குழி நிறைக்கும்
ஆற்றாமை
தொண்டைக்குழி அடைத்து
சமயத்தில்
விழிக்குளம் உடைத்து
உப்பைத் தின்கின்றன…

இதயத்தே வழியுமந்த
ஏக்கங்கள்.தினப்பொழுதுகளில்
ஓருருண்டைக் கவளமும்
அவளை நினையாது

உள்ளிறங்கியதில்லை.

இப்போது
புருசனோ பிள்ளையோ
இரத்தமாய் நனைக்கும்
சுற்றமோ
என்னைக் கடப்போரை
சாப்பிட்டாச்சா என்ற கேள்வியில்லாமல்
கவளத்தில் கை வைப்பதில்லை
நான்.

சாப்பிட்டாச்சா என்ற கேள்வி
வெறும் கேள்வியல்ல…
அத்தனை எளிதில்
கடந்துவிடுவதற்கு.

அது…
கேட்பவரையும்
கேட்டுக்கொள்பவரையும்
பிணைத்து வைத்திருக்கும்
பிரியங்களின் வேர்ப்பிடித்து
வளர்த்ததொரு வேள்வி.

அப்போ…

நீங்க சாப்பிட்டாச்சா….️
அன்பூ


One thought on “கவிதை: சாப்பிட்டாச்சா – அன்பூ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *